விஜய் அரசின் பட்ஜெட் எப்படி? உதயநிதி, பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கருத்து

தவெக அரசின் முதல் பட்ஜெட்

பட மூலாதாரம், TN DIPR

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

பெண்களின் திருமணத்துக்கு அரசின் சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்கும் 'அண்ணன் சீர்' , தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு 'வெற்றி மடிக்கணினி' திட்டம், அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் இந்தாண்டு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் சைக்கிள்கள் உள்ளிட்ட திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்ஜெட் குறித்து உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?

உதயநிதி ஸ்டாலின்
படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து யாரைக் கேட்டாலும் அதற்கு மிகப்பெரிய பூஜ்ஜியத்தைதான் வழங்குவர். இந்த பட்ஜெட்டும் பூஜ்ஜியம் தான். கடந்த திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கின்றனர். அதுதான் மாற்றம். அனைத்து திட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளனர். பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் நடத்தினார்? அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என்று கூறிவிட்டு, இப்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என அறிவித்துள்ளனர். தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருப்பதாக பட்ஜெட் உரையில் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார், அதற்கு எங்களின் நன்றி." என்றார்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியின் செயல்படுத்தப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

"அன்பு சோலை திட்டத்துக்கு முதல்வர் பொழுதுபோக்கு மையங்கள் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. 'உலகம் உங்கள் கையில்' மடிக்கணினி திட்டத்தை 'வெற்றி மடிக்கணினி' என பெயர் மாற்றியுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் கடைசி பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ. 48,500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது, ரூ.44,000 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

'மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை' என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

"விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் நான் பேசியதற்கு என்னை நேற்று கைது செய்து அலைக்கழித்ததை ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்தது. நேற்று நடந்தது திசைதிருப்பும் அரசியல். நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராடிய வேளையில் இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை. அரிசி விலை பலமடங்கு உயர்ந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கேட்டால் முதலமைச்சருக்கு பதிலாக பொதுப் பணித்துறை அமைச்சர் பதில் கூறுகிறார். சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு பதிலாக தாங்களே பதில் கூற அனுமதிக்க வேண்டும் என, அவை முன்னவரிடமும் கேட்டுள்ளனர். இதற்கு எதற்கு முதலமைச்சர், நாங்களெல்லாம் அவைக்கு வர வேண்டும்? கலைஞர் உரிமைத் தொகையை ரூ. 2,500ஆக உயர்த்திக் கொடுப்பது குறித்து எதுவும் கூறவில்லை." என்றார் உதயநிதி.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"மக்களின் எதிர்பார்ப்பை அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை. சிறந்த பட்ஜெட்டை அறிவிப்போம் என அரசு கூறியது. எந்த வித அறிவிப்புகளும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்திருக்கின்றனர். 85 நாட்களில் எந்தவித புதிய திட்டங்களும் கொண்டு வரவில்லை. எல்லாவற்றுக்கும் ரீல்ஸ் வெளியிடுவதுதான் சாதனையாக உள்ளது. எந்த திட்டமும் முழுமையாக இல்லை. புதிய திட்டங்களும் இல்லை." என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கூறிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் தகுதிவாய்ந்த மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இல்லை என்றார்.

"நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. இந்த குறுகிய காலத்தில் ரூ. 20,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது புதிய அரசு. மேலும், ரூ. 17,000 கோடி வருவாய் செலவு செய்துள்ளனர். எப்படி கடனை அடைக்கப் போகின்றனர் என்பது தெளிவாக இல்லை." என்றார்.

தாலிக்குத் தங்கம், விலையில்லா கறவை மாடுகள் போன்ற அதிமுக அரசின் திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு