'எலும்புகளுக்கு இடையே நீந்த மக்களுக்கு தயக்கம் இல்லை' - ரஷ்யா மறக்க முயலும் கடந்த காலத்தை நினைவூட்டும் சான்று

பட மூலாதாரம், BNK/VK MO "Knyazhpogostsky"/BBC
- எழுதியவர், சோஃபியா வோல்யனோவா மற்றும் விசாரணைத் துறை
- பதவி, பிபிசி நியூஸ் ரஷ்யன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
சிலருக்கு, யெம்வாவில் உள்ள நீச்சல் ஏரி ஒரு "அற்புதமான இடமாக", அன்னப்பறவைகள் நீந்தும் அழகிய குளமாக உள்ளது. அது கோடைக்காலத்தின் வெப்பமான நாளில் புத்துணர்ச்சிக்காக நீராடுவதற்கு ஏற்ற இடமாகவும் கருதப்படுகின்றது.
ஆனால், மற்றவர்களோ இதை ஒரு கல்லறை என்கிறார்கள்.
"அங்கே தோண்ட தோண்ட எலும்புகள் இருப்பது இந்த ஊருக்கே தெரியும்," என்று வடக்கு ரஷ்யாவின் கோமி குடியரசில் உள்ள இந்த செயற்கை கடற்கரையின் புகைப்படத்துக்கு கீழே சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பல ஆண்டு காலமாக உள்ளூர் மக்கள் இந்த ஏரியில் நீந்தி வருகின்றனர். ஆனால், சோவியத் குலாக் அமைப்பின் கொடூரமான கட்டாய உழைப்பு முகாம்களில் உயிரிழந்தவர்களின் புதைகுழியாக இருந்த இடத்தைத் தோண்டி தான் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.
கரையில் மனித எலும்புகளை உள்ளூர் மக்கள் தொடர்ந்து கண்டெடுத்து வருகின்றனர்.
அங்கு இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னமாகவோ அல்லது எச்சரிக்கையாக இருக்கக்கூடிய நினைவுப் பலகையோ அங்கு எதுவும் இல்லை.
அதிகாரிகள் இதுவரை அந்த இடத்தை அடையாளப்படுத்தவில்லை. சமீபத்தில் எலும்புகளை என்ன செய்வது என்பது குறித்து விவாதம் நடைபெற்றபோது கூட, அவை குலாக் கைதிகளுடையவை என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பட மூலாதாரம், TASS/BBC
1980-களில், ஓர் உள்ளூர் கட்டுமான நிறுவனம் அந்தப் பகுதியில் குடைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் செயற்கை ஏரி மற்றும் கடற்கரையை அமைக்க முடிவு செய்தது.
அப்போது, தோண்டும் இயந்திரம் மண்ணை மட்டுமல்லாமல் மனித எச்சங்களையும் சவப்பெட்டிகளின் மரத்துண்டுகளையும் வெளியே கொண்டு வந்தது.
எனினும், மாஸ்கோவுக்கு வடகிழக்கே 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படவில்லை.
நிலத்தடியில் இருந்து வரும் நீரூற்று அந்தப் பள்ளத்துக்குள் திருப்பிவிடப்பட்டது. சுமார் 15,000 மக்கள் வசிக்கும் யெம்வா நகர மக்கள் அதன்பிறகு தொடர்ந்து அங்கு நீந்தி வருகின்றனர்.
ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தும், அங்கு ஆராய்ச்சியாளர்கள் குழு வந்ததும், எலும்புகளை என்ன செய்வது என்பது குறித்து மீண்டும் விவாதத்தைத் தூண்டியது.
அந்தப் பகுதி முழுவதையும் மீண்டும் தோண்டி, கண்டெடுக்கப்படும் அனைத்து எச்சங்களையும் வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று சில உள்ளூர்வாசிகள் கூறினர்.
வேறு சிலர், அந்த இடத்தைக் குறிக்கும் வகையில் சிலுவை ஒன்றை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இன்னும் சிலர், இதுபற்றி இவ்வளவு பெரிதாகப் பேச வேண்டிய அவசியமில்லை என்றும், குலாக் முகாம்கள் அவ்வளவு கொடூரமானவை அல்ல என்றும், அவற்றில் குற்றவாளிகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததாகவும் வாதிட்டனர்.
இறுதியில், உள்ளூர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாதது ரஷ்யாவின் பரவலான ஒரு போக்கைப் பிரதிபலிக்கிறது. அங்கு இக்காலகட்டத்தைச் சேர்ந்த புதைவிடங்கள் அரிதாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஆய்வு செய்யவோ அல்லது அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவோ முயல்பவர்கள் மீது வழக்குத் தொடரப்படுகிறது. அதே வேளையில் 'குலாக்' முறை பற்றிய விவாதங்கள் மெல்லமெல்ல அதிகம் பேசப்படாத தலைப்பாக மாறிவருகிறது.

பட மூலாதாரம், NA Komi /USTR/BBC
மாஸ்கோவின் குலாக் வரலாற்று அருங்காட்சியகத்தின் மதிப்பீடுகளின் படி, (அதிகாரிகள் உத்தரவால் அந்த அருங்காட்சியகம் இந்த ஆண்டு மூடப்பட்டது) 1930 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2 கோடி பேர் சோவியத் முகாம்கள், தண்டனைக் காலனிகள் மற்றும் சிறைகள் வழியாகச் சென்றுள்ளனர்.
அவர்களில் சுமார் 40 லட்சம் பேர் அரசியல் காரணங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள்.
இந்த ஒடுக்குமுறை காலகட்டத்தில், ஸ்டாலின் ஆட்சியின் போதும் அதற்குப் பிந்தைய காலத்திலும், அரசின் காவலில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சோவியத் ஒன்றியத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு 60 லட்சம் பேர் கட்டாயமாக இடப்பெயர்வுக்கு ஆளாகினர்.
கோமி மொழியில் "தூய்மையான நீர்" என்று பொருள்படும் யெம்வா, 1928-இல் அமைக்கப்பட்ட ஒரு தொழிலாளர் முகாமைச் சுற்றி உருவானது. இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் குலாக் கைதிகள் அல்லது காவலர்களின் வழித்தோன்றல்களாக உள்ளனர்.
ஒட்டுமொத்த கோமி பிராந்தியத்திலும் இதே நிலை தான். இப்போதும் கூட, யெம்வாவில் தொழிலாளர்களுக்கான சிறைத் தண்டனைக் காலனி ஒன்று செயல்பட்டு வருகிறது.
பசுமையான ஊசியிலை காடுகளால் சூழப்பட்ட வடக்குப் பகுதிகளின் முகாம்களில் வாழும் நிலைமைகள் கொடூரமானவையாக இருந்தன. கைதிகளுக்கு போதுமான தங்குமிட வசதிகள் இல்லை.
குளிர்காலத்தில் வெப்பநிலை -50 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தபோது கூட, பலர் நிலத்துக்குள் தோண்டப்பட்ட குடில்களிலோ அல்லது கூடாரங்களிலோ வசித்தனர்.
காலை முதல் இரவு வரை, காடுகளின் வழியாக ரயில் பாதை அமைப்பதற்காக அவர்கள் மரங்களை வெட்டினர். அவர்களின் தினசரி உணவாக 400 கிராம் ரொட்டியும் ஒரு கிண்ணம் சூப்பும் மட்டுமே வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், T.me/Officially_vorkuta/BBC
வரலாற்றாசிரியர்களின் மதிப்பீடுகளின் படி, அரசியல் காரணங்களுக்காகவும் அரசியல் அல்லாத காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான கைதிகள் கோமியில் இருந்த முகாம்கள் வழியாகச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் எத்தனை பேர் அங்கே உயிரிழந்தனர் என்பது குறித்த துல்லியமான எண்ணிக்கை இல்லை.
2021-ஆம் ஆண்டில், அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டபோது, குறைந்தது மூன்று பேரின் எலும்புகளை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டனர்.
ஆய்வாளர்கள், அந்த எச்சங்கள் குறைந்தது 15 ஆண்டுகள் பழமையானவை என்றும், அவற்றில் காயங்களுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் கண்டறிந்தனர். "குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லாததால்" அவர்கள் வழக்குப் பதிவு செய்யவில்லை.
எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடம், 1930 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் "குலாக் கைதிகளுக்கான அதிகாரப்பூர்வமற்ற கூட்டுப் புதைகுழியாக" இருந்ததாக ஆய்வாளர்களின் முடிவில் குறிப்பிடப்பட்டது.
ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு, குலாக் வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் குழு பிராந்தியத் தலைநகரான சிக்திவ்கரில் இருந்து அங்கு வந்திருக்காவிட்டால், இந்த விவகாரம் அத்துடன் முடிந்திருக்கும்.
"நாங்கள் குவாரிக்குச் சென்றோம். அங்கு எதையாவது தேட வேண்டிய அவசியமே எங்களுக்கு ஏற்படவில்லை, எலும்புகள் உடனடியாகக் கண்ணில் பட்டுவிட்டன" என்று எழுத்தாளரும் உள்ளூர் வரலாற்றாசிரியருமான கிரிகோரி ஸ்பிசாக், பிபிசி நியூஸ் ரஷ்யனிடம் கூறினார்.

பட மூலாதாரம், TSGALI SPB/BBC
அப்போது, அவருடன் ஆய்வு மேற்கொண்ட இகோர் சாஹின் கூறுகையில், "விலா எலும்புகளையும் இடுப்பு எலும்புகளையும் கண்டுபிடித்தோம். அவற்றை விலங்குகளின் எச்சங்கள் என்று தவறாகக் கருத முடியாது." என்றார்.
"இவற்றை இப்படியே விட்டுச் செல்வது மனிதாபிமானமற்றது. இந்த மோசமான கடந்த கால நினைவைக் கூட ஏற்க மனமில்லாமல் யெம்வா தனது வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது," என்றும் அவர் கூறினார்.
ரஷ்ய சட்டத்தின்படி, புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் புதைகுழிகளை அதிகாரிகள் பதிவு செய்து, அவற்றை அடையாளப்படுத்த வேண்டும். இதில் " ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் கல்லறைகளும்" அடங்கும். தேவையானால், அந்த எச்சங்களை வேறு இடத்துக்கு மாற்றி மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும்.
சாஹின் அரசு வழக்கறிஞரைத் தொடர்புகொண்டார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏரிக்கு அருகில் குறைந்தபட்சம் ஒரு சிலுவையையாவது நிறுவுமாறு உள்ளூர் நிர்வாகத்திடமும் தேவாலயத்திடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், பிராந்திய சிறைத்துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் உள்ளூர் வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றைத் தொடர்புகொண்ட பின்னர், இது குலாக் கல்லறை என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று நிர்வாகம் வழக்கறிஞர் அலுவலகத்திடம் தெரிவித்தது.
எனினும், மற்றவர்கள் இதில் உறுதியாக உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images/BBC
"இவர்கள் நிச்சயமாக குலாக் முகாமால் பாதிக்கப்பட்டவர்கள் தான். ஏனெனில், அவர்கள் உடைகளோ காலணிகளோ இல்லாமல், ஒரு மண்வெட்டியின் கூர்முனையின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளனர்," என்று ஆய்வாளர் ஓரெஸ்ட் ரோமான்கோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் பெரும் ஒடுக்குமுறையின் வரலாறு அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. கூட்டுப் புதைகுழிகளை அடையாளம் காண முயற்சிப்பவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மேற்கு ரஷ்யாவில் உள்ள குலாக் முகாம் வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குநரான நிகோலாய் அரக்சேயேவ், "அனுமதியின்றி" ஒரு மண்டை ஓட்டைத் தோண்டி எடுத்ததற்காக, அவருக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.
வரலாற்று அமைப்பான மெமோரியலின் பெர்ம் கிளையின் தலைவரான ராபர்ட் லதிபோவ், குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
முன்னாள் கட்டாயக் குடியேற்றத் தளத்துடன் இணைந்த கைவிடப்பட்ட கல்லறையை அவரும் லிதுவேனியாவைச் சேர்ந்த ஐந்து தன்னார்வலர்களும் சுத்தம் செய்து, கல்லறைகளில் ஒன்றில் சிலுவை ஒன்றை நிறுவியதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்றது.
2019-இல் ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் விளாடிமிர் புதினிடம் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்ட மறுநாளே அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், அதே கூட்டத்தில், சோவியத் கால ஆவணக் காப்பகங்களுக்கு "கட்டுப்பாடற்ற அணுகல்" வழங்கப்படுவதற்கு அதிபர் எதிர்ப்பு தெரிவித்தார்.
"1930-களில் என்.கே.வி.டி [சோவியத் ரகசியக் காவல்துறை] எவ்வாறு செயல்பட்டது என்பது நமக்குத் தெரியும். தங்கள் மூதாதையர்களின் ஆவணங்கள் திறக்கப்படுவதை உறவினர்கள் எப்போதும் விரும்பாமல் இருக்கலாம்," என்று புதின் கூறினார்.
நீச்சல் தடைசெய்யப்பட்டது
2025-ஆம் ஆண்டு, ரஷ்ய அரசு ஆவணக் காப்பகம், அரசியல் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களை "அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டும்" என வகைப்படுத்தத் தொடங்கியது.
இந்த ஆண்டு, கோமியில் உள்ள சுயாதீன கலாசார அமைப்பான ரிவோல்ட் சென்டர் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அரசியல் ஒடுக்குமுறை குறித்த தகவல்களைச் சேகரித்து, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பகிர்ந்து வந்த இந்த அமைப்புடன், சோவியத் கால மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்வதற்காக நிறுவப்பட்ட மெமோரியல் அமைப்பும் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது.
தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த குலாக் அருங்காட்சியகத்தை மாஸ்கோ அதிகாரிகள் மாற்றியமைத்தனர். அதன் இயக்குநர் ரோமன் ரோமானோவும் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்குப் பதிலாக, நாஜி படையெடுப்பின் போது உயிரிழந்த சோவியத் மக்களின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் 'நினைவு அருங்காட்சியகம்' மாற்றியமைக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு கோடையில், யெம்வா ஏரியில் நீந்துவதற்கு அரசு வழக்கறிஞர் தடை விதித்தார். அந்தப் பகுதியை ஆய்வு செய்து, அங்கு மனித எச்சங்கள் இருந்தால் அவற்றை அந்த ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் அடக்கம் செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கோமி உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்தது.
அந்தப் பகுதி உண்மையில் "ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் புதைகுழியாக" இருந்ததா என்பதைத் தீர்மானிக்க முதலில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
'உள்வாங்கப்பட்ட அவமானம்'
கடந்த ஆண்டு இறுதியில், கல் குவாரியில் உள்ள எச்சங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளைக் கட்டாயப்படுத்துவதற்கான அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன, ஆனால் உடனடியாக அவை நிறுத்தப்பட்டன.
பிபிசி நியூஸ் ரஷ்யன், அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் நீதிமன்றச் சேவையைத் தொடர்புகொண்டது, ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
ஸ்டாலினிச அடக்குமுறை ஒரு தடைசெய்யப்பட்ட விஷயமாகவே நீடிக்கிறது என, கோமி டெய்லி என்ற சுதந்திரமான பிராந்தியப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் லானா பைலாயேவா, பிபிசி நியூஸ் ரஷ்யனிடம் கூறுகிறார்.
"இது மிகவும் வெட்கக்கேடான விஷயம்" என்று கூறிய அவர், "ஒடுக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கும் இது பொருந்தும். ஒருவேளை, 'மக்களின் எதிரி' என்ற முத்திரையால் ஏற்பட்ட, உள்ளுக்குள் புதைந்த வெட்கம் இன்னும் அவர்களிடம் நீடிப்பதால் இருக்கலாம். மரண தண்டனை நிறைவேற்றியவர்களின் வழித்தோன்றல்களும்கூட இந்த விஷயத்தை ஆராய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை"என்கிறார்.
இந்தக் கோடையில், அதிகாரிகள் ஏரிக்கரையில் 'நீந்தக் கூடாது' என்ற அறிவிப்புப் பலகையை வைத்தனர். ஆனால், மக்கள் தொடர்ந்து நீந்தி வருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
"எலும்புகளுக்கு மத்தியில் நீந்துவதற்கு மக்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம்" என பிபிசி நியூஸ் ரஷ்யனிடம் கூறுகிறார் பைலயேவா .
கூடுதல் தகவல்களை வழங்கியவர் ஓல்கா இவ்ஷினா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































