திமுக போராட்டத்தால் பதற்றம்: பழனிசாமி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கூறுவது என்ன?

தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். காவல்துறை நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக திமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, வெட்டி, ஒட்டி போலி செய்திகளை பரப்புகின்றனர். இன்று என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்." என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுவிட்டதாக அவரும், பிற திமுக தலைவர்களும் கூறும் நிலையில், இதுகுறித்து காவல்துறை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே, உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசிய அதே பனகல் கட்டடம் முன்பு திரண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, தஞ்சாவூர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் ரயிலடி முன்பு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேருந்துகளை மறித்தும் ஈடுபட்டனர்.
தற்போது, உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் ஒன்றுக்கு அழைத்து வரப்படும் நிலையில், நீதிமன்ற வளாகம் மற்றும் பனகல் கட்டடம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ANI
திருப்பூர் குமரன் சாலையில் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அதேபோல, அனுப்பர்பாளையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய நுழைவு பகுதியில் ராமநாதபுரம் நகர் திமுக சார்பில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி கொடி ஏந்தியவாறு தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அவர்களை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்தும், தவெக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றிச் சென்றனர்.
இதனிடையே, உதயநிதி மீதான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக தென்காசியில் தவெகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு மற்றும் காவல்துறை நடவடிக்கை பற்றி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது." என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உதயநிதி மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டியில், "எதிர்க்கட்சிகள் எந்த விதத்திலும் செயல்பட முடியாத நிலையில், பயமுறுத்தும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த போக்கை அவர் கைவிட வேண்டும். உதயநிதி ஸ்டாலினை குளியலறையிலேயே சென்று காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அதிகாரத்தை முதலமைச்சர் தவறாக பயன்படுத்துகிறார். நீதிமன்றம் தகுந்த முறையில் நடக்கும் என நம்புகிறேன்." என்றார்.
திருமாவளவன் கண்டனம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், "எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானது அல்ல. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்." என தெரிவித்துள்ளார்.
எனினும், நாளை சட்டப்பேரவை கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி
நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், "உதயநிதியைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்." என தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த், "ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் பண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. கருத்துகளை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும்." என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் நிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புவதாகும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், dmdk party / facebook
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "மேகேதாட்டு அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் பேச்சு கண்ணியமற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள அன்புமணி, துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், உதயநிதியை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ள அன்புமணி, "நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர் நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்னைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்." என தெரிவித்துள்ளார்.
குஷ்பு
தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், "உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைக் கேட்டேன். அது தரம் தாழ்ந்ததாகவும், மலிவான அரசியலை பிரதிபலிப்பதாகவும், மிகவும் இழிவுபடுத்தும் வகையிலும் இருந்தது. அவர் பின்பற்ற விரும்பும் அரசியல் கலாசாரத்தையே அது வெளிப்படுத்துகிறது.
இத்தகைய மனநிலையைக் கொண்டவர்கள் ஒரு அரசியல் கட்சிக்குத் தலைமை ஏற்கவும், ஒருநாள் மாநிலத்தை ஆளவும் விரும்பினால், இறைவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுபடுத்தி, அவமதிப்பதை அரசியல் மேடையில் ஒரு நிகழ்ச்சியாகக் கருதி, அதற்கு தங்களது ஆதரவாளர்களின் கைதட்டல், விசில், சிரிப்பில் மகிழ்ச்சி அடையும் நபர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இதை என்னைவிட நன்றாக அறிந்திருப்பவர் வேறு யார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், KUSHBU
பெ.சண்முகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்" என தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































