உதயநிதியை காவல்துறையினர் அழைத்துச் சென்றதால் பதற்றம் - அவர் என்ன பேசினார்?

பட மூலாதாரம், ANI
தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, வெட்டி, ஒட்டி போலி செய்திகளை பரப்புகின்றனர். இன்று என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். இதற்கு அஞ்சுகின்ற ஆள் நான் கிடையாது. நான் கலைஞரின் (கருணாநிதி) வளர்ப்பு, திமுகவின் உடன்பிறப்பு, தலைவர் ஸ்டாலினின் வளர்ப்பு. கிட்டத்தட்ட 22 நிமிடங்கள் நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.
விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது, வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. முதலமைச்சர் இதுகுறித்து பேச வேண்டும் என தெரிவித்தேன். மு.க. ஸ்டாலின் என்றும் விவசாயிகளுக்கு துணைநிற்பார் என்று பேசினேன். தற்போது தவெகவினர் திசைதிருப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரும் ரீல்ஸிலேயே வாழ்கின்றனர்." என தெரிவித்தார்.
காவல்துறையினர் வருகையைத் தொடர்ந்து உதயநிதி வீட்டிற்கு வெளியே திரண்டு முழக்கங்களை எழுப்பிய திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றிலும் காலையிலேயே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உதயநிதியின் வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர், அவரது மனைவியுடன் பேசும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாயின. இதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் உதயநிதி வீட்டிற்குச் சென்றனர்.

பட மூலாதாரம், ANI/Udhayanidhi Stalin
சர்ச்சையின் பின்னணி
காவிரி விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து தஞ்சையில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கவலை இல்லை என்றும், அவரது ஒரே கவலை திமுக மீது வழக்குப் போடுவதுதான் என்றும் குறிப்பிட்டார். பேச்சுக்கு நடுவே கூட்டத்தில் இருந்து எழுந்த முழக்கங்களைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட சில விஷயங்களே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. அது முதலமைச்சரை அவமதிக்கும் விதமாக உள்ளதாக தவெக மட்டுமல்லாது பிற அரசியல்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் என்.ஆனந்த், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதேபோல், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார்
உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெகவின் தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரில், ஆர்ப்பாட்ட உரையின் போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களுக்குப் பதிலளிப்பதாகக் கூறி, பாலியல் ரீதியாகவும் பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் உட்பொருளோடு உதயநிதி பேசியதாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியின் இந்த உரை அடங்கிய 2 நிமிடம் 39 வினாடிகள் கொண்ட வீடியோவை திமுக ஐடி விங் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுப் பரப்பியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த வீடியோவைப் பரப்பிய திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டிருப்பதை காவல்துறை கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், ANI
டி.ஆர்.பாலு மறுப்பு
உதயநிதி மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, குறிப்பிட்ட பெண்ணை குறித்து உதயநிதி எதுவும் கூறவில்லை என்றும் அனைத்தும் ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































