இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ள ஜம்மு காஷ்மீர் வீரர் சாதித்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வீரர் ஆகிப் நபி இந்தியாவுக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் அறிமுகமாகக்கூடும்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்ததை அடுத்து, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பும்ரா இன்னும் முழுமையாக குணமடையவில்லை, இதன் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்ட அறிக்கையில், ஆகிப் நபிக்கு முதன்முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகிப் நபி சிறப்பான ஆட்டம்
வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரான ஆகிப் நபி உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை சீசன்களில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி அவர் மொத்தம் 104 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
2025-26 ரஞ்சி சீசனில் அவர் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு-காஷ்மீர் முதன்முறையாக ரஞ்சி கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்தார்.
இதுதவிர, சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா ஏ அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார், அங்கு அவர் இரண்டு முதல் தரப் போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளைத் தனது கணக்கில் சேர்த்தார். ஆகிப் நபி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானால், ஜம்மு-காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
ஆகிப் நபி 2020-ஆம் ஆண்டில் முதல் தரக் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் இதுவரை 43 முதல் தரப் போட்டிகளில் 162 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 24 ரன் விட்டுக் கொடுத்து 7 விக்கெட் என்பது அவரது சிறந்த பந்துவீச்சு பதிவாகும்.
முதல் தரப் போட்டிகளில் ஆகிப் 4 விக்கெட்டுகளை ஏழு முறையும், ஐந்து விக்கெட்டுகளை 16 முறையும், 10 விக்கெட்டுகளை நான்கு முறையும் எடுத்துள்ளார். இதுதவிர, பேட்டிங்கிலும் கை கொடுத்து 999 ரன்களை எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் தொடரில் ஜொலிக்காத ஆகிப் நபி
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆகிப் நபியை டெல்லி கேபிடல்ஸ் அணி எட்டு கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்துத்தனது அணியில் சேர்த்துக் கொண்டது.
இருப்பினும், அவரது ஐபிஎல் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இருக்கவில்லை. அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் சார்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார்.
இதுதவிர, இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அவர் மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடினார். அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இருப்பினும், அவரது பந்துவீச்சு மிகவும் சிக்கனமாக இருந்தது, அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை.
உறுதியான மனப்பான்மை கொண்ட ஆகிப்
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் பிறந்த ஆகிப் நபி மிகவும் உறுதியான மனப்பான்மை கொண்ட கிரிக்கெட் வீரர் ஆவார். தந்தை அரசுப் பள்ளி ஆசிரியர். அவரது வீட்டில் அதிக வசதிகள் இருக்கவில்லை. அதுமட்டுமின்றி, வீட்டிற்கு மிக அருகில் இருந்த கிரிக்கெட் மைதானம் என்பது 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீநகரில் இருந்தது.
ஆரம்ப காலத்தில் சந்தித்த சிரமங்கள் குறித்து உள்ளூர் பத்திரிகை ஒன்று அவரிடம் கேட்டபோது, "உங்கள் இலக்கு இந்தியாவுக்காக விளையாடுவது என்றால் இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல. உங்களிடம் குறைவான வளங்கள் மட்டுமே உள்ளன என்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை. உங்களால் சாக்குப்போக்குகளைச் சொல்ல முடியாது. எனது இலக்கும் இந்திய அணிக்காக விளையாடுவதுதான்" என்று அவர் கூறியிருந்தார்.
பர்வேஸ் ரசூல் இந்தியாவுக்காக விளையாடிய ஜம்மு-காஷ்மீரின் முதல் வீரராவார். அவருக்குப் பிறகு உம்ரான் மாலிக்கும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.
பர்வேஸ் ரசூல் விளையாடுவதைப் பார்த்துதான் ஆகிப்பிற்கும் கிரிக்கெட் விளையாடும் ஆசை மனதில் உதித்தது.
"உங்களுக்காக எது எழுதப்பட்டுள்ளதோ, அது உங்களைத் தேடி வந்தே தீரும். எந்தவொரு நிராகரிப்பும், புறக்கணிப்பும் உங்கள் விதியை மாற்ற முடியாது" என இந்திய அணியில் ஆகிப் நபி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பர்வேஸ் ரசூல் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.
"ஆகிப் நபி, இந்திய டெஸ்ட் அணியில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அல்லாஹ் உங்களுக்குத் தொடர் வெற்றி, நல்ல ஆரோக்கியம் மற்றும் பல மறக்க முடியாத சாதனைகளை வழங்கட்டும். எப்போதும் போல எங்களைப் பெருமையடையச் செய்து கொண்டே இருங்கள்."

பட மூலாதாரம், Getty Images
ஆகிப் நபி இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உம்ரான் மாலிக் தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்காக ஆகிப் நபி பலமுறை தேர்வுகளில் பங்கேற்றார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே அவரால் அணியில் இடம் பெற முடிந்தது.
ஆகிப் 2018இல் லிஸ்ட் ஏ போட்டிகளில் அறிமுகமானார், அதற்குப் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பையில் தனது வேகப்பந்து வீச்சால் முத்திரை பதித்தார்.
அவர் 7.41 எகானமி ரேட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில் ரஞ்சி கோப்பையில் 9 இன்னிங்ஸ்களில் 29 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.
துலீப் கோப்பையில் மேற்கு மண்டலத்திற்கு எதிராக வடக்கு மண்டலத்திற்காக அவர் ஹாட்ரிக் விக்கெட்டையும் எடுத்துள்ளார். அவர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் 1979 லும், சாய்ராஜ் 2001 லும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தனர்.
ஆகிப்பின் பந்துவீச்சு அற்புதத்தால் ஜம்மு-காஷ்மீர் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் முதன்முறையாக டெல்லியைத் தோற்கடித்தது. இந்த வெற்றியில் ஆகிப் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பட மூலாதாரம், ANI
சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை
ஆகிப் நபி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மத்திய அமைச்சரும், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந்திர சிங், ஆகிப் நபியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார், "விளையாட்டிற்கு உங்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் இந்த பெருமைமிக்க தருணத்தைப் பெற்றுத் தந்துள்ளது."
"இறுதியாக, ஒருவருக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. ஆகிப் நபி, இந்திய (கிரிக்கெட் அணி) அணியில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பல வாழ்த்துகள்" என கௌரவ் குப்தா எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்,
தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இம்ரான் நபி தார் தனது எக்ஸ் பக்கத்தில் ஆகிப் நபியை வாழ்த்தியுள்ளார்.
"இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக பாரமுல்லா எக்ஸ்பிரஸ் ஆகிப் நபி தாருக்கு வாழ்த்துகள். அவர் டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது காஷ்மீரில் அதிக திறமைசாலிகள் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது அவரது கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான நல்ல செயல்திறனுக்கான சரியான பலனாகும்" என அவர் எழுதியுள்ளார்.
"அவரது வளர்ச்சி அதே கனவை பின்தொடர ஒரு ஒரு புதிய தலைமுறையை ஊக்குவிக்கும். சிறப்பான அறிமுகம் மற்றும் நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அமைய ஆகிப்பிற்கு எனது நல்வாழ்த்துகள்" என்றும் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் காலி நகரிலும், இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 23 முதல் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































