'2 வயதுக்குள் உண்ணும் சர்க்கரைக்கும் மூளை ஆரோக்கியத்துக்கும் தொடர்பு' - புதிய ஆய்வு கூறுவது என்ன?

குழந்தைகள் , சர்க்கரை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்
    • பதவி, சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரண்டு வயது வரை மிகக் குறைந்த அளவு சர்க்கரையை உண்பது, பல தசாப்தங்களுக்குப் பிறகும் மூளையைப் பாதுகாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிரிட்டனில் சர்க்கரை ரேஷன் முறை முடிவுக்கு வந்ததன் தாக்கத்தை இந்த ஆராய்ச்சி ஆய்வு செய்தது. இது மக்களின் உணவில் சர்க்கரையின் அளவு விரைவாக அதிகரிக்க வழிவகுத்தது.

சர்க்கரை ரேஷன் முறையின் போது பிஞ்சுக் குழந்தைகளாக இருந்தவர்களுக்கு டிமென்ஷியா (மறதி நோய்) ஏற்படும் ஆபத்து 23% குறைவாக இருந்ததாக இதன் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வு இதற்கான உறுதியான ஆதாரத்தை வழங்க முடியாது, ஆனால் ஆரோக்கியமான உணவு முறை எப்படியும் மூளைக்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் நமது எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை என்று பரிந்துரைக்கும் முதல் ஆய்வு இதுவல்ல.

இரண்டாம் உலகப் போரிலிருந்து பிரிட்டன் மீண்டு வந்த மற்றும் உணவுப் பங்கீட்டு முறை முடிவுக்கு வந்த "இயற்கையான பரிசோதனை" குறித்துத் தொடர்ச்சியான ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றன.

செப்டம்பர் 1953இல் சர்க்கரை பங்கீட்டு முறை முடிவுக்கு வந்தபோது, சராசரி சர்க்கரை நுகர்வு ஒரு நாளைக்கு சுமார் 41 கிராமில் இருந்து (10 சர்க்கரை கட்டிகள்) உடனடியாக 80 கிராமாக (20 சர்க்கரை கட்டிகள்) உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

முந்தைய ஆய்வுகள், இதனைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் டைப் 2 நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த அதிகரிப்புடன் தொடர்புபடுத்தியிருந்தன.

இரண்டாம் உலகப் போரின் போது லண்டனின் பெட்டிகோட் லேன் சந்தையில் தங்களது ரேஷன் புத்தகங்களுடன் இருக்கும் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின் போது லண்டனின் பெட்டிகோட் லேன் சந்தையில் தங்களது ரேஷன் புத்தகங்களுடன் இருக்கும் பெண்கள்

சமீபத்திய ஆய்வு, யுகே பயோபேங்க் திட்டத்தில் பங்கேற்கும் கிட்டத்தட்ட 65,000 மக்களை ஆராய்ந்தது.

ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இந்த பகுப்பாய்வு — சர்க்கரை பங்கீட்டு முறைக்கு முன்னும் பின்னும் வளர்ந்த குழந்தைகளை ஆராய்ந்தது.

'டிமென்ஷியாவுடனான தொடர்பு'

"வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மூளை ஆரோக்கியத்திற்கு நீண்டகால நன்மைகளை ஏற்படுத்தக்கூடும் என்று எங்களது கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன," என்று ஆராய்ச்சியாளர் ஜியாசென் ஜெங் கூறினார்.

இந்தத் தரவுகள் 'நியூராலஜி' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டன.

ஆனால், சர்க்கரைதான் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதைப் புரிந்து கொள்ள "மேலும் ஆராய்ச்சி தேவை" என்று ஜெங் கூறினார்.

1941 ஆம் ஆண்டின் போர்க்கால சிற்றுண்டியான, குச்சியில் சொருகப்பட்ட காய்கறி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1941 ஆம் ஆண்டின் போர்க்கால சிற்றுண்டியான, குச்சியில் சொருகப்பட்ட காய்கறி.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"அவர்கள் ஏதோ ஒரு கண்டுபிடிப்பை நோக்கிச் செல்கிறார்கள்," என்று மருத்துவ ஆராய்ச்சிகளைச் சேகரித்துச் சுருக்கமாக வழங்கும் ஒரு சுதந்திரமான, இலாப நோக்கற்ற அமைப்பான காக்ரேனின் சான்றுகள் தயாரிப்பு மற்றும் முறைகள் இயக்குநரகத்திற்கான முறைகள் ஆதரவுப் பிரிவின் தலைவர் ரேச்சல் ரிச்சர்ட்சன் கூறினார்.

இருப்பினும், இது ஆரம்பகால சர்க்கரை நுகர்வை டிமென்ஷியாவுடன் (ஞாபகமறதி நோயுடன்) இணைக்கும் ஒரு "உறுதியான ஆதாரம்" அல்ல என்று அவர் கூறினார்.

இதில் உள்ள ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால், ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொரு நபரும் உண்மையில் எவ்வளவு சர்க்கரை சாப்பிட்டார்கள் என்பதை அறிய முடியாது, அவர்கள் சர்க்கரை பங்கீட்டு முறையோடு ஒப்பிடும்போது எப்போது பிறந்தார்கள் என்பதை மட்டுமே அறிய முடிகிறது.

"இந்தச் சான்றுகள் 1940கள் மற்றும் 1950களில் பிறந்தவர்களுடன் தொடர்புடையவை, எனவே இன்றைய சிறு குழந்தைகளுக்கு இதன் பொருத்தம் வரம்பிற்குட்பட்டது. உதாரணமாக, (அக்காலத்தில்) தாய்ப்பால் மறக்கடிப்பது முன்கூட்டியே நிகழ்ந்தது. இது சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரம்பகால ஊட்டச்சத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்," என்று ரிச்சர்ட்சன் கூறினார்.

சமச்சீர் உணவின் அவசியம்

ஆஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மருந்தியல் பேராசிரியர் இயன் மெய்ட்மென்ட் கூறுகையில் "இது ஒரு சுவாரஸ்யமான கருத்து, இது விவாதத்திற்கு உதவுகிறது, ஆனால் எனது கருத்துப்படி நமக்கு இன்னும் கூடுதல் சான்றுகள் தேவை" என்றார்.

"80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை" இணைத்து, அதனை இப்போதுள்ள ஆரோக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது, இதில் பங்காற்றக்கூடிய "ஏராளமான" இதர காரணிகளும் இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது என்று அவர் கூறினார்.

அல்சைமர்ஸ் ரிசர்ச் யுகே அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சாரா ரோட்ரிக்ஸ் கூறுகையில் "இது ஒரு அவதானிப்பு ஆய்வு என்பதை நினைவில் கொள்வது முக்கியம்" என்றார்.

"இதன் பொருள் என்னவென்றால், இது உணவு முறைக்கும் டிமென்ஷியா அபாயத்திற்கும் இடையிலான தொடர்புகளை காண முடியும், ஆனால் குறைந்த சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக டிமென்ஷியாவைத் தடுக்கிறது என்பதை இது நிரூபிக்க முடியாது."

"ஆரோக்கியமான, சமச்சீரான உணவை உட்கொள்வது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும், நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்கு எப்போதும் தாமதம் என்று எதுவும் இல்லை."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு