வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காதது ஏன்? பயிற்சியாளர் கம்பீர் பேட்டி

பட மூலாதாரம், Getty Images
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பொறுமையாக இருக்க வேண்டும் என்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
தனது வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். டி20 கிரிக்கெட்டில், இந்திய அணி தற்போது டாப் ஆர்டரில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது.
வியாழக்கிழமை டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு கம்பீர் இந்தச் செய்தியைத் தெரிவித்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியிலும் சூர்யவன்ஷி இந்தியாவின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையில், மூன்றாவது போட்டியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் மூன்றாவது அதிவேக சதத்தை அடித்து சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 127 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தொடர் முழுவதும்அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனை தொடக்க வீரர்களாக கம்பீர் களமிறக்கினார். அவர்கள் இருவருமே சிறப்பாக செயல்பட்டனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன் எடுத்த முதலிரு வீரர்களாகவும் அவர்கள் இருந்தனர்.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
இதனால், சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்னும் சில காலம் தொடரக்கூடும் என்பதை பயிற்சியாளர் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் கூறுகையில், "வைபவ் சூர்யவன்ஷி தொடர்பாக எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருந்தது. அவர் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அவரிடம் எவ்வளவு திறமை இருக்கிறது, அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு வீரர், தற்போது அணிக்கு வந்துள்ள ஒரு வீரரை விட முன்னிலையில் இருப்பார்," என்றார்.
கம்பீர் மேலும் கூறுகையில், "வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கும் போது, தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கும். இந்திய கிரிக்கெட்டில் இதுதான் நடக்கிறது.
அணியில் போட்டியையும் திறமையையும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், கிரிக்கெட் இப்படித்தான் செயல்படுகிறது. உங்களுக்கு 15 வயதாக இருந்தாலும் சரி, 30 வயதாக இருந்தாலும் சரி, உங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நீங்கள் காத்திருக்கவே செய்ய வேண்டும்" என்றார்.
சூர்யவன்ஷி அட்டகாசமான தொடக்கம்

பட மூலாதாரம், Jekesai NJIKIZANA/AFP via Getty Images
இந்திய சீனியர் அணியில் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் நம்பிக்கையளிக்கும் தொடக்கத்தைப் பெற்றுள்ளார்.
ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானது முதல் இதுவரை ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளில் தொடக்க வீரராக அவர் களமிறங்கியுள்ளார். அவர் இரண்டு அரைசதங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் - சாம்சன் சிறப்பாக செயல்பட்டதாக கம்பீர் கூறினார். எனவே, தங்களது கூட்டணியை வலுப்படுத்த அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது இயல்பான ஒன்று என்றும் அவர் கூறினார்.
மேலும், "இந்தத் தொடருக்கு முன்பே, என்னுடைய தரப்பில் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருந்தது. டி20 உலகக் கோப்பையில் பயன்படுத்திய அதே கூட்டணியை மீண்டும் கொண்டுவர விரும்பினோம். ஏனெனில், மூன்று அல்லது நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துவிட்டதால் மட்டும் ஒரு வீரர் மோசமான வீரராகிவிடமாட்டார்" என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் சூர்யவன்ஷி இடம்பிடித்தார். ஐபிஎல் தொடரிலும், அதன் பின்னர் இலங்கை சுற்றுப்பயணத்திலும் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
எனினும், இரு தொடர்களிலும் பெரும்பாலான போட்டிகளில் அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.
இந்தியா அந்த இரு தொடர்களிலும் தோல்வியடைந்தது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணி நிர்வாகம் உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை என்று இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்களும் நிபுணர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































