'பெண்கள் ஜிம் செல்ல இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை' - கோவையில் முஸ்லிம் பெண்களுக்கென ஜிம்

''ஒரு பையன் ஜிம்முக்குப் போவதாகக் கூறினால் உடனே அதற்கு கொடுக்கப்படும் 'சம்மதம்', ஒரு பெண் போவதாகச் சொன்னால் உடனே வருவதில்லை. பொதுவாக ஜிம் என்றாலே அது ஆண்களுக்கான ஃபிட்னஸ் பயிற்சி இடம் என்ற தவறான கருத்து, சமூகத்தில் இருக்கிறது. அது பெண்களுக்கும் உரித்தானது. அதேபோன்று இஸ்லாம் மதமும் இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்கிறார் 3 குழந்தைகளுக்குத் தாயான ராஷிதா.
''எனக்கு 3 பிரசவங்களுமே சிசேரியன். அதனால் அதிக எடை தூக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இங்கே எனக்கு நல்ல பயிற்சி கொடுத்தனர். வரும்போது 78 கிலோ இருந்தேன். இப்போது 13 கிலோ எடை குறைத்துள்ளேன்.
முதலில் நடைபயிற்சிக்கு போவதாக வீட்டில் கூறிவிட்டு ஜிம் வந்தேன். ஏதாவது சாதித்துவிட்டுதான் சொல்ல வேண்டுமென்ற உறுதி இருந்தது. இங்கே ஸ்கிப்பிங் போட்டியில் முதல் பரிசு பெற்ற பின்பு, ஜிம்முக்குப் போவதைச் சொன்னேன். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டனர்" என்கிறார் கோவையைச் சேர்ந்த ஹசீனா.
இவர்களைப் போலவே கோவை சாரமேடு பகுதியில் இஸ்லாமிய பெண்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் உடற்பயிற்சிக் கூடத்தில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள், தினமும் பயிற்சி பெறுகின்றனர். இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு நேரில் சென்ற பிபிசி தமிழ், அங்கிருந்த பெண்களிடம் கலந்துரையாடியது.
இஸ்லாமியப் பெண்களின் உடல் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடனே இயங்கி வரும் இந்த உடற்பயிற்சிக் கூடம் துவக்கப்பட்டதன் பின்னணியும் அதை நடத்தி வரும் பெண்ணின் அனுபவமும் மிகவும் அலாதியானது.
'உடல் எடையை குறைக்கச் சென்றவர் துவக்கிய உடற்பயிற்சி கூடம்'
கோவை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ஷபானா என்பவர்தான் கடந்த 9 மாதங்களாக, இஸ்லாமிய பெண்களுக்கென பிரத்யேகமாக இந்த உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகிறார். திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பின்பு, உடல் எடையைக் குறைக்கச் சென்று, அதே ஜிம்மில் பெண்களுக்கான பயிற்றுநராக மாறிய ஷபானா, தங்கள் பகுதியிலுள்ள இஸ்லாமியப் பெண்களுக்காக பிரத்யேகமாக இதைத் துவக்கியதாகச் சொல்கிறார்.
''நான் ஏழாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். எனக்கு 19 வயதில் திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பின்பு சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் உடல்ரீதியாக எனக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டன. எடை மிகவும் அதிகமாகிவிட்டது. உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டுமென்றுதான் எங்கள் பகுதியில் ஜிம் தேடியபோது எதுவுமே இல்லை. பின்பு ஒரு ஜிம்மில் சேர்ந்து அங்கேயே பெண்களுக்கான டிரெயினராக மாறினேன்!'' என்று விவரித்தார் ஷபானா.
''அதன்பின்பு நான் எங்கள் பகுதியிலேயே பெண்களுக்கென தனியாக ஜிம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது, நான் வேலை பார்த்த ஜிம் உரிமையாளர் ஜெயகாந்த், என்னுடைய பயிற்றுநர் ஹர்ஷத் இரண்டு பேருமே மிகவும் ஊக்கப்படுத்தினர். அவர்களுடைய ஊக்கத்தால்தான் நான் 'வெயிட் லிஃப்டர்' ஆனேன். அவர்களிடம் ஆலோசனை கேட்டபோது, கட்டாயம் துவக்குங்கள் என்று ஊக்கப்படுத்தினர்.'' என்றார்.

கடந்த ஐந்தாண்டுகளாக பளு தூக்கும் பயிற்சி பெற்று, மாநில அளவில் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார் ஷபானா. தற்போது பளு தூக்கும் ஆண் வீரர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கான தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்றிருப்பதாக அவர் கூறினார்.
தன் கணவர் கபீர், பிளஸ் 2 படிக்கும் மகள், 9 ஆம் வகுப்புப் படிக்கும் மகன் எல்லோருமே தன்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தி எல்லாப் பணிகளையும் இணைந்து செய்ததால்தான் இந்த உடற்பயிற்சிக் கூடத்தைத் துவக்கி வெற்றிகரமாக நடத்த முடிவதாகக் கூறினார் ஷபானா. துவக்கிய புதிதில் இதற்கு எதிர்ப்புகள் எழுந்ததுடன், இங்கு வருவதற்கு பெண்கள் தயங்கியதையும் அவர் விவரித்தார்.
''இந்த உடற்பயிற்சிக் கூடத்தைத் துவக்கியபோது, பலவிதமாக எதிர்ப்புகள் கிளம்பின. ஊடகத்தில் இந்தத் தகவல் வெளியானபோது மோசமாக, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கமெண்ட்கள் வந்தன. ஒரு கட்டத்தில் இதை நடத்த வேண்டாமென்று முடிவு எடுத்தோம். அதன்பின்புதான் நம்மைப் பழிக்கிற 4 பேருக்காக எதற்கு நம் முயற்சியை கைவிட வேண்டுமென்று நினைத்தேன். அவர்களுக்கு முன்பாக ஜெயித்துக் காட்ட வேண்டுமென்று நினைத்துதான் இந்த ஜிம்மை நடத்திக் கொண்டிருக்கிறேன்.'' என்றார் ஷபானா.
''ஒரு பெண்ணால் ஜிம் நடத்த முடியாது என்று பலர் முட்டுக்கட்டை போட்டனர். சிலர் பெண்களுக்கு எதற்கு ஜிம். அவர்கள் வீட்டு வேலை செய்து, குழந்தைகளைப் பார்த்தாலே நன்றாக ஆரோக்கியமாக இருப்பார்களே என்றெல்லாம் பேசினார்கள். முதலில் 20 பெண்கள்தான் வந்தார்கள். சில குடும்பங்களில் கணவரே மனைவியைக் கொண்டு வந்து விட்டார்கள். அதன் பின்புதான் கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் நம்பிக்கை பெற்று வரத்துவங்கினர்.'' என்று விவரித்தார் ஷபானா.

இப்போது காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, இரண்டு மணி நேரம் வீதமாக 6 பிரிவுகளாக பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் சராசரியாக 50 பெண்கள் வரை, மொத்தமாக 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் இங்கு தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பெண்கள், எடை குறைப்புக்காக இங்கு வந்து, இப்போது உடலை உறுதிப்படுத்தும் பயிற்சியில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
பிபிசியிடம் பேசிய ராஷிதா, ''பொதுவாக ஜிம் என்றாலே அது ஆண்களுக்கான இடம் மட்டுமே என்ற தவறான கருத்து சமூகத்தில் இருக்கிறது. ஒரு பையன் ஜிம்முக்குப் போவதற்கு உடனே ஒப்புக்கொள்கிற வீட்டில் பெண் போவதாகச் சொன்னால் உடனே அனுமதிப்பார்களா என்பது சந்தேகம் தான். இஸ்லாம் இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆனால் சமூகத்தில் இது பெண்களுக்குத் தேவையா என்கிற கேள்வி இருக்கிறது. ஆரோக்கியமான பெண், ஆரோக்கியமான குடும்பம் என்பார்கள். ஜிம் என்பதை உடற்பயிற்சிக்கான ஓரிடம் மட்டுமின்றி, ஒரு மகிழ்ச்சிக்குரிய இடமாகவும் நான் பார்க்கிறேன்.'' என்றார்.
''என்னைப்போல வீட்டிலுள்ள பெண்களுக்கு இங்கே வருவது, உடல் நலத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. வீட்டு வேலைகளை முடித்து விட்டு இங்கு வரும்போது இது எனக்கு இன்னொரு வீடாகத் தெரிகிறது. இங்கே நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். இதே ஜிம் வெளியிலிருந்தால் போக முடியுமா என்று தெரியாது. எங்கள் பகுதியிலேயே இருப்பதால் இது வசதியாகவுள்ளது.'' என்றார் ராஷிதா.
ஜிம் செல்வதால் பெண்களுக்கு கிடைத்த பலன்கள் என்னென்ன?

இங்கு பயிற்சிக்கு வந்த 3 மாதங்களில் 7 கிலோ எடை குறைத்ததாகச் சொல்கிறார் 3 குழந்தைகளுக்குத் தாயான ராஷிதா. வரும்போது 78 கிலோ எடையில் இருந்த தான், இங்கு வந்த பின்பு 13 கிலோ எடையைக் குறைத்திருப்பதாகக் கூறினார் ஹசீனா. இவர்களைப் போலவே வேறு சில பெண்களும் தங்களின் எடை குறைந்து உடலும் மனதும் உறுதியாக இருப்பதாக கூறினர்.
இல்லத்தரசியான தனக்கு இங்கு வரும் வரை, உணவுமுறை பற்றி எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்ததாக ரஹீஜா ஷாஜகான் கூறினார்.
''எங்களை மாதிரி பெண்கள், வீட்டு வேலையில எங்களுடைய ஆரோக்கியத்தைப் பார்க்கவே மாட்டோம். பசிக்கு ஏதோ சாப்பிடுவோமே தவிர, அதில் புரோட்டீன் இருக்கிறதா, ஃபைபர் இருக்கிறதா என்று தெரியாது. இங்கு வந்த பின்புதான் உணவில் இவ்வளவு விஷயம் இருப்பதே தெரியவந்தது. இயற்கையான உணவில் எதில் என்ன சத்து இருக்கிறது என்று பயிற்றுநர் சொல்லித் தருகிறார். அதை நாங்கள் கடைபிடிக்கிறோம்.'' என்கிறார் ரஹீஜா.
ஐ.டி. ஊழியரான மரியம் ஃபர்ஹானா பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இங்கு வந்தபின்பு, உடல்ரீதியாக பலன் கிடைத்ததுடன் ஒரு நேர்த்தியான வாழ்க்கை முறை, ஒழுங்காக ஒரு விஷயத்தைச் செய்வது, நேரம் கடைபிடிப்பது என பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு விஷயத்தில் சிரத்தையுடன் கவனம் சிதறாமல் இருப்பது, மனதிற்குள் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.'' என்றார்.
''பள்ளி, கல்லூரி மாணவிகள் துவங்கி 60 வயதான பெண்கள் வரை இங்கே வருகின்றனர். அதற்குக் காரணம் இங்கே நாங்கள் உணர்கிற சுதந்திரம் தான். இங்கே 300-க்கும் அதிகமான இஸ்லாமியப் பெண்கள் வருகின்றனர். எங்களைப் பார்த்து இன்னும் பல இஸ்லாமியப் பெண்கள் தயக்கமின்றி வரவேண்டுமென்பதே எங்கள் விருப்பம்.'' என்றார் மரியம் ஃபர்ஹானா.
வீட்டில் சொல்லாமலேயே ஜிம்முக்கு முதலில் வந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் ஹசீனா.
''முதலில் தயக்கம் இருந்தது. வீட்டில் நடைபயிற்சிக்கு போவதாகச் சொல்லிவிட்டுத்தான் நான் ஜிம்முக்கு வந்தேன். எனக்கு உடல் எடை ஒரு பிரச்னையாக இருந்தது. இங்கே வந்த பின்புதான் மிக எளிதான உடற்பயிற்சிகளிலேயே என் எடையைக் குறைக்க பயிற்றுநர் பெரிதும் உதவியாக இருந்தார். இங்கே ஸ்கிப்பிங் போட்டி வைத்தனர். ஏதாவது சாதித்த பின்பே சொல்ல வேண்டுமென்று நினைத்த நான் ஸ்கிப்பிங் போட்டியில் முதல் பரிசு வாங்கிய பின்பே வீட்டில் பரிசுடன் விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சி.'' என்றார் ஹசீனா.

உடற்பயிற்சிக்கு வந்தபின்பு, தங்களுக்கு இருந்த பல்வேறு உடல் உபாதைகள் குறைந்திருப்பதாக பிபிசியிடம் பலரும் கூறினர்.
''எனது வீடு மூன்றாவது மாடியில் இருக்கிறது. மாடிப்படி ஏறும்போது மிகவும் மூச்சு வாங்கும். மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது அந்த பிரச்னை இல்லை. எட்டில் இருந்து 10 கிலோ வரை எடை குறைந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்றார் ரஹீஜா ஷாஜகான்.
பள்ளி ஆசிரியரான ஷாகிதா, ''எனக்கு தண்டுவடப் பிரச்னை இருந்தது. அதனால் என்னை அதிக எடை தூக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கேற்ப எனக்கு உடற்பயிற்சிகளை ஷபானா கற்றுத்தந்தார். அது எனக்குக் கொடுத்த பலத்திலும் நம்பிக்கையிலும் இப்போது நான் சிலம்பப் போட்டியில் சாதனை படைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த ஜிம்மும் எனது பயிற்றுநரும் தான்.'' என்றார்.
ஐ.டி. நிறுவன ஊழியரான ஷபீனா, ''நான் ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதால் மனஅழுத்தம் அதிகமாக இருந்தது. இங்கே வந்தபின்பு உடலும் மனதும் ரிலாக்ஸ் ஆனதை உணரமுடிந்தது. ஒரு தாயாக என்னால் இப்போது வீட்டையும், வேலையையும் சமமாகச் செய்வதற்கு இந்த உடற்பயிற்சி பேருதவியாக இருந்தது.'' என்றார்.
''இங்கே பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பது ஒரு சாதகமான விஷயமாகத் தெரிகிறது. வேலை நேரம் மாறினாலும் எந்த நேரத்திலும் வந்து இங்கே உடற்பயிற்சி செய்யலாம் என்கிற சுதந்திரமும் மிக வசதியாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள், குடும்பத்திற்காகவே தங்கள் முழு வாழ்வையும் அர்ப்பணிக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் தங்களுக்கும் நேரம் ஒதுக்கி, இதுபோல உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது ஒரு நல்ல மாற்றத்தைத் தரும். அதற்கு அவர்கள்தான் ஒரு சிறு அடி எடுத்து வைக்க வேண்டும்.'' என்றார் ஷபீனா.
குடும்பத்தினரின் ஆதரவு எப்படியிருக்கிறது?

ஷாகிதா உட்பட பல பெண்கள், அதிகாலை 5 மணிக்கு இங்கு பயிற்சி பெற வருகின்றனர். அவர்கள் அனைவரையும் காலை 4 மணியிலிருந்து தினமும் எழுப்பிவிடுவதும் ஷபானா தான் என்ற தகவலையும் பலரும் பகிர்ந்தனர். பிபிசியிடம் பேசிய பெண்கள் பலரும், ஜிம்முக்கு தினமும் வருவதற்கு தங்கள் குடும்பத்தினரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதுபற்றி பேசிய பள்ளி ஆசிரியர் ஷாகிதா, ''இங்கு வருபவர்களில் குடும்பத்தினரின் ஆதரவு என்று பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருக்கும். எனது வீட்டில் என்னை ஜிம்முக்கு போகச் சொல்லி முதலில் ஊக்கம் கொடுத்தது எனது கணவர்தான். பல நாட்கள் என்னை எழுப்பிவிடுவது அவர்தான். 3 மாதங்களுக்கு முன்பு எனது மாமியார் ஒரு நாள் காலையில் என்னை எழுப்பிவிட்டு 'நீ ஜிம்முக்கு கிளம்பவில்லையா?' என்று கேட்டபோது எனக்குள் அப்படி ஒரு சந்தோஷம்!'' என்றார்.
இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெறும் இஸ்லாமியப் பெண்கள் பெரும்பாலானவர்கள் புர்கா, ஹிஜாப் அணிந்த நிலையிலேயே பயிற்சி பெறுகின்றனர். பயிற்றுநரும் புர்கா அணிந்தபடியே பயிற்சியளித்ததைப் பார்க்க முடிந்தது.
இதுகுறித்துப் பேசிய ரஹீஜா ஷாஜகான், "பெண்கள் மட்டுமே இருப்பதால் இங்கே உடற்பயிற்சிக்கான உடையணிந்தும் பயிற்சி பெறமுடியும். நாங்கள் எங்களுடைய வசதிப்படியே உடற்பயிற்சி செய்கிறோம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை'' என்றார்.
இஸ்லாமியப் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடமாக இதைத் துவக்கியிருந்தாலும், வேறு மதங்களைச் சேர்ந்த சில பெண்களும் இங்கு உடற்பயிற்சி பெற்று வருவதாக ஷபானா தெரிவித்தார். இத்தனை பெண்கள் வந்து, உடல்ரீதியாக நல்ல மாற்றங்களைக் கண்டுள்ள நிலையிலும், தான் இன்னும் உருவக்கேலிக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்தார் ஜிம் உரிமையாளரும் பயிற்றுநருமான ஷபானா.
''இங்கு வந்து என்னைப் பார்க்கும் பலரும், ட்ரெயினரே இவ்வளவு உடல் எடையுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்னால் இதற்கு மேலும் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் நான் ஒரு வெயிட் லிஃப்டர். நான் இந்த உடல் எடையைக் கொண்டே இதற்கான பயிற்சிகளைப் பெற்றேன். பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன். இன்னும் பல வெற்றிகளை பெறுவேன் என்றும் நம்புகிறேன்.'' என்றார் ஷபானா.
ஒரே நேரத்தில் எல்லோரும் உபகரணங்களில் பயிற்சி மேற்கொள்ள இடவசதியும், உபகரணங்களும் இல்லை என்கிறார் ஷபானா. டிரெட்மில், பேட்டில் ரோப்ஸ், ஸ்டேஷனரி பைக், டம்பள்ஸ் உள்ளிட்ட அடிப்படையான சில உபகரணங்களைத் தவிர, அதிநவீன உபகரணங்கள் அதிகம் இல்லாவிடினும் பெரும்பாலான பெண்களுக்கு தரையில் செய்யும் உடற்பயிற்சிகளை அவர் கற்றுத்தருகிறார். உடல் எடை குறைப்புக்கு அத்தகைய உடற்பயிற்சிகள் பெரிதும் பலன் தரும் என்று அவர் கூறினார்.
''இதுவரை 200லிருந்து 300 பெண்கள் தங்களது எடையை குறைப்பதற்கு உதவியிருக்கிறேன். இத்தனைக்கும் என்னுடைய ஜிம்மில் பெரியளவில் உபகரணங்கள் கிடையாது. பெரிய இடத்தில் நிறைய உபகரணங்களுடன் ஜிம்மை விரிவுபடுத்த வேண்டுமென்று ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான பொருளாதார வசதியில்லை. அரசு ஏதாவது வங்கிக்கடனுக்கு உதவினால் நிச்சயமாக இன்னும் பல பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவ முடியுமென்று நம்புகிறேன்.'' என்றார் ஜிம் பயிற்றுநரும் உரிமையாளருமான ஷபானா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































