வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடி செய்து சாதித்த விவசாயி - முதல் ஓராண்டில் சந்தித்த சவால்கள் என்ன?

வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடி செய்து சாதித்த விவசாயி - முதல் ஓராண்டில் சந்தித்த சவால்கள் என்ன?
படக்குறிப்பு, நான்கு ஆண்டு உழைப்புக்குப் பிறகு அவகாடோ சாகுபடியில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறும் விவசாயி வரத ரெட்டி
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"அனைத்திந்திய வானொலி நிலையத்திலிருந்து போன் செய்து, வானொலியில் பிரதமர் தனது பெயரைச் சொல்லப் போவதாகக் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. மோதியின் வாயிலிருந்து எனது பெயரைக் கேட்டதை எனது குடும்பம் எப்போதுமே மறக்காது" என்று அவகாடோ விவசாயி வரத ரெட்டி தெரிவித்தார்.

"இப்போது அவகாடோ பழம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இது நமது விவசாயிகளுக்கும் பெரிதும் உதவுகிறது" என்று அவகாடோ சாகுபடிக் குறித்துப் பிரதமர் மோதி தனது உரையில் குறிப்பிட்டார். அவர் உதாரணம் காட்டிய விவசாயிகளின் பெயர்களில் வரத ரெட்டியின் பெயரும் ஒன்று.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த வேடார்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வரத ரெட்டி.

கடந்த ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற 137-வது 'மன் கி பாத்' (Mann Ki Baat) நிகழ்ச்சியில், நாட்டில் பிரபலமடைந்து வரும் அவகாடோ பழம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

"இப்போது அவகாடோ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் இதைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரியாது. இதன் மதிப்பும் தேவையும் குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது உணவு மேசையில் இது அதிகளவில் காணப்படுகிறது" என்று மோதி கூறினார்.

"இது நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த வரத ராஜ் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் பல ஆண்டுகளாகத் தனது நிலத்தில் தக்காளி மற்றும் வாழையைச் சாகுபடி செய்து வந்தார். பின்னர் அவகாடோவைப் பற்றி அறிந்து அதனைச் சாகுபடி செய்தார். இதுவரை அவர் சுமார் 4 டன் அவகாடோவை உற்பத்தி செய்துள்ளார்" என்று மோதி தெரிவித்தார்.

"பிரதமர் மன் கி பாத்தில் உங்கள் பெயரைச் குறிப்பிடப் போவதாக அகில இந்திய வானொலியிலிருந்து என்னை அழைத்துக் கூறினார்கள். அவகாடோ சாகுபடி குறித்துப் பிரதமர் பேசியது வரத ராஜ் என்ற என்னைப் பற்றித்தான்" என வரத ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாங்கள் அவரை ஊக்கப்படுத்தினோம். கடப்பா மாவட்டத்தில் நான்கு அவகாடோ விவசாயிகள் இருந்தாலும், அந்தப் பயிரை வெற்றிகரமாக சாகுபடி செய்தவர் வரத ரெட்டி மட்டுமே" என்று கடப்பா மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் ரவிச்சந்திர பாபு பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு வரத ரெட்டியும்...

வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடி செய்து சாதித்த விவசாயி - முதல் ஓராண்டில் சந்தித்த சவால்கள் என்ன?
படக்குறிப்பு, சமீப காலங்களில் அவகாடோ பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடப்பா மாவட்டம், லிங்கலா மண்டலம், வேடார்லா கிராமத்தைச் சேர்ந்த வரத ரெட்டி, யூடியூப்பில் புதிய பயிர்கள் குறித்துத் தேடியபோது கர்நாடகாவில் அவகாடோ பயிரிடப்படுவதை அறிந்ததாகத் தெரிவித்தார். அவர் அங்கு நேரில் சென்று அதைப் பார்வையிட்ட பிறகு, தாமும் அவகாடோ பயிரிட முடிவு செய்தார்.

கடப்பா மாவட்டத்தில் உள்ள லிங்கலாவிலிருந்து அனந்தபுரம் மாவட்டம் பட்டலப்பள்ளி செல்லும் சாலையில் வரத ரெட்டியின் அவகாடோ தோட்டம் அமைந்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட ராயலசீமா பகுதியில் அவர் எவ்வாறு அவகாடோ பயிரிடுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி அவரிடம் நேரடியாகப் பேசியது.

வரத ரெட்டி தனது பண்ணையில் டிசம்பர் 2022-ல் அவகாடோ சாகுபடியைத் தொடங்கினார். கர்நாடகாவில் உள்ள ஐ.ஏ.ஹெச்.ஆர் மற்றும் மடிக்கேரி-கூர்க் பகுதிகளில் உள்ள வேளாண் துறையால் உருவாக்கப்பட்ட நாற்றுகளைத் தான் கொண்டுவந்து நட்டதாக அவர் கூறினார்.

வேளாண் துறையின் ஆலோசனையைப் பெற்றுத் தைரியமாகப் பயிரை நட்டதாகவும், தற்போது நல்ல பலனை அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"நமது மண்ணுக்கு ஏற்றப் பயிரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகில் சுமார் 372 வகையான அவகாடோ செடிகள் இருப்பதாக அறியப்படுகிறது. நமது காலநிலைக்கு ஏற்றதைத் நாம் தேர்வு செய்ய வேண்டும். எனவே, நமது பருவநிலைக்குப் பொருந்தும் வகையில் வேளாண் துறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செடியைக் கொண்டுவந்து சாகுபடி செய்தோம்" என்று அவர் கூறினார்.

தொடக்கம் கடினமானதாக இருந்தது...

வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடி செய்து சாதித்த விவசாயி - முதல் ஓராண்டில் சந்தித்த சவால்கள் என்ன?
படக்குறிப்பு, வரத ரெட்டியின் மனைவி பிரமிளா

அவகாடோ சாகுபடியில் ஆரம்பத்தில் பல சிரமங்கள் இருந்ததாக வரத ரெட்டி தெரிவித்தார்.

"கடுமையான வெயில், மழை அளவு மாறுபடுதல் மற்றும் கடுமையான காற்று போன்ற பாதகமான வானிலை காரணமாக நாங்கள் பல பிரச்னைகளைச் சந்தித்தோம். அவகாடோ பயிரைப் பெறுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம்" என்று அவர் கூறினார்.

"ஒரு கட்டத்தில், இந்தப் பயிர் நமக்குரியது அல்ல போலிருக்கிறது, மரங்கள் அனைத்தையும் வெட்டிவிட்டு மீண்டும் வழக்கம்போல வாழையையே சாகுபடி செய்துவிடலாம் என்று கூடத் தோன்றியது" என வரத ரெட்டி குறிப்பிட்டார்.

"ஆனால், 'இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து பார்ப்போம்' என நினைத்தேன். அதன் பிறகு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கின" என்றாரவர்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் ஆரம்பத்தில் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை மிகவும் போராடினேன். ஒருமுறை 300 செடிகளை வாங்கி வந்ததில் 100 செடிகள் வாடிவிட்டன. மீண்டும் சென்று 100 செடிகளைக் கொண்டுவந்தேன்; அதில் 20 செடிகள் வாடின. இருப்பினும் தளராமல் மீண்டும் செடிகளைக் கொண்டுவந்து நட்டேன். நான் சாகுபடியைத் தொடங்கி இப்போது நான்கு ஆண்டுகள் ஆகின்றன" என்றார்.

"2025-ஆம் ஆண்டில் சுமார் 150 செடிகளில் பூக்கள் பூத்தன. ஆனால், நான் கவனிப்பதற்குள்ளேயே அனைத்துப் பூக்களும் உதிர்ந்துவிட்டன. தண்ணீர் ஊற்றி, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தும் எந்தப் பலனும் இல்லை".

"இது நமது காலநிலைக்குப் பொருந்தாமல் இருக்கலாம் என்று கூறி நான் அதை விட்டுவிட்டேன். மரங்களை வெட்டிவிட்டு வாழை நடுவதைப் பற்றி யோசித்தேன். ஆனால் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க விரும்பினேன். நான்காவது ஆண்டுக்குப் பிறகு, பூக்கள் வந்தபோது, பிரச்னை தீர்ந்தது போல் தோன்றியது. இம்முறை எந்த மருந்துத் தெளிப்பும் செய்யாமலேயே நல்ல மகசூல் கிடைத்தது; மொத்தம் நான்கு டன் அவகாடோ பழங்கள் கிடைத்தன" என்று அவர் விளக்கினார்.

"நீ ஒரு பித்துப் பிடித்தவன் என்றார்கள்"

வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடி செய்து சாதித்த விவசாயி - முதல் ஓராண்டில் சந்தித்த சவால்கள் என்ன?
படக்குறிப்பு, ஓராண்டு வளர்ந்த நாற்றுகளை நட்டுச் சாகுபடி செய்வதே சிறந்த பலனைத் தரும் என்பதைத் தான் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாக வரத ரெட்டி கூறினார்

சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைக்குத் தோட்டத்தில் பழங்களை விற்றதால், பலரும் நேரடியாகத் தேடி வந்து வாங்கிச் சென்றதாக வரத ரெட்டி தெரிவித்தார். கூலி ஆட்கள் யாருமின்றித் தானே பழங்களை அறுவடை செய்து, எடைபோட்டு விற்றதாகவும் அவர் கூறினார்.

"அவகாடோவில் விவசாயிகளுக்குப் பெரிய ஆறுதல் என்னவென்றால், பழம் கனிந்த பிறகும் கூட இரண்டு மாதங்களுக்கு மரத்திலேயே வைத்திருக்க முடியும்; அது கெட்டுப்போகாது. வழக்கமாகச் செய்துவரும் விவசாய முறைகளையே தொற்றிக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. அதனால்தான் புதிதாக ஏதாவது முயற்சிக்க விரும்பினோம்" என்று வரத ரெட்டி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "'ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக அவகாடோ பயிரிட்டிருக்கிறாய்? பலரும் வாழை நட்டுப் பணம் சம்பாதிக்கும் போது, உனக்கு ஏன் இந்த அவகாடோ?' என்று சிலர் என்னைக் கேலி செய்தனர். அப்படிப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியந்து பேசுகிறார்கள்; என் வெற்றியை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வரத ரெட்டியின் மனைவி பிரமிளா கூறுகையில், "அவகாடோ சாகுபடியில் நாங்கள் அதிக அளவில் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தவில்லை; பெரும்பாலும் இயற்கை முறையிலேயே வளர்த்தோம். மழைக்காலத்தில் மரங்கள் நன்றாக வளர்கின்றன. சாண உரம் மற்றும் குறைந்த அளவிலேயே டி.ஏ.பி, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தினோம். முதல் அறுவடையே மிகச் சிறப்பாக அமைந்தது. அடுத்த அறுவடை இன்னும் நன்றாக வரும் என்று நம்புகிறோம்" என்றார்.

உள்ளூர் விவசாயியான சந்திரசேகர் நாயுடு பேசுகையில், "ஆரம்பத்தில் பல விவசாயிகள் அவகாடோ பயிரிட வேண்டாம் என வரத ரெட்டியின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் பேசினர். ஆனால், அவர் மிகுந்த பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார். இப்போது அவரைப் பார்த்து மற்ற விவசாயிகளுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

இது குறித்து கடப்பா மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் ரவிச்சந்திர பாபு பிபிசியிடம் தெரிவிக்கையில், "தோட்டக்கலைத் துறை சார்பில் அவகாடோ பயிருக்கு மானியம் வழங்கப்படும்; புதிய பயிர்களைச் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும். நாங்கள் வரத ரெட்டியைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தோம். கடப்பா மாவட்டத்தில் நான்கு விவசாயிகள் அவகாடோ பயிரிட்டிருந்தாலும், வெற்றிகரமாகச் சாகுபடி செய்து நல்ல விளைச்சலைப் பெற்றவர் வரத ரெட்டி மட்டும்தான்" என்று கூறினார்.

சாகுபடி செய்யும் முறை

அவகாடோ பயிர் மேலாண்மை முறைகள் குறித்து வரத ரெட்டி கூறுகையில், அவகாடோ சாகுபடிக்குச் செடிகள் மிகவும் இளமையாக இருக்கக்கூடாது என்றும், ஓராண்டு வளர்ந்த நாற்றுகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். வேர்கள் நன்றாகப் பிடித்து வளர்ந்தால்தான், செடிகள் மேலெழுவதை எளிதில் தாங்க முடியும்.

"அவர்கள் முதலில் எங்களுக்கு ஆறு மாதம் வளர்ந்த செடிகளைக் கொடுத்தார்கள். அவற்றின் தண்டுப்பகுதி மிகவும் சிறிதாக இருந்தது. அப்போது நான் மிகவும் கவலைப்பட்டேன். சிறிய செடிகள் என்பதால், அவற்றால் காற்றையும் வெப்பத்தையும் தாங்க முடியவில்லை. பிறகுதான் பிரச்னை என்னவென்பதை நான் உணர்ந்தேன். செடிகள் சற்று முதிர்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, அவற்றை கவரில் வைத்து வளர்த்து, அதன் பிறகு நட்டேன்."

பயிருக்குத் தொடர்ச்சியாகத் தண்ணீரும் புதிய மண்ணும் வழங்கப்பட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் அது உயிர்வாழும். இது ஒரு புதிய பயிர் மற்றும் புதிய மண் என்பதால், நோய் தாக்குதல் அல்லது பூச்சித் தொல்லை போன்ற பிரச்னைகள் இதுவரை காணப்படவில்லை. செடியின் வளர்ச்சி என்பது அதன் வகையைப் பொறுத்தது. எந்த ரகம் நமது மண்ணுக்கு ஏற்றது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று வரத ரெட்டி அறிவுறுத்தினார்.

"இங்குள்ள முக்கியப் பிரச்னை பழ ஈ (fruit fly) ஆகும். பழ ஈ ஆனது ஒரு மாதத்தில் பழ அறுவடையைப் பாதிக்கிறது. இந்த பிரச்னை ஒவ்வொரு பயிரிலும் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது" என்று அவர் விளக்கினார்.

"இது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பலன் தரும். நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் பூக்கள் பூக்கலாம். அதற்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். உரமும் தண்ணீரும் சேர்த்து விவசாயிகள் அதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு