கோவை கட்டடம் உலக கட்டடக் கலை விழாவின் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Andrés Cedillo
- எழுதியவர், டொமினிக் லூடியன்ஸ்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மனிதர்கள் அதிகம் சஞ்சரிக்காத இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கிறது. அமைதியைத் தேடும் மனிதனின் ஏக்கம், நகர நெருக்கடி மற்றும் நவீன உலகில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஆர்வம், சுற்றுச்சூழல் குறித்த அழுத்தமான கவலைகள் ஆகியவற்றுடன் இது ஒத்துப் போகிறது.
இயற்கைச் சூழலுடன் ஒன்றிணைந்த கட்டடங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதாக உலக கட்டடக்கலை விழா (WAF) தெரிவிக்கிறது.
கட்டடக் கலைஞர்கள் தங்கள் கற்பனைத் திறனைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டு, புதிய மற்றும் உணர்வுபூர்வமான பல யோசனைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
காடுகளுக்குள் மூழ்கியிருக்கும் குடியிருப்புகள், வான் நோக்கும் வகையில் திறந்தவெளி கூரைகள் கொண்ட வீடுகள், மரங்களுக்கு இடையே பறவைகளின் கூடுகளைப் போலத் தாலாட்டப்படும் இல்லங்கள் எனப் பலவற்றை அவர்கள் உருவாக்குகிறார்கள்.
இந்த ஆண்டு ஃப்ளோரிடாவில் நடைபெறவுள்ள இந்த வருடாந்திர விழா, இயற்கையை மையமாகக் கொண்ட பல திட்டங்களை முன்னிலைப்படுத்துகிறது என்பதை அதன் இறுதிப் பட்டியல் காட்டுகிறது.
"வெளிப்புற நிலப்பரப்பு, பால்கனிகள், மொட்டை மாடிகள் மற்றும் மேற்கூரைகள் மூலம் இயற்கையைக் கட்டடங்களுக்குள் கொண்டு வருவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. சிறந்த கட்டடங்கள் என்றால் அவை சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது," என்று 'டபிள்யூ.ஏ.எஃப்'-இன் நிறுவனர் பால் ஃபின்ச் பிபிசியிடம் தெரிவித்தார்.
இயற்கையான வனாந்திர சூழலுடன் இணைந்த, அந்த இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 10 புதுமையான கட்டடங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அயனா ரிசார்ட் - சோலையூர், கோயம்புத்தூர் மாவட்டம், இந்தியா

பட மூலாதாரம், Ishita Sitwala
இந்த 40,000 சதுர அடி பரப்பளவிலான தங்கும் விடுதி சரிவான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அஸ்லம் ஷாம் ஆர்கிடெக்ட்ஸ் வடிவமைத்த இந்த வளாகம், வளைவான எல்லைகளைக் கொண்ட நிலத்தில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைக்கப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ளது.
இதில் வில்லாக்கள், உணவகம், நீச்சல் குளம் ஆகியவை அடங்கும். அவற்றின் கூரைகள் மண்ணையும் உள்ளூர் தாவரங்களையும் தாங்கி நிற்கின்றன. இவை இந்த ரிசார்ட்டை இயற்கையோடு ஒன்றி இருக்கச் செய்கின்றன.
இந்த வளாகம் அமைந்துள்ள திசை, அதன் மீது படும் சூரிய ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கிழக்கு நோக்கியுள்ள இதன் முன்பகுதி காலையில் மென்மையான சூரிய ஒளியைப் பெறுகிறது. அதேநேரம் மேற்கு நோக்கியுள்ள பின்பகுதி கடுமையான வெயிலில் இருந்து வளாகத்தைப் பாதுகாத்து, அதன் உட்புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
டெர்ரா ஹவுஸ் - மலப்புரம், கேரளா, இந்தியா

பட மூலாதாரம், PHX INDIA
அடிலியர் டிசைன் என் டொமைன் (ஏடிஎன்டி) வடிவமைத்துள்ள குறைவான உயரம் கொண்ட, கிடைமட்டமான இந்த வீடு, சுற்றியுள்ள பரந்த தென்னந்தோப்பின் தட்டையான நிலப்பரப்புக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
இதன் பெயருக்கு ஏற்றாற்போலவே, இது நிலத்தோடு ஒன்றியுள்ளது (லத்தீன் மொழியில் 'டெர்ரா' என்றால் நிலம் என்று பொருள்). கவனத்தை ஈர்க்காத வகையில் அமைந்துள்ள இந்த வீடு, உயரமான தென்னை மரங்களால் மறைக்கப்பட்டு இருந்தாலும், வான் நோக்கும் வகையில் அமைந்துள்ளது, காரணம் இதன் கூரையில் உள்ள திறப்புகள் வழியாகப் பகல் வெளிச்சம் வீட்டிற்குள் பாய்கிறது.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல முற்றங்கள் இருப்பதால், வெளிச்சமும் காற்றும் உட்புறம் முழுவதும் பரவுகிறது. கேரளாவில் வழக்கமாகக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், இந்த வீட்டை அதன் இருப்பிடத்தோடு இணைக்க உதவுகின்றன.
'லேட்டரைட்' எனப்படும் உள்ளூரில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் வெளிப்புற சுவர்களுக்கும், மற்ற மேற்பரப்புகளுக்கு டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணும் பயன்படுத்தப்பட்டிருப்பது வீட்டிற்கு ஒரு மிதமான வெப்பத்தை அளிக்கிறது.
தி மவுன்டன் ஃபோல்ட் - நான்ஷன்லி சமூக மற்றும் பார்வையாளர் மையம், எமி மலை அருகே, சீனா

பட மூலாதாரம், Arch-Exist Photography
லாசிம் ஆர்கிடெக்ட்ஸ் உருவாக்கிய இந்தத் திட்டம், யுனெஸ்கோ உலக கலாசார மற்றும் இயற்கைப் பாரம்பரிய தளமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள எமி மலையின் தெற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. சீனாவின் நான்கு புனித பௌத்த மலைகளில் ஒன்றான இந்த மலைக்கு ஆன்மீக முக்கியத்துவம் உண்டு.
அழகிய குவான்ஷான் ஏரியின் எல்லையில் அமைந்துள்ள இந்த மையம், ஒரு தனியார் 'உடல்நலப் பராமரிப்பு' ரிசார்ட்டின் ஒரு பகுதி. எனினும் இது பொது மக்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது. இதில் வரவேற்பறை, சமூக நடவடிக்கைகளுக்கான அறைகள், உடல்நலம் தொடர்பான வசதிகள் மற்றும் உணவருந்தும் பகுதி ஆகியவை உள்ளன.
கூரையின் சிக்கலான வடிவியல் அமைப்பு நிலப்பரப்பின் பல்வேறு கூறுகளைக் குறிக்கிறது. அலை வடிவிலான கூரை, அடிவாரத்தின் வடிவத்தைப் பிரதிபலிக்கிறது, அதன் கூர்மையான முனைகள் மலையின் உச்சிக்கு மரியாதை செலுத்துவது போல் உள்ளன. கூரையின் பளபளப்பான சாம்பல் நிறப் பூச்சு, ஏரியின் மேற்பரப்பில் உள்ள வெள்ளிப் பளபளப்பைப் பிரதிபலிக்கிறது.
கியோரா ரெசிடென்ஸ் - கோகனட் குரோவ், மியாமி, அமெரிக்கா

பட மூலாதாரம், Jeanne Canto
ஸ்ட்ராங் வடிவமைத்த இந்த இரண்டு மாடி வீடு, மியாமியின் பசுமையான புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு செவ்வக அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவை நீச்சல் குளங்களைக் கொண்ட ஒரு பெரிய தோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது வீட்டின் உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்கும் இடையிலான பாலம் போல் இருக்கிறது.
ஜன்னல்கள் வழியாகத் தொங்கும் கொடிச்செடிகள் இந்த அமைப்பை மேலும் அழகாக்குகின்றன. மேல் தளத்தில் குடும்பத்தினருக்கான பொதுவான வசிப்பிடங்களும், கீழ் தளத்தில் தனிப்பட்ட அறைகளும் உள்ளன. அலங்காரமான சாய்வான திறப்புகளைக் கொண்ட ஏராளமான மரத்திரைகள் குளிர்ந்த காற்றை வீட்டிற்குள் பரவச் செய்கின்றன.
சாத்தம் ரெசிடென்ஸ் கெஸ்ட் ஹவுஸ் - கொலம்பியா கவுன்டி, நியூயார்க், அமெரிக்கா

பட மூலாதாரம், Paul Warchol
'தேசாய் சியா ஆர்கிடெக்ச்சர்' வடிவமைத்த இந்த வீடு, விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் ஒரு நிலத்தின் உயரமான பகுதியில் அமைந்துள்ளது.
இதன் உயர்ந்த இடத்தில் இருந்து பார்த்தால், கேட்ஸ்கில் மலைகள் மற்றும் மரங்கள் நிறைந்த கிராமப்புறத்தின் அழகிய காட்சிகள் தெரிகின்றன. முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள அகலமான ஜன்னல்கள் மலைகளின் விரிவான தோற்றத்தைக் காட்டுகின்றன.
வீட்டின் முன்புற மேல்பகுதியில் நெளி உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன பண்ணைக் கட்டடங்களில் இந்த உலோகம் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாலேயே இது ஒரு பகுதியாகத் தேர்வு செய்யப்பட்டது.
இஎஸ் ஹவுஸ் - குவாருஜா, சாவோ பாலோ, பிரேசில்

பட மூலாதாரம், Fernando Guerra
சுற்றியுள்ள காட்டுப் பகுதியோடு ஒன்றிணைந்த ஒரு வீடு வேண்டும் என்பதே ஜேக்கப்சன் ஸ்டூடியோவின் வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருந்தது. அடர்ந்த, பசுமையான தாவரங்களின் பின்னணியில் இந்தக் கட்டடம் மிதப்பது போலத் தோன்றுகிறது.
ஒரு மரம் போன்ற அமைப்பே இந்த வீட்டைப் பெரும்பாலும் தாங்கி நிற்கிறது. இதனால் நிலத்துடனான இதன் தொடர்பு குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் பார்வையில் படாமல் மறைந்தே இருக்கும். வீட்டின் பின்னாலுள்ள ஒரு வீதியின் வழியாகச் சென்று, தோட்டமாகச் செயல்படும் வீட்டின் மேற்கூரை வழியாகவே உள்ளே நுழைய முடியும்.
தி ஹங்க்ரி கேட்டர்பில்லர் பெவிலியன் - அசோகா பல்கலைக்கழகம், டெல்லி, இந்தியா

பட மூலாதாரம், Avesh Gaur and Sohaib Ilyas
இது ஒரு நகர்ப்புறத் திட்டம் என்றாலும், அழகியலின் அடிப்படையில் முற்றிலும் இயற்கையானதாக உள்ளது. 'லித் டிசைன்' கட்டடக் கலைஞர்களுக்கான குறிக்கோள், தனித்துவமிக்க ஒரு வீதியை உருவாக்குவதாகும்.
அவசரமாக உணவை வாங்கிச் செல்வதைத் தாண்டி, மாணவர்கள் அங்கு நேரம் செலவிட விரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
வீதியில் ஆங்காங்கே உள்ள தனித்தனி தொகுதிகளில் இருந்து உணவு பரிமாறப்படுகிறது. அதிக நிலைத்தன்மை கொண்ட மூங்கிலால் செய்யப்பட்ட, சுழன்று உயரும் சூறாவளி போன்ற அமைப்புகள் (வேடிக்கையாக ஒரு கம்பளிப் பூச்சியுடன் ஒப்பிடப்படுகின்றன) வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸை எட்டும்போது மிகவும் தேவையான நிழலையும், கோடைப் பருவமழையின்போது பாதுகாப்பையும் அளிக்கின்றன.
மெர்காடோ நிக்கோலஸ் பிராவோ - கின்டானா ரூ, மெக்சிகோ

பட மூலாதாரம், Andrés Cedillo
இந்தக் கைவினைப் பொருட்களின் சந்தை, அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயல்படும் ஒரு திட்டம். அருகிலுள்ள மாயன் (Mayan) தொல்பொருள் ஆய்வுத் தளங்களை ஆராய வரும் பார்வையாளர்களுக்குக் கைவினைப் பொருட்கள் மற்றும் புதிய விவசாய விளைபொருட்களை விற்க உள்ளூர் சமூகம் இதைப் பயன்படுத்துகிறது.
கின்டானா ரூ மாநிலத்தில் உள்ள நிக்கோலஸ் பிராவோ நகராட்சியில் அமைந்துள்ள, ஐடியா ஸ்டூடியோவின் இந்தத் திட்டம் ஒரு சமூக மையமாகவும் செயல்படுகிறது. குறைந்த எடையுள்ள எஃகு அமைப்பு, வண்ணமூட்டப்பட்ட கான்கிரீட் தொகுதிச் சுவர்கள் மற்றும் கூரைக்கும் நடைபாதைக்கும் பதிக்கப்பட்டுள்ள களிமண் செங்கற்கள் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளை இது கொண்டுள்ளது.
நேர்த்தியாக வளைக்கப்பட்ட இதன் மேற்கூரை, பாசனத்திற்குத் தேவையான நீரைச் சேகரிக்கிறது. மேலும், இந்தக் கட்டடத்தில் இருந்து அருகிலுள்ள கிராமப்புற நிலப்பரப்பை முழுமையாகக் காண முடியும்.
பார்கே கின்டானா ரூ - செட்டுமல், மெக்சிகோ

பட மூலாதாரம், Andrés Cedillo
இந்தப் பூங்கா, ஐடா ஸ்டூடியோ வடிவமைத்த அரசு நிதியுதவி பெறும் மற்றொரு திட்டமாகும். இந்த இடத்தில் ஆண்டுதோறும் கால்நடை மற்றும் விவசாயக் கண்காட்சி நடைபெறும்.
இது இப்போது இசை நிகழ்ச்சிகளுக்கான இடமாகவும், கேளிக்கை சவாரிகள் மற்றும் கைவினை சந்தைகளைக் கொண்ட தளமாகவும் உள்ளது. 10 ஹெக்டேர் பரப்பளவிலான இந்தக் கண்காட்சி மைதானம் மிதவெப்ப மண்டலக் காடுகளால் சூழப்பட்டுள்ளது.
சுற்றியுள்ள காடுகளோடு இந்தப் பூங்காவை ஒருங்கிணைக்கும் வகையில், மெல்லிய ஆலிவ்-பச்சை நிறத் தூண்கள் மற்றும் அலை வடிவிலான மர வேலைப்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
ஸ்டோங் தங்குமிடம் - ஸ்டோங் ஈ தியோர்சார்தல், ஐஸ்லாந்து

பட மூலாதாரம், Studio CAPN
ஸ்பி(ர்)இன்ட் ஸ்டூடியோ உருவாக்கிய இந்தத் திட்டம் இரு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எரிமலைச் சாம்பலுக்கு அடியில் புதையுண்டு பாதுகாக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டு வைக்கிங் கால பண்ணையின் இடிபாடுகளை இது பாதுகாக்கிறது. இது ஐஸ்லாந்தின் மிகவும் மதிப்புமிக்க தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும்.
அத்துடன், பதப்படுத்தப்படாத லார்ச் மரம், துத்தநாகம் பூசப்பட்ட எஃகு மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பாலிகார்பனேட் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு பெரிய தங்குமிடத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தளத்தை அது விரிவுபடுத்துகிறது.
ஒரு காலத்தில் இந்த இடிபாடுகளைப் பாதுகாத்து வந்த, ஆனால் மோசமான நிலையில் இருந்த பழைய மரச் சட்டகம் ஒன்று அப்படியே தக்க வைக்கப்பட்டு, வலுப்படுத்தப்பட்டு, திட்டத்தின் முக்கியக் கட்டமைப்பாகப் பயன்படுத்தப்பட்டது.
நிலப்பரப்புக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தரையில் இருந்து உயர்த்தி அமைக்கப்பட்ட பார்வையாளர் தளங்கள் மற்றும் உட்காரும் பகுதி உள்ளிட்ட புதிய வசதிகள் இந்தத் தங்குமிடத்தில் இப்போது உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































