செளதி அரேபியாவை அச்சுறுத்தி வரும் ஹூத்திகள் யார்?

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ஹூத்தி ஆயுதக் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் செளதி அரேபியாவுக்கு தனது நாடு ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
செளதிக்கு "தற்காப்பு நோக்கிலான" ராணுவ உதவிகளை பிரிட்டன் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
செளதி அரேபியாவுக்கு "தற்காப்பு நோக்கிலான வான்வழி எரிபொருள் நிரப்பும்" உதவியை பிரிட்டன் வழங்கவுள்ளது. செளதி அரேபியாவிடமிருந்து "ராணுவ உதவி" கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் பர்ன்ஹாம் தெரிவித்தார்.
ஏமனில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும் ஹூத்தி போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அண்டை நாடான செளதி அரேபியா அரசுக்கு ஆதரவளித்து வருகிறது.
சமீப நாட்களில், செளதி தலைநகர் ரியாத் மற்றும் செங்கடல் பகுதிகளில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹூத்திகள் கூறியுள்ளனர்.
அண்மையில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவைத் தாக்க ஹூத்தி போராளிகள் முயன்றதாக செளதி அரேபியா குற்றம்சாட்டியது. எனினும், மெக்கா நகரின் புறநகர்ப் பகுதியில் ஹூத்திகளின் தாக்குதல்களை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துவிட்டதாக செளதி தெரிவித்தது.
இந்தக் கூறப்படும் தாக்குதலுக்கு பல முஸ்லிம் நாடுகளும் உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், செளதி அரேபியாவின் குற்றச்சாட்டுகளை ஹூத்தி அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் மறுத்துள்ளனர். மேலும், ஏமனில் ஆயிரக்கணக்கான ஹூத்தி ஆதரவாளர்கள் செளதி அரேபியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
செங்கடல் உலகக் கப்பல் போக்குவரத்துக்கு ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், Mohammed Hamoud/Getty Images
2024-ஆம் ஆண்டு ஜனவரியில், பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து ஏமன் முழுவதும் உள்ள ஹூத்தி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
அப்போது, பிரிட்டன் கடற்படைக் கப்பல் உள்ளிட்ட கப்பல்கள் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்காப்புக்காகவே பிரிட்டன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அப்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.
இதையடுத்து, ஏமனில் ஹூத்தி போராளிகளுடனான மோதல் சிறிது காலம் தணிந்தது. ஆனால், கடந்த சில வாரங்களில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஏமனின் பல பகுதிகளில் ஹூத்திகள் தங்களது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளனர்.
இதில் செங்கடல் வழியாகச் செல்லும் முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களும் அடங்கும். இவை உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவை.

பட மூலாதாரம், Mohammed Hamoud/Getty Images
சமீபத்தில், செங்கடலின் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மொக்கா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள பேரிம் தீவு ஆகியவற்றை ஹூத்திகள் கைப்பற்றினர்.
இந்தப் பகுதி செளதி அரேபியாவுக்குச் செல்லும் முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.
ஹூத்தி போராளிகள் திடீர் தாக்குதல்களை நடத்தி, பல பகுதிகளில் அரசுப் படைகள் பின்வாங்கச் செய்துள்ளனர். மேலும், செங்கடலை ஒட்டியுள்ள ஏமனின் கிட்டத்தட்ட முழு கடற்கரையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான கடல் வழித்தடமான பாப் அல்-மண்டேப் நீரிணையும் அடங்கும்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்ட நிலையில் பாப் அல்-மண்டேப் கடல் வழித்தடத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
செளதி அரேபியாவின் எரிசக்தி வர்த்தகத்தின் பெரும் பகுதியும் இந்தக் கடல் வழித்தடத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மீதான ஹூத்திகளின் கட்டுப்பாடு தற்போது செளதி அரேபியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
செளதி அரேபியாவுடனான மோதல்
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏமனின் மக்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளை ஹூத்திகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மாதம், ஏமன் கடற்கரைப் பகுதியில் பாப் அல்-மண்டேப் நோக்கி அவர்கள் வேகமாக முன்னேறியுள்ளனர்.
ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதியில் திடீரென மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சமீப நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு செளதி அரேபியாவும் ஹூத்திகளும் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கெனவே நிலையற்றதாக இருந்தது. கடந்த சில மாதங்களில் அது முற்றிலும் முறிந்துவிட்ட நிலையில், இரு தரப்பினரும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
செளதி அரேபியா, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், அரசு படைகளுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
இதற்கிடையில், ஹூத்திகள் இந்தப் பகுதியில் தங்களது நிலையை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். மேலும், தென்மேற்கு செளதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.
இந்த மோதலால், செங்கடலின் மறுபுறம் பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு நேர் எதிரே அமைந்துள்ள சிறிய ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியின் முக்கியத்துவமும் திடீரென அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
ஜிபூட்டியில் உலகின் மிகப்பெரிய ராணுவத் தளங்களில் ஒன்றுள்ளது. ஒரு காலத்தில் இது பிரான்சின் காலனியாக இருந்தது.
அமெரிக்கா 2003-ஆம் ஆண்டு முதல் இங்கு பெரிய ராணுவத் தளத்தை இயக்கி வருகிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். சீனாவும் இங்கு பெரிய ராணுவத் தளத்தை அமைத்துள்ளது. இந்த ராணுவத் தளம் அண்மையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், ஹூத்திகளுக்கும் செளதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் இடையிலான தற்போதைய போரில் தாங்கள் இணையப்போவதில்லை என்பதை ஜிபூட்டி தெளிவுபடுத்தியுள்ளது.
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் யார்?

பட மூலாதாரம், Handout/Houthi Media Center via Getty Images
ஹூத்திகள், ஏமனின் சிறுபான்மை ஷியா ஜைதி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவாகும்.
அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அப்போதைய அதிபர் அலி அப்துல்லா சலே மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடுவதற்காக 1990களில் இந்தக் குழுவை உருவாக்கினர்.
இந்த இயக்கத்தை நிறுவிய ஹுசைன் அல்-ஹூத்தியின் பெயரிலிருந்தே இக்குழுவுக்கு ஹூத்திகள் என்ற பெயர் வந்தது. ஹூத்திகள் தங்களை "அன்சார் அல்லா" என்றும் அழைத்துக்கொள்கின்றனர். இதற்கு "இறைவனின் தோழர்கள்" என்று பொருள்.
2003-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான இராக் படையெடுப்பின்போது ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய முழக்கங்களில் ஒன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பேசுவதுடன், இஸ்லாமின் வெற்றிக்கும் அழைப்பு விடுத்தது.
ஹமாஸ், ஹெஸ்பொல்லா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான இரான் தலைமையிலான "எதிர்ப்பு அச்சின்" ஒரு பகுதியாகத் தங்களை ஹூத்திகள் வர்ணித்துள்ளனர்.
ஹூத்திகள் தங்களை இரானின் கூட்டாளிகளாகவும் குறிப்பிடுகின்றனர். செளதி அரேபியா இரு தரப்புக்கும் பொதுவான எதிரியாக உள்ளது.
ஹூத்திகள் இரானிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வழங்கியதாக அமெரிக்காவும் செளதி அரேபியாவும் குற்றம்சாட்டுகின்றன.

பட மூலாதாரம், Ahmad AL-BASHA / AFP via Getty Images
ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களையும் வழங்கியுள்ளதாக செளதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நாட்டின் வடக்குப் பகுதியில் அவர்கள் வரி வசூலிப்பதுடன், தங்களுக்கென சொந்த நாணயத்தையும் வெளியிட்டுள்ளனர்.
லெபனானைச் சேர்ந்த ஷியா அமைப்பான ஹெஸ்பொல்லாவிடமிருந்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் உத்வேகம் பெற்றுள்ளனர்.
அமெரிக்க ஆய்வு நிறுவனமான பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தகவல்படி, 2014-ஆம் ஆண்டு முதல் ஹெஸ்பொல்லா, ஹூத்திகளுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவப் பயிற்சியையும் நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது.
2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஏமனில் ஹூத்திகள் குறிப்பிடத்தக்க அரசியல் வலிமையைப் பெற்றனர். அலி அப்துல்லா சலேவுக்குப் பிறகு அதிபரான அப்துரப்புஹ் மன்சூர் ஹாதிக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியைத் தொடங்கினர்.
ஹூத்திகள் தங்களது பழைய எதிரியான சலேவுடன் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டனர். இதன் மூலம் அவரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர முடியும் என்று அவர்கள் நம்பினர்.
வடக்கு ஏமனில் உள்ள சதா மாகாணத்தை ஹூத்திகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தலைநகர் சனாவையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, அதிபர் ஹாதி ஏமனை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்குச் சென்றார்.
ஏமனின் அண்டை நாடான செளதி அரேபியா ராணுவ ரீதியாகத் தலையிட்டது. ஹூத்திகளை ஆட்சியில் இருந்து அகற்றி, ஹாதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போரில் ஐக்கிய அரபு எமிரேட்சும் பஹ்ரைனும் செளதி அரேபியாவுக்கு ஆதரவளித்தன.
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்து, ஏமனின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியுள்ளனர்.
2017-ஆம் ஆண்டு, ஹூத்திகளுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு செளதி அரேபியாவுடன் இணைந்து செயல்பட முயன்ற அலி அப்துல்லா சலேவை ஹூத்திகள் கொலை செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































