டயானா மறைந்த பிறகு சார்லஸ் தொலைபேசியில் கூறியது என்ன? டயானா சகோதரர் பிபிசிக்கு பேட்டி

டயானாவின் மறைவுக்குப் பிறகு சார்லஸ் கூறியது குறித்து 'உண்மையைத் தான் சொல்வதாகக் கூறுகிறார் ஏர்ல் ஸ்பென்சர்
படக்குறிப்பு, டயானாவின் மறைவுக்குப் பிறகு சார்லஸ் கூறியது குறித்து 'உண்மையை தான் சொல்வதாகக் கூறுகிறார் ஏர்ல் ஸ்பென்சர்
    • எழுதியவர், லாரா குயென்ஸ்பெர்க்
    • பதவி, பிபிசி தொகுப்பாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தனது சகோதரி இளவரசி டயானா உயிரிழந்த சில நாள்களுக்குப் பிறகு, மன்னர் சார்லஸுடன் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து தான் கூறுவது உண்மைதான் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் பிபிசிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

புதிதாக வெளியாகவுள்ள தனது புத்தகத்தில், அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி நடந்து செல்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, "அவளை நாம் விரைவில் மறந்துவிடுவோம்" என்று கூறியதாக ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பக்கிங்ஹாம் அரண்மனை, "சகோதரர் அல்லது சகோதரியை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மழுங்கச் செய்யலாம். முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கலாம், நினைவுகளையும் மற்றவர்கள் அடையாளம் காண முடியாத வகையில் மாற்றியமைக்கலாம். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இது நிகழலாம் என்பதை மன்னர் அறிந்திருக்கிறார்." என்று தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பான முதல் நேர்காணலில் பேசிய ஏர்ல் ஸ்பென்சர், "அவர் சொன்ன வார்த்தைகள் அவைதான் என்பதை இங்கே, இப்போதே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்." என்றார்.

அரண்மனையின் அரிதான இந்த அறிக்கை குறித்து அவர் கூறுகையில், "அப்படியென்றால், அவர் கோபமாக இருக்கிறாரா? மிகவும் கோபமாக இருக்கிறாரா? அல்லது அவர் சங்கடமாக இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் (அப்போது அவர்களுக்கு வயது 15 மற்றும் 12) ஏர்ல் ஸ்பென்சருடன் சேர்ந்து தங்கள் தாயாரின் சவப்பெட்டியின் பின்னால் அவர்களது தந்தையுடன் நடந்தனர்.

பட மூலாதாரம், Jeff Overs/BBC

படக்குறிப்பு, இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் (அப்போது அவர்களுக்கு வயது 15 மற்றும் 12) ஏர்ல் ஸ்பென்சருடன் சேர்ந்து தங்கள் தாயாரின் சவப்பெட்டியின் பின்னால் அவர்களது தந்தையுடன் நடந்தனர்.

தனது ஆல்தோர்ப் எஸ்டேட்டில் பிபிசியிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், "எனது வாழ்நாள் முழுவதும் இளவரசர் சார்லஸுடன் தொலைபேசியில் நேரடியாகப் பேசியது இரண்டு முறை மட்டுமே. அவர் என்ன சொல்கிறார் என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருந்தேன். அவர் சொன்ன வார்த்தைகள் அவைதான். இதை இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்கிறேன். உண்மையாகவே, அவர் அப்படித்தான் கூறினார். அதை அவர் கூறவில்லை என்று சொல்வதை நான் கேட்கவில்லை."

இந்தக் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று மீண்டும் கேட்கப்பட்ட போது, அப்போது நடந்த உரையாடலைப் பற்றி தனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தெரிவித்ததாக ஏர்ல் ஸ்பென்சர் கூறினார். "அது மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்ததால்" அவர்களிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

தனது கூற்றை அரண்மனை மறுத்தது குறித்து அவர் கூறுகையில், "அவர்கள் அந்த விஷயத்தை ஒருவிதமாக மழுங்கடித்துவிட்டார்கள், இல்லையா? நினைவுகள் மாறுபடலாம் என்று கூறியிருக்கிறார்கள்" என்றார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மக்கள் எந்த சார்லஸின் கூற்றை நம்ப வேண்டும் என்று கேட்கப்பட்ட போது, ஏர்ல் ஸ்பென்சர், "நான் சொல்வது உண்மை" என்றார்.

ஏர்ல் ஸ்பென்சரின் இந்தப் புதிய கருத்துகள் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை எந்தப் பதிலும் அளிக்க மறுத்துவிட்டது.

இந்தக் கருத்துகள், மன்னருக்கும் அவரது முன்னாள் மைத்துனரான ஏர்ல் ஸ்பென்சருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தைப் போருக்கு மீண்டும் கவனம் ஈர்க்கக்கூடும்.

டெய்லி மெயில் வெளியிட்டுள்ள அவரது புத்தகத்தின் பகுதிகளில், டயானா தனது மகன்கள் அந்த இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் நடந்து செல்வதை விரும்பியிருக்க மாட்டார் என்று தான் வலியுறுத்திய பிறகு இந்தத் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லஸ் "கடுமையாகக் கோபமடைந்து", சிறிது நேரம் ஆவேசமாகப் பேசியதாகவும், தனது குடும்பத்தினருக்கு போதுமான கடமை உணர்வு இல்லை என்று குற்றம்சாட்டியதாகவும் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் ஏர்ல் ஸ்பென்சர் கூறினார்.

"பின்னர் அவர் பேசுவதை நிறுத்தினார். அப்போது, 'சரி, இப்போது அவர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, பொருத்தமான ஏதாவது ஒன்றைச் சொல்லப் போகிறார்' என்று நினைத்தேன்.

"ஆனால், அதற்குப் பிறகு அவர், 'அவளை நாம் விரைவில் மறந்துவிடுவோம்' என்று கூறினார்" என்று ஏர்ல் ஸ்பென்சர் தெரிவித்தார்.

அந்தக் கணத்தில் தனது மனதில் என்ன ஓடியது என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது என்றும், தான் "மிகவும் அதிர்ச்சியடைந்திருந்ததாகவும்" அவர் கூறினார்.

"அதிர்ச்சியில் சில நொடிகள் அமைதியாக இருந்தேன். பின்னர், 'நீங்கள் இப்போது அப்படிச் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை' என்று கூறிவிட்டு, தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டேன்" என்றார்.

ஸ்பென்சர் குடும்பத்திற்குச் சொந்தமான ஆல்டார்ப் (Althorp) தோட்டத்தில் டயானா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, ஸ்பென்சர் குடும்பத்திற்குச் சொந்தமான ஆல்தோர்ப் எஸ்டேட் (Althorp) தோட்டத்தில் டயானா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இறுதிப் பாடல்: டயானா, என் சகோதரி (Swan Song: Diana, My Sister) என்ற ஏர்ல் ஸ்பென்சரின் புத்தகம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதில் பிரிட்டிஷ் அரச குடும்பம் குறித்து கடுமையான விமர்சனங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை வெளியான புத்தகத்தின் மேலும் சில பகுதிகளில், 1997 ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாரிஸில் கார் விபத்தில் டயானா உயிரிழந்த பிறகு சார்லஸ் தன்னைத் தொலைபேசியில் அழைத்தபோது, அவரது குரல் "அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியுடன் இருந்ததாக" ஏர்ல் ஸ்பென்சர் கூறியுள்ளார். அப்போது சார்லஸ் ஒரு "லாட்டரி வென்றவரைப் போல" பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, டயானா விபத்தில் சிக்கிய செய்தியை நள்ளிரவில் தனது சகோதரி ஜேன் தொலைபேசியில் தெரிவித்ததாக ஏர்ல் ஸ்பென்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

அதன் பிறகு அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் சார்லஸின் அழைப்பும் ஒன்று.

"மற்றவர்கள் எனக்கு அழைத்தபோது அவர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அவர்களால் இரங்கலையும் உதவி செய்வதற்கான வார்த்தைகளையும் கூட சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது எனக்கு அவர் லாட்டரி வென்றவரைப் போலத் தோன்றினார்."

மிகவும் பிரபலமான நபராக இருந்த டயானாவின் மரணம், அப்போது பிரிட்டனில் பதற்றமான சூழலை உருவாக்கியது. அரச குடும்பத்தினர் தங்களது உணர்வுகளையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தத் தவறியதாகவும், மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாதவர்களாகத் தோன்றியதாகவும் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன.

டயானா இறுதிச்சடங்கின்போது ஏர்ல் ஸ்பென்சர் ஆற்றிய உணர்ச்சிகரமான, உறுதியான உரையும், அவரது 36 வயதில் நிகழ்ந்த மரணத்தைச் சுற்றி ஏற்கெனவே நிலவிய அதிருப்தியை மேலும் அதிகரித்தது.

தனது தாயின் சவப்பெட்டிக்குப் பின்னால், 12 வயதில் நடந்து சென்றது என்பது "எந்த குழந்தையிடமும் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று" என்று இளவரசர் ஹாரி ஏற்கெனவே கூறியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அது சரியா, தவறா என்பது குறித்து தனக்கு "எந்தக் கருத்தும் இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த நாளைத் திரும்பிப் பார்க்கும்போது, அதில் தான் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு