'மாணவியை கொன்றதாக சிறுவன் மீது குற்றச்சாட்டு' - மலேசியாவில் விவாதத்தை தூண்டிய வழக்கில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Aaple Wong
- எழுதியவர், டெஸ்ஸா வோங்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
மலேசியாவில், சக மாணவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பதின்ம வயது சிறுவன் ஒருவருக்கு எதிரான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்கள் குழந்தைகளின் நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய வழக்காக இது பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 16 வயதான யாப் ஷிங் சுயென் எனும் சிறுமியைக் கொலை செய்ததாக அந்தச் சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் உள்ள அவர்களது மேல்நிலைப் பள்ளியின் கழிவறையில், பலமுறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்தச் சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவம் நடந்தபோது 14 வயதாக இருந்த அச்சிறுவன், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் பல ஆண்டு காலங்கள் சிறையில் கழிக்க நேரிடும்.
சமூக ஊடகங்கள் அந்தச் சிறுவனைத் தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் காவல்துறை முன்னதாகக் கூறியிருந்தது.
அச்சிறுவன் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டதையும் காவல்துறை உறுதிப்படுத்தியது.
அந்தக் குறிப்பின் உள்ளடக்கம் குறித்து வெளியான தகவல்கள், சமூக ஊடகங்களின் பங்கு பற்றிய பரவலான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
மலேசிய சட்டப்படி, அந்தச் சிறுவன் இன்னும் பதினெட்டு வயதை எட்டாததால், அவரது அடையாளத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது.
அச்சிறுவனின் வயது காரணமாக, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது.
இருப்பினும், அவன் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையையும் சவுக்கடியையும் எதிர்கொள்ள நேரிடலாம். மலேசியாவில் குற்றவியல் பொறுப்புக்கான வயது 10 ஆக உள்ளது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், குழந்தைகள் மீது சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்கள், குறிப்பாக மேனோஸ்பியர் மற்றும் இன்செல் கலாசாரத்தின் தாக்கம் குறித்து நாடு முழுவதும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
சிலர் இந்த வழக்கை நெட்ஃபிலிக்ஸ் தொடரான 'அடோலசென்ஸ்' உடன் ஒப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமிடம் இந்த வழக்கு குறித்தும், பள்ளிகளில் நடந்த பிற சமீபத்திய வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் கேட்கப்பட்டது.
"இந்தப் பிரச்னைகள் கிட்டத்தட்ட அனைத்துமே மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டிலிருந்தே தொடங்குகின்றன" என்று அவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
மேலும் கடுமையாக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகளைப் பாதுகாக்கவும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் அவர்களுக்குக் கிடைப்பதைக் குறைக்கவும் புதிய விதிகளை அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல், 16 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் முக்கிய சமூக ஊடகத் தளங்களில் கணக்கு வைத்திருக்க மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































