இந்தியாவில் நடந்த இளைஞர் போராட்டம் பற்றி சீனாவில் என்ன பேசப்படுகிறது?

சமீபத்தில், இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் இளைஞர்கள் கல்வி முறையில் மேம்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், Satish Bate/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, சமீபத்தில், இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் இளைஞர்கள் கல்வி முறையில் மேம்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தினர். இந்தப் புகைப்படம் ஜூலை 25 அன்று மும்பையில் எடுக்கப்பட்டது.
    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களை, பிரதமர் மோதியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்று என்று சீன விமர்சகர்கள் விவரித்துள்ளனர்.

இந்தியக் கல்வி முறையின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதையே இந்தப் போராட்டங்கள் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் மோதியின் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டதாக ஃபுடான் பல்கலைக்கழக அறிஞர் ஒருவர் வாதிட்டார்.

சீனாவின் சமூக வலைதளமான வெய்போ பயனர்களும், இந்தப் போராட்டங்கள் இந்தியாவின் கல்வி முறை மற்றும் நிர்வாகத்தின் பலவீனங்களை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு எதிராகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், காக்ரோச் ஜனதா கட்சியின் தலைமையில் இளைஞர்கள் ஜூன் 20 முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இது தவிர, நாட்டின் பல இடங்களிலும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ஜூலை 25-ஆம் தேதி ராஜிநாமா செய்த பிறகு சி.ஜே.பி (காக்ரோச் ஜனதா கட்சி) போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் சமீபத்தில் நாடு தழுவிய அளவில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு, இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறித்த பரவலான கவலைகளே காரணம் என்று சீன விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீன விமர்சகர்கள் இதை பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட "மிகப்பெரிய அரசியல் பின்னடைவு" என்று அழைத்தனர்.

'மோதிக்கு ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் பின்னடைவு'

பிரதமர் மோதி

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, பிரதமர் மோதி ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது (கோப்புப் படம்)
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நீட்-யுஜி நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் பிற கல்வி சீர்திருத்தங்களையும் கோரி, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) இந்தியாவில் போராட்டங்களை முன்னெடுத்தது.

காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஒரு இணைய வழி கேலிச் சித்தரிப்பாக உருவாக்கப்பட்டது.

தெற்காசிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற ஃபுடான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான சென் சூ , தேசியவாத செய்திகள் மற்றும் கருத்துகளுக்கான 'குவான்ச்சா.சிஎன்' (Guancha.cn) என்ற இணையதளத்தில் ஜூலை 27 அன்று இந்த இயக்கம் குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது 12 ஆண்டுகால ஆட்சியில் சந்திக்க வேண்டியிருந்த "மிகக் கடுமையான அரசியல் பின்னடைவுகளில் ஒன்றாக" இது மாறியுள்ளது என்று அவர் அதில் குறிப்பிட்டார்.

"ஒரு வலுவான அரசியல் தலைவரின் அதிகாரம் என்பது அவரது அசைக்க முடியாத நிலையை அடிப்படையாகக் கொண்டது. மோதி பணிந்துபோகக் கட்டாயப்படுத்தப்பட்டது, நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதைக் காட்டுகிறது. இதுவே இந்த போராட்டங்களை அவரது ஆட்சிக்காலத்தின் மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது"என்ற கருத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நெருக்கடி, "மோதியின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களால் பெரும்பான்மையான படித்த இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்க முடிவதில்லை என்பதை முதன்மையாகக் காட்டுகிறது" என்று அந்தக் கட்டுரை தெரிவித்தது.

ஜூலை 23 அன்று 'குவான்ச்சா.சிஎன்' தளத்தில் வெளிவந்த மற்றொரு கட்டுரையில், "'காக்ரோச்' அமைப்பினரின் பெரும் கூட்டத்தைக் கண்டு இந்திய அரசு அதிர்ச்சியடைந்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா சிஜேபி-யின் எக்ஸ் கணக்கை முடக்கியதாகவும், "பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு குழுக்களின் கவனத்தை ஈர்க்க அது முயல்வதாக" ஒரு அமைச்சர் குற்றம் சாட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் எக்ஸ் தளம் கிடைக்காத போதிலும், அதன் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சுவாரஸ்யமாக உள்ளது.

இதற்கிடையில், அரசு அங்கீகாரம் பெற்ற 'தி பேப்பர்' செய்தி இணையதளத்தின் பாட்காஸ்ட் ஒன்றில், தேர்வு வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு ஒரு "திட்டமிட்ட மற்றும் மெதுவான நஞ்சு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, 'காக்ரோச்' சின்னமானது, குறைந்த வாய்ப்புகளை மட்டுமே எதிர்கொள்ளும் படித்த இளைஞர்களின் "கடைசி கட்ட முயற்சியையும் வாழ்வுக்கான கதறலையும்" குறிக்கிறது.

'நான்ஃபெங்சுவாங்' (Nanfengchuang - South Reviews) என்ற இதழும் ஜூலை 27 அன்று வெளியிட்ட கட்டுரையில், "ஜென் ஸி- யின் அதிருப்தி தேர்வுத் தாளுடன் மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக இந்தியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மோதி அரசின் மீது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளது.

உயர்மட்ட அரசு ஊடகங்களின் மௌனம்

காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சி சமூக ஊடகங்களில் ஒரு மீம் ஆகத் தொடங்கி, திடீரென இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அதில் இணைந்தனர் (கோப்புப் படம்).

சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் மற்றும் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சி.சி.டி.வி போன்ற உயர்மட்ட அரசு ஊடகங்கள் இந்தப் போராட்டங்களை செய்தியாக வெளியிடவில்லை.

சர்வதேச வாசகர்களை இலக்காகக் கொண்ட சீன அரசின் ஆங்கில நாளிதழான 'சீனா டெய்லி' , ஜூலை 21 அன்று மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்த ஒரு செய்தியை மட்டுமே வெளியிட்டது.

தனது வெளிப்படையான தேசியவாத நிலைப்பாட்டையும் மீறி, 'குளோபல் டைம்ஸ்' நாளிதழும் ஜூலை 23 அன்று அதன் சீனப் பதிப்பில் ஒரே ஒரு நேரலைச் செய்தியை மட்டுமே வெளியிட்டது.

தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டியதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மோதி உறுதியளித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

பொதுவாகச் சொல்வதானால், சீன அரசு ஊடகங்களில் போராட்டங்கள் குறித்த செய்திகள் பெரும்பாலும் சீனாவின் நலன்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுத் தகுந்தவாறு வெளியிடப்படுகின்றன.

முன்னதாக, தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு எதிரான போராட்டங்களையும், ஜி7 அமைப்பிற்கு எதிரான போராட்டங்களையும் அந்த ஊடகம் முதன்மை செய்தியாக வெளியிட்டிருந்தது.

அதேவேளையில், சீனா நெருங்கிய உறவைப் பேணும் அல்லது உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயலும் இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறும் போராட்டங்களுக்குக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்பட்டது.

ஆளுமைத் திறனோடு போராட்டங்களை தொடர்புபடுத்திய வெய்போ பயனர்கள்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து மும்பையில் இளம் பெண்கள் கொண்டாடும் காட்சி

பட மூலாதாரம், Anshuman Poyrekar/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததை அடுத்து மும்பையில் இளம் பெண்கள் கொண்டாடும் காட்சி. இது ஜூலை 26 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்.

சீன சமூக ஊடகக் கணக்குகளும் பயனர்களும் இந்தப் போராட்டங்களை, இந்தியாவின் கல்வி முறை மற்றும் நிர்வாகத்தில் உள்ள ஆழமான பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாகப் பரவலாக விவரித்தனர்.

சீனாவின் எக்ஸ் வடிவ சமூக வலைத்தளமான வெய்போ-வில், "மாணவர்களின் தொடர் தற்கொலைகளால் இந்திய இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்" என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பலர் பதிவுகளைப் பகிர்ந்தனர்.

அவற்றில் கல்வியமைச்சரின் ராஜிநாமாவைப் போராட்டக்காரர்கள் கொண்டாடி மகிழ்வது போல் காணப்பட்டது.

ஜூலை 29-ஆம் தேதிக்குள், இந்தப் பதிவு 14 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருந்தது.

'நான்ஃபெங்சுவாங்' பதிவிட்ட ஒரு பதிவின் கீழ் கருத்துத் தெரிவித்த பயனர் ஒருவர், தேர்வுகளில் முறைகேடு செய்வது "இந்தியாவில் சாதாரணமானது" போல் தெரிகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பயனர், சமூக நிலைத்தன்மையைப் பேண ஒரு வலுவான தேர்வு முறை எவ்வளவு முக்கியம் என்பதை சீனா நீண்டகாலமாகவே புரிந்துகொண்டுள்ளது என்று இந்தப் போராட்டங்களைக் மேற்கோள் காட்டிப் பதிவிட்டிருந்தார்.

கனடாவைச் சேர்ந்த பகுப்பாய்வாளரும், இந்திய விமர்சகருமான ஜெயந்த் பண்டாரி வெளியிட்ட வீடியோக்களையும் பல வெய்போ பயனர்கள் பகிர்ந்திருந்தனர்.

அதில் மக்கள் "முற்றிலும் திறமையற்றவர்களாக" இருப்பதால் மோதியால் "எதையும் சாதிக்க முடியாது" என்றும், பிரதமர் மோதி இந்தியாவின் பிரச்னைகளின் ஒரு அறிகுறி மட்டுமே என்றும் அவர் கூறியிருந்தார்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நாடு தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஜூலை 23 அன்று, சென் சூ என்பவரால் தொகுக்கப்பட்ட 'தெற்காசிய ஆய்வுகள்' செய்திமடலின் வெய்போ கணக்கில், மாணவர்கள் போராட்டம் நடத்துவது மற்றும் கோஷமிடுவது தொடர்பான பல வீடியோக்கள் பகிரப்பட்டன.

அதில் ஒரு பயனர், பொதுமக்களின் விமர்சனம் இந்தியாவின் கல்வி முறையையும் தாண்டி, மோதியின் "ஆளும் திறன்" மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு