இந்தியா அழைப்பு விடுத்தும்கூட வங்கதேசம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்? இழப்பு யாருக்கு?

இந்தியா அழைப்பு விடுத்தும்கூட வங்கதேசம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏன்? இழப்பு யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இரண்டு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த வாரம் இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவர் கலந்துகொள்ள வேண்டாமென முடிவு செய்தார்.

தற்போது பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக இருக்கும் தாரிக் ரஹ்மானை பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா அழைத்து இருந்ததாகவும், ஆனால் இதை இருதரப்பு அழைப்பாகக் கருதக்கூடாது என்றும் வங்கதேச துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெளிவுபடுத்தியுள்ளார். வங்காள விரிகுடா பகுதியில் உள்ள ஏழு நாடுகளால் உருவாக்கப்பட்ட பிராந்திய அமைப்பே பிம்ஸ்டெக்.

செவ்வாய்க் கிழமையன்று ஹுமாயூன் கபீர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "வங்கதேச பிரதமரை இரு தரப்பு பயணத்திற்காகவும் நாங்கள் அழைத்திருந்தோம். அதன் பின்னர், பிம்ஸ்டெக் தலைவராக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்தோம். அவருக்கு இரண்டு அழைப்புகள் கிடைத்துள்ளன. ஒன்று இரு தரப்பு பயணத்திற்கானது, மற்றொன்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கானது" என்று கூறினார்.

வங்கதேசத்திலும் இது தொடர்பாகப் பெரும் விவாதம் நடந்து வருகிறது. 'தாங்கள் சேர விரும்பும் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் இருந்ததன் மூலம் வங்கதேசம் என்ன சாதித்துள்ளது? இந்த முடிவால் வங்கதேசத்திற்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?' என்பது குறித்து அங்கு பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஹுமாயுன் கபீர் கூறியது என்ன?

"பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதிதாக ஏதோவொன்று உருவாகியிருப்பது போலத் தெரிகிறது. இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒத்துழைப்பை அதிகரிக்க அவர்கள் முயன்று வருகின்றனர். அதேபோல, டிஜிட்டல் நாணய அளவில் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன," என்று வங்கதேச ஆங்கில செய்தி இணையதளமான 'தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்'டிடம் பேசிய அமெரிக்காவுக்கான முன்னாள் வங்கதேச தூதர் ஹுமாயூன் கபீர் கூறினார்.

"நீங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்தால், இந்திய நாணயத்தில் வர்த்தகம் செய்யலாம். சீனாவில் வர்த்தகம் செய்தால், சீன நாணயத்தில் வர்த்தகம் செய்யலாம். அதாவது, மாற்று பொருளாதாரத்தை உருவாக்க அவர்கள் முயல்கின்றனர். அனைவருடனும் உறவையும், 11 உறுப்பு நாடுகளுடனும் வர்த்தக உறவையும் கொண்டுள்ள வங்கதேசம் போன்ற ஒரு நாட்டுக்கு இது மிகவும் முக்கியமானது" என்று ஹுமாயூன் கபீர் கூறினார்.

மேலும் அவர், "இத்தகைய சூழ்நிலையில், வங்கதேசம் இந்த நிதி வலையமைப்புடன் இணைந்திருந்தால், நிலைமை மேம்பட்டிருக்கும். ரஷ்யாவிடம் இருந்து அணுமின் நிலையத்தை எடுத்துக்கொண்ட பிறகு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் குறித்த பதற்றம் இருந்திருக்காது. ஏனெனில், ரஷ்யாவுடனான வங்கதேசத்தின் வர்த்தகம் 'டாகா' அல்லது 'ரூபிள்' நாணயத்தில் நடைபெற்றிருந்தால், டாலரில் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளின் தாக்கம் பெருமளவில் குறைந்திருக்கும்" என்று கூறினார்.

அதோடு, "அங்கு 11 நாடுகளின் தலைவர்கள் உள்ளனர். இதுபோன்ற ஓரிடத்தில் வங்கதேசம் தனது இருப்பைப் பதிவு செய்திருந்தால், அவர்களுடன் பேசி கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அதுவொரு சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். இதற்கு ராஜ்ஜீய முக்கியத்துவம் உள்ளது. வங்கதேசம் பிரிக்ஸ் மாநாட்டுக்குச் செல்லாததால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த வகையில், உச்சி மாநாட்டுக்குச் செல்வது சிறந்த முடிவாக இருந்திருக்கும்" என்று அவர் தனது கருத்தைத் தெரிவித்தார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் (வலது), வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை ஜூன் 22, 2026 அன்று வரவேற்கிறார்

வங்கதேசம் ஏன் இதைச் செய்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சென்டர் ஃபார் சோஷியல் அண்ட் எகனாமிக் ப்ரோக்ரஸ் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரான கான்ஸ்டான்டினோ சேவியர், வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கருதுகிறார்.

"அவர்கள் ஒரு பெரிய இரு தரப்பு ஒப்பந்தத்தை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, இந்தியாவுக்கு வரும்போது அதிலிருந்து அதிக பலன்களைப் பெற விரும்புகின்றனர். வங்கதேசத்தில் இந்தியா எதிர்ப்பு மனநிலை இன்னும் வலுவாக உள்ளது. இந்த நேரத்தில் டெல்லியில் நடைபெறும் பன்முக மாநாட்டில் பங்கேற்கும் புகைப்படங்களும், அதனுடன் தொடர்புடைய அரசியல் செய்தியும் பிரதமருக்கும் பி.என்.பி கட்சிக்கும் பெரிய அரசியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்," என்று சேவியர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

"பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராகத் தனது பொறுப்புகளைவிட, இந்தியா உடனான இரு தரப்பு உறவுகளுக்கே வங்கதேசம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இது மற்ற உறுப்பு நாடுகளின் நலன்களையும் பாதித்துள்ளது. குறைந்தபட்சம் அமைச்சர் ஒருவரையோ அல்லது வேறு மூத்த பிரதிநிதியையேனும் வங்கதேசம் இந்த உச்சி மாநாட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதற்கு இந்தியா எப்படி பொறுப்பாக முடியும்?

"இந்தியா பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருந்து எப்படி விலகியிருக்க முடியும்? இது இருதரப்பு விவகாரம் அல்ல. இதில் இந்தியா உடன் எந்தவொரு சர்ச்சையும் இல்லை" என்று வங்கதேசத்தின் ஜஹாங்கீர் நகர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், அரசியல் மற்றும் அரசு நிர்வாகத் துறை முன்னாள் தலைவருமான முனைவர் திலாரா சௌத்ரி 'தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்' நாளிதழிடம் தெரிவித்தார்.

"தற்போதைய பதற்றம் காரணமாக இந்தியாவுக்கான இருதரப்பு பயணத்தை நிராகரிப்பது என்பது வேறு விஷயம்" எனக் குறிப்பிட்ட அவர், "ஆனால், பிரிக்ஸ் இதிலிருந்து வேறுபட்டது. இதுவொரு பன்முக அமைப்பு, வங்கதேசம் நிச்சயமாக இதில் இடம்பெற வேண்டும்" என்றார்.

அவரது கூற்றுப்படி, "வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி முழுவதுமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டைச் சார்ந்துள்ளது. இதுபோன்ற வாய்ப்புகளைப் பெறுவதற்கு சர்வதேச அளவிலான பன்முக தளங்கள் முக்கியமானவை."

அப்படியிருக்க, "நாம் ஏன் அங்கு செல்லவில்லை? இந்தியா உடனான பதற்றம் காரணமாக அதிலிருந்து விலகியிருப்பது சரியானதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவுடன் 4,096 கி.மீ. நீளமான எல்லையை அது பகிர்ந்து கொள்கிறது. 1975-ல் ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கிய அதன் வரலாறு, அரசியல் நிலைத்தன்மை இன்மையால் குறிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2026 ஜூன் 6 அன்று டாக்காவுக்கு வருகை தந்த துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடானை (இடதுபுறம்) வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் வரவேற்றார்.

இந்தியா, வங்கதேச உறவின் முக்கியத்துவம்

சுமார் 18 கோடி மக்கள்தொகை கொண்ட வங்கதேசம், இந்தியாவின் முக்கியமான அண்டை நாடு. அது, இந்தியாவுடன் 4,096 கி.மீ. நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. 1975இல் ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கிய அதன் வரலாறு, அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலால் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், இந்தியாவை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைப்பதில் வங்கதேசம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இந்தியா உடனான உறவை மேம்படுத்துவது இரு நாடுகளுக்கும் முக்கியமாம்.

தாரிக் ரஹ்மானை தடுத்தது யார்?

"வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினர் வெற்றி பெற்றுவிட்டதாக நான் கருதுகிறேன். அவர்கள்தான் தாரிக் ரஹ்மான் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குச் செல்வதைத் தடுத்துள்ளனர்" என்று வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' என்ற இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழுக்கு செப்டம்பர் 17 அன்று அளித்த பேட்டியில் கூறினார்.

அதில் அவர், "வங்கதேசம் இந்தியாவை புறக்கணிக்கவில்லை. நமது பகிரப்பட்ட நாகரிக பாரம்பரியம் காரணமாக, இந்தியாவுக்கு பதிலாக வேறு எந்த நாடும் அந்த இடத்தைப் பிடிக்கவில்லை. லட்சக்கணக்கான வங்கதேச மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் வர்த்தகமும் இணைப்பும் உள்ளது. இந்த உறவைப் புறக்கணிப்பது என்பது வங்கதேசம் தானாகவே இழக்க நேரிடும் ஒரு வாய்ப்பு" என்றார்.

இந்தியா போதிய அளவிலான முன்முயற்சியை எடுத்துள்ளது. இப்போது முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு வங்கதேசத்தின் கையில்தான் உள்ளதாகக் கூறிய அவர், "இந்த உறவை வரையறுக்கப்பட்ட அளவிலேயே வைத்துக் கொள்வோம் என்று அவர்கள் கூறலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்த காலத்திலும் இதுபோன்ற அணுகுமுறையைப் பார்த்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் அடித்தளமாக இருக்கும் விவகாரங்களில்தான் இந்தியா முக்கியமாக கவனம் செலுத்துகிறது. தற்போது வங்கதேசம் எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னை பொருளாதாரம்தான்" எனக் குறிப்பிட்டார்.

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இரண்டு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

தாரிக் ரஹ்மானின் பி.என்.பி பல்வேறு நலக் குழுக்களின் கூட்டமைப்பாக உள்ளது. இதில் வர்த்தக சமூகம், பாகிஸ்தான் ஆதரவுப் பிரிவினர், ஜமாஅத்-இ-இஸ்லாமி ஆதரவுப் பிரிவினர் ஆகியோர் உள்ளனர். இதில் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவோரும் உள்ளனர். ஆனால், அவர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தியா, வங்கதேசம் இடையே 54 பொதுவான ஆறுகள் உள்ளன. ஆனால், ஒப்பந்தம் எனப் பார்த்தால், கங்கை நதி நீர் ஒப்பந்தம் மட்டுமே உள்ளது. அந்த ஒப்பந்தமும் டிசம்பரில் காலாவதியாக உள்ளது. மேற்கு வங்கத்தின் எதிர்ப்பால், தீஸ்தா ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை என்று பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி விளக்கினார்.

வங்கதேசம் நழுவவிட்ட வாய்ப்பு

"பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாரிக் ரஹ்மான் பங்கேற்காதது தவறவிடப்பட்ட ஒரு வாய்ப்பு" என்று வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான 'டெய்லி சன்' தெரிவித்துள்ளது.

அதன்படி, "இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் மூலோபாய சிந்தனை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. அரச மரியாதைகள், நெறிமுறை தொடர்பான சர்ச்சைகள், அழைப்பிதழ்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் குறித்த குறுகிய கருத்துகள் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்த முடியாது. இதற்கு தொலைநோக்குப் பார்வை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறன் தேவை."

சிறிய காரணங்களைக் கூறி வங்கதேசம் இந்த வாய்ப்பைத் தவறவிட்டதாகவும், ஆனால் பிரிக்ஸ் அமைப்பு வங்கதேசத்திற்கான தனது கதவுகளை மூடவில்லை என்றும் 'டெய்லி சன்' எழுதியுள்ளது. ஆனால், வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இதில் பங்கேற்காமல், அழைப்புக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் குறித்து தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டது.

"ராஜ்ஜீய வாய்ப்புகள் அரிதாகவே நிரந்தரமாக இருக்கும். அவை சூழ்நிலைகள், தனிநபர்கள் மற்றும் மாறி வரும் உலக அரசியல் சமன்பாடுகளால் உருவாக்கப்படுகின்றன. அதே வேகத்தில் அவை மறைந்தும் விடுகின்றன. இதுபோன்ற பொன்னான வாய்ப்புகளை அடையாளம் கண்டு, உடனடியாக அதற்கேற்ப செயல்படுவதுதான் முதிர்ச்சியான வெளியுறவுக் கொள்கை. பிரிக்ஸ் உச்சி மாநாடு அத்தகைய ஒரு நிகழ்வு. எனவே, வங்கதேசம் அங்கு இருந்திருக்க வேண்டும்" என்று அந்த நாளிதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு