தங்க சங்கிலியை கொடுத்து படகில் இலங்கை சென்ற தமிழக சிறுவன் - ஈரோட்டில் இருந்து மன்னார் சென்றது எப்படி?

பட மூலாதாரம், SRI LANKA NAVY
- எழுதியவர், ஜெ.பரணீதரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பேஸ்புக் ஊடாக காதலித்ததாகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான ஒரு சிறுவன் படகில் வந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்டதாக தலைமன்னார் காவல்துறை கூறியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து படகொன்றில் மன்னார் கடற்பரப்பிலுள்ள மணல் திட்டு ஒன்றை வந்தடைந்த அந்தச் சிறுவன் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட வழக்கமான கடல்சார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளின்போது மீட்கப்பட்டார்.
அந்தச் சிறுவன் செப்டெம்பர் 11ஆம் தேதியன்று தலைமன்னாருக்கு அப்பால் உள்ள தொலைதூர மணல் திட்டில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்திருந்தனர். அவசர மனிதாபிமான உதவியின் அடிப்படையில் அவர் மீட்கப்பட்டு, உடனடியாகக் குடிநீர், உணவு மற்றும் தற்காலிகத் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக சிறுவன் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்தச் சிறுவன், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தலைமன்னார் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை
சிறுவனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பேஸ்புக் ஊடாகக் காதலித்து வந்ததாகவும், அந்தச் சிறுமியை நேரில் சந்திக்கும் நோக்கில், ராமேஸ்வரத்தில் இருந்து படகொன்றின் மூலம் மன்னார் கடற்பரப்பை நோக்கி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதையடுத்து சமூக ஊடகங்களிலும் இந்தச் செய்தி பரவலாகப் பேசுபொருளானது.
இந்தப் பயணத்திற்கான பணம் இல்லாதமையால், தனது தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும் சிறுவன் தெரிவித்ததாக காவல்துறை கூறியுள்ளனர். மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கியபோது அவரிடம் 280 இந்திய ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிறுவனை அழைத்து வந்த படகு, அவரை மன்னார் கடற்பரப்பிலுள்ள மணல் திட்டில் இறக்கிவிட்ட பிறகு அங்கிருந்து சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இலங்கையில் இருந்து கடற்படை படகு வந்து ஏற்றிச் செல்லுமென அவரை ஏற்றி வந்த படகோட்டி கூறியதை நம்பி சிறுவன் மணல் திட்டில் காத்திருந்த நிலையிலேயே, இலங்கைக் கடற்படையினர் அவரை மீட்டுள்ளனர்.
குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை
காவலில் எடுக்கப்பட்ட சிறுவனின் தாய் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்ததாக தெரிவித்த போதிலும், சிறுவன் இந்தியாவில் பிறந்தவர் என்பதால் அவர் இந்திய பிரஜை எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
அதேநேரம், சிறுவன் இந்தியாவில் பிறந்ததை அல்லது அவரது இந்திய குடியுரிமையை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

பட மூலாதாரம், SRI LANKA NAVY
நீதிமன்ற உத்தரவு
காவல்துறை விசாரணைக்குப் பிறகு கடந்த 12ஆம் திகதி சிறுவன் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, தன்னை சிறுவனின் பாட்டி என அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். எனினும், அவர் சிறுவனின் பாட்டி என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சிறுவனை அவரிடம் ஒப்படைக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அவரை சிறார் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும், சிறுவன் தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு சிறுவன் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலி சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் செப்டம்பர் 17 அன்று மன்னார் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது ஏற்கெனவே சிறுவனின் பாட்டி எனக் கூறி முன்னிலையான பெண், ஆவணங்கள் மூலம் தனக்கும் சிறுவனுக்குமான உறவு நிலையை உறுதிப்படுத்தியதை அடுத்து சிறுவனை நிபந்தனைகளின் அடிப்படையிலான பிணையில் அவரது பாட்டியுடன் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
வழக்கு இன்னும் பூர்த்தியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் எதிர் வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் கூறுவது என்ன?
இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள பிபிசி தமிழ், அச்சிறுவனின் சார்பில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையான வழக்கறிஞர் செல்வராஜ் தினேசனைத் தொடர்புகொண்டு பேசியது.
"குறிப்பிட்ட சிறுவன் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்திருந்தாலும், அவர் காதலியைத் தேடியே வந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியில் முழுமையான உண்மை இல்லை" என்று வழக்கறிஞர் தினேசன் தெரிவித்தார்.
அச்சிறுவனின் பாட்டி மற்றும் உறவினர்கள் கிளிநொச்சியின் நாச்சிக்குடா பகுதியில் வசித்து வருவதாகவும், அவர்களின் தகவல்படி பாட்டியைச் சந்திப்பதே அவரது முதன்மை நோக்கமாக இருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

சிறுவன் மற்றும் அவரது பாட்டி கூறுவது என்ன?
சிறுவனின் சட்ட ஆலோசகர் என்ற அடிப்படையில் வழக்கறிஞர் தினேசனின் ஒப்புதலுடன் சிறுவன் மற்றும் அவரது பாட்டியிடம் பிபிசி தமிழ் சார்பில் தொடர்புகொண்டு உரையாடியபோது, ''கடந்த 1996ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக நாம் கிளிநொச்சி நாச்சிக்குடாவில் இருந்து அகதிகளாக படகில் தமிழகம் சென்றோம். அங்கு சேலம் அகதிகள் முகாமில் இருந்தபோது எனது மகளுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்தது. எனது பேரன் சேலம் அகதிகள் முகாமிலேயே பிறந்தார்."
"பின்னர் ஈரோடு அரச்சலூர் அகதிகள் முகாமுக்கு இடம் மாறினோம். அங்கிருந்து நான் மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டு முறையான விண்ணப்பங்கள் மூலம் சட்டரீதியான அனுமதி பெற்று விமானம் மூலம் மீண்டும் இலங்கை வந்து எமது சொந்த ஊரில் வசித்து வருகிறேன். எனது மகளும் பேரனும் ஈரோட்டிலேயே இருந்தனர்," என்று தங்கள் பின்னணியை விளக்கினார்.
தனது பேரனை மிகவும் பாசமாக நானே வளர்த்து வந்ததால் அவரால் தன்னைப் பிரிந்திருக்க முடியவில்லை என்று கூறிய சிறுவனின் பாட்டி யோகராசா மேரி அஞ்சலா, "தன்னை இலங்கைக்கு அழைத்து வந்து என்னுடன் வைத்திருக்குமாறு பலமுறை என்னிடம் கேட்டிருந்தார். அவருக்கு குடியகல்வுக்கான சட்டரீதியான விண்ணப்பங்களைப் பெற முயன்றும் அவரது வயது காரணமாக அது உடனடியாகச் சாத்தியமாகவில்லை. என்னைப் பார்க்க 'எப்படியாவது வந்துவிடுவேன்' என்று அடிக்கடி கூறிவந்தார். ஆனால் இவ்வாறு சட்டவிரோதமாக வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை'' எனத் தெரிவித்தார்.
தன்னைச் சிறு வயதில் இருந்து வளர்த்த பாட்டியைப் பார்ப்பதே இப்போது இலங்கைக்கு வந்ததற்கான தனது பிரதான நோக்கம் என்று சிறுவனும் பிபிசி தமிழிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
'பேஸ்புக் காதல்' செய்தி பரவியது எப்படி?
அச்சிறுவனின் நெருங்கிய உறவினரான சிறுமி ஒருவர், கிளிநொச்சியிலுள்ள அவரது பாட்டி வீட்டுக்கு அருகில் வசித்து வருகிறார். நெருங்கிய உறவினர்கள் என்ற முறையில் கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்குள் நட்பும் கடிதத் தொடர்பும் இருந்துள்ளது.
மன்னாரில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, சிறுவனின் தொலைபேசியை அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர். அதில் குடும்பப் படங்களுடன் அச்சிறுமியின் புகைப்படங்கள், அவர் அனுப்பிய குறுந்தகவல்கள் மற்றும் கடிதங்களின் புகைப்படங்கள் ஆகியவை இருந்துள்ளன.
இந்தத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினரே இது ஒரு "ஃபேஸ்புக் காதல்" எனத் தன்னிச்சையாக விசாரணை அறிக்கையில் எழுதிவிட்டதாக அச்சிறுவன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
காவல்துறையினர் கூறுவது என்ன ?
சிறுவனின் மேற்படி கருத்துக் குறித்து தலைமன்னார் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டபோது, தான் காதலியைத் தேடி வந்ததாக சிறுவனே முதல்கட்ட விசாரணைகளில் கூறியதாகவும் தாமாக எந்த முடிவுக்கும் வந்து விசாரணை அறிக்கையைத் தயாரிக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த முரண்பாடான பதில்கள் குறித்த உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

பட மூலாதாரம், SRI LANKA NAVY
சிறுவர் பராமரிப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுவது என்ன?
சிறுவனை நீதிமன்றத்தில் இருந்து பொறுப்பெடுத்திருந்த சிறுவர் பராமரிப்புப் பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழ் வினவியபோது, காரணம் எதுவாக இருந்தாலும் இவ்வாறான சட்ட விரோதக் கடற்பயணம் மேற்கொள்வது உயிருக்கு ஆபத்தான மற்றும் பிழையான முன்னுதாரணமாக ஆகிவிடும் எனவும், 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் மீது கவனமற்று இருப்பது பெற்றோர்களின் தவறு எனவும், இவ்வாறான தவறுகளுக்கு முழு பொறுப்பையும் பெற்றோர்களே ஏற்க வேண்டும் எனவும் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் தமது துறையின் சமூகப் பொறுப்பு சார்ந்து இந்தச் சிறுவனின் எதிர்காலம் குறித்து முழு அக்கறையுடனும் தொடர்ச்சியான கண்காணிப்புடனும் செயல்பட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை குடிவரவுச் சட்டம் கூறுவது என்ன?
"பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராயினும், உரிய ஆவணங்கள் மற்றும் முறையான நுழைவு அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முற்படுவோருக்கு இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டப்பிரிவு 45(2)இன் கீழ் குறைந்தது ஒரு வருட சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபா தண்டப் பணமும் அறவிடப்படும். 18 வயதுக்கு குறைந்தவராக இருப்பின், சட்டமா அதிபரின் கீழ் இயங்கும் சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் அடிப்படையில் அவர்களுக்கு உண்டான குறைந்தபட்ச தண்டனை வழங்கக்கூடும்" என்று வழக்கறிஞர் தினேசன் குறிப்பிடுகிறார்.
அத்துடன் படகோட்டிகள் உள்பட சட்டவிரோத உள்நுழைவுகளுக்குத் துணை போகும் எவராக இருந்தாலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவு 45(C)இன் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்க வாய்ப்புகள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































