'இன்னொரு கண்ணையும் பறிப்பதா?': எரிபொருள் குழாய் பதிக்க திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு - பிபிசி கள ஆய்வு

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்
படக்குறிப்பு, மாற்று வழி இருந்தும் திட்டத்தை இதே வழியில் செயல்படுத்துவதாகக் கூறுகிறார் விவசாயி கமலாத்தாள்.
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

''எனக்கு 62 வயது. 25 ஆண்டுகளுக்கு முன்பு பின்விளைவுகள் பற்றி தெரியாதபோது, எங்கள் நிலத்தில் குழாய் பதித்தனர். இப்போது அதன் பின்விளைவுகள் தெரிவதால் மறுபடியும் குழாய் அமைக்கக் கூடாது என்று போராடுகிறோம்'' என கூறுகிறார் விவசாயி கமலாத்தாள். திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் அருகிலுள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் இவர்.

கமலாத்தாளைப் போலவே, கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி டோல்கேட் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி விவசாயிகள் பலரும் நடத்திய போராட்டம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

எரிபொருள் குழாய் பதிக்கும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த விவசாயிகள் மட்டும் போராடுவதன் பின்னணி என்ன?

'ஒரே நிலம்; இப்போது பதிப்பது இரண்டாவது எரிபொருள் குழாய்'

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் தேவன்கோந்தி வரை தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் வழியாக, குழாய் மூலமாக எரிபொருள் கொண்டு செல்லும் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் (BPCL) மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஐடிபிஎல் (IDPL - இருகூர்-தேவன்கோந்தி குழாய் திட்டம்) திட்டத்தை செயல்படுத்துகிறது.

தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்ட அரசாணையின்படி, கடந்த 2013ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த பிபிசிஎல் திட்டமிட்டு நில உரிமையாளர்கள் எதிர்ப்பால் 2018-ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2020-ஆம் ஆண்டில் ஒரு முறையும் பாதைகளை மாற்றியமைத்தது. அதிலும், தனியார் நிலம் அதிகம் வந்ததால் எதிர்ப்பு எழவே, மீண்டும் 2022-ஆம் ஆண்டில் மறுபடியும் பாதை மாற்றப்பட்டது.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்

இதில் 244 கி.மீ சாலையோரம் மற்றும் 95 கி.மீ தனியார் நிலம் என வரையறுக்கப்பட்டதில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 74 கி.மீ. தூரமும், எஞ்சிய தூரம் மற்ற மாவட்டங்களில் இடம்பெறுகிறது. இந்த 74 கி.மீ. தூரத்துக்கு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏற்கெனவே கடந்த 1998-ஆம் ஆண்டில் கொச்சி-கோவை-கரூர் (CCK) குழாய் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மீண்டும் குழாய் பதிக்க திட்டமிடப்பட்டது.

2023-ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கி 2025-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட இந்த பணி, பல காரணங்களால் முடியாமல் 2026-ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தை எதிர்த்தே திருப்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசால் நிறைவேற்றப்படும் ரயில்வே தடங்கள், ரயில்வே பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு மாநில அரசுதான் நிலம் கையகப்படுத்தித் தரவேண்டுமென்ற அடிப்படையில் இத்திட்டத்துக்கும் தமிழக அரசே நிலமெடுத்துக் கொடுத்தது.

கடந்த 1998-ஆம் ஆண்டில் 'சிசிகே' திட்டத்தில் குழாய் பதிக்க விவசாய நிலங்களில் 60 அடி அகலத்துக்கு அளவு குறிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் கட்டடம் கட்டக்கூடாது, தென்னை வளர்க்கக்கூடாது உள்ளிட்ட ஏராளமான நிபந்தனையுடன் நிலமெடுக்கப்பட்டது. அந்த நிலங்களில் குழாய் பதிக்கப்பட்டு, நிலப் பயன்பாட்டுக்கான இழப்பீட்டுத் தொகையும் அப்போது வழங்கப்பட்டுள்ளது.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அந்த குழாய்கள் 20 அடி வரையிலான ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேல் நெல், வெங்காயம், மஞ்சள் உள்ளிட்ட பல விதமான விவசாயத்தையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகள் அனைத்தும் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்தின் பாலாறு படுகையில் இடம்பெற்று தண்ணீர் வசதியும் இருப்பதால் இப்பகுதியில் பரவலாகவே விவசாயம் நடக்கிறது.

குழாய் பதிப்பதற்கான ஆயத்தப்பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டில் துவங்கியபோதே, விவசாய அமைப்புகள் இத்திட்டத்தை எதிர்த்துப் போராட்டங்களைத் துவக்கிவிட்டன.

"குழாய் பதிக்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ஏற்கெனவே குறைந்துவிட்டது, விவசாயம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால், மீண்டும் அதே நிலங்களில் குழாய் பதிக்கும்போது இந்த பாதிப்பு மேலும் அதிகமாகும். நிலமதிப்பு மேலும் குறையும்" என்பதே விவசாயிகளின் அச்சமாகவுள்ளது. இதனால் புதிய குழாய்களை பதிக்க எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், பழைய குழாய்களையும் இடம் மாற்றி, பிற பகுதிகளில் இருப்பதுபோன்று சாலையோரம் கொண்டு செல்ல வேண்டுமென்பதே இவர்களின் ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது.

இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாக, ஏற்கெனவே குழாய் இருக்கும் பகுதிகளில் பெரிய அளவில் குழிகளைத் தோண்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது. அந்த நிலங்களில் நடப்பட்டிருந்த பயிர்களை அழித்து குழி தோண்டும் நடவடிக்கைகள் வேகமடைந்த நிலையில், விவசாயிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்
படக்குறிப்பு, திட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது

கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அவினாசிபாளையம் அருகிலுள்ள வேலம்பட்டி டோல்கேட் பகுதியில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு, ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து சாலை மறியல் செய்தனர். இதுதொடர்பாக, 87 பேர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் தொடருமென்ற எதிர்பார்ப்பில் அடுத்த நாள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி, காலையிலேயே டோல்கேட் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கிருந்தனர். கணவன்–மனைவியாக டோல்கேட் பகுதிக்கு வந்த விவசாயிகள் பலரையும், அங்கே நிற்கவே விடாமல் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிய காவல்துறையினர், தனியாக வந்த விவசாயிகள் சிலரை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஊடகங்களிடம் பேசுவதற்காக அங்கு வந்த விவசாயி பரமசிவம் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். அங்கு தற்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய புதுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி நாச்சிமுத்து, ''ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி நான். இத்திட்டத்தை எதிர்த்து 245 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், மொட்டையடித்து, நாமம் போட்டு, சட்டி எடுத்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால் தமிழக அரசும் செவிசாய்க்கவில்லை. மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.'' என்றார்.

''நிலத்தின் குறுக்கே போகும் இந்த குழாய்களால் நிலம் இருபுறமும் தேங்காய் பன் (முக்கோண வடிவில்) போலாகிவிட்டது. மற்றொரு புறத்தில் பிஏபி (பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம்) வாய்க்காலுக்கும் நிலமெடுக்கப்பட்டுள்ளது. எங்களால் எதையுமே செய்ய முடியவில்லை. விவசாய அமைப்புகள் 3 மாற்று வழியைக் காண்பித்தும் எதுவும் ஏற்கப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்னால் விபரம் தெரியாமல் எங்கள் அப்பா கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட்டார். அதில் குழாய் பதித்துவிட்டார்கள். அதை வைத்துக்கொண்டு, தங்களின் இடம் என்று கூறி, இப்போது மீண்டும் குழாய் பதிக்கப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?'' என்றும் கேள்வி எழுப்பினார் விவசாயி நாச்சிமுத்து.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்
படக்குறிப்பு, நிலத்தின் குறுக்கே போகும் இந்த குழாய்களால் நிலம் இருபுறமும் தேங்காய் பன் (முக்கோண வடிவில்) போலாகிவிட்டது என்கிறார் நாச்சிமுத்து

"நிலமதிப்பை நிர்ணயிப்பதில் பாரபட்சம்"

இவ்வாறு குழாய் பதிக்கப்பட்ட நிலங்களின் மதிப்பு குறைந்துவிடும் என்பதுடன், தென்னை விவசாயம் செய்ய முடியாது, கட்டடம் கட்ட முடியாது என்பதால், கடும் பாதிப்புக்குள்ளாவதாக விவசாயிகள் கூறுகின்றனர். சிறிய அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு அதிகமாகி, வாழ்வாதாரத்தையே இழக்கும் நிலை ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் சிறு விவசாயிகள்.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய கண்டியப்பன் கோவிலைச் சேர்ந்த விவசாயி சிவன் மலையப்பன், ''எனக்கு ஒரு ஏக்கர் 70 சென்ட்தான் விவசாய நிலம் இருக்கிறது. எங்கள் வீடும் அதற்குள் இருக்கிறது. நிலத்தின் ஒரு பகுதியில் ஏற்கெனவே குழாய் போகிறது. மீண்டும் அதே நிலத்தில் குழாய் பதித்தால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். '' என்றார்.

''ஏற்கெனவே எங்களுக்கு ஒரு கண்ணைப் பிடுங்கிவிட்டனர். இப்போது இன்னொரு கண்ணையும் பிடுங்கி, எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிப்பதால் வாழ்வா, சாவா என்ற நிலைமைதான் கடைசியில் உருவாகியிருக்கிறது! இத்திட்டத்தால் நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும் நிலை உள்ளதால்தான் இவ்வளவு தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறோம்.'' என்றார் விவசாயி சிவன் மலையப்பன்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டபோது ஒருவரின் சொத்தாக இருந்த நிலம், தற்போது அடுத்தடுத்த தலைமுறையில் பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி விட்டதாகச் சொல்கிறார்கள் விவசாயிகள்.

''திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 68 கி.மீ. தூரத்துக்கு 60 அடி அகலத்துக்கு நிலமெடுத்துள்ளனர். இதில் ஒவ்வொரு பட்டாவிலும் 4-5 விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன. இதனால் 5 ஆயிரம் விவசாயிகள் வரை இத்திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான் புதிதாக குழாய் பதிக்க வேண்டாமென்றும், ஏற்கெனவே இருப்பதை எடுக்க வேண்டுமென்றும் சொல்கிறோம்.'' என்றார் நாச்சிமுத்து.

பிபிசியிடம் பேசிய விவசாயிகள் ரமேஷ் ராமசாமி, பரமசிவம் உள்ளிட்ட பலரும், இந்த திட்டத்தின் பெரும் பகுதியில் குழாய்கள், சாலையோரங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதால்தான் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தீவிரமாகப் போராடுவதாகத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இந்த மாற்றுவழித் திட்ட கோரிக்கையை முன்னிறுத்தி வருகிறது.

திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான அருண்ராஜிடம் பேசிய இந்த அமைப்பின் நிர்வாகிகள், 3 மாற்றுவழிகளைக் குறிப்பிட்டு அந்த வழித்தடங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாவட்டம் முத்தூரிலிருந்து பெங்களூரு வரை 270 கி.மீ. தூரம் சாலையோரத்தில் குழாய் பதித்துவிட்டு, இந்த பகுதியில் 70 கி.மீ. தூரம் மட்டும் பழைய பாதையில் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு இந்த அமைப்பின் சார்பில் அமைச்சரிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம் , அமைச்சர் அருண்ராஜ்
படக்குறிப்பு, அமைச்சர் அருண்ராஜிடம் மனு அளித்தபோது

கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், பல்லடம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள புறவழிச்சாலையிலும் குழாய்களைப் பதிக்கலாம், நொய்யல் ஆறு மற்றும் மாவட்ட சாலையோரத்தில் அமைக்கலாம், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகளை இணைத்து அதில் குழாய் பதிக்கலாம் என 3 விதமான மாற்று வழிகளை இந்த அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால், அவை ஏற்கப்படவில்லை.

பிபிசியிடம் பேசிய இந்த அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, ''மாற்றுவழித் திட்டங்களை அவர்கள் பரிசீலிக்கவே இல்லை. தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு, சரியாக ஆய்வு செய்யாமல் அத்திட்டம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. இதுதொடர்பாக, ஐடிபிஎல் திட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பேசியபோது, 30 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளின் நிலங்களில் எங்களுக்கு அனுபவ உரிமை வந்துவிட்டது. அதில் எங்கள் குழாய் உள்ளது. இப்போது புதிய குழாயை சாலையோரம் அமைத்தாலும் உங்களுக்கு இருக்கும் பழைய பாதிப்பு குறையாது என்று கூறுகின்றனர்.'' என்றார்.

''விவசாயிகளுக்கு பாதிப்பு இருப்பதை ஒப்புக்கொள்ளும் பிபிசிஎல் அதிகாரிகள், பழைய குழாயை இடம் மாற்ற முடியாது என்பதுடன் புதிய பாதைக்காக கூடுதல் இழப்பீடு தருகிறேன் என்கின்றனர். ஆனால் இங்குள்ள குருநாதன்பாளையம் அருகில் உகாயனூரில் சர்வீஸ் ஸ்டேஷன் அமைக்க 12 சென்ட் இடத்தை சென்ட் 2 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ள அந்த நிறுவனம், அதே பகுதியில் குழாய் பதிக்கும் நிலத்துக்கு அனுபவ உரிமைக்கான இழப்பீடாக சென்ட் ஒன்றுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் தருகிறது. இதுவே விவசாயிகளின் முக்கிய பிரச்னையாக உள்ளது.'' என்றார் ஈசன்.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்
படக்குறிப்பு, மாற்றுவழித் திட்டங்களை பரிசீலிக்கவே இல்லை என்கிறார் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி

நில இழப்பீடு 100%-ஆக அதிகரிப்பு

நிலப்பங்கீடால் கிடைக்கும் பலருக்கு இழப்பீடு குறைவாகவுள்ளது. தன் மாமனாரிடம் இருந்த சொத்து, கணவர் காலத்தில் இரண்டாகி, 4 மகன்கள் இருப்பதால் 4 பாகங்களாகிவிட்டதாகக் கூறுகிறார் பூசாரிபாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள்.

பிபிசியிடம் பேசிய கமலாத்தாள், ''எங்கள் மாமனாருக்கு 5 ஏக்கர் இருந்தது. ஒரு ஏக்கர் பிஏபி வாய்க்காலில் போய்விட்டது. நான்கு ஏக்கர் அவர் எழுதி வைத்தார். எங்களுக்கு 4 மகன்கள். ஆளுக்கு ஒரு ஏக்கர்தான் வருகிறது. அதில் குழாய் பதித்த பகுதியில் 2 ஏக்கர் போய்விட்டது. இரு மகன்களுக்கு வீடு கட்டவே வழியில்லை.'' என்றார்.

''இப்போது அந்த குழாய் போகும் இடமே அவர்களுக்குச் சொந்தம் என்பது போல பேசுகிறார்கள். அப்படியெனில் எதற்கு பத்திர அலுவலகம், பத்திரப்பதிவு… எங்கே வேண்டுமானாலும் குழாய் பதிக்கலாம். ஆனால், எல்லா இடத்திலும் விவசாயம் செய்ய முடியாது. மாற்று வழி இருந்தும் கொண்டு போக மறுக்கிறார்கள்.'' என்றார் கமலாத்தாள்.

புதுப்பாளையம், சடையம்பாளையம், உகாயனூர் போன்ற சில பகுதிகளில் பிபிசி நடத்திய கள ஆய்வில் வெங்காயம், நெல் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து, அந்த இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருப்பதை நேரில் காண முடிந்தது. வாகனங்களால் அழிக்கப்பட்ட இடங்களில் சிதைந்திருந்த வெங்காயப் பயிர்களில் காணப்பட்ட வெங்காயம் இன்னும் சில நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்ததையும் அறியமுடிந்தது.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்
படக்குறிப்பு, இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் கருணையம்மாள்

பிபிசியிடம் பேசிய விவசாயத் தொழிலாளர் கருணையம்மாள், ''இன்னும் 20 நாட்களில் வெங்காயத்தை எடுத்துவிடலாம் என்று சொன்னோம். ஆனால் அதிகாரிகள் எடுக்கச் சொல்லும்போது நாங்கள் என்ன செய்வது என்று சொல்லி அவற்றை அழித்துவிட்டார்கள். வெங்காயத்தை விதைத்து அதற்கு செலவு செய்து களையும் பறித்த நிலையில் ஏன் இப்படி அழிக்கிறீர்கள் என்று எங்களால் வேதனைப்படவே முடிந்தது. லாரியையும் போலீசையும் கொண்டு வந்து நிறுத்தும்போது அதை மீறி நாங்கள் என்ன செய்வது?'' என்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் (NH-81) மாற்றுப் பாதையை ஆய்வு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசால் கடந்த ஆண்டில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, 2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி கூட்டுப் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இடநெருக்கடி மற்றும் பாதுகாப்பு காரணங்களால் குழாய் பதிக்க வாய்ப்பில்லை என்று குழு அறிக்கை அளித்தது.

இத்திட்டப்பணி துவங்கும் முன்பு, கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியான அரசாணையின்படி, நிலப் பயன்பாட்டு உரிமைக்காக நிலமதிப்பில் 20 சதவிகிதமே இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாற்று வழி சாத்தியமில்லை என்ற பின்பு, நில இழப்பீட்டை உயர்த்த வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டியிருப்பதால், பழைய இடத்தில் கூடுதல் குழாய் பதிப்பதற்கான இழப்பீட்டுத் தொகையை 20 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதம் சந்தை மதிப்பாக வழங்கவும், முழுச் செலவையும் ஏற்றுக்கொள்ளவும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதன்பின்பே நில இழப்பீட்டை உயர்த்தி கடந்த ஜூலை 6-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்ட அரசாணை வெளியிட்டது அதன்ன்படி நில இழப்பீடு 20 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

பல்லடம் எரிபொருள் குழாய் பதிப்பு திட்டம்

அதன்படி, திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ.8 கோடியாக இருந்த மொத்த இழப்பீட்டுத் தொகை, ரூ.50 கோடியாகவும், கோவை மாவட்டத்துக்கு ரூ.3 கோடியாக இருந்த இழப்பீட்டுத் தொகை ரூ.17 கோடியாகவும் உயர்ந்தது. அரசாணையிலுள்ள தகவலின்படி, கோவை மாவட்டத்திலுள்ள 5 கிராமங்களில் பட்டப்படிப்பு முடித்த 235 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1,518 பேரும் உள்ளனர்.

இழப்பீடு சந்தை மதிப்பில் 100 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வருமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. இப்போதும் பெரும்பாலான விவசாயிகள், இழப்பீட்டை விட மாற்றுவழித்திட்ட கோரிக்கையையே முன்னிறுத்தி வருவதாகக் கூறுகிறார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் ஈசன் முருகசாமி.

''கொச்சியிலிருந்து இருகூர் வரையும், கரூரிலிருந்து முத்தூர் வரையும் சாலையோரத்தில் குழாய் பதித்துவிட்டு இங்கே மட்டும் இப்படிச் செய்கின்றனர். எங்கே குழாய் பதித்தாலும் பணம் கொடுக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மாநிலஅரசு அதைச் செய்ய மறுக்கிறது. போன ஆட்சியிலும் போராடி பயனில்லை. ஆட்சி மாறியும் இப்போது காட்சி மாறவேயில்லை'' என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார் விவசாயி கமலாத்தாள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே
படக்குறிப்பு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே

விவசாயிகளின் போராட்டங்கள், மாற்றுவழி குறித்த கோரிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரேயிடம் பிபிசி சில கேள்விகளை முன் வைத்தது.

அதற்கு பதிலளித்த அவர், ''கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு, மாற்று வழித்திட்டம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. அதனால் அதே வழியில்தான் குழாய் பதிக்கப்படும் வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கான இழப்பீடும் சந்தை மதிப்பில் 100 சதவிகிதமாக உயர்த்தித் தரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் தங்கள் இழப்பீட்டை பெற்று வருகின்றனர்.'' என்றார்.

''இன்றும் கூட 8 விவசாயிகள் ரூ.41 லட்சத்துக்கான காசோலையைப் பெற்றுள்ளனர். ஆனால் கூடுதல் இழப்பீடு என்பதை விட மாற்றுவழியே சில விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விவசாயிகளிடம் பேசியும் வருகிறோம். நிச்சயமாக சில நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன்.'' என்றார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு