தேசிய பங்குச் சந்தை ஐபிஓ-வில் பங்குகளை வாங்குவது எப்படி? 10 ஆண்டுகளாக முடங்கியிருந்தது ஏன்?

 தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐபிஓ-வில் பங்குகளை வாங்கும் பணி செப்டம்பர் 17 முதல் தொடங்கி இருப்பதாக தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தெரிவித்துள்ளது.
    • எழுதியவர், கோட்டெரு ஸ்ராவணி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்ஈ), முதன்முறையாகத் தனது சொந்த ஐபிஓ-வை வெளியிடுகிறது. இதன் மூலம், பங்குச் சந்தையில் தன்னைப் பட்டியலிட உள்ளது.

என்.எஸ்.ஈ நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அதன் ஐபிஓ செப்டம்பர் 17 தொடங்கி செப்டம்பர் 21 வரை நடைபெறும். செப்டம்பர் 24 அன்று பங்குச் சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ-வில், தேசிய பங்குச் சந்தையின் ஒரு பங்கின் விலை ரூ.1,700 முதல் ரூ.1,785 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில்லறை முதலீட்டாளர்கள் 8 பங்குகள் கொண்ட ஒரு பங்குத் தொகுப்பை வாங்க ரூ.14,280 செலுத்த வேண்டும். ஐபிஓ-வுக்கான தேசிய பங்குச் சந்தையின் வெளியீட்டு அளவு ரூ. 22,562 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓ-வின் பின்னணியில், என்.எஸ்.இ எப்போது தொடங்கப்பட்டது? அதன் ஐ.பி.ஓ எப்படி இருக்கும்? இது 10 ஆண்டுகளாகத் தாமதமானது ஏன்? தொழில்நுட்ப ரீதியாக, மும்பை பங்குச் சந்தையுடன் (பிஎஸ்இ) ஒப்பிடும்போது என்எஸ்இ எந்த அளவுக்கு வேறுபட்டது?

இவற்றை விரிவாகத் தெரிந்துகொள்ள நிபுணர்களிடம் பேசினோம்.

தேசிய பங்குச் சந்தையின் தொடக்கம்

கடந்த 1990களின் தொடக்கத்தில், இந்தியா மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை எதிர்கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில், பங்குகளை வாங்குவதும் விற்பதும் பெரும்பாலும் பழைய பங்குச் சந்தைகளையே சார்ந்திருந்தது. குறிப்பாக, பிஎஸ்ஈ தரகர்களுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. முறையான அமைப்பு இல்லாததால், அங்கு அடிக்கடி முறைகேடுகள் நடைபெற்றன.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண 1991ஆம் ஆண்டு நிதி அமைச்சகம் மனோஹர் பெர்வானி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. பெர்வானி குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை (NSE) நிறுவப்பட்டது. அந்த நேரத்தில்கூட, இந்தப் பங்குச் சந்தைக்கு அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.

இதற்கிடையில், 1992ஆம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. பம்பாய் பங்குச் சந்தையின் பிற வங்கியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து மேத்தா, பங்குச் சந்தையில் முறைகேடான நடவடிக்கைகள் மற்றும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அந்தக் காலகட்டத்தில், இந்த மோசடி நாடு முழுவதும் பேசப்படும் விவகாரமாக மாறியது. இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாக இது அமைந்தது. எந்த வித பிணையும் இல்லாமல் வங்கிகளிடம் இருந்து கடன் பெற வங்கி ரசீதுகளைப் பயன்படுத்தியதாகவும், பின்னர் அந்தப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பங்குகளின் விலையை உயர்த்தியதாகவும் ஹர்ஷத் மேத்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்த பிறகு, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தன.

இந்த நிதி மோசடி, அமைப்பில் இருந்த குறைபாடுகளை வெளிப்படுத்தியதுடன், இந்திய சந்தைகளை நவீனமயமாக்க, கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியது. இந்தச் சூழலில்தான், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), 1993ஆம் ஆண்டு தேசிய பங்குச் சந்தைக்கு அங்கீகாரம் வழங்கியது.

மொத்த கடன் சந்தையைத் தொடங்கியதன் மூலம் 1994ஆம் ஆண்டு செயல்பாடுகளைத் தொடங்கியதாக என்எஸ்ஈ தெரிவித்துள்ளது.

பம்பாய் பங்குச் சந்தை (பிஎஸ்ஈ)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பம்பாய் பங்குச் சந்தை கட்டடம் (கோப்புப் புகைப்படம்)

தேசிய மற்றும் பம்பாய் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதில் இருக்கும் வேறுபாடுகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

என்.எஸ்.ஈ-யின் முதல் நிர்வாக இயக்குநரான ஆர்.ஹெச். பாட்டீல் தலைமையில், முழுமையாக மின்னணு முறையிலான வர்த்தக அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், முழுமையாக தானியங்கி மின்னணு அமைப்பு வழியாகப் பங்குகளை வாங்க, விற்க முடிந்தது.

இதன் மூலம், தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ நாட்டின் முதல் மின்னணு பங்குச் சந்தை ஆனது. அதைத் தொடர்ந்து பி.எஸ்.இ மின்னணு முறையில் செயல்படத் தொடங்கியது. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள வர்த்தகக் கணினிகளை என்.எஸ்.இ இணைத்தது. இதன் மூலம், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் பங்கேற்க முடிந்தது.

தற்போது, ​​என்எஸ்இ-யில் பங்குகள், டெரிவேட்டிவ்கள், நிலையான வருமானம், கடன் சார்ந்த தயாரிப்புகள், பொது வெளியீடுகள் ஆகியவற்றில் வர்த்தகம் நடைபெறுகிறது. நாட்டின் பழமையான பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தையில் தற்போது 5,700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேவேளையில், மார்ச் 2025 நிலவரப்படி என்எஸ்இ-யில் 2,700க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

இந்தத் தளம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 9:15 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை செயல்படுகிறது. இருப்பினும், சந்தை நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே முன்-சந்தை வர்த்தகம் தொடங்குகிறது. தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது "முகூர்த்த வர்த்தகம்" போன்ற சிறப்பு வர்த்தக வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.

"பேங்க் நிஃப்டி, வாராந்திர நிஃப்டி வீக்லி, மாதாந்திர நிஃப்டி, ஃபின் நிஃப்டி, மிட்கேப் இன்டெக்ஸ், கரன்சி, எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், கார்ப்பரேட் பாண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் என்.எஸ்.இ புதிய வர்த்தக முறைகளை அறிமுகம் செய்துள்ளது. சந்தை பங்கேற்பாளர்களுக்குப் பல்வேறு வர்த்தக வாய்ப்புகளை அது அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய பங்குச் சந்தையான பிஎஸ்இ, டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியுள்ளது," என்று தொழில் துறை நிபுணர் நாகேந்திர சாய் குந்தவரம் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து விரிவாகப் பேசிய அவர், "இது நாட்டிலேயே மிகவும் வலுவான தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பாகும். மிக வேகமான வர்த்தகம், உடனடி சந்தைத் தகவல்கள், இடர் மேலாண்மை, விதிமுறைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றில் தனது திறனை இது நிரூபித்துள்ளது," என்றார்.

என்.எஸ்.இ இணையதளத்தின்படி, 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2,000 கோடி ஆர்டர்களை அது கையாண்டது. 'தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்' இணையதளம், என்.எஸ்.இ தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சௌகான் கூறியதாக மேற்கோள் காட்டியதன்படி, 2024 ஜூன் 5 அன்று தேசிய பங்குச் சந்தை ஒரே நாளில் 1,971 கோடி ஆர்டர்களையும், 28.55 கோடி வர்த்தகங்களையும் கையாண்டது. இதுவொரு உலக சாதனை.

சராசரியாக, என்எஸ்இ தினமும் 5 பில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்தங்களையும், 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளையும் கையாள்கிறது. செப்டம்பர் 15 அன்று, அனைத்துப் பிரிவுகளிலும் என்.எஸ்.இ சுமார் 1,304 கோடி ஆர்டர்களைக் கையாண்டது. அதே நேரத்தில், பிஎஸ்இ-யில் தினமும் சராசரியாக 3 கோடி ஒப்பந்தங்களும், ரூ.250 கோடி மதிப்பிலான வர்த்தகமும் மட்டுமே நடைபெறுகின்றன.

பிஎஸ்இ-யில் தினமும் சராசரியாக 3 கோடி ஒப்பந்தங்களும், ரூ. 250 கோடி மதிப்பிலான வர்த்தகமும் மட்டுமே நடைபெறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

ஐபிஓ பத்து ஆண்டுகள் தாமதமானது ஏன்?

தொழில் துறை நிபுணர் நாகேந்திர சாய் குந்தவரம் கூறுகையில், "10 ஆண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு என்எஸ்இ தனது ஐபிஓ-வை கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதற்கும், பங்குகளை வாங்கி விற்பதற்கும் தளத்தை வழங்கும் இந்த நிறுவனம், சந்தையில் நுழைவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல், சட்ட விவகாரங்கள், விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான பிரச்னைகளை நிறுவனம் எதிர்கொண்டது. குறிப்பாக, கோ-லொகேஷன் விவகாரத்திற்குத் தீர்வு காண நீண்ட காலம் ஆனது," என்றார்.

சில பெரிய வர்த்தகர்களுக்கு டார்க் ஃபைபர் அணுகலை வழங்கியதாகவும், நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைத்த முன்கூட்டிய வர்த்தகத் தகவல்களை சில வர்த்தகர்களுக்கு வழங்கியதாகவும் என்.எஸ்.இ மீது குற்றச்சாட்டு எழுந்ததாக அவர் விளக்கினார். மற்றவர்களுக்கு முன்பாக வேகமாகச் செயல்படும் வர்த்தகர்களை வர்த்தகம் செய்ய அனுமதித்தது என்பதே சட்டரீதியான முக்கியக் குற்றச்சாட்டாக இருந்தது.

நாகேந்திர சாய் கூறுகையில், ஒருவர் அளித்த புகாரின்படி, இதன் மூலம் சில வர்த்தகர்களுக்கு நியாயமற்ற வர்த்தக முன்னிலை கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சில மைக்ரோவிநாடிகள் முன்னதாகவே வர்த்தகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அதன் மூலம் அவர்கள் பயனடைந்து இருக்கலாம். இதன் காரணமாகவே, அந்தக் காலகட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இமயமலை யோகி ஒருவர் முன்கூட்டியே சில விஷயங்களை உணர்ந்து, இவை அனைத்தும் தனது கண்முன்னே நடைபெறுவதைக் கண்டதாகவும் பேசப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த வழக்கு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுக்குச் சென்றதுடன், பல ஆண்டுகளாக நீடித்தது.

நாகேந்திர சாய் கூறுகையில், "இறுதியாக, கோ-லொகேஷன் மற்றும் டார்க் ஃபைபர் விவகாரங்களுக்கு என்.எஸ்.இ, செபிக்கு ரூ. 1,491.2 கோடி செலுத்தி தீர்வு கண்டது. இதற்குப் பிறகு, ஐபிஓ-வை வெளியிடுவதற்கு செபியிடம் இருந்து ஒப்புதல் பெற்றது" என்றார்.

கோ லொகேஷன் பிரச்னை இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

நாகேந்திர சாய் குந்தவரம் கூறுகையில், "இதுவொரு சாதாரண நிறுவனமோ அல்லது சாதாரண வழக்கோ அல்ல. எனவே, என்.எஸ்.ஈ விவகாரம் வேறுபட்டது. கண்காணிப்பு அமைப்பாக இருக்க வேண்டிய அமைப்பே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. வெளிப்படைத்தன்மை, பொது மக்களின் நம்பிக்கை ஆகிய விவகாரங்களும் இதனுடன் தொடர்புடையவை. அதனால்தான் இந்த வழக்கு இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது" என்றார்.

என்எஸ்இ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, என்.எஸ்.இ ஒரு கண்காணிப்பு அமைப்பாக இருப்பதால், அது தொடர்பான விவகாரம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

என்.எஸ்.இ ஐபிஓ-க்கு எப்படி விண்ணப்பிப்பது?

ஐபிஓ-வில் விண்ணப்பிக்க விரும்புவோர் டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், நிறுவனம் குறிப்பிடும் தேதிகளில் தங்களது நெட் பேங்கிங் அல்லது டிரேடிங் கணக்கு மூலம் ஐபிஓ-வுக்கு விண்ணப்பிக்கலாம்.

நெட் பேங்கிங் மூலம் ஐபிஓ-வில் முதலீடு செய்ய விண்ணப்பிக்கையில், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முழு தொகையும் உங்கள் கணக்கில் தற்காலிகமாக முடக்கி வைக்கப்படும்.

உங்களுக்கு ஒதுக்கப்படும் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தத் தொகை கழிக்கப்படும். மீதமுள்ள தொகை உங்கள் கணக்குக்குத் திருப்பி வழங்கப்படும். பங்குகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றால், முழு தொகையும் உங்கள் கணக்குக்கு திருப்பி வழங்கப்படும். இதன் மூலம், அந்தப் பணம் மற்றொரு பரிவர்த்தனைக்காக எப்போதும் கிடைக்கும்.

பங்குகளைப் பெறுவது எப்படி, லாட் என்றால் என்ன?

பங்குகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். எனவே, ஐபிஓ-வில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பங்குகள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஐபிஓ வெளியிடும்போது வழங்கப்படும் குறைந்தபட்ச பங்குகளின் எண்ணிக்கையை நிறுவனம் நிர்ணயிக்கும். இது 'லாட்' என்று அழைக்கப்படுகிறது.

ஒருவர் இந்த லாட்டில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைவான பங்குகளுக்கு விண்ணப்பித்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், லாட் அடிப்படையில் விண்ணப்பித்து இருந்தாலும், ஒருவர் கேட்ட அதே எண்ணிக்கையிலான பங்குகள் ஒரே நேரத்தில் கிடைக்கும் என்பது அவசியமில்லை.

ஒதுக்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை, கிடைக்கக்கூடிய மொத்த பங்குகளின் எண்ணிக்கை மற்றும் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இருக்கும். நிறுவனம் ஒதுக்கும் பங்குகள், ஐபிஓ முடிவடைந்த 5 நாட்களுக்குள் முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

பிரச்னை ஏதும் இருந்தால் யாரிடம் புகார் அளிப்பது?

பங்குகளை வெளியிடுவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலோ அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ, ஐபிஓ-வை வெளியிடும் நிறுவனத்தின் புகார் பிரிவைத் தொடர்புகொள்ள வேண்டும். அதன் பிறகும் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், செபியிடம் புகார் அளிக்க வேண்டும்.

முழுமையான விவரங்களுடன் கூடிய புகாரை, "முதலீட்டாளர் உதவி மற்றும் கல்வி அலுவலகம், செபி - ப்ளாட் எண். சி4-ஏ, ஜி பிளாக், பாந்த்ரா-குர்லா வளாகம், பாந்த்ரா (கிழக்கு), மும்பை" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

தேசிய பங்குச் சந்தை கட்டிடம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசிய பங்குச் சந்தை கட்டடம் (கோப்புப் படம்)

ஐபிஓ-வுக்கு பிறகு என்.எஸ்.இ தனது சொந்த தளத்தில் வர்த்தகம் செய்யுமா?

ஐபிஓ மூலம் சந்தையில் நுழையும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் என்.எஸ்.இ மற்றும் பிஎஸ்இ தளங்களில் பட்டியலிடப்பட்டு, அவற்றின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. எனினும், செப்டம்பர் 17 அன்று ஐபிஓ-வை தொடங்கிய என்.எஸ்.இ தனது சொந்த தளத்தில் தனது பங்குகளை வர்த்தகம் செய்யாது.

'தி எகனாமிக் டைம்ஸ்' செய்தியின்படி, தேசிய பங்குச் சந்தை தனது பங்குகளை சொந்த தளத்தில் வர்த்தகம் செய்வதற்கு செபியிடம் அனுமதி கோரவில்லை. இந்தத் தகவலை, கடந்த வாரம் பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆஷிஷ் சௌகான் தெரிவித்தார். என்.எஸ்.இ விதிமுறைகளைப் பின்பற்றும் என்றும் அவர் கூறினார்.

தொழில் துறை நிபுணர் நாகேந்திர சாய் குந்தவரம் கூறுகையில், "செபி விதிமுறைகளின்படி, பங்குச் சந்தை என்பது ஓர் அமைப்பு சார்ந்த நிறுவனமாக மட்டுமே உள்ளது. எனவே, இந்த நிறுவனம் சந்தையில் வர்த்தகர், நடுவர் ஆகிய இரு பங்குகளையும் வகிப்பது கடினம். விதிமுறைகளைப் பின்பற்றுவது, உள்தகவலின் அடிப்படையிலான வர்த்தகத்தைத் தடுப்பதும், கண்காணிப்பதும் கடினமாக இருக்கும். வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும் அபாயமும் உள்ளது. பங்குகளின் விலையைப் பாதிக்கும் காரணிகளைக் கட்டுப்படுத்துவதும் கடினம்" என்றார்.

மேலும், "இதன் காரணமாக, என்.எஸ்.இ பங்குகளை தேசிய பங்குச் சந்தையிலேயே வர்த்தகம் செய்ய முடியாது. அவை பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்டு, அங்கே வர்த்தகம் நடைபெறும். பிஎஸ்இ-யின் பங்குகளும் என்எஸ்இ-யில் வர்த்தகம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது" என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு