ஏஐ புத்திசாலியாவதைவிட மனிதர்களின் ஒரு 'பலவீனமே' உண்மையான ஆபத்தாக இருக்குமா? நிபுணர்கள் பார்வை

பட மூலாதாரம், Getty Images
1984-ஆம் ஆண்டு, ஆங்கிலத் திரைப்படமான 'தி டெர்மினேட்டர்' வெளியானது.
அந்தத் திரைப்படத்தில், கணினி மூலம் இயங்கும் பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்று தன்னை பற்றி உணருகிறது. மனிதர்களைத் தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக அது கருதத் தொடங்குகிறது. இதையடுத்து மனித இனத்தையே அழிக்க முயற்சிக்கிறது. இதன் விளைவாக அணு ஆயுதப் போர் ஏற்படுகிறது.
அந்தக் காலத்தில் இது வெறும் அறிவியல் புனைகதையாகவே இருந்தது. செயற்கை நுண்ணறிவு தன்னை உருவாக்கிய மனிதர்களுக்கு எதிராகத் திரும்புவது என்ற கற்பனையாக மட்டுமே பார்க்கப்பட்டது.
ஆனால், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, உலகின் முன்னணி ஏஐ ஆய்வாளர்களில் சிலர், அந்தக் கற்பனையின் சில அம்சங்கள் ஏதோ ஒரு வடிவில் நிஜமாகலாம் என எச்சரித்து வருகின்றனர்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டாரியோ அமோடெய், இந்தச் சூழலில் "ஏஐ-யின் முன்னேற்றத்துக்கு வேகம் நிர்ணயிப்பது" குறித்து பேசியுள்ளார். ஏஐ வளர்ச்சியை நிறுத்த வேண்டும் என்பது அவரது வாதம் அல்ல. மாறாக, ஏஐ-யின் வளர்ச்சி வேகம், அதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் பின்தங்கும் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதே அவரது கருத்து.
ஏஐ அமைப்புகள் இனி கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் மட்டுமே கட்டுப்படுத்தப்படவில்லை என்பதால் இந்தக் கவலை அதிகரித்து வருகிறது. இணையவழி செயல்பாடுகள் உள்ளிட்ட துறைகளிலும், அவை படிப்படியாக தன்னிச்சையாகச் செயல்படும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கூற்றுப்படி, அதன் கிளவுட் ஏஐ அமைப்புகள் இணையக் குற்றங்கள், மோசடி, கண்காணிப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முன்பைவிட அதிக திறன் கொண்ட ஏஐ அமைப்புகளுக்கு தற்போது அதிகளவில் சுயமாக செயல்படும் திறன், அதிக அணுகல் வசதி மற்றும் நீண்ட நேரம் தொடர்ந்து செயல்படும் திறன் வழங்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏஐ காலத்தின் மிகப்பெரிய கேள்வி, இயந்திரங்கள் எப்போதாவது மனிதர்களைவிட அதிக அறிவாற்றல் கொண்டவையாக மாறுமா என்பதல்ல. இந்த அமைப்புகள் அதிக சக்திவாய்ந்தவையாக மாறும்போது, அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை மனிதர்களால் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதே உண்மையான கேள்வியாக இருக்கலாம்.
ஏனெனில், உண்மையான ஆபத்து, இயந்திரங்கள் சக்திவாய்ந்தவையாக மாறுவதில் இல்லை. அவற்றுக்கு 'வேண்டாம்' (No) என்று சொல்லும் வாய்ப்பையே மனிதர்கள் இழக்கும் அளவுக்கு பலவீனமாகிவிடுவதில் இருக்கலாம்.
இத்தகைய கேள்விகளுக்கு விடை காணும் வகையில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் துறை இயக்குநர் முகேஷ் சர்மா, பிபிசி ஹிந்தி-யின் 'தி லென்ஸ்' சிறப்பு நிகழ்ச்சியில் வைபவ் சிசின்டி, காயத்ரி அகர்வால் மற்றும் பேராசிரியர் தன்மய் சக்ரவர்த்தி ஆகியோரிடம் பேசினார்.
வைபவ் சிசின்டி, திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனமான க்ரோத் ஸ்கூல் நிறுவனத்தின் நிறுவனர். கடந்த சில ஆண்டுகளாக ஏஐ கல்வி, ஏஐ கருவிகள், தானியங்கு முறை மற்றும் ஏஐ ஏஜென்ட்கள் ஆகிய துறைகளில் விரிவாகப் பணியாற்றி வருகிறார்.
காயத்ரி அகர்வால், 'ஆல்டெர்ட்' என்ற நிறுவனத்தின் நிறுவனர். ஏஐ மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் இவர், நிறுவனங்களில் ஏஐ-யை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தும் செயல்முறை தொடர்பான நிபுணத்துவம் பெற்றவர்.
பேராசிரியர் தன்மய் சக்ரவர்த்தி, டெல்லி ஐஐடியின் மின் பொறியியல் துறையில் உள்ள யார்டி செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் பேராசிரியர்.
'AI குறித்து என்ன கவலை?'

பட மூலாதாரம், Getty Images
வைபவ் சிசின்டியின் கூற்றுப்படி, ஏஐ-யைப் பயன்படுத்தும்போது நாம் சிந்திப்பதையே மறந்து வருகிறோம் என்பதுதான் கவலை.
"ஆரம்பத்தில் ஏஐ-யை ஏதேனும் குறித்து தேடுவதற்காகத்தான் பயன்படுத்தினோம். ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்குப் பதில் கிடைக்கும். ஏஐ-யின் திறன்கள் அதிகரித்தபோது, மக்கள் தங்களுடைய வேலைகளில் மேலும் மேலும் பலவற்றை அதனிடம் ஒப்படைக்கத் தொடங்கினர். நீங்கள் செய்ய விரும்பாத அல்லது மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை ஏஐ மூலம் மேற்கொள்வதில் பிரச்னை இல்லை." என்றார் அவர்.
"ஆனால், நம்மை மனிதர்களாக ஆக்கும் சிந்திக்கும் திறனையே நாம் மெல்ல மெல்ல ஏஐ-யிடம் ஒப்படைத்து வருகிறோம். மக்கள் தங்களின் சிந்திக்கும் திறனை அதிகளவில் ஏஐ-யிடம் ஒப்படைக்கின்றனர். இன்று ஒரு கேள்வி எழுந்தால், அதை ஏஐ-யிடம் கேட்டு, அது கொடுக்கும் பதிலை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தப் பதில் சரியா, தவறா, அதில் என்ன தர்க்கம் உள்ளது, அதை எப்படிச் சரிபார்க்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. மக்களின் சுயமாகச் சிந்திக்கும் திறன் குறைந்து வருவதுதான் எனக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயம்."
பேராசிரியர் தன்மய் சக்ரவர்த்தி கூறுகையில், கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், குறிப்பாக 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அசாதாரணமான வேகத்தில் நிகழ்ந்துள்ளது.
2020-ஆம் ஆண்டில், சில ஆண்டுகளுக்குள் ஏஐ எந்த அளவுக்கு வளர்ச்சி அடையும், அதன் செயல்திறன் மற்றும் திறன் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதைப் பலராலும் கற்பனை செய்திருக்க முடியாது. .
ஏஐ-யின் திறன்கள் மிக வேகமாக வளர்ந்து வருவதுதான் முக்கியக் கவலை. இன்று ஏஐ தனது சொந்த கோடிங்-ஐ எழுதவும், புதிய ஏஐ மாதிரிகளை வடிவமைக்கவும், குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகளை உருவாக்கவும் முடிகிறது. அதற்கு அதிக அளவு தரவு வழங்கப்படும்போது, அதன் திறன்களும் அதிகரிக்கின்றன.
ஆனால், இந்த அமைப்புகளுக்குள் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அதே வேகத்தில் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவற்றின் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகள் குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். ஆனால், அவற்றுக்குள் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. இதைப் புரிந்துகொள்ளும் வரை, பயனுள்ள கட்டுப்பாடுகளை உருவாக்குவதும் கடினமாகவே இருக்கும்.
'ஏஐ தானாகவே வளர்ச்சியடையத் தொடங்குமா?'
பரந்த அளவிலான கொள்கை ரீதியிலான ஒருமித்த கருத்து உருவாகும் வரை, ஏஐ-யின் சில திறன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் தன்மய் சக்ரவர்த்தி கருதுகிறார்.
இன்று மிகப் பெரிய அளவிலான கோட்-ஐ ஆய்வு செய்யவும், பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியவும், தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய தீர்வுகளைக்கூட பரிந்துரைக்கவும் கூடிய ஏஐ மாதிரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறுகிறார்.
"எனவே, வளர்ச்சி மட்டுமே போதுமானதல்ல. ஒரு புதிய மாதிரி உருவாக்கப்பட்டு, அதன் திறன்கள் வெளிப்படுத்தப்பட்ட பிறகு, அது விரிவான சோதனை மற்றும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகே அது நிஜ உலகில் பயன்படுத்தப்பட வேண்டும். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் ஒரு தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுவிட்டால், பின்னர் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கலாம்" என்கிறார் அவர்.
இந்த அச்சுறுத்தல் எந்த அளவுக்கு உண்மையாகி வருகிறது என்பதற்கு வைபவ் சிசின்டி ஓர் உதாரணம் கூறுகிறார்.
"ஓபன்ஏஐ-யின் ஒரு மேம்பட்ட ஏஐ மாதிரி, இணையப் பாதுகாப்பு தொடர்பான ஒரு சோதனையில் சேர்க்கப்பட்டது. 'எக்ஸ்ப்ளாய்ட் ஜிம்' என்ற தரநிலை மதிப்பீடு அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இணையப் பாதுகாப்புத் துறையில் ஏஐ-யின் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சோதிப்பதே இதன் நோக்கம்." என்றார் அவர்.
மேலும், "இணையத்துக்கோ வேறு எந்த வெளிப்புற அமைப்புக்கோ அணுகல் இல்லாத பாதுகாப்பான சூழலில் அந்த ஏஐ மாதிரி வைக்கப்பட்டது. அதற்கு ஒரு சிக்கலைத் தீர்க்கும் பணி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், அதனால் அந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை. எப்படியோ ஒரு வழியைக் கண்டுபிடித்து அல்லது ஒரு குறைபாட்டைப் பயன்படுத்தி இணையத்துக்கான அணுகலைப் பெற்றது. பின்னர், மிகவும் பிரபலமான ஓர் இணையதளத்தை ஹேக் செய்து, அதில் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி தனக்கு வழங்கப்பட்ட பிரச்னைக்குத் தீர்வு கண்டது" என அவர் தெரிவித்தார்.
"முக்கியமான விஷயம் என்னவென்றால், அதை இப்படிச் செய்யுமாறு யாரும் கேட்கவில்லை. தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கு மட்டுமே அதற்கு வழங்கப்பட்டது. அந்த இலக்கை அடைவதற்காக, யாருமே கற்பனை செய்திராத நடவடிக்கைகளை அது மேற்கொண்டது."

பட மூலாதாரம், Getty Images
"உண்மையில் உள்ளே என்ன நடக்கிறது என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. மனிதர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் இல்லாமல், தாங்களாகவே முடிவெடுத்து செயல்படக்கூடிய ஏஐ அமைப்புகள் (ஆர்எஸ்ஐ அல்லது ஆர்டிஃபிஷியல் சூப்பர் இண்டலிஜென்ஸ் என்றும் அழைக்கப்படுபவை) உருவாக்கப்பட்டுவிட்டனவா என்பது நமக்குத் தெரியாது. உருவாக்கப்பட்டுவிட்டதா? அதனால்தான் ஏ.ஐ வேகத்தை குறைக்க முயற்சிக்கிறர்களா?" என்கிறார் வைபவ்.
"ஆர்எஸ்ஐ குறித்து கூகுளும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இறுதியாகச் சொல்வதென்றால், என்ன நடக்கிறது என்பது யாருக்கும் முழுமையாகப் புரியவில்லை."
கட்டுப்பாடுகளை உருவாக்குவதில் உள்ள சவால்கள்
ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் உள்ளிட்ட முன்னணி ஏஐ நிறுவனங்கள், ஏஐ-க்கு கட்டுப்பாடுகள் தேவை என்றும், அதன் வளர்ச்சியை பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும், புதிய விதிமுறைகள் மிகவும் கடுமையாக உருவாக்கப்பட்டால், ஏற்கெனவே ஏஐ போட்டியில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கே அதன் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காயத்ரி அகர்வாலும் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார்.
அவர் கூறுகையில், "நான்கு அல்லது ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஏஐ-யை உருவாக்க முடியும் என்று நாம் முடிவு செய்தால், அவர்களிடம் முழுமையான கட்டுப்பாட்டை ஒப்படைத்துவிடுவோம். இது புதுமையைத் தடுத்து நிறுத்துவதுடன், சிறிய நிறுவனங்களுக்கான வாய்ப்புகளையும் கிட்டத்தட்ட இல்லாமல் செய்துவிடும்." என்றார்.
பெரிய ஏஐ நிறுவனங்கள், புதிய திறன்களை உருவாக்குவதற்கு எவ்வளவு முதலீடு செய்கின்றனவோ, அதே அளவுக்கு பாதுகாப்பு மற்றும் சோதனைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார் வைபவ்.
ஏஐ இன்னும் ஓரளவுக்கு "புரியாத ஒன்றாக" இருப்பதுதான் மிகப்பெரிய கவலை என்கிறார் அவர். அதாவது, அது செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.
பேராசிரியர் தன்மய் சக்ரவர்த்தியும் இதேபோன்ற கருத்தைக் கொண்டுள்ளார்.
"இந்த அமைப்புகளை உருவாக்குபவர்களிடம்தான் முதன்மையான பொறுப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். சில அமைப்புகள் மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறியுள்ளன என்பதையும், அவற்றுக்கு சிறப்பு மேற்பார்வை தேவை என்பதையும் அவர்கள் உணர வேண்டும். சுகாதாரம், சட்டம், கல்வி அல்லது அரசு சேவைகள் போன்ற முக்கியமான துறைகளில் ஏஐ மாதிரி பயன்படுத்தப்படும்போது, அந்த அமைப்பு தனியுரிமை, பாதுகாப்பு, நியாயத்தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றுக்கான தரநிலைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை அரசுகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும். எனவே, இது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பாக இருக்க முடியாது." என்றார்.
காயத்ரி அகர்வால் கூறுகையில், "இன்றும்கூட ஏஐ-யைப் பயன்படுத்தும்போது மனிதர்களின் முடிவெடுக்கும் திறனும் கட்டுப்பாடும் அவசியம். ஒரு நிறுவனம் தனது தரவு, அணுகல் வசதி மற்றும் கட்டுப்பாடு அனைத்தையும் ஏஐ-யிடம் ஒப்படைத்துவிட்டு, 'நீ விரும்பியதைச் செய்' என்று கூறினால், பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாதது. எனவே, பொறுப்பு தொழில்நுட்பத்திடம் மட்டுமல்ல; அதைப் பயன்படுத்துபவர்களிடமும் உள்ளது." என தெரிவித்தார்.
'வேலைகள், வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத்துக்கான திட்டமிடல்'

பட மூலாதாரம், Getty Images
ஏஐ மக்களை மேலும் வளமானவர்களாக மாற்றும் திறனையும் கொண்டுள்ளது என்கிறார் வைபவ்.
அவரது கூற்றுப்படி, பணிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது, ஏஐ-யால் முழுமையாகச் செய்யக்கூடிய பணிகள். இத்தகைய பணிகளை ஏஐ-யிடம் ஒப்படைக்கலாம்.
இரண்டாவது, ஏஐ உதவக்கூடிய பணிகள். ஆனால், இறுதி முடிவை மனிதர்தான் எடுக்க வேண்டும். இத்தகைய பணிகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மனிதர்கள் தங்களிடமே வைத்திருக்க வேண்டும்.
மூன்றாவது, மனிதர்களுடனான உறவுகளை உருவாக்குவது, உத்திகளை வகுப்பது அல்லது மனிதர்களால் மட்டுமே நம்பகத்தன்மையுடன் செய்யக்கூடிய பிற பணிகள் போன்ற ஏஐ-யால் செய்ய முடியாத பணிகள்.
நான்காவது, ஏஐ அமைப்புகளை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான புதிய பணிகள்.
"இந்த நான்கு நிலைகளையும் புரிந்துகொள்பவர்கள்தான் எதிர்காலத்தில் அதிக மதிப்புமிக்கவர்களாக இருப்பார்கள்" என்கிறார் அவர்.
வேலைவாய்ப்புகளில் நுழைவு நிலையில் உள்ள பணிகளில்தான் உண்மையான சவால் இருப்பதாக காயத்ரி அகர்வால் கருதுகிறார்.
அவர் கூறுகையில், "இளநிலை ஆய்வாளர், இளநிலை ஆராய்ச்சியாளர், இளநிலை ப்ரோகிராமர் அல்லது இளநிலை மார்க்கெட்டிங் நிபுணர் போன்ற பல பணிகளை ஏஐ-யால் கணிசமான அளவுக்கு செய்ய முடியும். ஆனால், இவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்த ஏஐ-யைப் பயன்படுத்தி, நடுத்தர அல்லது மூத்த நிலை பணிகளைச் செய்யத் தொடங்கினால், அவர்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்." என்றார்.
"எனவே, எதிர்கால வேலைவாய்ப்புகள் மக்கள் ஏஐ-யை ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது அதிலிருந்து விலகி இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தே இருக்கும் என்று நான் கருதுகிறேன். உங்களுடைய அடிப்படைத் திறன்கள் ஆரம்பநிலையிலேயே இருந்தால் ஏஐ-யைப் பயன்படுத்துவது உங்களுக்கு அவசியமாகும். இல்லையெனில், அதிக அனுபவம் கொண்ட ஒருவர் ஏஐ-யைப் பயன்படுத்தி, நீங்கள் முன்பு செய்ய வேண்டியிருந்த அதே பணிகளைச் செய்துவிடுவார்." என தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு அறிவுரையாக வைபவ் கூறுகையில், "பட்டங்களையும் சான்றிதழ்களையும் மட்டுமே துரத்தாதீர்கள். எதிர்காலத்தில், உங்களிடம் என்ன பட்டம் உள்ளது என்பதை மட்டும் மக்கள் பார்க்க மாட்டார்கள். உங்களிடம் வேலை செய்யும் திறன் இருக்கிறதா, முடிவுகளை எடுக்கும் புரிதல் இருக்கிறதா, முடிவுகளை வழங்கும் அனுபவம் இருக்கிறதா என்பதைத்தான் பார்ப்பார்கள்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































