'என் காதலரையே அடையாளம் காண முடியவில்லை' - முகங்களை அடையாளம் காண சிலர் சிரமப்படுவது ஏன்?

ப்ரோசோபாக்னோசியா

பட மூலாதாரம், BBC/Maryam Nikan

    • எழுதியவர், கரோலின் ஸ்டீல்
    • பதவி, பிபிசி கிரௌட்சயின்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒருமுறை, அப்போது என் காதலராக இருந்தவரையே என்னால் அடையாளம் காண முடியவில்லை.

நாங்கள் சுமார் ஆறு மாதங்களாக காதலித்து வந்தபோது, ஒரு நாள் ஒரு பல்பொருள் அங்காடியில் சந்தித்தோம்.

தானியங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நாங்கள் ஒருவரையொருவர் கடந்து சென்றபோது, அவர் யார் என்பதே எனக்குத் தெரியவில்லை. அவர் என்னிடம் மிகவும் நெருக்கமாக வந்ததால் எனக்கு சங்கடமாக இருந்தது. அவர் பேசிய போதுதான் அவரது குரலை வைத்து அவர் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டேன்.

எதிர்பார்த்தபடியே, இதனால் அவர் மகிழ்ச்சியடையவில்லை.

ஆனால், எனக்கு இது இயல்பான ஒன்றுதான். ஒருவரை எவ்வளவு நன்றாகத் தெரிந்திருந்தாலும், அவரது முகத்தை அடையாளம் காண்பது எனக்கு எப்போதுமே கடினமாக இருந்துள்ளது.

அதனால்தான், முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படும் 'ப்ரோசோபாக்னோசியா' (Prosopagnosia) என்ற நிலை எனக்கு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள முடிவு செய்தேன்.

ப்ரோசோபாக்னோசியா எதனால் ஏற்படுகிறது?

பெரும்பாலானவர்கள் நினைப்பதைவிட ப்ரோசோபாக்னோசியா பொதுவானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சுமார் 50 பேரில் ஒருவருக்கு இந்த நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில், மூளைப் பாதிப்புக்குப் பிறகு இந்த நிலை உருவாகலாம். உதாரணமாக, பக்கவாதத்துக்குப் பிறகு இது ஏற்படக்கூடும். ஆனால், "இந்த வழிகளில் ப்ரோசோபாக்னோசியா ஏற்படுவதை அனுபவிக்கும் பலரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது" என்கிறார் பிரிட்டனின் போர்ன்மவுத் பல்கலைக்கழக உளவியலாளர் பேராசிரியர் சாரா பேட்.

மாறாக, சிறு வயது முதலே முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதே மிகவும் பொதுவானது என அவர் விளக்குகிறார். இது வளர்ச்சிசார் அல்லது பிறவியிலேயே ஏற்படும் ப்ரோசோபாக்னோசியா என்று அழைக்கப்படுகிறது.

இந்த வகை ப்ரோசோபாக்னோசியா பரம்பரையாக ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இதற்கு மரபணுத் தொடர்பு இருக்கக்கூடும் என்று கருதப்பட்டாலும், இதற்குக் காரணமான மரபணுக்கள் எவை என்பது இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை.

சிறுவயது முதலே முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ள கரோலின் (இடதுபுறம்), இந்தப் புகைப்படத்தில் தனது சகோதரிக்கு அருகில் காணப்படுகிறார்.

பட மூலாதாரம், Caroline Steele

படக்குறிப்பு, சிறுவயது முதலே முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ள கரோலின் (இடதுபுறம்), இந்தப் புகைப்படத்தில் தனது சகோதரிக்கு அருகில் காணப்படுகிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"ஒரே ஒரு மரபணு இதற்கு காரணம் என்று சொல்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. பொதுவாக, மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுக்கு இடையிலான மிகவும் சிக்கலான தொடர்புதான் இதற்குக் காரணமாக இருக்கும்" என்கிறார் சாரா பேட்.

சிறு வயதில் நமக்கு ஏற்படும் பார்வை அனுபவங்களும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பேட் கருதுகிறார்.

ப்ரோசோபாக்னோசியா உள்ள சிலர், சிறு வயதில் தங்களது பார்வைத் திறன் குறைந்திருந்த அல்லது வழக்கத்துக்கு மாறாக இருந்த காலகட்டங்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர்.

"முகங்களை அடையாளம் காணக் கற்றுக்கொள்வதற்கு முக்கியமான சில வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கலாம்" என்கிறார் அவர்.

"ஒரு குழந்தைக்கு பார்வை சார்ந்த பிரச்னைகளுக்காக கண்ணாடி தேவைப்பட்ட போது அது வழங்கப்படாமல் இருந்திருந்தாலோ... அல்லது பார்வையைப் பாதிக்கும் கண்புரையுடன் அந்தக் குழந்தை பிறந்திருந்தாலோ, அந்தக் கற்றல் செயல்முறை பாதிக்கப்படலாம்."

எனது அனுபவத்தைப் பொறுத்தவரை இது மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது. சிறு வயதில் எனக்கும் சில பார்வைப் பிரச்னைகள் இருந்தன. ஆனால், எட்டு வயதில் நான் ஒரு கண்ணில் கண் மறைப்புப் பட்டை (eye patch) அணிந்திருந்ததற்கும், அதன்பின் வளர்ந்த பிறகு அப்போது என் காதலராக இருந்தவரையே அடையாளம் காண முடியாமல் போனதற்கும் தொடர்பு இருப்பதாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

வேறு சில காரணிகளும் இதற்குப் பங்களிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.

"உதாரணமாக, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள் உள்ள சிலருக்கு மற்றவர்களின் கண்களை நேரடியாகப் பார்ப்பதில் சங்கடம் இருக்கலாம்... இந்தக் குறைபாடுகள் உள்ளவர்களில் கணிசமான எண்ணிக்கையினருக்கும் முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது" என்கிறார் சாரா பேட்.

குறைந்த சமூகத் தொடர்புடன் வளரும் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கும், முகங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று சாரா பேட் கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images/BSIP/UIG

படக்குறிப்பு, குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கும், முகங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமங்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று சாரா பேட் கருதுகிறார்.

மூளையின் பகுதிகளுக்கு இடையிலான குறைந்த தொடர்பு

பழக்கமான ஒருவரின் முகத்தை அடையாளம் காண்பது பெரும்பாலானவர்களுக்கு எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், இது மூளையில் நடைபெறும் சிக்கலான தொடர் செயல்முறைகளைச் சார்ந்தது என நரம்பியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"முகங்களை அடையாளம் காண்பதற்கென நமது மூளையில் ஒரு குறிப்பிட்ட நரம்பியல் சுற்றமைப்பு உள்ளது" என்கிறார் இத்தாலியின் பெர்காமோ பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ஸைரா கட்டானியோ. இவர் முகங்களை நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

"இது அனைத்தும் மூளையின் பின்பகுதியில் உள்ள உணர்வுப் பகுதிகளில்தான் தொடங்குகிறது." இந்தப் பகுதிகள் முகங்களை அடையாளம் காண்பதில் "மிகவும் குறிப்பிட்ட தன்மை கொண்டவையாக" பரிணமித்துள்ளன என்கிறார் அவர்.

ஆக்சிபிட்டல் லோப் (occipital lobe) எனப்படும் இந்தப் பகுதியில் முதன்மை பார்வைப் புறணி (primary visual cortex) உள்ளது. இங்குதான் பார்வைத் தகவல்கள் முதன்முதலில் பெறப்பட்டு புரிந்துகொள்ளப்படுகின்றன.

பின்னர், இந்தப் பார்வைத் தகவல்கள் டெம்போரல் கார்டெக்ஸ் (temporal cortex) எனப்படும் மூளையின் ஒரு பகுதிக்குச் செல்கின்றன. அங்கு அந்த அடையாளம் மேலும் தெளிவாகிறது.

"இந்தக் கட்டத்தில், நீங்கள் ஒரு முகத்தை மட்டும் அடையாளம் காண்பதில்லை; அந்த முகம் உங்களுக்குப் பழக்கமானதா என்பதையும் தெரிந்துகொள்கிறீர்கள். அந்த நபரின் பெயரையும், அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும் அதனுடன் இணைத்துக்கொள்ள முடியும்" என்கிறார் கட்டானியோ.

இறுதிக் கட்டத்தில், முன்மூளைப் புறணி (prefrontal cortex) செயல்படுகிறது. இது சிந்தனை மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதியாகும். "பெரும்பாலான உணர்வுசார் செயலாக்கங்கள் நமக்குத் தெரியாமலேயே நடந்தாலும், அந்த முகத்தை நாம் அடையாளம் காண்கிறோம்." என்கிறார் அவர்.

முகத்தை அடையாளம் காணும் இந்த மிக வேகமான செயல்முறை, தனித்தனி மூளைப் பகுதிகளை மட்டுமல்லாமல், அவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் சார்ந்துள்ளது என்று கட்டானியோ உள்ளிட்ட விஞ்ஞானிகள் தற்போது கருதுகின்றனர்.

ப்ரோசோபாக்னோசியா உள்ளவர்களின் நிலையில், "முகங்களை அடையாளம் காணும் நரம்பியல் சுற்றமைப்பின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலான தொடர்பு குறைவாக இருக்கலாம்" என்கிறார் அவர்.

பிரபலமான முகங்கள்

வயதாகும்போது முகங்களை அடையாளம் காண்பதில் நமக்கு அதிக சிரமம் ஏற்படலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது பொதுவாக நினைவாற்றல் குறைவதால் மட்டுமே ஏற்படுவதில்லை.

காலப்போக்கில், பழக்கமான முகங்களை அடையாளம் காண்பதில் ஈடுபடும் மூளையின் பகுதிகள் தங்களது குறிப்பிட்ட தன்மையை இழக்கத் தொடங்குகின்றன என்று கட்டானியோ விளக்குகிறார்.

எனவே, என்னைப் போல இளம் வயதிலேயே முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, "நாம் அனைவருக்குமே வயதாகும்போது முகங்களை அடையாளம் காணும் திறனில் சில குறைபாடுகள் ஏற்படலாம்" என்கிறார் அவர்.

ஆனால், எனது ப்ரோசோபாக்னோசியா வயது தொடர்பானது அல்ல. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே இதை அனுபவித்து வருகிறேன்.

அதனால்தான், ப்ரோசோபாக்னோசியாவுக்கான முறையான அளவுகோல்களை நான் பூர்த்தி செய்கிறேனா என்பதைப் பரிசோதிக்க சாரா பேட் முன்வந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

கரோலின் மேற்கொண்ட சோதனைகளில் ஒன்று, டாம் ஹாங்க்ஸ், டோனி பிளேர், பால் மெக்கார்ட்னி மற்றும் டேவிட் அட்டன்பரோ போன்ற பிரபலங்களின் முகங்களை அடையாளம் காணும் முயற்சியை உள்ளடக்கியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images/Reuters

படக்குறிப்பு, கரோலின் மேற்கொண்ட சோதனைகளில் ஒன்று, டாம் ஹாங்க்ஸ், டோனி பிளேர், பால் மெக்கார்ட்னி மற்றும் டேவிட் அட்டன்பரோ போன்ற பிரபலங்களின் முகங்களை அடையாளம் காணும் முயற்சியை உள்ளடக்கியிருந்தது.

முதலில், அன்றாட வாழ்க்கையில் முகங்களை அடையாளம் காண்பது தொடர்பான எனது அனுபவங்களைப் பற்றிய கேள்வித்தாள் ஒன்றை நிரப்பினேன். ஒருவர் தமக்குத் தெரிந்தவராக இருந்தும் அவரை அடையாளம் காணத் தவறுவது அல்லது ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கும்போது நபர்களை அடையாளம் காண்பதில் சிரமப்படுவது போன்ற கூற்றுகளுக்கு நான் எந்த அளவுக்கு உடன்படுகிறேன் அல்லது உடன்படவில்லை என்பதைத் தெரிவித்தேன்.

அடுத்து, ப்ரோசோபாக்னோசியாவின் பொதுவான அறிகுறிகளை நான் எவ்வளவு அடிக்கடி அனுபவிக்கிறேன் என்பது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தேன். இறுதியாக, பிரபலமான முகங்களைக் கண்டறியும் சோதனை ஒன்றை மேற்கொண்டேன். அதில் பிரபலமானவர்களின் பல புகைப்படங்கள் எனக்குக் காட்டப்பட்டன; ஒவ்வொரு முகமும் எனக்குப் பரிச்சயமானதா என்பதை நான் கூற வேண்டும்.

பிரிட்டிஷ் இயற்கையியலாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டேவிட் அட்டன்பரோவை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த பால் மெக்கார்ட்னி, ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோரின் முகங்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை.

எதிர்பார்த்தபடியே, ப்ரோசோபாக்னோசியாவுக்கான அளவுகோல்களை நான் பூர்த்தி செய்திருந்தேன். அது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைத்தது எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியை அளித்தது.

மூளைக்குப் பயிற்சி அளிக்க முடியுமா?

இது வாழ்நாள் முழுவதும் எனக்கு இருக்கக்கூடிய ஒரு நிலையாக இருக்கலாம். இருப்பினும், மூளையின் முகங்களை அடையாளம் காணும் நரம்பியல் வலையமைப்பைச் செயல்படுத்தி பயிற்றுவிப்பதன் மூலம் அதை மேம்படுத்த முடியுமா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மூளையில் உள்ள நரம்பணுக்கள், அலைவுகள் (oscillations) எனப்படும் ஒத்திசைந்த வடிவங்களில் ஒன்றாகச் செயல்படுகின்றன.

"திறமையான உணர்தலுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் மூளை அலைவுக்கு பயிற்சி அளிக்க முடியும்" என்கிறார் கட்டானியோ.

உச்சந்தலையின் வழியாகச் செலுத்தப்படும் மிகக் குறைந்த அளவிலான, உடலுக்குள் ஊடுருவாத மின்சாரத்தைப் பயன்படுத்தி நரம்பணுக்களின் ஒத்திசைவைத் தூண்டுவது குறித்து அவர் ஆய்வு செய்து வருகிறார்.

ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகள், இது முகங்களை அடையாளம் காணும் திறனை மேம்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும், இதன் பயனை மிகைப்படுத்திக் கூறக் கூடாது என கட்டானியோ எச்சரிக்கிறார்.

"சில நேரங்களில், இத்தகைய நுட்பங்கள் அற்புதமான தீர்வுகள் என்று நினைத்து மக்கள் அவற்றை நாடுவதுதான் ஆபத்து. ஒரு குறிப்பிட்ட பணியில் இரண்டு அல்லது மூன்று சதவிகிதப் புள்ளிகள் அளவுக்குத்தான் நாம் காணும் முன்னேற்றம் இருக்கிறது; அல்லது சில மில்லி விநாடிகள் மட்டுமே முன்னேற்றம் ஏற்படுகிறது" என்கிறார் அவர்.

பொதுவான மூளைப் பயிற்சிப் பயிற்சிகளைப் போலவே, முகத்தை அடையாளம் காணும் திறனை வளர்க்கும் பயிற்சித் திட்டங்களைப் பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயன்றுள்ளனர்; இருப்பினும், இதுவரை இதில் கிடைத்த வெற்றி குறைவாகவே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images/ZeynepKaya

படக்குறிப்பு, பொதுவான மூளைப் பயிற்சிப் பயிற்சிகளைப் போலவே, முகத்தை அடையாளம் காணும் திறனை வளர்க்கும் பயிற்சித் திட்டங்களைப் பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயன்றுள்ளனர்; இருப்பினும், இதுவரை இதில் கிடைத்த வெற்றி குறைவாகவே உள்ளது.

பொதுவான மூளைப் பயிற்சிகளைப் போலவே, முகங்களை அடையாளம் காணும் திறனைப் பயிற்சி செய்வதற்கான முயற்சிகளும் குறைந்த அளவிலேயே வெற்றி பெற்றுள்ளதாக சாரா பேட் கூறுகிறார்.

"ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நூற்றுக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் செய்வது இதில் அடங்கும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரிடமும் இதுபோன்ற அணுகுமுறையை முயற்சித்திருக்கிறோம். நேர்மையாகச் சொல்வதானால், முடிவுகள் மிகவும் மிதமானவையாகவே இருந்தன."

எனவே, அன்றாட வாழ்க்கையைச் சமாளிப்பதற்கான நடைமுறை வழிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது. குறிப்பாக, முகங்களை அடையாளம் காணும் திறனை குறைவாகச் சார்ந்திருக்கும் உத்திகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, சமூகச் சந்திப்புகளின்போது முன்கூட்டியே திட்டமிடலாம்.

"பலர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சந்திப்பு இடத்தைத் தெளிவாகத் தீர்மானித்துக் கொள்வார்கள். இதன்மூலம் தாங்கள் எங்கு இருப்பார்கள் என்பது சரியாகத் தெரியும்; முதலில் அங்கு சென்று காத்திருக்கவும் முடியும்" என்கிறார் அவர்.

நானும் சிறிய விவரங்களைக் கவனிப்பதன் மூலம் மனிதர்களை அடையாளம் காணக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருவர் தன்னம்பிக்கையுடனோ, சற்றே உயர்வான மனப்பான்மையுடனோ நடக்கிறாரா? அவருக்குத் தனித்துவமான குரல் இருக்கிறதா? அல்லது அவர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட நிற உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துகிறாரா போன்ற விவரங்களை கவனிக்கிறேன்.

இந்த உத்தி எனக்கு நன்றாகப் பலனளிக்கிறது. ஆனால், இதில் ஆபத்தும் இருக்கிறது. ஒருவர் தனது தலைமுடியை வெட்டிக்கொண்டால் போதும், நான் மீண்டும் அவரை அடையாளம் காண்பதில் முதல் நிலையிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும்.

பிபிசி உலக சேவையின் கிரௌட்சயின்ஸ் (CrowdScience) நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்: லாரா ஓவன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு