சிறுநீரகம் தேடி பல வழிகளில் முயன்று இறுதியில் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தாய் - அந்நியர் செய்த நம்ப முடியாத உதவி

- எழுதியவர், மேட் முர்ரே
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஃபேஸ்புக்கில் தனக்கு சிறுநீரகம் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்த பெண்ணுக்கு, அவருக்குத் தெரியாத ஒருவர் தானமாக சிறுநீரகம் வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
41 வயதான கரேன் டேவி, சிறுநீரகத்திற்காக கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் முயற்சி செய்து முடித்திருந்தார். இறுதியாக சமூக ஊடகத்தை நாடிய அவர், "என் குடும்பத்தை தாயில்லாமல் விட்டுச் செல்ல விரும்பவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான கரேனின் பதிவைப் பார்த்த கேரி சம்மர்ஃபீல்ட், அவர் கரேனுக்கு பொருத்தமான சிறுநீரக தானதாரர் என்பதை அறிந்த பிறகு, தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார். ஜூலை மாதம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அவர் சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.
"எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதைவிட, இந்தப் பெண்ணுக்கு என்னுடைய ஒரு சிறுநீரகம் அதிகம் தேவைப்படுகிறது என்று நினைத்தேன்" என்று கேரி கூறினார்.
கேரியின் இந்த தாராள மனப்பான்மைக்கு தங்களால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்று கரேனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், இந்தச் சிறுநீரக தானம் கரேனுக்கு "மீண்டும் ஒரு தாயாக வாழ மற்றொரு வாய்ப்பை" வழங்கியுள்ளதாக அவர்கள் கூறினர்.
பிரிட்டனில் இறந்த நபரிடமிருந்து பெறப்படும் சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் சராசரி காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் என்று தேசிய சுகாதாரச் சேவையின் ரத்தம் மற்றும் உறுப்பு மாற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், உயிருடன் இருக்கும் ஒருவர் சிறுநீரகத்தைத் தானமாக வழங்கினால், அந்தக் காத்திருப்பு காலம் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்களாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Karen Davey
இது கரேனுக்கு கிடைத்த இரண்டாவது உறுப்பு மாற்று சிகிச்சையாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகன் கால்பந்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது 31 வயதில் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். மேலும், ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக கரேனுக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது.
"இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால், மருந்தின் அளவை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதே, ஒரு கட்டத்தில் எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம் என்பது எங்களுக்குத் தெரியும். அதை மனதளவில் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது."
கரேன், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரில் யாரும் சிறுநீரக தானத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல என்பதை அறிந்தபோது, அவருக்கு மூன்றாம் நிலை சிறுநீரகச் செயலிழப்பு இருந்தது. இதையடுத்து ஃபேஸ்புக்கில் சிறுநீரகத்திற்காக வேண்டுகோள் விடுக்க அவர் முடிவு செய்தார்.
தனது ரத்த வகை ஒப்பீட்டளவில் அரிதானது என்றும், சிறுநீரகச் செயலிழப்பு தனது வாழ்க்கையை முடக்கிப் போட்டிருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"என்னைப் பொறுத்தவரை குழந்தைகள்தான் முக்கியம். அவர்களுக்காக நான் இருக்க வேண்டும்."
கரேனின் மூத்த பிள்ளைக்கு தற்போது 22 வயது. மேலும், அவருக்கு ஒரு வயது பேரக்குழந்தையும் உள்ளது.
"நான் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது குழந்தைகள் 10 வயது குறைவாக இருந்தார்கள். அதன்பிறகு அவர்கள் நிறைய விஷயங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். சிறுநீரகப் பிரச்னை அவர்களுக்கு அடுத்த தடையாக இருந்தது" என்றும் அவர் கூறினார்.

செக்யூரிட்டி பணியாளரான கேரி, தற்செயலாக கரேனின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தார். அவருக்கு உதவ வேண்டும் என்று அப்போது முடிவு செய்தார்.
"கரேனின் வேண்டுகோளைப் பார்த்தேன். அதில் குழந்தைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். கரேன் என் மகளின் வயதை ஒத்தவர் என்பதையும், அவரது இளைய குழந்தையின் வயதும் என் பேரனின் வயதும் ஒன்றுதான் என்பதையும் நினைத்துப் பார்த்தேன். குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது" என்று அவர் கூறினார்.
"அது என் மகளாக இருந்திருந்தால், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் முயற்சி செய்த பிறகு, எல்லா இடங்களிலும் தேடியிருப்பேன். அப்போது ஒரு அந்நியர் முன்வந்து உதவ வேண்டும் என்று விரும்பியிருப்பேன். அதனால், உதவாமல் இருப்பது சுயநலமாக இருக்கும் என்று நினைத்தேன்."
அவர் மேலும் கூறுகையில், "எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதைவிட, இந்தப் பெண்ணுக்கு என்னுடைய ஒரு சிறுநீரகம் அதிகம் தேவைப்படுகிறது என்று நினைத்தேன்" என்றார்.
60 வயதான கேரி, கரேனை இதற்கு முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை. இருப்பினும், சிறுநீரக தானம் செய்ய முடியுமா என்பதை அறிய உடனடியாகப் பரிசோதனைக்கு முன்வந்தார்.
அதற்காக அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, ஜூலை 15ஆம் தேதி கார்டிஃப் நகரில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் கரேனும் கேரியும் ஆறு மணி நேரம் நடைபெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த முடிவை எடுத்ததில் தனக்கு ஒருபோதும் இரண்டாவது எண்ணம் ஏற்படவில்லை என்று கேரி கூறினார்.
" கரேனைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல்முறையாக அவரைப் பார்க்கிறேன். அவர் மிகவும் நலமாக இருக்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை, சிறுநீரகத்தைத் தானமாக வழங்குவது என்பது திருமணம் செய்துகொள்வது, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஆகியவற்றைப் போலவே முக்கியமானது. என் வாழ்க்கையில் முக்கியமான மூன்று விஷயங்களில் இதுவும் ஒன்று. கரேன் மிகவும் தகுதியானவர். அவரது குடும்பமும் உதவிக்குத் தகுதியான குடும்பம்" என்றார்.

மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் "100 மடங்கு நன்றாக உணர்வதாக" கரேன் கூறினார். அவரது கணவர் மேத்யூ, கேரிக்கு தாங்கள் எப்போதும் நன்றியுடன் இருப்போம் என்றார்.
"தற்போது உலகில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் இது மிகவும் மோசமான இடமாகத் தோன்றுகிறது. ஆனால், உலகில் இன்னும் மனிதநேயம் இருக்கிறது என்ற நம்பிக்கையை இது உண்மையிலேயே அளிக்கிறது" என்று அவர் கூறினார்.
"கேரியும் அவரது குடும்பத்தினரும் செய்ததற்கு நாங்கள் ஒருபோதும், எப்போதுமே அவர்களுக்கு ஈடாக எதையும் செய்ய முடியாது. கரேனுக்கு இன்னொரு வாய்ப்பை, எங்கள் குழந்தைகளுக்கு தாயாக இருக்கவும், அவர் வாழத் தகுதியான வாழ்க்கையை வாழவும் இன்னொரு வாய்ப்பை அவர் வழங்கியிருக்கிறார். அவர் கரேனுக்கு உயிர் வாழும் பரிசை வழங்கியிருக்கிறார்."
"யாரோ ஒருவர் முன்வந்து, தெரியாத ஒருவருக்காக தனது உடலை இத்தனை பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, தனது சிறுநீரகங்களில் ஒன்றை அகற்றிக்கொள்வது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்" என்றார் கரேன்.
இந்தத் தம்பதியின் 17 வயது மகன் பிராண்டன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது தாய் குணமடைந்து வருவதைப் பார்ப்பது "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதாகக் கூறினார்.
"இப்போது அம்மா நீண்ட காலத்துக்குப் பிறகு முன்பைவிட நன்றாகத் தெரிகிறார். உலகில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































