சீனா ராணுவ விதிகளில் கொண்டு வந்துள்ள மாற்றம் போர் தயாரிப்புடன் ஏன் தொடர்புபடுத்தப்படுகிறது?

சீனா தனது ராணுவ விதிகளில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் விவாதப் பொருளாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமைதிக் காலத்திலிருந்து போர்க் காலத்திற்கு மாறுவதை எளிதாக்கும் நடவடிக்கையாகக் கருதப்படும் வகையில், சீனா தனது தேசிய பாதுகாப்புத் திரட்டல் சட்டத்தைத் திருத்தியுள்ளது.
    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சீனா தனது தேசியப் பாதுகாப்புத் திரட்டல் சட்டத்தை 16 ஆண்டுகளில் முதன்முறையாகத் திருத்தியுள்ளது.

தைவானைச் சேர்ந்த சிலர், இது ஒரு 'பரவலான மோதலை' நோக்கிய நகர்வாகப் பார்க்கின்றனர்.

இந்த புதிய சட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது ஆகஸ்ட் 28 அன்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. இதன் முதன்மைச் சட்டம் ஜூலை 1, 2010 அன்று அமலுக்கு வந்தது.

புதிய சட்டம், தேசியப் பாதுகாப்புத் திரட்டலுக்கு முந்தைய கட்டமைப்பைத் தக்கவைத்துள்ளது.

இதில் எப்போது படைப் பிரிவுகளைப் பயன்படுத்துவது, பாதுகாப்புத் திரட்டலின் போது பல்வேறு அரசுத் துறைகளின் பொறுப்புகள், ரிசர்வில் உள்ள படைகளின் ஆட்சேர்ப்பு மற்றும் உத்தி தளவாடங்கள், மற்றும் பொதுமக்களின் உபகரணங்களைக் கைப்பற்றுதல் போன்ற விஷயங்கள் அடங்கும்.

ஆனால் இதில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் செய்தி , புதிய மாற்றங்களையும் சீனா மற்றும் தைவான் ஊடகங்களின் எதிர்வினைகளையும் புரிந்துகொள்ள முயல்கிறது.

முக்கிய மாற்றங்கள் என்ன?

சீனா தனது ராணுவ விதிகளில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் விவாதப் பொருளாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தச் சட்டம் 'வளர்ச்சி நலன்' என்ற அம்சத்தைச் சேர்ப்பதன் மூலம், திரட்டல் மீது சீனாவிற்கு அதிக அதிகாரத்தை அளிக்கிறது.

ஒரு சுவாரஸ்யமான மாற்றம் என்னவென்றால், பாதுகாப்புத் திரட்டலுக்கான காரணங்களின் பட்டியலில் 'வளர்ச்சி நலன்களும்' சேர்க்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2010-ஆம் ஆண்டின் சட்டத்தில், சீனாவின் "இறைாண்மை, ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது" சீனா பாதுகாப்புத் திரட்டலுக்கு அழைப்பு விடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

புதிய சட்டம், எது "வளர்ச்சி நலன்கள்" என்பதைக் குறிப்பிடவில்லை. இது பாதுகாப்புத் திரட்டலுக்கான அழைப்புகள் விடுப்பதன் மீது சீனாவிற்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்கக்கூடும்.

இது சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வெளிநாடுகளில் அதிகரித்து வரும் தனது வணிக நலன்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கைகளின் போது பாதுகாப்புத் திரட்டலை மேற்கொள்ள சீனாவை அனுமதிக்கும்.

2026-ஆம் ஆண்டின் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் 'தேசியப் பாதுகாப்புத் திரட்டல் சட்டத்தின்' வரையறையும் சேர்க்கப்பட்டுள்ளது.

அமைதிக்காலத்திலிருந்து போர்க்காலத்திற்கு விரைவாக மாறுவதையும், பொருளாதார மற்றும் சமூக பலத்தை தேசியப் பாதுகாப்புச் சக்தியாக மாற்றுவதையும் உறுதிசெய்ய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை இது குறிக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அமைதிக்காலச் சக்தியைப் போர்க்காலச் சக்தியாக மாற்றுவது' என்ற இந்தப் புதிய யோசனை சட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிபலிக்கிறது.

தேசியப் பாதுகாப்புடன் நெருங்கிய தொடர்புடைய பொதுமக்கள் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பான புதிய நிபந்தனையும் இதில் அடங்கும்.

இதன்படி, குறிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தரநிலைகளுக்கு இணங்காத திட்டங்கள் மற்றும் பொருட்கள், ராணுவத் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

ரயில்வே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மற்றும் சிவில் விமானங்கள் போன்ற வாகனங்கள் இந்த வகையின் கீழ் வரக்கூடும்.

புதிய விதிகள், பாதுகாப்புத் திரட்டலின் போது ராணுவம் இந்தத் திறன்களை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த வழிவகுக்கும்.

தேசியப் பாதுகாப்புத் திரட்டலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் 'உத்தி பொருட்களைப் போதுமான அளவில் சேமித்து வைக்கவும்' மற்றும் 'தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் திறன்களை அதிகரிக்கவும்' ஊக்குவிக்கப்பட்டுள்ளது மற்றுமொரு மாற்றமாக உள்ளது.

மற்றொரு புதிய பகுதி, சீனாவின் உயர்மட்ட இராணுவ அமைப்புகளான ஸ்டேட் கவுன்சில் மற்றும் மத்திய இராணுவ ஆணையம், இராணுவப் பொருட்களின் விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பை மதிப்பீடு செய்து, அவற்றின் உறுதியையும் பாதுகாப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்கிறது.

இது வெளிநாட்டுத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள முக்கியப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு பெறுவதற்கான சீனாவின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

இருப்பினும், நாடு முழுவதும் தேசியப் பாதுகாப்புத் திரட்டலை ஸ்டேட் கவுன்சிலும் மத்திய ராணுவ ஆணையமும் "கூட்டாக நிர்வகிக்கும்" என்று குறிப்பிட்ட பிரிவை 2026 ஆம் ஆண்டின் சட்டம் நீக்கியுள்ளது.

அதற்குப் பதிலாக, தேசியப் பாதுகாப்புத் திரட்டல் பணியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் மையப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த தலைமையை இது வலியுறுத்துகிறது.

ஆட்சேர்ப்பு வயது குறித்த வதந்திகள்

சீனா தனது ராணுவ விதிகளில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் விவாதப் பொருளாவது ஏன்?

பட மூலாதாரம், Chen Hongbo/VCG via Getty Images

சட்டத்தின் பிரிவு 3, 'ராணுவத்தைப் பலப்படுத்துவது குறித்த ஷி ஜின்பிங்கின் சிந்தனையைச்' செயல்படுத்துவதையும் உள்ளடக்கியுள்ளது.

தலைமைத்துவ வார்த்தைகளில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், ராணுவத்தின் மீதான தனது பிடியை இறுக்குவதற்கான அதிபர் ஷி ஜின்பிங்கின் முயற்சிகளைப் பிரதிபலிக்கின்றன. 2010-ஆம் ஆண்டின் சட்டமானது அவர் அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே இயற்றப்பட்டது.

பழைய சட்டத்தைப் போலவே, புதிய சட்டமும் ராணுவ ஆட்சேர்ப்பு விஷயத்தில் தெளிவற்ற மொழியைப் பயன்படுத்துவதைத் தொடர்கிறது.

பிரிவு 33, தேசியப் பாதுகாப்புத் திரட்டலின் தேவைகளின் அடிப்படையில் ரிசர்வ் படைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான "அளவு, வகை மற்றும் முறைகளை" ஸ்டேட் கவுன்சிலும் மத்திய ராணுவ ஆணையமும் தீர்மானிக்கும் என்று கூறுகிறது.

ஆட்சேர்ப்பு வயது ஆண்களுக்கு 18 முதல் 60 வரையிலும், பெண்களுக்கு 18 முதல் 55 வரையிலும் உள்ளது. இதில் பழைய சட்டத்திற்கும் புதிய திருத்தத்திற்கும் இடையே எவ்வித மாற்றமும் இல்லை.

இருப்பினும், தேசியப் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்ற அவர்கள் 'சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளனர்' என்று புதிய சட்டம் கூறுகிறது.

ஆட்சேர்ப்பு வயது குறித்த இந்தக் கேள்வி தொடர்பாக இணையத்தில் அதிகக் கவலைகள் எழுந்தன.

இணையத்தில் வதந்திகள் பரவியபோதிலும், ஆட்சேர்ப்பு வயதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ஏ.எஃப்.பி செய்தி வெளியிட்டது.

சீன ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

சீனா தனது ராணுவ விதிகளில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் விவாதப் பொருளாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசிய பாதுகாப்பு திரட்டல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை பல நாடுகள் சந்தேகத்துடன் பார்க்கின்றன.

சீன ஊடகங்கள் பொதுவாக இந்த மாற்றங்களை நாட்டின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியான வழக்கமான ஒன்றாகவே சித்தரித்துள்ளன.

சீனா ஒரு குறிப்பிட்ட போருக்குத் தயாராகி வருகிறது என்ற வெளிநாட்டு ஊகங்களும் தணித்து காட்டப்பட்டுள்ளன.

தேசியப் பாதுகாப்புத் திரட்டலின் "புதிய சூழ்நிலையை" எதிர்கொள்ளவே இந்தல் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் நாளிதழின் தலையங்கம், இந்தச் சட்டத்தைப் "போர் வெறி" என்று விவரித்த வெளிநாட்டு விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளது.

இந்தச் சட்டம் "தற்காப்பு, வழக்கமான மற்றும் சட்டத்தின் கீழ் இயங்கும் அடிப்படைப் பண்புகளைத் தொடர்ச்சியாகப் பிரதிபலிக்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தலையங்கத்தின்படி, இதன் நோக்கம் ஆயத்தமாவதுதானே தவிர, திரட்டலுக்குத் திட்டமிடுவது அல்ல.

"சில மேலைநாட்டினரும்" "தைவான் சுதந்திர ஆதரவுப் படைகளும்" சட்டத்தைத் திரித்து தவறாகப் புரிந்து கொள்வதாக அந்த தலையங்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமைதிக்காலத்திலிருந்து போர்க்காலத்திற்கு மாறுவதற்கான திறனை நிறுவனமயமாக்குவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பின்பற்றப்படும் ஒரு பொதுவான 'சர்வதேச நடைமுறை' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரென்மின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜின் கான்ராங், இந்த மாற்றங்கள் தைவான் மீதான தாக்குதலுக்கான தீவிர தயாரிப்புகளைக் குறிக்கவில்லை என்றும் கூறினார்.

இந்தச் சட்டத்தை வெளிநாட்டவர்கள் 'அதிகமாக விளக்கம் கொடுத்துப் பார்க்க வேண்டாம்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

'மிக மோசமான சூழ்நிலையில்' பாதுகாப்புத் திரட்டல் அமைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்றும், இது எந்தவொரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பானது அல்ல என்றும் அவர் கூறினார்.

தைவான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

சீனா தனது ராணுவ விதிகளில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் விவாதப் பொருளாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது போருக்கான சீனாவின் தயாரிப்பு என்று தைவான் ஊடகங்கள் கூறுகின்றன.

தைவானின் ஊடகங்கள், குறிப்பாக சுதந்திர ஆதரவுப் பிரிவு, இந்த மாற்றங்கள் சீனாவின் ஒருங்கிணைப்பு முயற்சிகளின் ஒரு பகுதி என்று கூறுகின்றன.

ஆங்கில நாளிதழான தைபே டைம்ஸ் செய்தியின்படி, அதிபர் ஷி ஜின்பிங் தனது "தேசிய மறுஒன்றிணைப்பின் வரலாற்றுப் பணியை" நிறைவேற்ற உதவுவதற்காகவே இந்தப் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தைவான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரி, தைவானின் தற்காப்புத் திறன்களைச் சீனாவின் "தாக்குதல் திறன்களை" அதிகரிக்கும் முயற்சிகளுடன் ஒப்பிட்டார்.

எந்தவொரு சீனத் தாக்குதலையும் எதிர்கொள்ளும்போது "எந்தத் தடைகளும் அல்லது சர்வதேசத் தடைகளும் இல்லை" என்பதை உறுதிப்படுத்தவே இத்தகைய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தைவான் அரசுக்குச் சொந்தமான மத்திய செய்தி நிறுவனத்தின் மற்றொரு செய்தி, தைபே பல்கலைக்கழகத்தின் ஹங் பு-சாவோவை மேற்கோள்காட்டி, "தைவானுடன் சாத்தியமான போர் ஏற்படும் பட்சத்தில், சீனா தனது நடவடிக்கைகளுக்குச் சட்டப்பூர்வமான அடிப்படையைத் தேடவும், சர்வதேச சமூகத்திற்குத் தனது நடத்தைக்கு 'நியாயம் கற்பிக்கவும்' இந்தச் சட்டம் அனுமதிக்கும்." என்று தெரிவித்துள்ளது.

பெய்ஜிங் "தைவானைத் தனது உள்நாட்டு விவகாரமாகச் சித்தரிக்க உள்நாட்டுச் சட்டங்களை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகிறது" என்றும் அவர் கூறினார்.

பிலிப்பின்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சீனாவுடன் எல்லைத் தகராறு உள்ள பிற நாடுகளையும் இந்த மாற்றம் இலக்காகக் கொள்ளக்கூடும் என்றும் ஹங் கூறினார்.

2027-ஆம் ஆண்டில் அதிபர் ஷி ஜின்பிங் முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்காவது முறையாக அதிகாரத்திற்கு வருவதை அறிவிப்பதற்கு முன், ஆட்சியில் தனது பிடியைத் தக்கவைத்துக்கொள்ள அவருக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேறு சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு