ஒரே இரவில் இருமுறை சூரியன் மறைவதை காண தயாராகும் சின்னஞ்சிறு கிராமம்

அவெலானோசா டி முனோ: ஒரே இரவில் இருமுறை சூரியன் மறைவதை காண தயாராகும் சின்னஞ்சிறு கிராமம்

பட மூலாதாரம், Rishika Sharma

    • எழுதியவர், ரிஷிகா சர்மா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

குடியிருப்பாளர்கள் எவருமின்றி, உணவகங்கள் இல்லாமல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எட்டிப்பார்க்காத அவெலானோசா டி முனோ (Avellanosa de Muñó) கிராமம், ஒரு அசாதாரண இரவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

அமைதியான கிராமங்கள் பல இருக்கலாம், ஆனால் வடக்கு ஸ்பெயினின் பர்கோஸ் (Burgos) மாகாணத்தில் உள்ள இந்தத் குக்கிராமம் முற்றிலும் வித்தியாசமானது. இங்கு உணவகங்களோ கடைகளோ இல்லை. எப்போதுமே திறக்காத ஒரு மதுக்கூடமும், ஒருபோதும் திறக்கப்பட முடியாத ஒரு மளிகைகடையும் மட்டுமே உள்ளன.

ஆனால், நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால், அங்கு ஒரு மெல்லிய இசை ஒலிக்கத் தொடங்கும். கடுமையான கோடைகாலச் சூரியனால் காய்ந்த லாவெண்டர் புதர்களைச் சுற்றி மயக்க நிலையில் வட்டமிடும் மரத் துளையிடும் தேனீக்களின் மெதுவான ரீங்காரம் கேட்கும். அவற்றுக்கு மேலே, கல் கூரைகளுக்கு இடையே பறந்து செல்லும் கருப்பு மற்றும் வெள்ளை நிற நாரைகளின் கீச்சொலி மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் எதிரொலிக்கிறது. வீடுகளுக்கு அப்பால், தனித்துச் செல்லும் ஒரு டிராக்டரின் சத்தம்தான் மனித நடமாட்டத்தின் ஒரே அடையாளமாக இருக்கும்.

அருகிலுள்ள பேக்கரியிலிருந்து வரும் ஒரு சாதாரண வெள்ளை நிற வேன், வாரத்திற்கு ஒருமுறை இங்கு வசிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய குடிமக்களுக்கு ரொட்டிகளை விநியோகிக்க வளைந்து நெளிந்து வருவதுதான், கிராமத்தின் தூக்கக் கலக்கமான அமைதியைக் குலைக்கும் ஒரே நிகழ்வாகும்.

பெரும்பாலான நாட்களில் பெரிதாக எதுவுமே நடக்காத இத்தகைய ஒரு இடத்தில், இந்தச் சில மனிதர்களின் தினசரி வாழ்க்கையை இந்த எளிய வழிமுறைகள்தான் வடிவமைக்கின்றன. எனினும், வழக்கமாக எங்கு பார்த்தாலும் வெறுமை மட்டுமே நிறைந்திருக்கும் இந்தக் கிராமம், இந்த கோடைகாலத்தில் பூமியிலேயே மிகவும் உற்சாகமான இடங்களில் ஒன்றாக மாறவுள்ளது.

அவெலானோசா டி முனோ: ஒரே இரவில் இருமுறை சூரியன் மறைவதை காண தயாராகும் சின்னஞ்சிறு கிராமம்

பட மூலாதாரம், Rishika Sharma

படக்குறிப்பு, வாராந்திர பேக்கரி வேன், அவெலானோசா டி முனோவில் எஞ்சியிருக்கும் சில குடியிருப்பாளர்களுக்கு ரொட்டியை வழங்குகிறது.

ஆகஸ்ட் 12, 2026 அன்று, ஒரு முழு சூரிய கிரகணம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து செல்லவுள்ளது. 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலிருந்து இது காணப்படவுள்ளது. மாட்ரிட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் டாக்டர் மரியா தெரசா லோபஸ் சான்செஸின் கூற்றுப்படி, 1912 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயின் பெருநிலப்பகுதியிலிருந்து காணக்கூடிய முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். இருப்பினும், கிரகணத்தின் முழு மறைவுப் பகுதி கண்டம் முழுவதும் ஒரு குறுகிய பாதையில் மட்டுமே தெரியும்.

அவெலானோசா டி முனோ கிராமம் நேரடியாக அந்தப் பாதையில் அமைந்துள்ளது. ஆனால் இந்தச் சிறிய கிராமத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஈர்க்கக்கூடிய இடமாக மாற்றுவது அதன் இயற்கை நிலப்பரப்புதான்: தங்க நிற கோதுமை வயல்களும் தாழ்வான குன்றுகளும் அகன்ற மேற்கு அடிவானத்தில் திறக்கின்றன. இங்கு குறைவான கட்டடங்களும், சிறிதளவு செயற்கை வெளிச்சமும் உள்ளன, பிரபலமாக அறியப்பட்ட இடங்களைப் போல இங்கு அதிகக் கூட்டநெரிசல் இருக்காது.

இந்த நேரமானது கிரகணத்தை இன்னும் சிறப்பானதாக்குகிறது. இது சூரிய மறைவுக்குச் சற்று முன்பு நிகழும் என்பதால், இது இரட்டை அந்தி நேர விளைவை (double twilight effect) உருவாக்கும், லோபஸ் விவரிப்பது போல, "சில நிமிடங்களில் இரண்டு முறை சூரியன் மறைவதை அனுபவிப்பது போன்றது". அந்த இரவின் பின்னர், பெர்சீட்ஸ் விண்கல் பொழிவும் (Perseids meteor shower) காணக்கூடியதாக இருக்கும், இது வானியல் நிகழ்வுகளின் அரிய சங்கமத்தை உருவாக்கும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குடியிருப்பாளர் சாரா அல்வாரெஸ் ரோட்ரிக்ஸைப் பொறுத்தவரை, அவர் மக்களை எங்கு செல்லச் சொல்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. "குகையை நோக்கி மேலே செல்லுங்கள்" என்று அவர் கூறுகிறார், "அங்கிருந்து உங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடியும்."

1937 ஆம் ஆண்டில் அவெலானோசா டி முனோவில் பிறந்த அல்வாரெஸ், வேறு எங்கும் வாழ்ந்ததில்லை. இங்குள்ள அவரது கிட்டத்தட்ட ஒன்பது தசாப்த கால வாழ்க்கையில், கிராமம் முழுமையாக மாறுவதை அவர் பார்த்துள்ளார். 1950களில், கிராமத்தில் தோராயமாக 200 குடியிருப்பாளர்களும் பல சிறிய கடைகளும் இருந்தன என்று அவர் என்னிடம் கூறுகிறார். இங்கிருந்து மீன் விற்பனையாளர்கள் தாங்கள் பிடித்த மீன்களை விற்க அருகிலுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் பயணம் செய்வார்கள்.

73 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பிறந்து, குழந்தைப் பருவத்திலேயே மாட்ரிட்டுக்குக் குடிபெயர்ந்த ராகுல் கிராண்டே ரெவில்லா, கடிதங்களையும் செய்தித்தாள்களையும் வழங்கக் கழுதையில் தபால்காரர் வந்ததை நினைவுகூருகிறார். சேணத்தின் மீது பாதி தூக்கத்தில் இருக்கும் தபால்காரர், கிராமத்தின் இறுதியில் இருந்த சிறிய தபால் நிலையம் உட்பட எங்கு நிறுத்த வேண்டும் என்பதை அந்த விலங்கு அறிந்துகொள்ளும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம்.

அவெலானோசா டி முனோ: ஒரே இரவில் இருமுறை சூரியன் மறைவதை காண தயாராகும் சின்னஞ்சிறு கிராமம்

பட மூலாதாரம், Rishika Sharma

படக்குறிப்பு, இயந்திரமயமாக்கலும் இடம்பெயர்வும் அவெலானோசா டி முனோ கிராமத்தின் தோற்றத்தை மாற்றியமைத்தன.

தலைமுறை தலைமுறையாக இக்கிராமம் மானாவாரி விவசாயம், காய்கறித் தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியே இருந்தது. பின்னர் விவசாயம் இயந்திரமயமாக்கப்பட்டது. அருகில் வேறு வேலைவாய்ப்புகள் ஏதுமில்லாததால் மக்கள் மாட்ரிட், பில்பாவ், பார்சிலோனா போன்ற பெருநகரங்களுக்கும் அதைத் தாண்டிய பகுதிகளுக்கும் குடிபெயர்ந்தனர்.

இன்று, கிராமத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களை விட, சுற்றியுள்ள குன்றுகளில் மேயும் ஆடுகளின் எண்ணிக்கையே அதிகம். ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் உழைத்த நிலங்களில், தற்போது பரந்து விரிந்த சூரியகாந்தி வயல்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த கோடைகாலத்தில், இந்தச் சூரிய கிரகணம் அந்தக் குடும்பங்களில் சிலரை மீண்டும் தன் பக்கம் ஈர்க்கிறது.

இந்த நிகழ்விற்காக, ரெவில்லா தனது துணையுடன், தனது மகன், பேரக் குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் சூழ திரும்ப வரவுள்ளார். அவரது சகோதரரும் தனது மூன்று குழந்தைகள், பேரன் மற்றும் சகோதரியுடன் வரவுள்ளார். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 20 பேர் கொண்ட குழுவாக வந்து, ஒரே இரவில் கிராமத்தின் மக்கள் தொகையை இரண்டு மடங்காக மாற்றவுள்ளனர். அது மட்டுமல்லாமல், ஸ்பெயின் முழுவதிலிருந்தும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் வெனிசுலாவில் இருந்துகூட மக்கள் பயணம் செய்து வருவார்கள் என்றும், அண்டை வீட்டாரும் தங்களது சொந்த நண்பர்களையும் உறவினர்களையும் விருந்தினர்களாக அழைக்கவுள்ளனர் என்றும் அல்வாரெஸ் என்னிடம் கூறுகிறார்.

சாண்டியாகோ டி கம்போஸ்டெலா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியரான டாக்டர் லுக்ரேசியா லோபெஸ் கூறுகையில், சூரிய கிரகணம் போன்ற ஒருமுறை மட்டுமே நிகழும் நிகழ்வுகள், "தங்களுக்கு ஏற்கனவே தொடர்புள்ள ஓரிடத்தை மக்கள் மீண்டும் கண்டறிய" ஊக்குவிக்கும் என்றார். அவெலானோசாவில், அந்த மீள்கண்டுபிடிப்பானது ஏற்கனவே முன்னாள் குடியிருப்பாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் தாண்டி விரிவடைந்து வருகிறது.

அவெலானோசா டி முனோ: ஒரே இரவில் இருமுறை சூரியன் மறைவதை காண தயாராகும் சின்னஞ்சிறு கிராமம்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, கிரகணத்தின் மீதான ஆர்வம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. லெர்மா படோர் ஹோட்டல் இந்த நிகழ்விற்காக 2022 ஆம் ஆண்டிலேயே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

அருகிலுள்ள 'பராடோர் டி லெர்மா' ஹோட்டல் டியூக் ஆஃப் லெர்மாவின் முன்னாள் அரண்மனையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வைக் காண விரும்பிய பார்வையாளர்களால் 2022 ஆம் ஆண்டே முழுமையாக இந்த ஹோட்டல் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. காஸ்டில்லா ஒய் லியோனின் சுற்றுலா வாரியத்தைச் சேர்ந்த ஆல்பர்டோ போஸ்கு கோவெல்லோ கூறுகையில், இப்பகுதி முழுவதும் இதேபோன்ற நிலையே காணப்படுகிறது என்றார்.

"எங்கள் தங்குமிடங்களில் பெரும்பாலானவை முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மையில், அவை வெகு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன" என்று அவர் கூறுகிறார். கிரகண நிபுணர்கள் சிறந்த பார்வைக்கான உகந்த சூழ்நிலையை விரும்புவதால், "அதிகம் அறியப்பட்ட இடத்தை அல்ல, சிறந்த இடத்தை தேடுகிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெயினுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள கலிபோர்னியக் குடும்பம் ஒன்று குறித்து ரெவில்லா என்னிடம் கூறினார். மாட்ரிட்டில் முழு கிரகணக் காட்சியை அவர்கள் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவெலானோசாவில் உள்ள யாராவது அவர்களைத் தங்க வைக்க முடியுமா என்று அவர் வீடுவீடாகச் சென்று கேட்டறிந்தார். இதன் மூலம், ஸ்பெயினின் மிகச் சிறந்த பார்வைப் புள்ளி என்று அவர் நம்பும் இடத்திலிருந்து அவர்கள் கிரகணத்தை அனுபவிக்க முடியும்.

சுமார் 10 பேர் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமம் திடீரென வெளிச்சத்திற்கு வருவதை எப்படி உணர்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கிறேன். ரெவில்லா சிரித்துக்கொண்டே தலையாட்டுகிறார். "தல்குவால்" (Tal cual - அது அப்படித்தான்) என்று கூறிவிட்டு, தனது சிறிய கிராமமானது எவ்வளவு சிறிதாக இருந்தாலும், உலகத்தைத் தன் வீட்டு வாசலுக்கு ஈர்ப்பது குறித்து அவர் வியப்படைகிறார்.

பர்கோஸ் முழுவதும், சமூகங்கள் கிரகணத்திற்கான பார்வைப் புள்ளிகளையும் கூட்டங்களையும் தயாரித்து வருகின்றன. ஆனால் அவெலானோசா டி முனோ கிராமத்தில், உள்ளூர் மக்களும் பார்வையாளர்களும் கிராமத்திற்கு மேலே உள்ள குகைளை நோக்கிச் செல்வார்கள்.

அவெலானோசா டி முனோ: ஒரே இரவில் இருமுறை சூரியன் மறைவதை காண தயாராகும் சின்னஞ்சிறு கிராமம்

பட மூலாதாரம், Rishika Sharma

படக்குறிப்பு, கிராமத்திற்கு மேலே உள்ள குகைகள் மேற்கு அடிவானத்தின் அகன்ற மற்றும் தடையற்ற காட்சியை வழங்குகின்றன

முழு கிரகணத்தின் போது சூரியன் அடிவானத்திற்கு மேலே வெறும் எட்டு டிகிரியில் மட்டுமே இருக்கும் என்பதால், தடையற்ற மேற்குப் பார்வை மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதனால் இந்த குகைகள் தலைமுறைக்கு ஒருமுறை நிகழும் இந்த வானியல் காட்சியை முன்பக்க வரிசையில் அமர்ந்து பார்ப்பதற்கான இடமாக அமைகின்றன. எனினும், குகைகள் வெறும் சிறந்த பார்வைப் புள்ளி மட்டுமல்ல. பல தலைமுறைகளாக, இந்தச் சுருங்கிவரும் சமூகம் சூரிய அஸ்தமனத்தை ஒன்றாகக் காண இங்குதான் கூடிவருகிறது. முன்னாள் குடியிருப்பாளர் ஒருவர் தனது சாம்பலை இங்கு தூவுவதற்க்காகவே தேர்வு செய்தார். இது கிராமத்திற்கு ஆழமான உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்ட ஒரு இடமாகும்.

அவெலானோசா என்பது அல்வாரெஸ் எப்போதுமே விட்டுச் செல்லாத மற்றும் ஒருபோதும் விட்டுச் செல்லப் போகாத ஒரு இடமாகும். ரெவில்லா தனது வாழ்க்கையின் கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் இங்கு திரும்பி வந்துள்ளார். ஒவ்வொரு கோடைகாலத்திலும், அல்வாரெஸின் மகள்கள் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். தங்கள் தாயார் மறைந்த நீண்ட காலத்திற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து அவ்வாறே செய்வார்கள். ரெவில்லா இப்போது தனது மகன்களையும், அவர்களின் குழந்தைகளையும், அவர்களின் நண்பர்களையும் அழைத்து வருகிறார். ஒரு சிறுவனாக தான் இங்கு ஏற்படுத்திய அதே பிணைப்பை உருவாக்க அவர் விரும்புகிறார், இதனால் ஒரு நாள் அவரது பேரக்குழந்தைகளும் திரும்பி வர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உணர்வார்கள்.

"எனக்கு மிகவும் முக்கியமானது என்னவென்றால், எனது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் கிராமத்தின் மீது நான் வைத்திருக்கும் அதே பாசத்தை உணர வேண்டும்" என்று அவர் என்னிடம் கூறுகிறார்.

கிரகண நாளன்று, அவெலானோசா டி முனோ மீண்டும் அரட்டைகளால் நிரம்பி வழியும். சுடப்பட்ட ஆட்டிறைச்சித் துண்டுகள் புகை இல்லாத உணவகங்களின் இடங்களை ஆக்கிரமிக்கும். ஒரு காலத்தில் பள்ளி இருந்த இடத்தில் குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கும். பின்னர், சில அசாதாரண நிமிடங்களுக்கு, இருள் இரண்டு முறை கவழும். மேலும், புவியியலின் ஒரு குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வால், ஸ்பெயினின் மிக அதிகமாகக் கவனிக்கப்படாத கிராமங்களில் ஒன்று குறுகிய காலத்திற்கு உலகின் மையமாக மாறும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு