நாட்டையே உலுக்கிய குழந்தைகள் தொடர் கொலை வழக்கில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு

பட மூலாதாரம், Getty Images
2006-ஆம் ஆண்டின் நித்தாரி தொடர் கொலை வழக்கில் 2025-இல் உச்ச நீதிமன்றத்தால் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக ஹரித்வார் காவல்துறை கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஹரித்வாரில் வசித்து வந்த சுரேந்தர் கோலி லால் மாதா கோயிலுக்கு எதிரே ஒரு சிறிய தேநீர்க்கடை நடத்தி வந்தார். அந்த தேநீர்க் கடையிலேயே அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சுரேந்தர் கோலி அல்மோராவின் பிகியாசைன் பகுதியைச் சேர்ந்தவர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தி நிறுவனமான பிடிஐ தகவல்படி, காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில், நித்தாரி தொடர் கொலை வழக்கின் முதன்மை குற்றவாளியாகக் கருதப்பட்ட சுரேந்தர் கோலியை, இதுதொடர்பான கடைசி வழக்கிலிருந்தும் நிரபராதி எனக் கூறி உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
சுரேந்தர் கோலியை முந்தைய நீதிமன்றங்கள் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தண்டனை வழங்கியதற்குக் காரணமாக இருந்த ஆதாரங்கள், சட்டப்பூர்வமாகச் செல்லாதவை, நம்பகத்தன்மையற்றவை மற்றும் முரண்பாடானவை என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான மோனிந்தர் சிங் பந்தேரை நீதிமன்றம் ஏற்கனவே விடுவித்துவிட்டிருந்தது.
நொய்டாவில் உள்ள செக்டர்-31 நித்தாரி கிராமத்தில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்கள் இப்போது நான்கு மட்டுமே எஞ்சியுள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் அந்தக் கிராமத்தை விட்டே வெளியேறியதுடன், நீதிமன்றப் போராட்டத்திலிருந்தும் விலகிவிட்டன.
ஹரித்வார் காவல்துறை என்ன கூறியது?

பட மூலாதாரம், Asif Ali
பிபிசியின் அசோசியேட் செய்தியாளர் ஆசிஃப் அலியின் தகவல்படி, வடக்கு ஹரித்வாரின் சப்தரிஷி / பூபத்வாலா பகுதியில் சுரேந்தர் கோலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
"சப்தரிஷி பகுதியில் ஒரு நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் பெயர் சுரேந்தர் கோலி எனத் தெரியவந்துள்ளது. முதற்கட்ட ஆய்வில் இது தற்கொலை வழக்காகத் தெரிகிறது. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மருத்துவர்கள் குழுவால் நடத்தப்படும்" என்று ஹரித்வார் காவல்துறை அதிகாரி சிசுபால் சிங் நேகி தெரிவித்தார்.
விடுதலையான பிறகு சுரேந்தர் கோலி ஹரித்வாரில் ஒரு சிறிய தேநீர்க்கடை நடத்தி வந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு தடயவியல் குழுவினர் ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்; இருப்பினும், சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(குறிப்பு: தற்கொலை என்பது ஒரு தீவிரமான மனநல மற்றும் சமூகப் பிரச்சனையாகும். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் மன அழுத்தத்தாலோ அல்லது தற்கொலை எண்ணங்களாலோ பாதிக்கப்பட்டிருந்தால், தயவுசெய்து இந்திய அரசின் 'ஜீவன் ஆஸ்தா' இலவச உதவி எண் 1800-233-3330 மூலமாகத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் இது குறித்துப் பேசுவது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.)
வழக்கின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
பாலியல் வன்கொடுமை, கொலை, ஆதாரங்களை அழித்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில், மொனிந்தர் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி ஆகிய இருவருக்கும் 2009-ஆம் ஆண்டு காசியாபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கோலி 11 வழக்குகளில் தனிக் குற்றவாளியாக இருந்தார். இரண்டு வழக்குகளில் பாந்தருடன் அவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டில், அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்குடன் தொடர்புடைய 12 வழக்குகளிலிருந்து கோலியை விடுவித்தது. அதேபோன்று, மோனிந்தர் பாந்தரும் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளிலும் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், இவ்வழக்கின் விசாரணை மிகவும் மோசமான முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், "ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான அடிப்படை விதிகள் பகிரங்கமாக மீறப்பட்டுள்ளன" என்றும் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றத்தின் தீர்ப்பும் கேள்விகளும்

பட மூலாதாரம், ANI
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் பாராஸ் நாத் சிங் கூறுகையில், "இந்த வழக்கில் எவ்வித சூழ்நிலை ஆதாரங்களும் இருக்கவில்லை. எனவே சிபிஐ பதிவு செய்த சுரேந்தர் கோலியின் வாக்குமூலங்களை நீதிமன்றம் நம்பகமானதாக ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டப்படி ஒரு வாக்குமூலம் என்பது எந்தவொரு பயமோ அல்லது அழுத்தமோ இன்றி, சுய விருப்பத்துடன் அளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்" என்றார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 308 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகலின் 47-வது பக்கத்தில் "சுரேந்தர் கோலி 60 நாட்கள் காவல்துறையின் காவலில் இருந்தார்; இந்த 60 நாட்களில் அவருக்கு ஒருமுறைகூட மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் அவர் உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நீடிக்கிறது. 2007-ஆம் ஆண்டில் மட்டுமே ஒரு மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க மருத்துவர் ஆஜர்படுத்தப்படவில்லை." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேந்தர் கோலியின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த நீதிபதியும், குற்றஞ்சாட்டப்பட்டவர் எந்தவித அழுத்தமும் இன்றி தான் இதைக் கூறுகிறாரா என்பதை உறுதிசெய்து திருப்தியடையவில்லை என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதையும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆரம்பத்தில் சுரேந்தர் கோலி மற்றும் டி-5 வீட்டின் உரிமையாளரான மோனிந்தர் ஆகிய இருவருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்கும் இருவருமே பொறுப்பாக்கப்பட்டனர்.
ஆனால், காலம் செல்லச்செல்ல அனைத்துக் குற்றங்களுக்கும் சுரேந்தர் கோலி மட்டுமே குற்றவாளியாக்கப் பட்டார். விசாரணையின் வெவ்வேறு கட்டங்களில் அரசுத் தரப்பின் ஆதாரங்களும் மாறிக் கொண்டே இருந்தன; இறுதியாக சுரேந்தர் கோலியின் வாக்குமூலம் மட்டுமே ஒரே ஆதாரமாக எஞ்சியது. ஆனால், அந்த வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை ஏற்கனவே கேள்விக்குறியாகியிருந்தது.
2025, நவம்பர் 11 அன்று சுரேந்தர் கோலிக்கு எதிராக நிலுவையில் இருந்த கடைசி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, "எந்த ஆதாரங்களைப் போதுமானதாக இல்லை என்றும் நம்பகத்தன்மையற்றது என்றும் கூறி கோலியை ஏற்கனவே 12 வழக்குகளிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததோ, அதே ஆதாரங்களின் அடிப்படையில் அவரை இன்னும் ஒரு வழக்கில் குற்றவாளியாக நீடிப்பது அரசியல்சாசன ரீதியாகச் சரியல்ல" என்று தெரிவித்தது.
நித்தாரியில் நடந்த குற்றங்கள் மிகவும் கொடூரமானவை என்பதையும், தங்களது குழந்தைகளை இழந்த குடும்பங்களின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதையும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், இவ்வளவு நீண்ட விசாரணைக்குப் பிறகும் உண்மையான குற்றவாளி யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், "சட்டத்தின் முன் ஒருவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றவாளியாகத் தீர்மானிக்க முடியாது. சந்தேகம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், நீதிமன்றத்திற்குத் தீர்க்கமான ஆதாரங்களே தேவை. நீதியை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்திற்காகச் சட்ட விதிகளைப் புறக்கணிக்க முடியாது" என்று தெளிவாகக் குறிப்பிட்டது.
இறுதியில், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை முறை குறித்தும் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.
"விசாரணையானது உரிய நேரத்தில், தொழில்முறைத் திறனுடன் மற்றும் அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டிருந்தால், மிகவும் கடினமான வழக்குகளில் கூட உண்மையைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் நித்தாரி வழக்கில் அது நடக்கவில்லை. அலட்சியமும் தாமதமும் முழு விசாரணையையும் பலவீனப்படுத்தியதுடன், உண்மையான குற்றவாளியைக் கண்டறிவதற்கான பாதைகளையும் அடைத்துவிட்டது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதன் விளைவாக, மோனிந்தர் சிங்மற்றும் சுரேந்தர் கோலி ஆகிய இருவரும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
நித்தாரி கொலை வழக்கு: மர்மமான முறையில் மாயமான குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images
2005 முதல் 2006-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், டெல்லியை அடுத்துள்ள நொய்டாவின் நித்தாரி கிராமத்தில் அடுத்தடுத்து பல குழந்தைகளும் இளம் பெண்களும் மாயமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
காணாமல் போன குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்; ஆனால் புகார்களை பல மாதங்களாக காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இறுதியாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியபோது, மோனிந்தர் சிங்கின் வீட்டிற்குப் பின்னிருந்த சாக்கடைக் கால்வாயிலிருந்து 19 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. மோனிந்தர் சிங் மற்றும் சுரேந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணை அமைப்பின் தேடுதலின் போது, மனித எலும்புகளின் சில பாகங்களும், மனித உடலுறுப்புகள் நிரப்பப்பட்டுச் சாக்கடையில் வீசப்பட்டிருந்த 40 பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
விசாரணை தொடர்ந்த நிலையில், 2009-ஆம் ஆண்டில் காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒரு வழக்கில் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
ஆனால், பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழியாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தை அடைந்தபோது, நீதிமன்றம் தனது தீர்ப்பில் இரு குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் நிரபராதிகள் என அறிவித்து விடுவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































