பசியே இல்லாமல் அதீதமாக சாப்பிடத் தோன்றுகிறதா? உளவியல் காரணிகளும் தவிர்க்க உதவும் வழிகளும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சோஃபி விட்ப்ரெட்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
எச்சரிக்கை: உணவுக் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் (Eating Disorders) தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்படுவோருக்கு இந்தக் கட்டுரை மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
பசி இல்லாத நிலையிலும் ஒரு பாக்கெட் பிஸ்கட்டை காலி செய்த அனுபவம் உங்களுக்கு இருந்துள்ளதா?
உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளல் (Emotional Eating) என்பது மிகவும் பொதுவான ஒன்று. இதற்கு மன அழுத்தமோ சோகமோ மட்டுமே காரணமல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரவில் போதிய தூக்கம் இல்லாமல் இருந்தால், அதற்கு மறுநாள் தாங்கள் உணராமலேயே நூற்றுக்கணக்கான கூடுதல் கலோரிகளை மக்கள் உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி, நாம் பெரும்பாலும் கவனிக்காத பல்வேறு காரணிகளும் உணவு பழக்கத்தைப் பாதிக்கின்றன.
பசி இல்லாதபோதும் சாப்பிடுவதை அறியும் 5 அறிகுறிகள்
பின்வரும் அறிகுறிகள் உங்களிடம் இருந்தால், உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளலால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்:
- குறிப்பிட்ட ஆறுதல் உணவுகள் (comfort foods) மீது திடீர் விருப்பம் ஏற்படுவது.
- மெதுவாக பசி எடுப்பதற்குப் பதிலாக திடீரென சாப்பிட வேண்டுமென்ற உணர்வு வருவது.
- மன அழுத்தம், சலிப்பு அல்லது தனிமையை உணரும்போது உணவை நாடுவது.
- பசி இல்லாத நிலையிலும் சாப்பிடுவது அல்லது வயிறு நிரம்பிய பின்னரும் திருப்தி இல்லாமல் இருப்பது.
- சாப்பிட்ட பிறகு குற்ற உணர்வு அல்லது வருத்தம் ஏற்படுவது.

பட மூலாதாரம், Getty Images
உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளல் - காரணம் என்ன?
மகிழ்ச்சியாக இருக்கும்போது நமக்கே பரிசளித்துக் கொள்ளும் விதமாகவோ, சோகமாக இருக்கும்போது நம்மை நாமே ஆறுதல் செய்து கொள்ளவோ மட்டுமே இது நிகழ்வதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் உணவுப் பழக்கத்தை பாதிக்கும் வேறு காரணங்களும் உள்ளன.
மன அழுத்தம்
"சிங்கம் ஒன்று நம்மைத் துரத்துவதால் ஏற்படும் மன அழுத்தத்தையும், அலுவலக வேலையின் காலக்கெடு நெருக்கடியால் ஏற்படும் மன அழுத்தத்தையும் நமது உடல் வேறுபடுத்திப் பார்க்காது," என்கிறார் மருத்துவரும் உடற்பயிற்சி பயிற்றுநருமான ஆயிஷா முகமது.
அதனால்தான் உடனடியாக சக்தி தரக்கூடிய உணவுகளுக்கான ஈர்ப்பு அதிகமாக உணரப்படலாம்.
சலிப்பு
சமநிலையற்ற உணவுத் தேர்வுகளுடன் அதிகம் தொடர்புபடுத்தப்படும் உணர்வுகளில் ஒன்று சலிப்பு. பசி காரணமாக அல்லாமல், நம்மை நாம் திசை திருப்பிக்கொள்ளும் முயற்சியாக உணவை நாடுகிறோம்.
சோர்வு
சோர்வு என்பது ஓர் உணர்ச்சி அல்ல. ஆனால் அது குறைந்த ஆற்றல் உணர்வை உருவாக்குகிறது. இதனால் உடலுக்கு மேலும் சக்தி தேவைப்படுவது போலத் தோன்றுகிறது. அதே நேரத்தில் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறனும் குறைகிறது.

பட மூலாதாரம், Getty Images
தூக்கம் போதுமான அளவில் இல்லாத நாட்களில், நன்றாகத் தூங்கும் நாட்களை ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 400 கலோரி வரை அதிகமாக உட்கொள்ளப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
விழிப்புடன் இருக்க உடல் விரைவான சக்தி மூலங்களை நாடுகிறது. அவை பெரும்பாலும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளாக இருக்கும்.
மேலும், தூக்கமின்மை பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் அளவையும் உயர்த்துகிறது. தொடர்ந்து ஏழு மணிநேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது, உணவின் மீதான ஆசையை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளலின் சுழற்சி
எப்போதேனும் ஆறுதலை நாடிச் சாப்பிடுவது இயல்பானதுதான். ஆனால் தொடர்ந்து உணவின் மூலம் உணர்ச்சி சிக்கல்களைச் சமாளிக்க முயன்றால், அது உடல் மற்றும் உளவியல் நலத்தை பாதிக்கலாம்.
தேசிய சுகாதார சேவை (NHS) விளக்குவதுபோல், இந்த சுழற்சி இவ்வாறு தொடர்கிறது:
- கவலை, சலிப்பு அல்லது மிகுந்த உற்சாகம் போன்ற உணர்வு ஏற்படுகிறது.
- அந்த உணர்வு சாப்பிடத் தூண்டுகிறது.
- சாப்பிட்டவுடன் தற்காலிக நிம்மதி கிடைக்கிறது.
- பின்னர் அவமானம், குற்ற உணர்வு போன்ற உணர்ச்சிகள் ஏற்படுகின்றன.
- பிறகு, அந்த உணர்வுகள் மீண்டும் உணவை நாடச் செய்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளலை கட்டுப்படுத்துவது எப்படி?
'ஃபீல் கிரேட் லூஸ் வெயிட்' (Feel Great Lose Weight), 'தி ஸ்டிரெஸ் சொல்யூஷன்' (The Stress Solution) ஆகிய நூல்களின் ஆசிரியரான மருத்துவர் ரங்கன் சட்டர்ஜி பரிந்துரைக்கும் "மூன்று எஃப்" (Three Fs) முறையைப் பலர் பயனுள்ளதாகக் கருதுகின்றனர். அது,
உணருதல்
சாப்பிட வேண்டுமெனத் தோன்றும்போது ஒரு நிமிடம் நின்று பாருங்கள். நீங்கள் உண்மையில் பசியாக இருக்கிறீர்களா அல்லது சலிப்பு, தனிமை, மன அழுத்தம் காரணமாகச் சாப்பிட நினைக்கிறீர்களா?
உணவின் உளவியல் விளைவுகள்
நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவு அந்த உணர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கவனியுங்கள். அதைச் சாப்பிட்ட பிறகு நீங்கள் சிறப்பாக உணர்கிறீர்களா, மோசமாக உணர்கிறீர்களா, அல்லது மாற்றமே இல்லையா?
மாற்று வழியைக் கண்டுபிடியுங்கள்
அந்த உணர்வைச் சமாளிக்க உணவல்லாத வேறு வழி இருக்கிறதா என்று சிந்தியுங்கள். நடைபயிற்சி, யோகா, சூடான குளியல், தூக்கம், நண்பரிடம் பேசுதல் அல்லது சுவாசப் பயிற்சிகள் போன்றவை உதவலாம்.

பட மூலாதாரம், Getty Images
சோகம் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் இனிப்புகள் மீது ஆசை அதிகரிப்பது ஏன்?
உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளலின்போது பெரும்பாலானோர் பழங்களைத் தேர்வு செய்வதில்லை என்று பிரிட்டிஷ் உணவுமுறை சங்கம் (BDA) கூறுகிறது.
அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள், மகிழ்ச்சி மற்றும் வெகுமதியுடன் தொடர்புடைய டோபமைன் என்ற ரசாயனத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால் சாக்லெட், பிஸ்கட், உருளைக் கிழங்கு வறுவல், துரித உணவுகள் போன்றவற்றை உடல் நாடுகிறது.
ஆனால் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது, மூளையின் மகிழ்ச்சி மையங்கள் அதற்குப் பழகிவிடுகின்றன. இதனால், அதே அளவிலான திருப்தியைப் பெறுவதற்காக மேலும் அதிகமாகச் சாப்பிட வேண்டிய நிலை உருவாகலாம்.
உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளல் நல்லதா?
சில நேரங்களில் உணவு உண்மையிலேயே நம்மை நன்றாக உணரச் செய்யலாம். குடும்பத்துடன் திரைப்படம் பார்த்துக்கொண்டே இரவு உணவு சாப்பிடுவது அல்லது சமையல் செய்வது போன்ற அனுபவங்கள் நேர்மறையான உணர்ச்சிகளை உருவாக்கலாம்.
கவனத்துடனும் நோக்கத்துடனும் சாப்பிடுவோர், உணவையும் அந்த அனுபவத்தையும் அதிகமாக ரசிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளல் என்றாலே அது ஆரோக்கியமற்ற உணவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் சிக்கல்களைத் தீர்ப்பதில் உணவு மிகவும் அரிதாகவே முழுமையான தீர்வாக அமைகிறது. வாழ்க்கையின் கடினமான அனுபவங்களைச் சமாளிக்க உணவைத் தாண்டிய வழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட உணவு உட்கொள்ளலால் பாதிக்கப்படுகிறீர்களா? இதை முயற்சி செய்யுங்கள்
- தினமும் குறைந்தபட்சம் ஏழு மணிநேரம் தூங்குவதற்கு முன்னுரிமை அளிக்கவும்.
- நேரம் தவறாமல் உணவு உட்கொள்ளவும்.
- எத்தகைய சூழ்நிலைகள் உங்களைத் தூண்டுகின்றன என்பதைப் பதிவு செய்து வைக்கவும்.
- கவனத்துடன் உணவு உட்கொள்ளும் (Mindful Eating) பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும்.
- நடைபயிற்சி, நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பேசுதல் போன்ற உணவு சாராத மாற்று வழிகளை முயலவும்.
- உங்களை நீங்களே கடுமையாக விமர்சிக்காதீர்கள். குற்ற உணர்வையும் வெட்கத்தையும் தவிர்க்க முயலுங்கள்.
எப்போதாவது உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுவது தவறல்ல என்றும், அதை முற்றிலும் ஒழிக்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மன அழுத்தம், சலிப்பு, மனச் சோர்வை சமாளிப்பதற்கான முக்கிய வழியாக உணவு மாறிவிட்டதா என்பதை அறிந்திருப்பதே முக்கியம். அப்படியானால், அதற்குப் பதிலாக ஆரோக்கியமான சமாளிப்பு முறைகளை மெதுவாக வளர்த்துக் கொள்வது நீண்டகால நலனுக்கு உதவும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































