சர்ச்சைக்குரிய வாழைப்பழக் கலைப்படைப்பின் பின்னணியில் உள்ள பலரும் அறியாத வரலாறு

'டேப் மூலம் ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழம்' - 62 லட்சம் டாலருக்கு விற்பனையான கலைப்படைப்பின் கதை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மேத்யூ வில்சன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

வாழைப்பழத்தை வெள்ளி நிற வலுவான டேப் மூலம் சுவரில் ஒட்டி, அதைக் கலை என அழைத்ததன் மூலம் சமீப காலங்களில் கலை உலகில் மிகப் பெரிய கலாசார சர்ச்சைகளில் ஒன்றை உருவாக்கினார் மவுரிசியோ கட்டெலான். ஆனால், 'காமெடியன்' என அழைக்கப்பட்ட இந்தக் கலைப்படைப்பின் பின்னணியை ஆராயும்போது, கலை உலகில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சர்ச்சையையும் அதிர்ச்சி உத்திகளையும் காண முடிகிறது.

2019-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, அந்த வாழைப்பழம் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட நாளில், ஆர்ட் பாசல் மியாமி பீச் என்ற கலைக் கண்காட்சியில் மிக முக்கிய நபர்கள் பங்கேற்ற தொடக்க நிகழ்வில் லியோனார்டோ டிகாப்ரியோ, மைக்கேல் பே மற்றும் டிராவிஸ் ஸ்காட் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அன்று காலை அந்தப் பிரமாண்டமான கலைக் கண்காட்சியில் எங்கு பார்த்தாலும் லட்சக்கணக்கான டாலர் விலையுள்ள கலைப்படைப்புகள் இருந்தன. ஹெலன் ஃபிராங்கெந்தாலரின் ஓவியம் ஒன்று சுமார் 16.5 லட்சம் டாலருக்கு (இன்றைய மதிப்பில் 21.6 லட்சம் டாலர்) விற்பனையானது. வில்லெம் டி கூனிங்கின் ஓவியம் ஒன்று 80 லட்சம் டாலர் (இன்றைய மதிப்பில் 1.05 கோடி டாலர்) செலவிடத் தயாராக இருப்பவர்களுக்காகக் காத்திருந்தது.

ஆனால், ஆர்ட்நெட் நியூஸ் செய்தியாளர் சாரா காஸ்கோன்-ஐ அன்றைய தினம் மவுரிசியோ கட்டெலானின் புதிய கலைப்படைப்பான, அதாவது டேப்பால் சுவரில் ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் மிகவும் ஈர்த்தது.

அன்று பிற்பகுதியில், காஸ்கோன் இதுகுறித்து முதல் விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டார். அதில், இந்தப் பழத்தை மையமாகக் கொண்ட இரண்டு கலைப்படைப்புகள் தலா 1.2 லட்சம் டாலருக்கு விற்பனையாகிவிட்டதாக குறிப்பிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, மூன்றாவது மற்றும் கடைசி முறையாக அக்கலைப்படைப்பு 1.5 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டது.

அதை வாங்கியவர்களுக்கு அது உண்மையானது தான் என்பதற்கான சான்றிதழும், அதை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டன. அதில், வாழைப்பழத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் ஆர்ட் பாஸல் மியாமி பீச்சில் தோன்றி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் ஆர்ட் பாஸல் மியாமி பீச்சில் தோன்றி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இக்கண்காட்சி நடைபெற்ற காலம் முழுவதும், நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அதை புகைப்படம் எடுத்து, தங்களது கருத்துகளை இணையத்தில் பதிவிட்டனர்.

காட்சிப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே அது இணையத்தில் வைரலானது. கேலி, ஆச்சர்யம், சிரிப்பு என பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றதுடன், டேப்பையும் வாழைப்பழங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மீம்களுக்கென்றே புதிய வகையையும் உருவாக்கியது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முக்கிய ஊடகங்கள் மட்டுமல்லாமல், வலைப்பதிவுகள் மற்றும் யூடியூப் காணொளிகளிலும் அதன் கலைநயம் மற்றும் அறிவுசார் மதிப்பு குறித்து கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. அதை மிகவும் வெறுத்தவர்களே அதைப் பற்றி எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.

தன்னைப் பற்றிய கவனத்தை ஈர்ப்பதே கட்டெலானின் நோக்கமாக இருந்திருந்தால், அது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சமகாலக் கலையில் வேறு சில படைப்புகளால் மட்டுமே செய்ய முடிந்ததை, 'காமெடியன்' சில மணி நேரங்களிலேயே செய்துவிட்டது. கலை உலகம் என்ற எல்லையைத் தாண்டி உலகளவில் அறியப்பட்ட படைப்பாக அது மாறியது.

அதன் புகழ், சந்தை மதிப்பையும் மேலும் உயர்த்தியது. 2024-ஆம் ஆண்டில், மூன்று படைப்புகளில் இரண்டாவது படைப்பு ஏலத்தில் 62.4 லட்சம் டாலருக்கு மறுவிற்பனை செய்யப்பட்டது. இதுவும் மீண்டும் விவாதங்களைத் தூண்டியது. கட்டெலானின் கலைப்படைப்புக்காக இவ்வளவு பணம் செலவிடப்படுவது வீண் என கருத்தாளர்கள் பலர் கடுமையாக விமர்சித்து எழுதினர்.

ஆனால், 'காமெடியன்' குறித்து மக்களை அதிர்ச்சியடையச் செய்த அனைத்தும் ஏற்கெனவே கலை வரலாற்றில் செய்யப்பட்டவை என்பதுதான் இதில் உள்ள முரண். இந்தக் கலைப்படைப்பை சற்று ஆழமாகப் பார்க்கும்போது, பிரச்னையைத் தூண்டும் திறன் கொண்ட ஒரு கலைஞரின் உத்திகளும், சர்ச்சையின் மூலம் புகழ் பெறுவதற்கான நீண்ட பாரம்பரியத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடங்களும் வெளிப்படுகின்றன.

400 ஆண்டுகால நையாண்டி பாரம்பரியம்

கட்டெலான் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று, வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்துவதாகும்.

போட்டிகள் நிறைந்த படைப்புத் துறைகளில் திறமையும் அறிவும் மட்டுமே வெற்றியை உறுதி செய்யாது என்பதை கட்டெலான் வெகு காலத்துக்கு முன்பே புரிந்துகொண்டார். ஆனால், சர்ச்சையை ஏற்படுத்துவது கவனத்தை ஈர்க்கும். அதன் மூலம் அதிகமான பார்வையாளர்களையும், அதிகமான படைப்புகளுக்கான வாய்ப்புகளையும் பெற முடியும்.

கலை வரலாறும் இதை உறுதிப்படுத்துகிறது. 400 ஆண்டுகளுக்கு முன்பே, காரவாஜியோ தனது மத ஓவியங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வன்முறை, பாலியல் பதற்றம் மற்றும் இருமையைப் பயன்படுத்தி தனது காலத்து மக்களிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தினார். இதுவே அவரை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்த காரணிகளில் ஒன்றாக அமைந்தது.

19-ஆம் நூற்றாண்டில் இன்று மிக உயர்வாக மதிக்கப்படும் கலைஞர்களான ஜே.எம்.டபிள்யூ. டர்னர், ஜான் கான்ஸ்டபிள், மானே, மோனே, கோகேன், விஸ்லர் மற்றும் செசான் ஆகியோர் கலை உருவாக்கத்தில் புதிய அணுகுமுறைகளை முன்னெடுத்தனர். அதற்காக அவர்கள் விமர்சகர்களிடமிருந்து கடுமையான கேலியை எதிர்கொண்டனர்.

இதன் விளைவாக, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கலைத்துறையில் புதிய முயற்சிகளும் பொதுவெளியில் எழும் எதிர்ப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற கருத்து அதிகரித்தது.

இது முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் ஆர்ட் பாஸல் மியாமி பீச்சில் தோன்றி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பட மூலாதாரம், Getty Images

சில நவீன கலைஞர்கள் மட்டுமல்லாமல், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களும் தங்களது படைப்புகளில் உண்மையான பரிசோதனைகளுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது அவசியமான ஒன்றாகக் கருதினர்.

வேறு சிலர், விமர்சகர்களிடம் பிரபலமாக இல்லாதிருப்பதே மேதையின் அடையாளம் என்று தவறாகப் புரிந்துகொண்டனர். ஆனால், அது திறமையின்மைக்கான எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.

இரு தரப்பினரும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தனர்: தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள சர்ச்சைக்கு நிகரற்ற சக்தி இருக்கிறது.

இதிலிருந்து கற்றுக்கொண்ட மவுரிசியோ கட்டெலான், கலை உலகில் மக்களைத் தூண்டிவிடும் கலைஞர் என்ற தனது பாத்திரத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வந்தார். மக்களை எரிச்சலடையச் செய்யவும், விவாதத்தைத் தூண்டவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

ஆனால், கட்டெலானின் சர்ச்சையை ஏற்படுத்தும் பாணி அவருக்கு முன்பு இருந்த கலைஞர்களிடமிருந்து மாறுபட்டது. அது கலை உருவாக்கும் செயல்முறை அல்லது கலைக் கோட்பாடு பற்றியது அல்ல.

1999-ஆம் ஆண்டின் 'லா நோனா ஓரா' — விண்கல் தாக்கப்பட்ட போப் இரண்டாம் ஜான் பால் உருவம் மற்றும் 2001-ஆம் ஆண்டின் 'ஹிம்' — அடால்ஃப் ஹிட்லரின் முகத்தைக் கொண்ட, பிரார்த்தனை செய்யும் பள்ளிச் சிறுவனின் உருவம் போன்ற அவரது மிகவும் சர்ச்சைக்குரிய படைப்புகள், உலகம் முழுவதும் அனைவருக்கும் பரிச்சயமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டவை.

பொதுவாகக் கலைக் கண்காட்சிகளுக்குச் செல்லாதவர்கள்கூட அவற்றை உடனடியாக அடையாளம் காண முடியும்.

இந்த இரண்டு கலைப்படைப்புகளையும் புரிந்துகொள்வது கடினமானதோ அல்லது உயர்குடி மக்களுக்கானதோ அல்ல. அவை நகைச்சுவையையும் திறமையாகப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, அதிகாரம் மிக்கவர்களை நையாண்டி செய்யும் வகையிலான முரண்பாட்டு நகைச்சுவை மூலம், செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.

இதன்மூலம், கட்டெலான் கலை வரலாற்றில் நீண்டகாலமாக இருந்து வரும் நையாண்டி பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறார். ஜேம்ஸ் கில்ரே (1756–1815), ஒனோரே டோமியே (1808–1878) போன்ற முன்னோடிகள் அனைவருக்கும் நன்கு தெரிந்த நிறுவனங்களையும் அமைப்புகளையும் இலக்காகக் கொண்டு, அவற்றின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கி கேலிச்சித்திரமாக சித்தரித்தனர்.

கட்டெலானின் மிகவும் சர்ச்சைக்குரிய கலைப்படைப்புகளில், அடால்ஃப் ஹிட்லரின் முகத்தைக் கொண்ட, பிரார்த்தனை செய்யும் ஒரு பள்ளிச் சிறுவனின் உருவமான 2001-ஆம் ஆண்டின் 'ஹிம்' (Him) என்பதும் அடங்கும்

பட மூலாதாரம், Attilio Maranzano

படக்குறிப்பு, கட்டெலானின் மிகவும் சர்ச்சைக்குரிய கலைப்படைப்புகளில், அடால்ஃப் ஹிட்லரின் முகத்தைக் கொண்ட, பிரார்த்தனை செய்யும் ஒரு பள்ளிச் சிறுவனின் உருவமான 2001-ஆம் ஆண்டின் 'ஹிம்' (Him) என்பதும் அடங்கும்

1999-ஆம் ஆண்டின் 'எ பெர்ஃபெக்ட் டே' படைப்பில், கட்டெலான் குறிவைத்தது கலைப்படைப்பு அல்ல; கலைச் சந்தையையே.

சுவரில் ஒரு கலைப்படைப்பை மாட்டுவதற்குப் பதிலாக, தனது மிலான் நகர கலை விற்பனையாளரான மாசிமோ டி கார்லோவை டேப்பால் சுவரில் ஒட்டிவைத்தார் கட்டெலான். கலைப்படைப்புக்குப் பதிலாக விற்பனையாளரே காட்சிப் பொருளாக மாறினார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு காட்சிப்படுத்தப்பட்ட 'காமெடியன்' படைப்பிலும் அதேபோன்ற வெள்ளி நிற டேப் பயன்படுத்தப்பட்டது. கட்டெலானின் முந்தைய படைப்புகளை அறிந்தவர்களுக்கு, 'எ பெர்ஃபெக்ட் டே' போலவே 'காமெடியன்' படைப்பும் ஆர்ட் பாசல் மியாமி பீச் போன்ற கலை உலக நிகழ்வுகளின் மதிப்பீடுகளை கேலி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்பதை இந்தத் தேர்வு உணர்த்தியது.

ஒரு ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞர் குறிப்பிட்ட ஒரு துறையை நோக்கி நக்கலான ஒரு வரியை வீசுவது போன்ற அணுகுமுறையாக அது இருந்தது.

'பழமையின் அதிர்ச்சி'

ஏன் வாழைப்பழத்தை அவர் தேர்ந்தெடுத்தார்?

அதன் இரட்டை அர்த்தத்தைத் தரக்கூடிய வடிவமும், செய்கைகளின் மூலம் உருவாக்கப்படும் ஸ்லாப்ஸ்டிக் வகை நகைச்சுவையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதும் ஒருபுறம் இருக்க, கட்டெலானுக்கு முன்பே பல கலைஞர்கள் வாழைப்பழத்தைத் தங்கள் படைப்புகளில் பயன்படுத்தியுள்ளனர். ஜியோர்ஜியோ டி கீரிகோ, ஆண்டி வார்ஹோல் மற்றும் கெரில்லா கேர்ள்ஸ் உள்ளிட்ட பலர் வாழைப்பழங்களைத் தங்கள் படைப்புகளில் சித்தரித்துள்ளனர்.

பல நிலைகளிலும் அது அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பொருள்.

உணவுப் பொருளையே ஒரு கலைப்படைப்பாகக் காட்டுவது என்ற கருத்தும் பார்வையாளர்களுக்கு புதிதானதல்ல. இதற்கு 1500-களில் இருந்தே நிலையான, ஆனால் உயர்ந்ததாகக் கருதப்படாத கலை வகையாக இருந்து வரும் 'ஸ்டில் லைஃப் எனப்படும் நிலையான பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஓவியக்கலையில் நீண்ட வரலாறு உள்ளது.

பாரம்பரியமாக, இதுபோன்ற கலைப்படைப்புகள் இயற்கை வாழ்வின் குறுகிய காலத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பிறகும் கலை எவ்வாறு ஒன்றை நிலைத்திருக்கச் செய்ய முடியும் என்பது பற்றியும் பார்வையாளர்களைச் சிந்திக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டன.

இதற்கு ஓர் உதாரணம் ஜாகோபோ டி பார்பரியின் 1501-ஆம் ஆண்டு 'ஸ்டில் லைஃப் வித் பார்ட்ரிட்ஜ் அண்ட் கௌண்ட்லெட்ஸ்' ஓவியம். பாரம்பரிய கலை வரலாற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தின் தொடக்ககால 'ஸ்டில் லைஃப்' ஓவியங்களில் இதுவும் ஒன்று.

டி பார்பரியின் படைப்பும் கட்டெலானின் படைப்பும் 500 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் உருவாக்கப்பட்டவை என்றாலும், இரண்டிலும் அடிப்படையில் ஒரே செயலைக் காணலாம்: பார்வையாளர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக ஒரு பொருளைச் சுவரில் வைப்பது.

இங்கே கட்டெலான் பயன்படுத்துவது 'பழமையின் அதிர்ச்சி' என்ற உத்தி.

'எ பெர்ஃபெக்ட் டே' (1999) படைப்பில், கட்டெலான் தனது மிலான் நகர கலை விற்பனையாளரான மாசிமோ டி கார்லோவை டேப்பால் சுவரில் ஒட்டிவைத்தார்

பட மூலாதாரம், Photo Armin Linke

படக்குறிப்பு, 'எ பெர்ஃபெக்ட் டே' (1999) படைப்பில், கட்டெலான் தனது மிலான் நகர கலை விற்பனையாளரான மாசிமோ டி கார்லோவை டேப்பால் சுவரில் ஒட்டிவைத்தார்

ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், 'காமெடியன்' படைப்பு, உண்மையான வாழைப்பழத்தைக் காட்சிப்படுத்துகிறது. அது சுமார் ஏழு நாட்களில் அழுகிவிடும். ஆனால், இங்கும் கட்டெலானுக்கு முன்பே ஒரு பாரம்பரியம் இருந்தது.

'ஆயத்தக் கலைப்பொருள்' எனப்படும், கலைஞரால் உருவாக்கப்படாத, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பொருட்களை கலைப்படைப்பாக முன்வைக்கும் யோசனை, 'காமெடியன்' உருவாக்கப்பட்டபோது 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானதாக இருந்தது.

இந்த முறையின் மிகவும் புகழ்பெற்ற முன்னோடி மார்செல் டுசாம்ப். 1910-களிலேயே பாட்டில் அடுக்குகள், சைக்கிள் சக்கரங்கள் மற்றும் சிறுநீர் கழிக்கும் தொட்டி போன்ற அன்றாடப் பொருட்களை கலைப்படைப்புகளாக அவர் காட்சிப்படுத்தினார்.

ஆனால், 'கலை' என்ற வகையின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற டுசாம்பின் நோக்கம்கூட, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் முன்வைத்த விதத்தில் தீவிரமானதாக இருந்தபோதிலும், முற்றிலும் புதிய விவாதம் அல்ல.

அந்த விவாதத்தின் வேர்கள் பண்டைய கிரேக்க தத்துவத்தில், குறிப்பாக பிளேட்டோவின் (கி.மு. 428–347) சிந்தனைகளில் காணப்படுகின்றன.

எனவே, 'ஆயத்தக் கலைப்பொருள்' என்ற முறையைப் பயன்படுத்துவது கட்டெலானின் விஷயத்தில் ஒரு பழமையான உத்தியாகவே இருக்கிறது. அது கலை வரலாற்றின் வரம்புகளுக்குள்ளேயே உள்ளது.

'காமெடியன்' படைப்பு தொடக்கத்திலிருந்தே பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

61 வயதுக்குள், தந்திரமான மவுரிசியோ கட்டெலான், ஒரு வாழைப்பழம், ஒரு சுவர் மற்றும் சிறிது டேப்பைக் கொண்டு விவாதத்தையும் ஆச்சரியத்தையும் உருவாக்கக்கூடிய கலை உலகின் திறமையான சர்ச்சையைத் தூண்டுபவராக மாறியிருந்தார்.

ஆனால், அதன் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி மேலும் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. சர்ச்சை, நையாண்டி, அனைவருக்கும் எளிதில் புரியும் வகையிலான பொருள் தேர்வு, 'ஸ்டில் லைஃப்' பாரம்பரியம் மற்றும் 'ஆயத்தக் கலைப்பொருள்' என்ற உத்தி.

அதன் விலை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் 2019-ஆம் ஆண்டு மியாமி பீச்சில் விற்பனையான கலைப்படைப்புகளில் அது மிகவும் விலை உயர்ந்தது அல்ல. அதேபோல், ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலை உயர்ந்த 'ஆயத்தக்' கலைப்படைப்பும் அது அல்ல.

'காமெடியன்' பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், அதில் உண்மையிலேயே தீவிரமான புதுமை எதுவும் இல்லை என்பதுதான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு