ஜப்பான்: ஃபுஜிசாவா நகரில் கட்டப்படும் முதல் மசூதி உள்ளூர் மக்களை கோபப்படுத்துவது ஏன்?

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள அமைதியான கடலோர நகரம் ஃபுஜிசாவா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஒரு மசூதி (டோக்கியோ கமேய்) (கோப்புப் படம்)
    • எழுதியவர், குருமி மோரி
    • பதவி, பிபிசி செய்தியாளர், டோக்கியோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் ஒரு மணிநேர பயணத் தொலைவில் அமைந்துள்ள அமைதியான கடலோர நகரம் ஃபுஜிசாவா. ஃபுஜிசாவா நகரில் முதல் மசூதியைக் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.

"இது நமது சமூகத்தை எவ்வாறு மாற்றக்கூடும் என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன்" என்று பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் நோரிகோ இசுமிசாவா கூறுகிறார்.

இங்கு ஓர் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கான திட்டம், மக்களிடையே கலவையான உணர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஒருபுறம் கோபமும் அச்சமும் காணப்பட்டாலும், மறுபுறம் நம்பிக்கையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் உள்ளது.

ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதாலும், முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும் உருவாகியுள்ள தொழிலாளர் பற்றாக்குறை, குடியேற்றம் மற்றும் சமூக மாற்றம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளை இந்த விவாதம் எடுத்துக்காட்டுகிறது.

ஜப்பானில் குடியேற்றம் என்பது அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்கதாகவும், அரிதாகவே விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகவும் இருந்து வந்தாலும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்நாடு தற்போது வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகளவில் சார்ந்துள்ளது.

இதனால் வெவ்வேறு கலாசாரங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்ட குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதனால்தான் ஃபுஜிசாவா போன்ற நகரங்களில் நடைபெறும் விவாதம், ஒரு மசூதியைக் கட்டுவது பற்றியதாக மட்டுமின்றி, மாறி வரும் உலகில் ஜப்பான் தன்னை எவ்வாறு பார்க்கிறது என்பதைப் பற்றியதுமாக உள்ளது.

 ஃபுஜிசாவா போன்ற நகரங்களில் நடைபெறும் விவாதம், ஒரு மசூதியைக் கட்டுவது பற்றியது மட்டுமல்லாமல் , மாறிவரும் உலகில் ஜப்பான் தன்னை எவ்வாறு பார்க்கிறது என்பதைப் பற்றியதுமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது ஊரில் புதிய மசூதி கட்டப்படுவது சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து நோரிகோ இசுமிசாவா கவலைப்படுகிறார்

இசுமிசாவா மட்டுமே இவ்வாறு நினைக்கவில்லை. இஸ்லாமிய சமூகத்தின் இருப்பு அதிகரித்து வருவது குறித்துக் கவலை கொண்டுள்ள ஃபுஜிசாவா நகரின் உள்ளூர்வாசிகளில் அவரும் ஒருவர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குடியேற்றம் தொடர்பாகத் தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய விவாதங்களும் தனது கவலைகளை அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், உள்ளூர் ரயில் நிலையத்தில் மசூதி கட்டும் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. மசூதி கட்டும் முன்மொழிவை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருகிலுள்ள ஜப்பானிய ஷிண்டோ வழிபாட்டுத் தலத்தைவிட மிகப்பெரிய மசூதியைக் கட்டுவது மரியாதைக் குறைவான செயல் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இதற்கு அப்பால், ஜப்பானிய சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சுகளும் தவறான தகவல்களும் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, சில மசூதிகளுக்கு அவதூறான தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்துள்ளன. அவற்றில் சில, வெறுப்புப் பரப்புவதை நிறுத்தக் கோரி வெறுப்புக்கு எதிரான அமைப்புகளின் எதிர் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன.

ஃபுஜிசாவா மசூதி கட்டப்படவுள்ள இடத்திற்கு எதிரே உள்ள தெருவில் ஹிரோகி சுசுகா ஒரு காபி கடையை நடத்தி வருகிறார். அதிக புரிதலையும் உரையாடலையும் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர் பேசுகிறார்.

"நான் இதை முற்றிலுமாக எதிர்க்கவில்லை. ஆனால், அதற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூற மாட்டேன்" எனக் கூறும் அவர், "முதல் படி, அவர்களைப் புரிந்து கொள்வதில்தான் தொடங்குவதாக நான் நினைக்கிறேன். அவர்கள் எத்தகைய மனிதர்கள், அவர்களின் மதிப்புகள் என்ன, அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது திறந்த மனம், ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் ஆகியவற்றில் இருந்து தொடங்குகிறது" என்கிறார் ஹிரோகி சுசுகா.

ஆனால், தற்போது உள்ளூர் மக்களின் மனப்பான்மை முன்பை விட எதிர்மறையாக மாறியிருப்பதாகவும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இணையத்திலும் நேரிலும் இழிவான கருத்துகளை எதிர்கொள்வதாகவும் மொஹிதீன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஜப்பானில் முஸ்லிம்களின் நிலை என்ன?

தொழிலதிபர் முகமது மொஹிதீன் கடந்த 39 ஆண்டுகளாக ஒசாகாவில் வசித்து வருகிறார். சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி, 1987ஆம் ஆண்டு தனது சொந்த நாடான இலங்கையில் இருந்து அவர் ஜப்பானுக்கு குடிபெயர்ந்தார்.

முதலில் அவர் ரத்தினக் கற்கள் வியாபாரத்தில் ஈடுபட்டார். பின்னர், பயன்படுத்தப்பட்ட கார்களை இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினார். ஜப்பானில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காலகட்டத்தில் அவர் அங்கு வந்தார்.

ஆனால், தற்போது உள்ளூர் மக்களின் மனப்பான்மை முன்பைவிட எதிர்மறையாக மாறியுள்ளதாகவும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இணையத்திலும் நேரிலும் இழிவான கருத்துகளை எதிர்கொள்வதாகவும் மொஹிதீன் கூறுகிறார்.

"சமூக ஊடகங்களில் 'ஜப்பானை விட்டு வெளியேறு', 'உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்' என்று எண்ணற்ற கருத்துகள் பதிவாகின்றன. மேலும், சிலர் மசூதிக்கே வந்து இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்" என்று மொகிதீன் கூறுகிறார்.

உள்ளூர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மொஹிதீன் மத நிகழ்வுகளுக்காக தினமும் ஒசாகா மசூதிக்குச் செல்கிறார். இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று மொஹிதீன் கூறுகிறார்.

பல ஆண்டுகளாக அண்டை வீட்டாருடன் நல்லுறவைக் கொண்டிருந்த போதிலும், சமீப காலமாக முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவர் கவனித்துள்ளார்.

"இப்போது மக்கள் எங்களைக் கண்டு அச்சப்படத் தொடங்கி இருப்பது போலத் தெரிவதாக" அவர் கூறுகிறார். சமீப காலமாக வாய்மொழி துஷ்பிரயோகங்கள் அதிகரித்து இருப்பதாகவும் மொஹிதீன் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் "பயங்கரவாதிகள்" என்று அழைக்கப்படுவதுடன், அவர்கள் "வெடிகுண்டுகள் தயாரிப்பதாகவும்" குற்றம் சாட்டப்படுவதாக அவர் கூறினார். மேலும், ஜப்பானை விட்டு வெளியேறுமாறும் கூறப்படுவதாகவும் மொஹிதீன் கூறுகிறார்.

"இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்" என்று மொஹிதீன் கூறுகிறார். "நாங்கள் கோபமாகப் பதிலளிக்க வேண்டும் அல்லது அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் எங்களைத் தூண்ட முயல்கிறார்கள். இவற்றை எங்களால் எவ்வளவு காலம் சகித்துக் கொள்ள முடிகிறது என்பதைப் பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள்."

"அதனால்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். மரியாதையுடன் பேசுகிறோம். அவர்களிடம் அன்பாக நடக்க முயல்கிறோம். ஏனெனில், ஜப்பானில் உள்ள பலருக்கு இஸ்லாத்தைப் பற்றி அதிகம் தெரியாது"என்கிறார்.

இருப்பினும், இந்த இடைவெளி அதிகரித்ததற்கு முஸ்லிம் சமூகமும் ஓரளவு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

"நாங்கள் எங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினோம். நாங்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு நீண்ட காலமாக போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை. சமூகத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கும் போதுமான அளவு முயலவில்லை" என்று அவர் கூறுகிறார்.

இப்போது, உரையாடலை அதிகரிக்கவும், ஒருவரையொருவர் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும் தான் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

அதேபோல, 61 வயதான ஷகீல் முகமது, கடந்த பத்தாண்டுகளாக சைதாமா மாகாணத்தில் உள்ள யாஷியோ மசூதியின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். பாகிஸ்தானில் இருந்து ஜப்பானுக்கு வந்த பிறகு, அவர் 26 ஆண்டுகளாக கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், ஜப்பானிய மொழியை சரளமாகப் பேசுகிறார் முகமது.

கழிவுகளை முறையாகப் பிரித்து வைப்பது, பார்க்கிங் நிறுத்தும் விதிகளைப் பின்பற்றுவது, மிதிவண்டி ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது உள்ளிட்ட ஜப்பானிய விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று முகமது கூறுகிறார்.

"ஜப்பானிய பழக்கவழக்கங்களை மதிக்கவும், விதிமுறைகளைப் பின்பற்றவும் எங்களால் முடிந்த வரை முயல்கிறோம்" என்று கூறும் அவர், "மக்களுக்கு வணக்கம் சொல்வது போன்ற சிறிய விஷயங்கள்கூட இங்கு முக்கியமானவை" என்று தெரிவித்தார்.

யாஷியோவில் வசிக்கும் சில ஜப்பானியர்கள், அங்குள்ள பாகிஸ்தானிய சமூகத்தை நகைச்சுவையாக "யாஷியோ-ஸ்தான்" என்று குறிப்பிடுவதாக ஷகீல் முகமது கூறுகிறார்.

"சில பாகிஸ்தானியர்கள் தவறாக நடந்துகொள்வது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதே விஷயம் ஜப்பானியர்களுக்கும் பொருந்தும்" என்கிறார் ஷகீல் முகமது.

ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டவர்களின் நிலைமை

2025-ஆம் ஆண்டில் ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2025ஆம் ஆண்டில் ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது. இவர்களில் பெரும்பாலானோர் சீனா, வியட்நாம், தென் கொரியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் (சித்தரிப்புப் படம்)

பெரிய மக்கள் தொகை மாற்றங்களுக்கு மத்தியில், தனது அடையாளத்தை தக்க வைத்துக்கொள்வது என்ற சவாலை ஜப்பான் எதிர்கொண்டு வருகிறது.

ஜப்பானில் மதம் குறித்து ஆய்வு செய்து வரும் வாசேடா பல்கலைக் கழகத்தின் கௌரவ பேராசிரியர் ஹிரோஃபுமி தனடாவின் கூற்றுப்படி, ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 2,30,000 ஆக இருந்தது. இது 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 4,20,000 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையும், அந்த நாட்டில் நிகழ்ந்து வரும் பரந்த மாற்றங்களின் ஒரு பகுதியாகும். 2025ஆம் ஆண்டில், ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியது. இவர்களில் பெரும்பாலானோர் சீனா, வியட்நாம், தென் கொரியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அரசுத் தரவுகளின்படி, இவர்களில் சுமார் 25.7 லட்சம் பேர் ஜப்பானில் பணிபுரிகின்றனர். இந்த ஆண்டில், ஜப்பானின் மொத்த மக்கள் தொகை சுமார் 10 லட்சமாகக் குறைந்துள்ளது. ஜப்பானை ஒரு குடியேற்ற நாடு என்று அழைப்பதை அரசு அதிகாரிகள் நீண்ட காலமாகத் தவிர்த்து வருகின்றனர். இருப்பினும், நிரந்தரக் குடியேற்றத்தைவிட தற்காலிக வேலைக்காக வழங்கப்படும் விசாக்களையே அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதை விமர்சகர்கள் "மறைமுக குடியேற்ற முறை" என்று அழைக்கின்றனர். இருப்பினும், பிரதமர் சனே தகாய்ச்சி, பெருமளவிலான குடியேற்றம் குறித்து மிகவும் கடுமையான, பழமைவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து மடங்கு உயர்த்த ஜப்பானிய அரசு முடிவு செய்தது. குடியேற்ற சேவை முகமையின் ஊழியர்கள் எண்ணிக்கையை சுமார் 230 வரை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதிகாரிகள் மேலும் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

வெளிநாட்டவர் சமூகங்கள் அதிகம் வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில், நீண்ட காலமாகத் தவிர்த்து வந்த ஒரு கேள்வியை ஜப்பான் இப்போது எதிர்கொள்கிறது.

தனது அடையாளத்தையும் ஒற்றுமையையும் பேணிக்கொண்டே, பன்முகத் தன்மை கொண்ட நாடாக ஜப்பான் மாற முடியுமா?

ஃபுஜிசாவாவில், இஸ்லாமிய அண்டை வீட்டாருடன் தனக்கு இதுவரை எந்த மோசமான அனுபவமும் ஏற்பட்டதில்லை என்பதை இசுமிசாவா ஒப்புக் கொள்கிறார்.

"உண்மையில், எனக்கு நன்கு தெரியாத விஷயங்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு