20 ஆண்டுகளாக பாஜக தலைவர் நிதின் நபின் வசம் இருந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வென்றது எப்படி? 5 காரணங்கள்

பட மூலாதாரம், PTI
- எழுதியவர், முகமது ஷாஹித்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பிகாரின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியாக இருந்த இந்தத் தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நிதின் நபின் இருந்து வந்தார்.
பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்றது.
இன்று 32 சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்த நிலையில், பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 64,151 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் 44,827 வாக்குகளைப் பெற்றார்.
பிகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் வெற்றிக்கு பின்னால் உள்ள ஐந்து முக்கிய காரணங்களை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1. மாணவர் போராட்டத்தின் தாக்கம்

பட மூலாதாரம், ANI
பாங்கிபூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், நாட்டின் தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை கோரி காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது சிஜேபி போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஜூலை 22, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிகாரின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன.
ஜூலை 25-ஆம் தேதி 'பிகார் பந்த்' அறிவிக்கப்பட்டது. அப்போது சிவான் மாவட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையின்போது காவல்துறையை சேர்ந்த ஒருவர் ஏகே-47 துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டங்கள் பாங்கிபூர் இடைத்தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக மூத்த பத்திரிகையாளர் லவ் குமார் மிஸ்ரா பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
"டெல்லி போராட்டத்திற்குப் பிறகு பிகாரின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜேபி இயக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக மாணவர்கள் ஆளுநர் மாளிகை மற்றும் முதலமைச்சர் செயலகம் வரை பேரணியாகச் சென்றனர். இந்தப் பகுதிகள் அனைத்தும் பாங்கிபூர் தொகுதிக்குள் வருகின்றன," என்று அவர் கூறினார்.
"டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் தாக்கம் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் இருந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமதும் இதே கருத்தை முன்வைத்து, மாணவர்களின் போராட்டம் இந்தத் தேர்தலில் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்ததாக கூறினார்.
2. என்கவுன்டர் விவகாரம்
பிகாரில் 26 வயதான பரத் பூஷண் திவாரி, ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் காவல்துறை என்கவுன்டரில் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போலீஸ் குழு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் பரத் பூஷண் திவாரியின் காலில் குண்டு பாய்ந்தது" என்று கூறப்பட்டது.
ஆனால், பரத் திவாரியின் குடும்பத்தினர் இந்தக் கூற்றை மறுத்து, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம் என குற்றஞ்சாட்டினர்.
இந்த விவகாரம் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக மூத்த பத்திரிகையாளர் லவ் குமார் மிஸ்ரா கூறுகிறார்.
"முதல்வர் சம்ராட் சௌத்ரி இந்த விவகாரத்தில் மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுத்தார். சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த ஒருவரும் நீண்ட காலத்திற்குப் பிறகே கைது செய்யப்பட்டார். பரத் திவாரியின் குடும்பத்தினர் பிரசாந்த் கிஷோருடன் தேர்தல் பிரசாரத்தில் இணையப் போகிறார்கள் என்ற தகவல்கள் பரவின. ஆனால் அது நடைபெறவில்லை. இருந்தபோதிலும், இந்தச் சம்பவம் மக்களின் உணர்வுகளை ஆழமாக பாதித்தது," என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Bihar BJP
3. பாஜகவுக்குள் உட்கட்சி மோதல் இருந்ததா?
பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக பாஜக முதலில் அபிஷேக் குமார் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்ததுடன், அவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அதற்கு மறுநாளே அபிஷேக் குமார் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து நீரஜ் குமார் சின்ஹா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மூத்த பத்திரிகையாளர்களான சுரூர் அகமது மற்றும் லவ் குமார் மிஸ்ரா இருவரும், பிகார் பாஜகவின் பல மூத்த தலைவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில், கட்சி திடீரென புதிய முகத்தை வேட்பாளராக நிறுத்தியதாகக் கருதுகின்றனர்.
"இந்தத் தொகுதியில் காயஸ்தா சமூக வாக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. அஜய் ஆலோக் போன்ற தலைவர்களும் வேட்பாளர் போட்டியில் இருந்தனர். ஆனால் பாஜக திடீரென தனது வேட்பாளரை மாற்றியது. இதற்கிடையில், 'இந்தத் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள்' என்று ஒரு பாஜக தலைவர் கூறியிருந்தார். இதனால் பாஜக வாக்காளர்கள் தங்களை கட்சி சாதாரணமாக எடுத்துக்கொள்கிறது என்ற உணர்வுக்கு ஆளாகினர்," என்றார் சுரூர் அகமது.
"நிதின் நபின் தேசியத் தலைவரான பிறகு, அவருடன் நெருக்கமாக இருந்த தலைவர்கள் இந்தத் தொகுதியில் வெற்றிக்காக போதுமான அளவு உழைக்கவில்லை என்ற கருத்து உள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் பாஜகவின் பலவீனங்களை பிரசாந்த் கிஷோர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறலாம்," என்றார் லவ் குமார் மிஸ்ரா.
4. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் குறைந்த வாக்குப்பதிவு
முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகிய பிறகு, கூட்டணி அரசில் ஐக்கிய ஜனதா தளம் 'இரண்டாம் நிலைக்கு' தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாங்கிபூர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஐக்கிய ஜனதா தளத்தின் பங்கு பெரிதாகத் தெரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் லவ் குமார் மிஸ்ரா கூறுகிறார்.
"பாங்கிபூர் இடைத்தேர்தலின் போது ஐக்கிய ஜனதா தளம் பெரிதாக களத்தில் இல்லை. பாஜக மட்டுமே தனியாக தேர்தலை எதிர்கொண்டது போன்ற தோற்றம் காணப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமது, தேர்தலில் 35 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவும் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டதாகக் கருதுகிறார்.
"வேட்பாளரை மாற்றிய முடிவு வாக்காளர்களிடம் தவறான செய்தியை ஏற்படுத்தியது. இதனால் பாஜக ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை," என்றார்.
மேலும், "பிரசாந்த் கிஷோர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், வாக்குப்பதிவு சதவீதம் 24 சதவீதம் வரை குறைந்திருக்க வாய்ப்பிருந்தது," என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
5. சம்ராட் சௌத்ரி முக்கிய இலக்காக இருந்தாரா?
தேர்தல் பிரசாரத்தின் போது, பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முதலமைச்சர் சம்ராட் சௌத்ரியை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
"பாங்கிபூர் தொகுதியில் எம்.எல்.ஏ., எம்.பி., நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரின் வீடுகள் உள்ளன. ஒரு வகையில் இது கல்வியறிவு மற்றும் பொருளாதார வளம் அதிகம் கொண்ட பகுதி. சம்ராட் சௌத்ரியை குறிவைத்து பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட பிரசார உத்தி பலன் அளித்தது," என்று சுரூர் அகமது கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் லவ் குமார் மிஸ்ரா கூறுகையில், "பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் உரைகளில் நிதின் நபிம் அல்லது பிற மூத்த தலைவர்களை பெரிதாக குறிப்பிடவில்லை. அவர் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் சம்ராட் சௌத்ரியை நோக்கியே இருந்தன. தனது உரைகளில் சம்ராட் சௌத்ரியை ஊழல்வாதி, குற்றப் பின்னணி கொண்டவர் என்று தொடர்ந்து விமர்சித்தார்," என்றார்.

பட மூலாதாரம், PTI
பிரசாந்த் கிஷோரின் வெற்றி எதை உணர்த்துகிறது?
பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பெற்ற வெற்றியை அரசியல் ஆய்வாளர்கள் ஒரு குறியீட்டு வெற்றியாகவே பார்க்கின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் லவ் குமார் மிஸ்ரா, "இந்த வெற்றி குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்குப் பிறகு, பிரசாந்த் கிஷோர் தேசிய அளவில் தனது அரசியல் பிம்பத்தை உருவாக்குவது குறித்து சிந்திக்கக்கூடும்," என்றார்.
மேலும், "எதிர்க்கட்சிகள் விரும்பினால், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிரான முகமாக அவரை பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது," என்றும் அவர் கூறினார்.
மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமது, "பிரசாந்த் கிஷோரின் வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஆனால், இந்த முடிவை பாஜகவுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவாகக் கருதலாம்," என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































