'இதற்காக வருந்தவில்லை' - இந்த ஆண்கள் 30 வயதுக்குள்ளேயே கருத்தடை செய்துகொள்வது ஏன்?

அலெக்ஸ்

பட மூலாதாரம், Alex West

படக்குறிப்பு, அலெக்ஸ்
    • எழுதியவர், ஜார்ஜ் சாண்டமன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முதல் குழந்தை பிறந்தபோது தனது மனைவி எதிர்கொண்ட கடினமான பிரசவ அனுபவம் அலெக்ஸ் வெஸ்டை ஆழமாக பாதித்தது. இரண்டாவது குழந்தையின் பிறப்பின்போது எல்லாம் மிகவும் சுமுகமாக அமையும் என்று அவர் நம்பினார்.

அவரது மனைவிக்கு அந்தப் பிரசவம் நன்றாகவே அமைந்தது. ஆனால் அலெக்ஸுக்கு அப்படியில்லை.

"எனக்கு பீதியால் அதிர்ச்சி ஏற்பட்டது. மனரீதியாக முற்றிலும் உடைந்துபோனேன். முதல் பிரசவ அனுபவத்தால் ஏற்பட்ட பாதிப்பை என்னால் முழுமையாக சமாளிக்க முடியவில்லை," என்று அலெக்ஸ் கூறுகிறார்.

முதல் குழந்தையின் பிறப்பின்போது ஏற்பட்ட மன உளைச்சலும், அதன்பிறகு அவரை பாதித்த பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வும் காரணமாக, நான்கு குழந்தைகள் வேண்டும் என்ற திட்டத்தைத் தொடர அலெக்ஸ் விரும்பவில்லை.

தனது இரு மகன்களும் பிறந்த பிறகான மாதங்களை மகிழ்ச்சியோ உற்சாகமோ இல்லாத, ஒரு காலகட்டமாகவே அவர் நினைவுகூர்கிறார். அவரது வாழ்க்கை வண்ணமற்றதாக மாறியிருந்தது. அதே நேரத்தில், "தந்தையாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம்" என்று பலரும் அவரிடம் கூறிக்கொண்டே இருந்தனர்.

"எல்லோரும் சொல்வதைப் போல அந்த அன்பையும் பிணைப்பையும் என்னால் உணர முடியவில்லை," என்று அலெக்ஸ் கூறுகிறார்.

அதே அனுபவம் மீண்டும் நிகழ வேண்டாம் என்பதற்காக, அவரும் அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்ள முடிவு செய்தனர். அந்த முடிவை எடுப்பதில் முக்கிய பங்கு தன்னுடையதே என்பதால், கருத்தடை பொறுப்பை முழுவதும் தனது மனைவியின் மீது சுமத்துவது சரியல்ல என்று அலெக்ஸ் கருதினார்.

சமீபத்திய ஆண்டுகளில் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான ஆண்கள் எடுத்த அதே முடிவை அலெக்ஸும் எடுத்தார். அவர் ஆண்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை (வாசெக்டமி) செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

என்எச்எஸ் இங்கிலாந்து தொகுத்துள்ள தரவுகளின்படி, 2024-25ஆம் ஆண்டில் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் 26,385 வாசெக்டமி அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது 2023-24ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகமாகும்.

2024-25ஆம் ஆண்டில் 35 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்களே அதிக அளவில் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். அந்த வயதுக் குழுவில் மட்டும் சுமார் 8,400 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 30 வயதுக்குக் குறைவான ஆண்களிடமும் இந்தச் சிகிச்சையைத் தேர்வு செய்வோர் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட சற்று அதிகரித்துள்ளது. 2024-25ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 30 வயதுக்குக் குறைவான ஆண்களுக்கு சுமார் 950 வாசெக்டமி அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கர்ப்பம் குறித்த அச்சம்

அடமானக் கடன் தரகராகப் பணியாற்றும் அலெக்ஸ், தனது 20களில் இறுதிப் பகுதியில் இருந்தபோதே இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். ஆனால், பின்னர் மனம் மாறக்கூடும் என்பதால், 30 வயது ஆகும் வரை காத்திருக்குமாறு அவரது என்எச்எஸ் மருத்துவர் அறிவுறுத்தினார்.

இறுதியாக, 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் அவருக்கான நேரம் கிடைத்தபோது, கென்ட்டில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து ரயிலில் லண்டனிலுள்ள கிளினிக்கிற்கு அவர் தனது மனைவியுடன் சென்றார்.

தற்போது 33 வயதான அலெக்ஸ், இந்தச் சிகிச்சை மிகவும் விரைவாகவும் வலியில்லாமலும் முடிந்ததாகக் கூறுகிறார்.

"நான் ஹெட்போனை அணிந்து இசை கேட்டுக்கொண்டிருந்தேன். மூன்று பாடல்கள் கூட முடிவதற்குள், 'எல்லாம் முடிந்துவிட்டது' என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அவ்வளவு வேகமாக முடிந்தது என்பது நம்ப முடியாததாக இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

சாம் நைட்

பட மூலாதாரம், Sam Knight

படக்குறிப்பு, சாம் நைட்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவைச் சேர்ந்த சாம் நைட், தனக்கு குழந்தைகள் வேண்டாம் என்பது ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்ததாகக் கூறுகிறார்.

"குழந்தைகள் பெறுவது ஒரு சாத்தியமான தேர்வாக மாறக்கூடிய சூழ்நிலைகளில் நான் இருந்தபோது, அது என்னை மிகவும் பதற்றமடையச் செய்தது," என்று சாம் கூறுகிறார்.

அவரது அப்போதைய காதலி கர்ப்பமானபோது, அப்பெண் கருக்கலைப்பைத் தேர்வு செய்தார். அந்த நேரத்தில் 22 வயதாக இருந்த சாம், தனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்று உணர்ந்தார்.

"நான் ஒருவரை இந்த அனுபவத்தைச் சந்திக்க வைத்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். அது மீண்டும் ஒருபோதும் நடக்கக் கூடாது என்று நினைத்தேன்."

இதையடுத்து, நியூயார்க்கில் உள்ள ஒரு சிறுநீரக மற்றும் சிறுநீரக அறுவைச் சிகிச்சை மையத்தை அவர் தொடர்புகொண்டார். அலெக்ஸைப் போலவே, ஏன் கருத்தடை செய்ய விரும்புகிறார் என்பதை மருத்துவர்களிடம் விளக்க வேண்டியிருந்தது.

இந்தச் சிகிச்சையை நிரந்தரமான ஒன்றாகவே கருத வேண்டும் என்று சாமிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஏனெனில், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அதை மீண்டும் மாற்றியமைக்க முடியும்.

இளம் வயதிலேயே கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய விரும்பியதால், மருத்துவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு சாம் முன்கூட்டியே தயாராக இருந்தார்.

"உங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என்பதை முடிவு செய்யும் அளவுக்கு வயது போதுமா?", "எதிர்காலத்தில் உங்கள் மனம் மாறினால் என்ன செய்வீர்கள்?", "இந்த அறுவைச் சிகிச்சையை மீண்டும் மாற்றுவது மிகவும் செலவானது, மேலும் அது எப்போதும் வெற்றியடையும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" போன்ற கேள்விகளை எதிர்பார்த்திருந்தார்.

"உண்மையில், மருத்துவர் தனது பார்வையை சமீபத்தில்தான் மாற்றியிருப்பதாகக் கூறினார். நான் ஆறு மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால், என்னை உடனடியாகத் திருப்பி அனுப்பியிருப்பார் என்றும் சொன்னார்," என்று சாம் கூறுகிறார்.

மருத்துவமனையை முதன்முதலில் தொடர்புகொண்ட சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

சாமின் மருத்துவர் கேட்ட கேள்விகள், அவர் எதிர்காலத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவை எடுத்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இருந்தன. ஸ்காட்லாந்து என்எச்எஸ் வழிகாட்டுதலின்படி, 30 வயதுக்குக் குறைவான ஆண்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகு அதைப் பற்றி வருந்துவதற்கான வாய்ப்பு அதிகம்.

முன்னாள் பொதுமருத்துவரும் தற்போது என்எச்எஸ் மற்றும் தனியார் நோயாளிகளுக்கு பல்வேறு கருத்தடை சேவைகளை வழங்கும் எம்எஸ்ஐ ரீப்ரொடக்டிவ் சாய்சஸ் நிறுவனத்தின் மருத்துவ இயக்குநருமான டாக்டர் சாரா சால்கெல்ட், கருத்தடை அறுவைச் சிகிச்சை "மிகவும் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமானது" என்று கூறுகிறார்.

ஆனால், இந்தச் சிகிச்சை தங்களுக்கு சரியானதா என்பதை ஆண்கள் "நன்கு சிந்தித்து" முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

"இந்த முடிவை எடுக்கத் தேவையான அனைத்து தகவல்களும் அவர்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, விரும்புவோருக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

கருத்தடை அறுவைச் சிகிச்சையை மீண்டும் மாற்றும் சிகிச்சை என்எச்எஸ் மூலம் வழக்கமாக வழங்கப்படுவதில்லை என்றும், அதற்குக் கடுமையான தகுதிநிபந்தனைகள் உள்ளன என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஆண்களுக்குக் கிடைக்கும் பிற வழிமுறைகளையும் என்எச்எஸ் இணையதளம் சுட்டிக்காட்டுகிறது. அதில் ஆணுறைகள் மற்றும் கருவுறும் வாய்ப்பு அதிகம் உள்ள நாட்களில் உடலுறவைத் தவிர்ப்பது போன்ற முறைகளும் அடங்கும்.

தனக்கு குழந்தைகள் மீது அன்பு உண்டு என்றும், தனது சிறுவயது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது என்றும் சாம் தனது மருத்துவரிடம் கூறியுள்ளார். ஆனால், வீடியோ கேம்களுக்கான ஒலியமைப்பாளராக இருக்கும் தனது பணியில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நான்கு குழந்தைகள் வேண்டும் என்ற திட்டத்தைத் தொடர அலெக்ஸ் விரும்பவில்லை.

பட மூலாதாரம், Alex West

படக்குறிப்பு, நான்கு குழந்தைகள் வேண்டும் என்ற திட்டத்தைத் தொடர அலெக்ஸ் விரும்பவில்லை.

"என் வாழ்க்கையை முழுவதுமாக இதற்காக அர்ப்பணித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, குழந்தைகளை வளர்ப்பதும் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டிய ஒரு பொறுப்புதான். அதற்குத் தேவையான நேரமோ, ஏன் விருப்பம்கூட என்னிடம் இல்லை," என்று சாம் கூறுகிறார்.

தற்போது 25 வயதான சாம், பெற்றோராக விரும்புபவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதாகக் கூறுகிறார். ஏனெனில் அந்த அனுபவத்தில் "நிச்சயமாக அன்பும் அழகும் இருக்கின்றன" என்று அவர் நம்புகிறார்.

ஆனால், "அதே உணர்வை நான் இசையிலும் கலையிலும், நான் செய்யும் பிற விஷயங்களிலும் கண்டுபிடிக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

2024-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சை மற்றும் அதன்பிறகான மருத்துவ பராமரிப்புக்காக, அப்போது குடும்பத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்த சாம் மொத்தம் சுமார் 1,200 அமெரிக்க டாலர்கள் செலவிட்டார்.

அமெரிக்காவில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்களில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர் என்று 2022-23ஆம் ஆண்டில் சுமார் 4,000 ஆண்களிடம் நடத்தப்பட்ட தேசிய குடும்ப வளர்ச்சி ஆய்வு தெரிவிக்கிறது.

மறுபுறம், 40களின் நடுப்பகுதி முதல் இறுதிப்பகுதி வரையிலான ஆண்களே இந்தச் சிகிச்சையை அதிகமாக மேற்கொண்டிருந்தனர். அந்த வயதுக் குழுவில் 15 சதவீதம் பேர் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறியுள்ளனர்.

பெற்றோராக இருப்பதன் தியாகங்களும் நிச்சயமற்ற தன்மையும்

கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து, சாமுக்கு தாங்க முடியாத அளவிலான கடுமையான வலி ஒருமுறை ஏற்பட்டது. இது கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அரிதாகவே காணப்படும், ஆனால் அறியப்பட்ட பக்கவிளைவுகளில் ஒன்றாகும் என்று டாக்டர் சாரா சால்கெல்ட் கூறுகிறார். இருப்பினும், அந்த வலி சில மணி நேரங்களுக்குப் பிறகு தானாகவே குறைந்துவிட்டது.

ஆனால், இதன் காரணமாக மற்ற ஆண்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டியதில்லை என்று சாம் கருதுகிறார்.

"மொத்தத்தில் பார்த்தால், இதற்காக செலவிட்ட பணமும் அனுபவித்த வலியும் மதிப்புக்குரியவையே," என்று அவர் கூறுகிறார்.

பெற்றோராக இருப்பதில் உள்ள தியாகங்களும் நிச்சயமற்ற தன்மைகளும், குறிப்பாக தனது குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி வளர்வார்கள் என்ற கவலை தன்னை 27 வயதிலேயே கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளத் தூண்டியதாக ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.

கென்ட்டில், அலெக்ஸுக்கும் அவரது மனைவிக்கும் கிடைக்கக்கூடிய கருத்தடை முறைகளில் மிகவும் நியாயமானதும் பயனுள்ளதுமான தேர்வாக இந்த அறுவைச் சிகிச்சை தோன்றியது.

அலெக்ஸ் இனி குடும்பத்தை விரிவுபடுத்த விரும்பவில்லை என்பதால், இந்த முடிவைப் பற்றி அவர்கள் பல மாதங்கள் கவனமாக ஆலோசித்தனர்.

"என் குழந்தைகளை நான் அளவுகடந்து நேசிக்கிறேன்," என்று அலெக்ஸ் கூறுகிறார். குறிப்பாக, இப்போது அவர்கள் தன்னுடன் சேர்ந்து கால்பந்து விளையாடும் வயதை எட்டியிருப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

"எங்கள் குடும்பத்தில் இன்னும் குழந்தைகள் சேர்ந்திருந்தால், அது எனக்கு சரியான முடிவாக இருந்திருக்காது," என்று அவர் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு