அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தில் 'தன்னிச்சையான அதிகாரத்தை' கொடுக்கும் புதிய ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images
- எழுதியவர், ஆலிவர் ஓ’கானெல்
- பதவி,
- எழுதியவர், மேக்ஸ் மட்ஸா
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் உருவான ராஜதந்திர மோதலுக்குத் தீர்வு காணும் வகையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு "பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை" வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.
இந்த ஒப்பந்தம் "ஆர்டிக் மற்றும் வட அட்லான்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது" என்று டென்மார்க் பிரதமர் கூறினார்.
ஆனால் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து டென்மார்க் பிரதமர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பாதுகாப்பு தேவைக்கான கிரீன்லாந்தின் ராஜாங்க அமைவிடம் மற்றும் அதன் கனிம வளங்களைக் சுட்டிக்காட்டியும், அப்பகுதியைக் "கைப்பற்றப் போவதாக" டிரம்ப் பல மாதங்களாக அச்சுறுத்தி வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தால் "அமெரிக்காவுக்கு எந்தச் செலவும் இல்லை" என்றும், "கிரீன்லாந்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் தற்காத்துக் கொள்ளவும் தேவையானதைச் செய்ய" தேவைப்படும் அதிகாரத்தை இது அமெரிக்காவுக்கு வழங்கும் என்றும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் எழுத்துபூர்வ அனுமதியின்றி எந்தவொரு எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவ இருப்பை வைத்திருக்கவோ அல்லது "முக்கிய முதலீடுகளைச் செய்யவோ முடியாது" என்ற விதி இதில் அடங்குவதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதிப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தம், "ஆர்க்டிக் மற்றும் வட அட்லான்டிக் பிராந்தியத்தில் நமது பொதுவான பாதுகாப்பை வலுப்படுத்தும்" அதே வேளையில் "டென்மார்க் ராஜ்ஜியத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும், கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கிறது" என்று அவர் கூறினார்.
அதோடு, "இந்த ஒப்பந்தம் முழுமைபெற நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. இது அமலுக்கு வரத் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிரீன்லாந்து அரசாங்கத் தலைவர் (Chairman) ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் இந்த ஒப்பந்தத்தை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில், கிரீன்லாந்து, டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் "பாதுகாப்பை உறுதி செய்து வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் நாங்கள் இணையவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தின் நலன்களையும் சர்வதேச ஒத்துழைப்பில் எங்களுக்கான இடத்தையும் அங்கீகரிப்பதாகக் கூறிய அவர், "இது நம் அனைவருக்கும் பயனளிப்பதாக அமையும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Tobias SCHWARZ / AFP via Getty Images
ரஷ்யா, சீனா உள்ளிட்ட எதிரி நாடுகளால் ஆபத்து இருப்பதாகக் கூறி, கனிம வளம் நிறைந்த இந்த டென்மார்க் பிரதேசத்தை விலைக்கு வாங்க அல்லது தன்னுடன் இணைத்துக் கொள்ள டிரம்ப் பல மாதங்களாக முயன்றார்.
அவர் கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தினார். இது டென்மார்க் மக்கள் மற்றும் பிற நேட்டோ நாடுகளிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இது "வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்" என்றும், "அமெரிக்கா மற்றும் அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்றும் குறிப்பிட்டார்.
"இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தில் உள்ள நமது தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு நிரந்தரமான மற்றும் முழுமையான தீர்வை வழங்குவதாக," அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ குறிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதுகுறித்து பிபிசி டென்மார்க் தூதரகம் மற்றும் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Mads Claus Rasmussen / Ritzau Scanpix / AFP via Getty Images
இந்நிலையில், பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், விவரங்களைக் குறிப்பிடாமல் ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்களைச் சுருக்கமாக விவரித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளில் ஒன்று, எதிர்காலத்தில் கிரீன்லாந்து ஒரு சுதந்திர நாடாக மாறினாலும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகாது என்பதைக் குறிப்பிடுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிரீன்லாந்து அல்லது டென்மார்க்கின் ஒப்புதல் இன்றியே கூடுதல் ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்க அமெரிக்காவுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதில் "நிரந்தர நுழைவு உரிமை, ராணுவ முகாம்களை அமைக்கும் உரிமை , வான்வெளியைப் பயன்படுத்தும் உரிமை" ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார். மேலும், நேட்டோ அல்லாத பிற நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவ முகாம்களை அமைக்கவும், "அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய முதலீடுகளை கிரீன்லாந்தில் எதிரி நாடுகள் செய்யவும்" இது தடை விதிக்கிறது.
தற்போதுள்ள நடைமுறைப்படி, எதிரி நாடுகள் கிரீன்லாந்தின் "முக்கியத் துறைகளில் எந்தவித முதலீட்டுப் பரிசீலனையும் இன்றி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தன" என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவை குறிப்பிட்ட அந்த அதிகாரி, அவை கிரீன்லாந்தில் படைகளை நிறுத்துவதையோ அல்லது "முக்கியத் துறைகளில்" முதலீடு செய்வதையோ இந்த ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Mads Claus Rasmussen / Ritzau Scanpix / AFP via Getty Images
அதிகாரபூர்வ குறிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், அமெரிக்கா தனது விருப்பம் போல் எத்தனை ராணுவ வீரர்களை வேண்டுமானாலும் கிரீன்லாந்துக்கு அனுப்ப அனுமதிக்கும், டென்மார்க் உடனான 1951ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து, இந்தப் புதிய ஒப்பந்தம் எவ்வாறு வேறுபடுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்கா ஏற்கெனவே அந்தப் பிரதேசத்தின் வடமேற்கு முனையில் உள்ள தனது பிடுஃபிக் ராணுவ முகாமில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
ரஷ்யா, சீனாவிடம் இருந்து வரும் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள 'கோல்டன் டோம்' பாதுகாப்பு முறையை உருவாக்குவதற்கான தனது திட்டத்திற்கு கிரீன்லாந்து மிகவும் அவசியமானது என்றும், இந்த முயற்சியில் ஐரோப்பிய கூட்டாளி நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் டிரம்ப் கூறுகிறார்.
இந்தத் தீவில் பெருமளவிலான, இதுவரை பெரும்பாலும் பயன்படுத்தப்படாத அரிய வகை கனிமங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மொபைல் போன்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































