பின்புறத்தை பெரிதாக்கும் ஊசி செலுத்தப்பட்ட 24 மணி நேரத்தில் பெண் உயிரிழந்தது ஏன்? இருண்ட அழகியல் சிகிச்சையின் மறுபக்கம்

பட மூலாதாரம், PA Media
- எழுதியவர், ஷோனா எலியட்
- பதவி, பிபிசி நியூஸ் இன்வெஸ்டிகேஷன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
2024 செப்டம்பரில், அறுவை சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளப்படும் பின்புறத்தைப் பெரிதாக்கி வடிவம் தரும் முறையை (பிரேசிலியன் பட் லிஃப்ட்) செய்துகொள்ள ஆலிஸ் வெப் சென்றபோது, அது மதியத்திற்குள் முடிந்துவிடும் என்றும், அதன் பிறகு தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துவர முடியும் என்றும் அவர் நினைத்திருந்தார்.
இந்த அழகியல் சிகிச்சையில், பின்புறப் பகுதியில் அதிக அளவில் டெர்மல் ஃபில்லர்கள் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு அழகு நிலையத்தின் உள்ளே தற்காலிகமாக செயல்பட்ட கிளினிக்கில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், 33 வயதான ஆலிஸ் வெப் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.
ஐந்து குழந்தைகளின் தாயான அவர், சிகிச்சை மேற்கொண்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்தார். அறுவை சிகிச்சை இல்லாமல் மேற்கொள்ளப்படும் பின்புறத்தைப் பெரியதாக்கும் முறைக்கு பிறகு உயிரிழந்த முதல் நபராக அவர் பிரிட்டனில் அறியப்படுகிறார்.
அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில், ஆலிஸின் மரணம் பிரிட்டனில் வேகமாக வளர்ந்து வரும் அழகியல் சிகிச்சைத் துறையைச் சுற்றியுள்ள விவாதத்தின் மையமாக மாறியுள்ளது. தற்போது அழகியல் ஊசிச் சிகிச்சைகள், முக்கிய சாலைகளில் உள்ள அழகு நிலையங்கள் முதல் வாடகை அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல் அறைகள் வரை பல்வேறு இடங்களில் எளிதாகக் கிடைக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தத் துறையைப் பற்றி நான் விசாரணை நடத்தி வருகிறேன். கிளினிக்குகளின் கதவுகளுக்குப் பின்னால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிய, நான் அடையாளத்தை மறைத்து ஆய்வு செய்தேன்.
அப்போது, அலுவலகக் கட்டடங்களுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிகிச்சை அறைகளில், என் உடலில் நூற்றுக்கணக்கான மில்லிலிட்டர் ஃபில்லர்களை செலுத்தத் தயாராக இருந்த நிபுணர்களை நான் சந்தித்தேன்.
முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல், மருத்துவரின் பரிந்துரை அவசியமான மருந்துகள் எனக்கு வழங்கப்பட்டன. சமூக வலைதளங்கள் மூலமாக, எந்த அடையாளமும் இல்லாத உடல் எடைக் குறைப்பு ஊசிகளும் விற்கப்பட்டன.
அழகியல் ஊசிச் சிகிச்சைகளை மேற்கொண்ட டஜன் கணக்கான பெண்களுடன் நான் பேசியுள்ளேன். வலியற்றது, குறைந்த ஆபத்து கொண்டது என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த சிகிச்சைகள் காரணமாக அவர்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொற்றுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அழகியல் சிகிச்சைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட சேவையான சேவ் ஃபேஸ் , அழகியல் சிகிச்சைகளுடன் தொடர்புடைய பல தீவிர பாதிப்பு சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக கூறுகிறது.
அவற்றில், தவறாக மேற்கொள்ளப்பட்ட கண் இமை அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்களை முழுமையாக மூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவரும், கொழுப்பு அகற்றும் சிகிச்சையின் போது குடலில் துளை ஏற்பட்ட மற்றொருவரும் அடங்குவர்.
"இது மிகவும் கொடூரமானது. ஒரு திகில் திரைப்படத்தில் வரும் சம்பவம் போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில், இத்தகைய சிகிச்சைகள் நம் நகரங்களின் முக்கிய வணிகப் பகுதிகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன," என்று சேவ் ஃபேஸ் அமைப்பின் இயக்குநர் ஆஷ்டன் காலின்ஸ் கூறுகிறார்.
அழகியல் ஃபில்லர் ஊசிச் சிகிச்சைகளுக்கான ஒழுங்குமுறைகள் மிகவும் தளர்வாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாகும். பல ஐரோப்பிய நாடுகளைப் போல அல்லாமல், பிரிட்டனில் யார் வேண்டுமானாலும் டெர்மல் ஃபில்லர் செலுத்துவதற்கான பயிற்சியைப் பெற்று, பொதுமக்களுக்கு இந்த சிகிச்சைகளை வழங்க சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பல பில்லியன் பவுண்டு மதிப்புடைய துறைக்கு கடுமையான ஒழுங்குமுறைகளை கொண்டு வர இருப்பதாக தற்போது ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்
ஆனால், இந்த நடவடிக்கைகள் உண்மையில் பலன் அளிக்குமா? மேலும், டெர்மல் ஃபில்லர்கள் "எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய நெருக்கடி" என்று நிபுணர்கள் எச்சரித்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், ஏன் மக்கள் இன்னும் தவிர்க்கக்கூடிய பாதிப்புகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்?
மிகப் பெரிய மாற்றம்
2024 ஜூன் மாதத்தில், எசெக்ஸில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தற்காலிகமாக செயல்பட்ட கிளினிக்கில் அறுவை சிகிச்சை இல்லாத பின்புறத்தைப் பெரிதாக்கும் முறையை (பிரேசிலியன் பட் லிஃப்ட்) ஜோயன் மேற்கொண்டார். ஆலிஸ் உயிரிழப்பதற்கு முன்பே இந்த சிகிச்சையை அவர் செய்துகொண்டிருந்தார்.
துருக்கிக்குச் சென்று அறுவை சிகிச்சை மூலம் பின்புறத்தைப் பெரிதாக்கும் முறையை மேற்கொள்வதை விட, இது குறைவான ஆபத்து கொண்டதாக அவர் கருதியிருந்தார்.
"எனக்கு அழகாக வடிவமைந்த பின்புறம் வேண்டும் என்பதுதான் ஆசை," என்று தெற்கு வேல்ஸைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஜோயன் கூறுகிறார்.
"அங்கிருந்து உடனே திரும்பி வந்திருக்க வேண்டும்."
சிகிச்சையின் போது அவரது உடலில் ஒரு லிட்டர் அளவிலான ஃபில்லர் செலுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு சிறிது நேரத்திலேயே கடுமையான தொற்றுநோயான செப்சிஸ் பாதிப்பால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், அந்த சிகிச்சையால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் தனது தொடைகள் மற்றும் பின்புறப் பகுதியில் இன்னும் இருப்பதாக அவர் கூறுகிறார்.
ஒருகாலத்தில் அழகியல் ஊசிச் சிகிச்சைகள், வயதான தோற்றத்தை குறைக்க விரும்பும் வசதியான நடுத்தர வயதினருடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டிருந்தன.
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தத் துறை மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது.

டெர்மல் ஃபில்லர்கள் மற்றும் போடாக்ஸ் போன்ற சிகிச்சைகள் தற்போது மிகவும் இளம் வயதினரையும் இலக்காகக் கொண்டு சந்தைப்படுத்தப்படுகின்றன.
டெர்மல் ஃபில்லர்கள் என்பது பொதுவாக ஹையாலுரோனிக் அமிலத்தால் தயாரிக்கப்படும் ஊசி மூலம் செலுத்தப்படும் ஜெல் ஆகும். உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கூடுதல் அளவையும் வடிவத்தையும் வழங்க அவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்தச் சிகிச்சைகள் தற்போது மருத்துவ நடைமுறைகளாக அல்லாமல், வழக்கமான அழகுப் பராமரிப்பு சிகிச்சைகளாகவே விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இந்த மாற்றத்திற்குப் பின்னால் சமூக வலைதளங்களும் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக *சேவ் ஃபேஸ்* அமைப்பின் ஆஷ்டன் காலின்ஸ் கருதுகிறார்.
"கார்டாஷியன்ஸ், *லவ் ஐலண்ட்* போன்ற நிகழ்ச்சிகளும் சமூக வலைதளங்களும், இளம் பெண்கள் பெரிய உதடுகள், கன்னங்கள் மற்றும் சுருக்கமற்ற முகத் தோற்றத்தை விரும்பும் போக்கை உருவாக்கின," என்று அவர் கூறுகிறார்.
அதே நேரத்தில், ஊசி மூலம் வழங்கப்படும் இந்த அழகியல் சிகிச்சைகள் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியதாக மாறியுள்ளன. பல இடங்களில் அவை அழகு நிலையங்களிலிருந்தே வழங்கப்படுகின்றன.
இதனால், இவை வழக்கமான அழகுப் பராமரிப்பு சேவைகளைப் போன்றதாக மக்களுக்குத் தோன்றக்கூடும் என்று காலின்ஸ் கூறுகிறார்.
"மக்கள் நக அலங்காரம் அல்லது புருவ அலங்காரம் செய்து கொள்ளச் செல்லும்போது, இந்தச் சிகிச்சைகளையும் அதனுடைய நீட்சியாகவே பார்க்கலாம்," என்கிறார் அவர்.
"உங்களுக்கு 35 வயதிற்குக் குறைவாக இருந்தால், நீங்கள் இந்தச் சிகிச்சைகளை மருத்துவ நடைமுறைகளாக அல்லாமல், அழகுப் பராமரிப்பு சிகிச்சைகளாகவே பார்க்கும் வாய்ப்பு அதிகம்."

இதன் விளைவாக, மக்கள் பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றுகளை விட வசதி, பிரபலம் மற்றும் விலை போன்ற அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர் என்று காலின்ஸ் கூறுகிறார்.
"போடாக்ஸ் என்பது மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே வழங்கப்பட வேண்டிய மருந்து என்பது பலருக்குத் தெரியாது. இந்தச் சிகிச்சைக்கு முன் சுகாதார நிபுணரால் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை," என்று அவர் கூறுகிறார்.
இந்த காரணிகள் அனைத்தும் சேர்ந்து இந்தத் துறையின் அபார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. ஆனால் அதே நேரத்தில், பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் நபர்கள் இந்தத் துறையில் வளர்வதற்கான சூழலையும் உருவாக்கியுள்ளதாக காலின்ஸ் எச்சரிக்கிறார்.
"சமூக வலைதளங்களில் இந்தச் சிகிச்சைகள் எவ்வாறு காட்சிப்படுத்தப்படுகின்றது என்றால், அவற்றுடன் தொடர்புடைய ஆபத்துகள் குறித்த மக்களின் உணர்வை பெருமளவில் குறைத்துவிடுகிறது," என்று அவர் கூறுகிறார்.
வேகமான வளர்ச்சி
இந்தத் துறையின் உண்மையான அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், இந்தச் சிகிச்சைகளை வழங்குபவர்களுக்கான மத்திய பதிவேடு எதுவும் இல்லை. மேலும், இந்தத் துறையின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் அதிகாரப்பூர்வ தரவுத்தளமும் இல்லை.
இந்த சந்தையின் மிகப் பெரிய பிரிவுகளில் ஒன்றான போடாக்ஸ் சிகிச்சையின் அளவை மதிப்பிடுவதற்காக, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆராய்ச்சியாளருமான அலெக்சாண்டர் சார்கரன் ஆய்வு மேற்கொண்டார்.
அவரது ஆய்வின்படி, 2025-ஆம் ஆண்டில் பிரிட்டன் முழுவதும் கிட்டத்தட்ட 20,000 பேர் போடாக்ஸ் சிகிச்சைகளை வழங்கி வந்தனர். 2023-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,500-க்கும் சற்று அதிகமாக இருந்தது.
"இந்தத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது நமக்குத் தெரியும்," என்று சார்கரன் கூறுகிறார்.
இந்த அதிகரிப்பில் ஒரு பகுதி, இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்பவர்களை விரிவாகக் கண்டறிந்ததன் விளைவாக இருக்கலாம். இருந்தாலும், வெறும் இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறுகிறார்.

சார்கரனின் ஆய்வின்படி, மருத்துவத் தகுதி இல்லாத அழகியல் நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது.
2023 முதல் 2025 வரை, மருத்துவத் தகுதி இல்லாத அழகியல் நிபுணர்களின் விகிதம் 12 சதவீதத்திலிருந்து 24.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், போடாக்ஸ் சிகிச்சைகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் அதிகமாகக் கிடைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
மிகவும் பின்தங்கிய பகுதிகளில், சிகிச்சை வழங்குபவர்களின் அடர்த்தி, வசதியான பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஆறு மடங்குக்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் அதே நேரத்தில், அந்தப் பகுதிகளில் மருத்துவத் தகுதி பெற்ற நிபுணர்களை அணுகும் வாய்ப்பு குறைவாக இருந்தது.
இதனால் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
பிரிட்டன் முழுவதும் தற்போது பல்லாயிரக்கணக்கான அழகியல் ஊசிச் சிகிச்சை நிபுணர்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவர்களை ஒழுங்குபடுத்துவதற்கான பொறுப்பு யாரிடமாவது இருக்க வேண்டாமா?
குறைவான ஒழுங்குமுறையா?
தற்போது பிரிட்டனில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி, யார் வேண்டுமானாலும் பயிற்சி பெற்று, டெர்மல் ஃபில்லர் பொருட்களை வாங்கி, பொதுமக்களுக்கு இந்தச் சிகிச்சைகளை வழங்கலாம்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மீது புகார்களை விசாரித்து, தண்டனை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரம் கொண்ட தொழில்முறை ஒழுங்குமுறை அமைப்புகள் உள்ளன. ஆனால் மருத்துவத் தகுதி இல்லாத அழகியல் சிகிச்சை நிபுணர்களைக் கண்காணிக்கும் அதேபோன்ற சட்டபூர்வ ஒழுங்குமுறை அமைப்பு இல்லை.
இதற்கு மாறாக, ஆஸ்திரியாவில் போடுலினம் டாக்சின் (போடாக்ஸ்) மற்றும் டெர்மல் ஃபில்லர் சிகிச்சைகள் மருத்துவ நடைமுறைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றை பொதுவாக மருத்துவர்களே மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிரான்சில் மருத்துவத் தகுதி இல்லாதவர்கள் ஊசி மூலம் வழங்கப்படும் அழகியல் சிகிச்சைகளை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அழகியல் சிகிச்சை நிபுணர்களுக்கான கூட்டுக் கவுன்சிலின் (ஜேசிசிபி) தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ராங்கின், பிரிட்டனின் இந்த தளர்வான அணுகுமுறை, நுகர்வோர் தேர்வுச் சுதந்திரத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளித்து வந்த ஒழுங்குமுறை கலாசாரத்தின் பிரதிபலிப்பாகும் என்றார்
"பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, புதுமையான மற்றும் திறமையான பொருளாதாரத்தையும் பராமரிக்கும் வகையில் அரசுகள் சமநிலையை உருவாக்க முயல்கின்றன," என்று அவர் கூறுகிறார்.
2023-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு கருத்து கேட்டபோது, புதிய ஒழுங்குமுறைகள் அளவுக்கு மீறியதாக இருக்கக் கூடாது என்று சிலர் எச்சரித்தனர்.
பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பதில் பரவலான ஆதரவு இருந்தபோதிலும், இந்தத் துறையின் பெரும்பகுதியை உருவாக்கும் சிறு தொழில்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து கவலைகள் எழுந்தன. மேலும், மிகவும் கடுமையான விதிமுறைகள் நுகர்வோர் தேர்வுகளை குறைக்கக்கூடும் அல்லது துறையின் ஒரு பகுதியை கட்டுப்பாடற்ற மறைமுக செயல்பாடுகளுக்குள் தள்ளக்கூடும் என்றும் சிலர் கூறினர்.
ஆனால், தற்போதைய சூழலில் நுகர்வோர் ஒருவர் சிகிச்சை வழங்குபவரின் தகுதிகளை மதிப்பிடுவதும், அவர் என்ன பயிற்சி பெற்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதும், சிகிச்சையில் தவறு ஏற்பட்டால் எங்கு உதவி பெற வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதும் கடினமாக உள்ளது என்று சார்கரன் கூறுகிறார்.
"நீங்கள் ஒரு மருத்துவ நிபுணராக இருந்தால், ஒப்புதல் பெறுதல், சிகிச்சை மேற்கொள்ளுதல், பிந்தைய பராமரிப்பு மற்றும் சிக்கல்களைக் கண்டறிதல் போன்ற முக்கிய நடைமுறைகளில் பயிற்சி பெற்றிருப்பீர்கள்," என்று அவர் கூறுகிறார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பே, மருத்துவப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படாத சிலிகான் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மார்பக இம்பிளாண்டுகள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பொருத்தப்பட்டதாக வெளிச்சத்துக்கு வந்த பிஐபி சர்ச்சைக்குப் பிறகு, அழகியல் சிகிச்சைத் துறையை ஆய்வு செய்ய அரசு ஒரு சுயாதீன மதிப்பாய்வை நியமித்தது.
அப்போது தேசிய சுகாதார சேவையின் மருத்துவ இயக்குநராக இருந்த பேராசிரியர் சர் புரூஸ் கியோ தலைமையில் நடைபெற்ற அந்த ஆய்வு, டெர்மல் ஃபில்லர்கள், போடாக்ஸ் மற்றும் பிற அறுவை சிகிச்சை இல்லாத அழகியல் நடைமுறைகள் உட்பட முழுத் துறையையும் ஆராய்ந்தது.
அந்த ஆய்வில், அறுவை சிகிச்சை இல்லாத அழகியல் சிகிச்சைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு, "ஒரு பேனா அல்லது பல் துலக்கி வாங்கும் நபருக்குக் கிடைக்கும் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு எதுவும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டது.
மேலும், "டெர்மல் ஃபில்லர்கள் எப்போது வேண்டுமானாலும் பெரிய நெருக்கடியாக மாறக்கூடியவை" என்றும் அந்த அறிக்கை எச்சரித்தது.
சிகிச்சை வழங்குபவர்களுக்கு உரிமம் வழங்கும் முறை, கடுமையான பயிற்சி நிபந்தனைகள் மற்றும் யார் இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றும் அந்த மதிப்பாய்வு பரிந்துரைத்தது.
கியோ மதிப்பாய்வுக்குப் பிறகு, அரசு தன்னார்வ அடிப்படையிலான சுய ஒழுங்குமுறை முறையை அறிமுகப்படுத்தியது.
அதன் ஒரு பகுதியாக, ஜேசிசிபி போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு, தரநிலைகளை நிர்ணயிப்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட பதிவேடுகளில் சிகிச்சை வழங்குபவர்கள் இணைவதையும் ஊக்குவித்தன.
ஆனால் இந்த அணுகுமுறை வெற்றியடையவில்லை என்று ராங்கின் கூறுகிறார்.
"இன்று கூட பலர் எந்தத் தன்னார்வ ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் வெளியிலேயே செயல்பட்டு வருகின்றனர்," என்று அவர் கூறுகிறார்.
அமலாக்கச் சிக்கல்
2023 அக்டோபரில் எசெக்ஸில் உள்ள ஒரு கிளினிக்கில் திரவ வடிவிலான பிரேசிலியன் பட் லிஃப்ட் சிகிச்சை மேற்கொண்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, போல்டனைச் சேர்ந்த 28 வயதான லூயிஸ் மோலர் செப்சிஸ் பாதிப்பால் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனது தாயார் ஜானெட் டெய்லருக்கு தொலைபேசியில் அழைத்தார்.
"அம்மா, நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.
செப்சிஸ் அவரது உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்க, அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரது இடது பின்புறப் பகுதியில் இறந்த திசுக்களின் பெரிய பகுதிகளை அகற்ற வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Janet Taylor
இந்தச் சிகிச்சையை மேற்கொண்ட நபரான ரிக்கி சாயர் மீது ஜானெட் புகார் அளித்தார். ஜோயனுக்கு செப்சிஸ் ஏற்பட்ட பிரேசிலியன் பட் லிஃப்ட் சிகிச்சையையும் மேற்கொண்டவர் இவரே. அழகியல் துறையில் மோசமான பெயர் பெற்ற ஊசி சிகிச்சை நிபுணராக அவர் அறியப்படுகிறார்.
ஆனால், சிகிச்சை எசெக்ஸில் நடைபெற்றிருந்த நிலையில், லூயிஸ் கிரேட்டர் மான்செஸ்டரில் வசித்ததால், இந்த வழக்கு ஒரு காவல்துறையிலிருந்து மற்றொரு காவல்துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று தன்னிடம் கூறப்பட்டதாக ஜானெட் தெரிவிக்கிறார்.
2025-ஆம் ஆண்டு இது குறித்து பிபிசி கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையையும் எசெக்ஸ் காவல்துறையையும் தொடர்புகொண்டபோது, இரு தரப்பினரும் விசாரணைக்கான பொறுப்பு மற்றொரு காவல்துறையிடமே இருப்பதாக தெரிவித்தன.
இந்தக் கட்டுரைக்காக மீண்டும் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையை தொடர்புகொண்டபோதும், பதில் எதுவும் கிடைக்கவில்லை. எசெக்ஸ் காவல்துறை, "இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்," என்று கூறியபோதிலும், விசாரணைக்கான பொறுப்பு கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையிடமே உள்ளது என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
காலின்ஸைப் பொறுத்தவரை, லூயிஸின் அனுபவம் அமலாக்க அமைப்பில் உள்ள ஒரு பரவலான தோல்வியை வெளிப்படுத்துகிறது.
"இத்தகைய நிபுணர்களை யாரோ ஒருவர் கண்காணித்து வருவார்கள் என்றும், தவறு நடந்தால் அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வார்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் அப்படி எதுவும் இருப்பதில்லை," என்று அவர் கூறுகிறார்.
ஜானெட் தனது மகளுக்காக நீதி கிடைக்கப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், லண்டன் புறநகரில் உள்ள ஓர் அலுவலகக் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்ட கிளினிக்கில் வாடிக்கையாளராக நடித்து நான் சென்றேன். அங்கு ரிக்கி சாயர் இன்னும் சிகிச்சைகளை மேற்கொண்டுக்கொண்டிருந்தார்.
அந்தச் சந்திப்பின்போது, ஒரு லிட்டர் வரை ஃபில்லர் செலுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும், முறையான மருந்துச் சீட்டு வழங்காமல், மருத்துவரின் பரிந்துரை அவசியமான மருந்துகளையும் வழங்கினார். மருந்து பரிந்துரைக்கும் அதிகாரம் கொண்ட நிபுணர் இல்லாத நிலையிலும், உள்ளூர் மயக்க மருந்து செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் காணொளிக் காட்சிகளைப் பார்த்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டால்வி ஹம்சா, இந்த நடைமுறைகளை "அதிர்ச்சியூட்டுபவை" என்றும் "மிகவும் ஆபத்தானவை" என்றும் விவரித்தார்.
2025 பிப்ரவரியில் சாயர் குறித்த எங்களது செய்தி ஒளிபரப்பான பிறகு, டிராஃபோர்ட் கவுன்சில் தொடர்ந்த சட்ட நடவடிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர் சிகிச்சை வழங்குவதிலிருந்து தடை செய்யப்பட்டார்.
பின்னர் அந்தத் தடையுத்தரவை மீறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. விசாரணையின்போது, இந்தச் சிகிச்சைகள் ஆபத்தானவை என்பதைத் தெரிந்திருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
இப்போது அவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எங்கும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், அந்தத் தடையை அமல்படுத்த பல ஆண்டுகள் எடுத்துள்ளது.

பிரச்னை இந்த முறையை வழங்குபவர்களிடம் மட்டுமல்ல; பயன்படுத்தப்படும் பொருட்களும் போதுமான ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை அல்ல. சட்டவிரோத மருந்துகள் மற்றும் போலிப் பொருட்கள் தொடர்பான கவலைகள் சமீப ஆண்டுகளில் இந்தத் துறையில் மீண்டும் மீண்டும் எழுந்துள்ளன.
2025-ஆம் ஆண்டு பிபிசி மேற்கொண்ட மறைமுக விசாரணையில், தொழில்முறை வழிகாட்டுதல்களின்படி கட்டாயமான நேரடி ஆலோசனைகளை நடத்தாமல் சில செவிலியர்களும் மருந்தாளுநர்களும் போடாக்ஸ் வழங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல், உரிமம் பெறாத மற்றும் போலியான பொருட்கள் பிரிட்டன் சந்தைக்குள் நுழைந்து வருவது குறித்து அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். வடக்கு அயர்லாந்தில், 2023-ஆம் ஆண்டு போலீசார் 7 லட்சத்திற்கும் அதிகமான போலி மற்றும் உரிமம் பெறாத மருந்துகளை பறிமுதல் செய்தனர். அவற்றில் போடாக்ஸ் பொருட்களும் அடங்கும். பின்னர் கிளாஸ்கோவில், அழகியல் சிகிச்சைத் தொழிலுடன் தொடர்புடைய சோதனையொன்றில் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள டெர்மல் ஃபில்லர்கள், ஊசிகள் மற்றும் போடுலினம் டாக்சின் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் துறையின் அமலாக்கப் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகங்கள், காவல்துறைகள், மருந்து ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில்முறை அமைப்புகள் என பல இடங்களில் சிதறிக் கிடக்கிறது என்றும், இதற்குப் பொறுப்பான ஒரே அமைப்பு எதுவும் இல்லை என்றும் பிரசாரகர்கள் கூறுகின்றனர்.
"நாடு முழுவதும் உள்ள அழகுக்கலை நிலையங்களுக்குள் சென்று, முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமலேயே போடாக்ஸ் சிகிச்சை பெற முடிகிறது," என்று காலின்ஸ் கூறுகிறார்.
"இது நடக்கக் கூடாது. ஆனால் போதுமான அமலாக்கம் இல்லாததால் தொடர்ந்து நடக்கிறது."
மீண்டும் மீண்டும் தாமதமாகும் ஒழுங்குமுறைகள்
2013-ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்த அரசுகள் இந்தத் துறையில் சீர்திருத்தம் அவசியம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும், முழுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
2022-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சுகாதார மற்றும் பராமரிப்பு சட்டம் இதற்கான முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட்டது. இந்தச் சட்டம், இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை இல்லாத அழகியல் நடைமுறைகளுக்கு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த அமைச்சர்களுக்கு அதிகாரம் அளித்தது.
2025-ஆம் ஆண்டு, இந்த உரிமம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசுக்கு விருப்பம் இருப்பதாக அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர்.
சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர், "அதிக ஆபத்துள்ள நடைமுறைகளை தகுதி பெற்ற சுகாதார நிபுணர்கள் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் விரைவில் கடுமையான புதிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்," என்றார்.
குறைந்த ஆபத்துள்ள நடைமுறைகளுக்கும் உரிமம் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஸ்காட்லாந்தில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, போடாக்ஸ் மற்றும் டெர்மல் ஃபில்லர் ஊசிகள் போன்ற சிகிச்சைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட கிளினிக்குகள் போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
மேலும், 18 வயதிற்குக் குறைவானவர்களுக்கு இத்தகைய சிகிச்சைகளை வழங்குவது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து அரசு, இந்த விதிமுறைகள் அனைத்தும் 2027 செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், குறைந்த ஆபத்துள்ள நடைமுறைகளுக்கான உள்ளாட்சி உரிமம் வழங்கும் திட்டமும் அதே காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வடக்கு அயர்லாந்தின் சுகாதாரத் துறை, அறுவை சிகிச்சை இல்லாத அழகியல் சிகிச்சைகளுக்குக் கட்டாய ஒழுங்குமுறை அல்லது உரிமம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், போடாக்ஸ் போன்ற மருந்துகளின் சட்டவிரோத விநியோகம், தவறான பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்கு எதிராக "உறுதியான நடவடிக்கைகள்" எடுக்கப்படுகின்றன என்று அந்தத் துறை கூறுகிறது.
வேல்ஸ் அரசு, அக்குபங்சர், டிரை நீட்லிங், எலக்ட்ரோலிசிஸ், பச்சைக்குத்துதல் மற்றும் அரை நிரந்தர ஒப்பனை போன்ற நடைமுறைகளுக்கான கட்டாய உரிமம் வழங்கும் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை கண்காணித்து வருவதாகவும், அதன் அனுபவம் எதிர்காலத்தில் பிற நடைமுறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்பதை தீர்மானிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், உரிமம் வழங்கும் முறை முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் பல பணிகள் மீதமுள்ளன.
கூடுதல் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விரிவான விதிமுறைகள் இன்னும் தயாரிக்கப்பட வேண்டும். மேலும், புதிய அமைப்பை அமல்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தேவையான வளங்களும் வழங்கப்பட வேண்டும்.
இதற்கிடையில், இங்கிலாந்து அமைச்சர்கள், அதிக ஆபத்துள்ள முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்காக முன்மொழியப்பட்டுள்ள "சிவப்பு பிரிவு" பட்டியலில், அறுவை சிகிச்சை இல்லாத பிரேசிலியன் பட் லிஃப்ட், முக வடிவ மாற்றச் சிகிச்சைகள் மற்றும் வயிறு, தொடைகள், பின்புறம் போன்ற உடல் பகுதிகளின் வடிவத்தை மாற்றும் ஃபில்லர் அடிப்படையிலான உடல் வடிவமைப்பு சிகிச்சைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"சில சிகிச்சைகள் தகுதியான நிபுணர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் பரவலான ஒற்றுமை உள்ளது," என்று ராங்கின் கூறுகிறார்.
சீர்திருத்தத்தை ஆதரிப்பவர்கள், எதிர்காலத்தில் சிகிச்சை வழங்குபவர்களுக்கும், அவர்கள் செயல்படும் இடங்களுக்கும் தனித்தனியாக உரிமம் கட்டாயமாக்கப்படும் என்று நம்புகின்றனர்.
டெர்மல் ஃபில்லர்கள் "எப்போது வேண்டுமானாலும் நெருக்கடியாக மாறக்கூடியவை" என்று கியோ மதிப்பாய்வு எச்சரித்துப் பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
இப்போது பிரச்னை எச்சரிக்கைகள் இல்லாதது அல்ல என்று பிரசாரகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஏற்கனவே உள்ள விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதே தொடர்ந்து மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































