ஏடிஎம் கொள்ளை வழக்கில் குப்பைக் கிடங்கை வைத்து 3 வெளி மாநிலத்தவர்களை போலீஸ் கைது செய்தது எப்படி?

பட மூலாதாரம், AvadiCommissionerate
"அந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. யாராவது திருட முற்படும்போது எச்சரிக்கை செய்வதற்கான அலாரமும் (burglar alarm) இல்லை. ஏ.டி.எம் இயந்திரமே கொள்ளை போன இந்த வழக்கில் பல சவால்களை எதிர்கொண்டோம்" என்கிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம்.
கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிவதில் குப்பைக் கிடங்கு பிரதான பங்கு வகித்ததாக, அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மேட்டுக்கண்டிகை பகுதியில் செப்டம்பர் 5 ஆம் தேதி தனியார் நிறுவன ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை போனது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள கூடப்பாக்கம், மேட்டுக்கண்டிகை பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
செப்டம்பர் 5 ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் கொள்ளைச் சம்பவம் நடந்ததாகக் கூறுகிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம். "அது ஒயிட் லேபிள் ஏ.டி.எம்" என அவர் குறிப்பிட்டார்.
'ஒயிட் லேபிள் ஏ.டி.எம்'

பட மூலாதாரம், VinothSantharam
வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களால் (Non-banking) நடத்தப்படும் ஏ.டி.எம் மையங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம் (WLA) எனப்படுகிறது. வங்கி சார்ந்த எந்த அடையாளங்களும் இங்கு இருப்பதில்லை. ஆனால், அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேட்டுக்கண்டிகை உள்ள ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு சுமார் 12 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணம் நிரப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஏ.டி.எம் இயந்திரமே கொள்ளையடிக்கப்பட்டது காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளை தொடர்பாக வெள்ளவேடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையில் உதவி ஆணையர் அமீர் அகமது மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் என 30 பேர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
"வழக்கமாக ஏ.டி.எம் கொள்ளை என்றால் கேஸ் கட்டிங் (Gas cutting) மூலமாக அதனை இயந்திரத்தை உடைத்துப் பணத்தை எடுப்பார்கள். ஆனால் மேட்டுக்கண்டிகை சம்பவத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தையே கொள்ளையடித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். " என அவர் தெரிவித்தார்.
'ஏ.டி.எம் மையத்தில் எந்த ஆதாரமும் இல்லை'
"ஏ.டி.எம் மையத்தில் தேவையற்ற நடவடிக்கையில் யாராவது ஈடுபட்டால் வங்கியில் இருந்து காவல்துறைக்கு அழைப்பு வரும். ஆனால், கொள்ளை போன ஏடிஎம் மையத்தில் அத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை" எனக் கூறுகிறார், பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் அமீர் அகமது.
"கொள்ளை தொடர்பாகவும் ஏ.டி.எம் மையத்தில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதற்கு அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சில காட்சிகளை சேகரித்தோம்" என்கிறார் அவர்.
சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததாகக் கூறிய அமீர் அகமது, "இரண்டு நாட்களில் அவர்கள் யார் என்பதை உறுதி செய்துவிட்டோம். ஆனால், அவர்களைப் பிடிப்பதற்கு சற்று தாமதம் ஏற்பட்டது" எனக் கூறுகிறார்.
'பெட்ரோல் பங்கில் சிக்கிய ஆதாரம்'
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை விவரித்த துணை ஆணையர் வினோத் சாந்தாராம், "சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை பொருத்தியுள்ளது. அதன்மூலம் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் வெளியேறிய பாதையை ஊகிக்க முடிந்தது" என்கிறார்.
கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்போன் டவர்களை ஆராய்ந்தபோது காவல்துறைக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. " ஒருகட்டத்தில், 'தங்களை யாரும் கண்டறிய மாட்டார்கள்' என்ற எண்ணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் இருந்துள்ளனர். அதுவே வழக்கின் புலனாய்வுக்கு உதவியாக இருந்தது" எனக் கூறுகிறார், வினோத் சாந்தாராம்.
கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தான் செல்லும் வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக தனது ஹெல்மெட்டை கழற்றிய போது அவரது படம் கிடைத்ததால் தொழில்நுட்பரீதியாக அதனை அலசி ஆராய்ந்தபோது சில தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்ததாக அவர் கூறினார்.
"அந்தப் படம் வேறு எந்தத் தரவுகளுடன் ஒத்துப் போகிறது என ஆராய்ந்தோம். அதில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு நபரின் உருவத்துடன் சுமார் 80 சதவீதம் அளவுக்குப் பொருந்திப் போனது. அந்த நபரின் செல்போன் எண்ணை ஆராய்ந்தபோது அது தமிழ்நாட்டில் இருந்ததைக் காட்டியது" என்கிறார் வினோத் சாந்தாராம்.
'சிக்க வைத்த குப்பைக் கிடங்கு'
ஏ.டி.எம் இயந்திர கொள்ளையில் அமரர் ஊர்தி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது. இதைப் பற்றி விவரித்த காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம், "தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சோமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அமரர் ஊர்தியை கொள்ளையர்கள் திருடியுள்ளனர்" என்கிறார்.
அவரது கூற்றின்படி, 'கொள்ளையில் ஈடுபட்ட பிறகு ஏ.டி.எம் இயந்திரத்தை அமரர் ஊர்தியில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை ஏழு பேர் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். பிறகு இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பிச் சென்றதைக் காவல்துறை கண்டறிந்தது.'
"இவர்களின் ஒவ்வொரு நிகழ்விலும் குப்பைக் கிடங்கு மையமாக இருப்பதைக் கண்டறிந்தோம்" எனக் கூறுகிறார், துணை ஆணையர் வினோத் சாந்தாராம்.
"சோமங்கலம் பகுதியில் அமரர் ஊர்தி திருடப்பட்ட இடத்தின் அருகில் குப்பைக் கிடங்கு இருந்தது. ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் குப்பைக் கிடங்குக்குக் கொண்டு சென்றனர். அப்படியானால் குப்பைக் கிடங்குக்கும் கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஊகித்தோம்" என்கிறார் அவர்.
இயந்திரத்தைத் தூக்கிக் கொண்டு சென்றது குறித்துக் கேட்டபோது, "மற்ற ஏ.டி.எம் இயந்திரத்தைவிட இதன் எடை குறைவு. ஏ.டி.எம் மையத்துக்குள் இயந்திரத்தை வெட்டும்போது பிடிபட்டால் சிக்கல் என்பதால் அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்" எனக் கூறினார்.
'பகலில் குப்பை பொறுக்கும் வேலை'

பட மூலாதாரம், AvadiCommissionerate
திருவள்ளூர் மாவட்டம், மேட்டுக்கண்டிகை பகுதியில் பிளாஸ்டிக் அச்சு வார்ப்புத் தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு குப்பையில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களைப் பிரித்தெடுத்து விற்கும் பணியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
"கொள்ளை நடந்த இடத்தின் அருகில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். கொள்ளையின்போது அவர்கள் செல்போனை பயன்படுத்தவில்லை. அதற்கு முன்னதாக, அந்த நபர் பயன்படுத்திய செல்போன் தரவுகளை ஆராய்ந்தபோது தகவல்கள் கிடைத்தன" என்றார், பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் அமீர் அகமது.
கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏழு பேரும் குப்பையில் இருந்து பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பகலில் குப்பையில் இருந்து பிளாஸ்டிக் சேகரிக்கும் பணியிலும் இரவில் கொள்ளையடிப்பதற்கான இடத்தைக் கண்டறிந்து அதன் சூழலை ஆய்வு செய்வதிலும் நேரத்தை அவர்கள் செலவிட்டதாகக் காவல்துறை கூறுகிறது.
ஐ.எம்.ஓ செயலி மூலம் கால்... நான்கு பேர் எங்கே?
"நான்கைந்து ஆண்டுகளாக இவர்கள் கூடப்பாக்கம் பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதல்முறையாக கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது" என்கிறார், அமீர் அகமது.
தொடர்ந்து பேசிய அவர், "கொள்ளை குறித்து ஐ.எம்.ஓ செயலியில் (IMO) இவர்கள் பேசியுள்ளனர். அதுதொடர்பான விவரங்களைப் பெறுவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை" எனக் கூறுகிறார் அவர்.
கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து துணை ஆணையர் வினோத் சாந்தாராமிடம் கேட்டபோது, "ஏழு பேருக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்துக்கு நான்கு பேர் வந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வெளியில் உதவி செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.
"தரவுகளை ஆராய்ந்தபோது, கொள்ளையடித்த பிறகு பெங்களூரு மற்றும் கோழிக்கோடுக்கு இவர்கள் செல்ல வாய்ப்புள்ளதை அறிந்தோம். நாங்கள் கணித்ததுபோலவே பெங்களூரு சென்று கோழிக்கோடு சென்றுள்ளனர். கேரளாவில் வைத்து மூன்று பேரை கைது செய்தோம்" என்கிறார் அவர்.
இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 36 வயதான சமீர், 50 வயதான சர்பார்கான், 28 வயதான ரசூல் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
"இவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா?" என, துணை ஆணையரிடம் கேட்டபோது, "ஒரு நபர் மீது மட்டும் டெல்லியில் ஆயுத வழக்கு நிலுவையில் உள்ளது. மற்றவர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை. முதன்முதலாக திட்டமிட்டுக் கொள்ளையடித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
"கூடப்பாக்கத்தில் ஒரு நபர் மட்டும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த நபரின் குடும்பத்தினர் நன்றாக தமிழ் பேசுகின்றனர். கைதான நபர்களிடம் 1.72 லட்ச ரூபாய் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள்" எனக் கூறுகிறார் வினோத் சாந்தாராம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































