யேமன் அருகே தாக்கப்பட்ட இந்தியக் கொடி தாங்கிய கப்பல் மூழ்கியது - யார் காரணம்?

இந்தியக் கொடி ஏந்திய கப்பல், யேமன் கடற்கரைக்கு அருகில் ஒரு ஏவுகணை தாக்கியதால் கவிழ்ந்து மூழ்கியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, யேமன் கடற்கரைக்கு அப்பால் அந்தக் கப்பல் மூழ்கியதாகக் கூறப்படுகிறது (கோப்புப் படம்).
    • எழுதியவர், சோபியா ஃபெரைரா சாண்டோஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய கொடி தாங்கிய கப்பல், யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்கானதில் கப்பல் கவிழ்ந்து மூழ்கியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எம்.எஸ்.வி ஃபேஸ் நூர்-ஏ-ஒலியா என்ற கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

"எந்தத் தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு" கண்டனம் தெரிவித்த சோனாவால், அப்பகுதியில் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. இருப்பினும், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசு, இந்தத் தாக்குதலுக்கு ஹூத்தி கிளர்ச்சியாளர்களே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

செங்கடலில் கப்பல்கள் மீது சமீபத்தில் நடந்த தொடர் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரான் ஹோமுஸ் நீரிணையை மூடியதைத் தொடர்ந்து, சில எண்ணெய் டேங்கர் கப்பல்கள் இந்த மாற்று கடல் வழியைப் பயன்படுத்தி வருகின்றன.

அப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் "ஆழ்ந்த கவலைக்குரிய விஷயம்" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"இப்பகுதியில் வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குவது நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு, பிராந்திய சர்வதேச நீர்வழிகளில் தடையில்லா சுதந்திரமான போக்குவரத்தும் வர்த்தகமும் கூடிய விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும்" என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யேமன் வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சௌதி ஆதரவு பெற்ற யேமன் அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தாக்குதலானது ஹூத்தி பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து செய்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நகரங்களைக் குறிவைப்பது, விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது குண்டுவீசுவது, ஏற்றுமதியை முடக்குவது மற்றும் யேமன் மக்களின் அத்தியாவசிய வருமான ஆதாரங்களைப் பறிப்பது ஆகியவை இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்."

"ஹூத்திகளின் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள மனிதநேயப் பேரழிவை இது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது" என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

"மேலும், ஹூத்தி அமைப்பு செங்கடல், பாப் அல்-மண்டேப் நீரிணை மற்றும் ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளில் உள்ள துறைமுகங்களுக்கும் கடல்சார் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்குவதோடு, பிராந்தியத்தின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களைப் பாதிக்கிறது."

பிப்ரவரி இறுதியில் இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல கடல்சார் வர்த்தக வழிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியது. இது உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

சௌதி அரேபியாவிலிருந்து எண்ணெயைச் சுமந்து செல்லும் சில கப்பல்கள் செங்கடலில் உள்ள மாற்று கடல் வழிகளைப் பயன்படுத்தி வந்தன.

இருப்பினும், சௌதி எண்ணெய் கப்பல்கள் மீது யேமனின் ஹூத்தி ஆயுதக்குழுவினர் சமீபத்தில் நடத்திய தாக்குதல்கள், அப்பகுதியில் அபாயங்களை மேலும் அதிகரித்துள்ளன.

செங்கடலில் அதிகரிக்கும் ஆபத்து

சௌதி அரேபியாவிலிருந்து எண்ணெய்யைச் சுமந்து செல்லும் சில கப்பல்கள் செங்கடலில் உள்ள மாற்று கடல் வழிகளைப் பயன்படுத்தி வந்தன.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, யேமன் கடற்கரைக்கு அப்பால் கப்பல் மூழ்கியதாகக் கூறப்படுகிறது (கோப்புப் படம்).

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சௌதி ஆதரவு பெற்ற மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசின் போக்குவரத்து அமைச்சகம், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஒரு படகைப் பயன்படுத்தி இரானின் ஆதரவு பெற்ற ஹூத்திகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஹூத்திகள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஜூலை 20 அன்று சௌதி அரேபியாவின் செங்கடல் துறைமுகங்களை 'முற்றுகை' இடப் போவதாக ஹூதிகள் அறிவித்திருந்தனர்.

கடந்த வாரத்தில் அப்பகுதியில் உள்ள கப்பல்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் முகமை (UK Maritime Trade Operations) தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கூடிய ஒப்பந்தத்தை இரானுடன் எட்ட முடியும் என்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.

ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும், நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், அடுத்த 60 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவும் இரானும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டன.

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்று வாரங்களுக்குப் பிறகு, நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது இரான் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, போர்நிறுத்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் புதன்கிழமைக்குள் எட்டப்படலாம் என்று நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசண்ட் கூறியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை முன்னேறி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதற்கிடையில், தான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும் இரான் கூறியுள்ளது. ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இரான் தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு