'பார்வை மாற்றுத்திறனாளிக்கு வேலை, கோயில் நகைகளை உருக்கி புதிய ஆபரணம்' - சோழர் கல்வெட்டு சேதி

- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறார் சோழ மன்னர் ஒருவர். அவருடைய காலகட்டத்தில் கோவில் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு, அதை உருக்கி புதிய நகைகளும் செய்யப்பட்டுள்ளன. இதைச் செய்த சோழ மன்னர் யார்? இது எங்கே நடந்தது?
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பதிகம் பாட வாய்ப்பளிக்கப்பட்டதோடு, அதற்கென நிலங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அவர்களுககு உதவி செய்ய நியமிக்கப்பட்ட பார்வைத் திறனுடைய 2 பேருக்கும் சேர்த்து நிவந்தங்கள் (கொடைகள்) வழங்கப்பட்டன என்பதைச் சொல்கிறது ஒரு கல்வெட்டு.
கி.பி. 1133-லிருந்து 1150 வரை சோழ மன்னராக இருந்தவர் இரண்டாம் குலோத்துங்கச் சோழன். இவரின் காலகட்டத்தில் சோழப் பேரரசு எந்தப் போரிலும் ஈடுபடவில்லை என்கிறார், வரலாற்றாசிரியர் மா. ராசமாணிக்கனார். பொதுவாக அமைதி நிலவிய இந்த அரசரின் காலத்தில்தான் தில்லை (சிதம்பரம்) பேரம்பலத்துக்கு பொன் வேயப்பட்டது. இதனால், பேரம்பலம் பொன் வேய்ந்த பெருமாள் என்றும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அழைக்கப்பட்டார்.
இந்த இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, மிக சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரர் கோவிலில் இந்தக் கல்வெட்டு உள்ளது.

இந்த கோவிலின் முதல் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் இக்கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. "ஸ்வஸ்தி ஸ்ரீ பூமேவுவளர்" என்று துவங்கும் இந்தக் கல்வெட்டு மொத்தம் 19 வரிகளைக் கொண்டது.
இந்த 19 வரிகளில் 6-வது வரியில் இருந்து கவனிக்கத்தக்க செய்திகள் இடம்பெற்றுள்ளதை தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி XX (விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 3 )புத்தகத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடாகும்.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பணி
இந்தக் கல்வெட்டின் ஆறாவது வரியில் "ராஜராஜவளநாட்டு பனையூர் நாட்டு வாவலூர் நாட்டுத் தெவதனம் திருவாமாத்தூர் ஆளுடைய அழகியதெவர் கொயிலில் திருப்பதியம் பாடிவரும் குருடர்களைத் தவித்து நம் தெவாரத்துத் திருப்பதியம்" என்று துவங்கி நீள்கிறது அந்தக் கல்வெட்டு.
"அந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி இதுதான். அதாவது ராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதானம் ஊரான திருவாமாத்தூர் ஆளுடைய அழகிய தேவர் கோவிலில் திருப்பதியம் பாடி வரும் பொய்யாத சேவடி தேவகணாதன் என்கிற ராஜராஜ பிச்சனுக்கும் அவரது வம்சத்தாருக்கும் திருப்பதியம் பாடும் குழுவில் உள்ள 16 பார்வை மாற்றுத் திறனாளிகள் மற்றும் இவர்களுக்கு வழிகாட்டும் இருவர் (கண்காட்டுவார்) உட்பட 18 பேருக்கும் சேர்த்து திருப்பதியக் காணியாக 12 வேலி நிலம் மன்னரால் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு பதக்கு நெல்லும், ஓர் ஆண்டுக்கு ஆடை செலவினத்துக்கு ஒரு காசும் வழங்கப்பட வேண்டும்" என அந்தக் கல்வெட்டு கூறுவதாக முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதாவது பார்வைத்திறன் இல்லாதபோதும் அவர்களுக்கு நன்கு பாடும் திறன் இருப்பதை அறிந்த கோவில் நிர்வாகம் அவர்களுக்கு பணியும் ஊதியமும் வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது".
ஆடைகளுக்கு எனவும் தனியே காசுகள் வழங்கப்பட்டிருந்ததை இதன் மூலம் அறிய முடியும், அக்காலகட்டத்தில் உடைகள் புடவை என்றே குறிப்பிடப்பட்டது. இந்தக் காரியத்துக்காக கடுவனூரில் 12 வேலி நிலம் தேவதானமாக வழங்கப்பட்டதையும் கல்வெட்டுச் செய்திகள் உணர்த்துகின்றன .

"மாற்றுத்திறன் உடையவர்களுக்கு ஊதியத்துடன் பணிகளை வழங்கி அவர்களுக்கு உதவி செய்திடும் வகையில் வழி காட்டுபவர்களை (கண் காட்டுபவர்கள்) உடன் இருக்கச் செய்து அவர்களுக்கும் ஊதியம் வழங்கினர் சோழ மன்னர்கள்." என்கிறார், இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம்.
கோவில் நகைகளை உருக்கி புதிய ஆபரணங்கள் செய்தல்
பல கோவில்களில் உண்டியலில் சேரும் காணிக்கைகள் (பணம், நகைகள்) மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்வதற்காக பண்டாரத்தில் (கருவூலம்) வைக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் வருடம் ஒருமறை கணக்கீடு செய்யப்படுகின்றன.
தற்காலத்தில் நடக்கின்ற இதுபோன்ற நிகழ்வு 800 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சியிலும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளன. மேலும் பழைய ஆபரணங்கள் உருக்கப்பட்டு புதிய ஆபரணமாக மாற்றப்பட்ட நிகழ்வும் நடந்தேறி உள்ளது.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் (பொது ஆண்டு 1192) ஆட்சிக் காலத்தில் கோவிலில் உள்ள நகைகள் பரிசோதனை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அதை உருக்கி புதிய அணிகலன்கள் செய்த நிகழ்வும் நடைபெற்றுள்ளதை அபிராமி ஈஸ்வரர் கோவிலில் முதல் திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு மூலம் அறிய முடியும்.
"ஸ்வஸ்திஸ்ரீ திருபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவருக்கு" என தொடங்கும் கல்வெட்டில்,
"மருந்தன் அரசன் ராஜநாராயணன் ஆன ராஜ ராஜ மூவேந்தரையன் எனும் அதிகாரி இந்த கோவில் பண்டாரத்தில் (கருவூலம்) இருந்த ஆபரணங்களை ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து சபை உறுப்பினர் தாமப்பட்டர், ஜனாத சதுர்வேதி மங்கலத்தை சபை உறுப்பினர் வட்டமணி பட்டர், இந்த கோவில் நிர்வாகிகளான ஸ்ரீ மாகேசுவரக்கண்காணி, ஸ்ரீ காரியம், வேந்தமாராயன், தேவர்கன்மி, கோயில் கணக்கன், பக்தர்கள் மேலும் இரண்டு உள்ளூர் வியாபாரிகளான வாழைப்பத்தனுடையான், சிற்றாமூருடையான் பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நகைகளை பரிசோதனை செய்து மதிப்பீடு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அனைவரின் ஒப்புதலுடன் அந்த ஆபரணங்களை உருக்கி புதிதாக ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ள செய்தியை மிகத் தெளிவாக இந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது. 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசு நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டதற்கு இந்த கல்வெட்டு மிகச்சிறந்த உதாரணமாகும்." என குறிப்பிடப்பட்டுள்ளதாக முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் விளக்கம் தந்தார்.

"குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது நகை செய்பவர்கள், அதை தரம் பிரித்து மதிப்பீடு செய்பவர்களாக நன்கு தொழில் தெரிந்த மாற்றுச் சமூகத்தினரும் அக்காலத்தில் இருந்துள்ளனர். கோவில் உண்டியலில் போடப்படும் நகைகள் தற்காலங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு உருக்கி தரம் பிரிக்கப்பட்டு புதிய அணிகலன்களாக மாற்றப்படுகின்றன. இது போன்ற நிகழ்வும் சோழ மன்னர்கள் காலத்தில் நடைபெற்றதற்கு மேற்கண்ட கல்வெட்டுகள் சிறந்த சான்றாக விளங்குகின்றன" என்கிறார், முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம்.
இந்தக் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ள திருவாமாத்தூர் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்டதோடு அருணகிரிநாதராலும் பாடப்பட்ட கோவில் இதுவாகும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































