பிரிஜ் பூஷன் விடுதலை: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
பாஜக மூத்த தலைவரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லைவ் லா தகவலின்படி, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 6 மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், "நீதிமன்றம், 'பிரிஜ் பூஷன் சிங் மற்றும் வினோத் தோமர் ஆகிய இருவருமே மரியாதையுடன் விடுவிக்கப்படுகிறீர்கள்' என்று கூறியுள்ளது.
"எனக்கு எதிராக ஏதேனும் தீர்ப்பு வந்தாலோ அல்லது ஏதேனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலோ, நான் தூக்கிட்டுக் கொள்வேன் என்று முதல் நாளிலேயே கூறியிருந்தேன்" என்றார்.
"இன்று நீதிமன்றம் என்னை மரியாதையுடன் விடுவித்துள்ளது. இது எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். இன்று இதற்கு மேல் நான் எதுவும் பேச மாட்டேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர்.
வினோத் தோமர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் செயலாளராக இருந்தவர்.

பட மூலாதாரம், ANI
வினேஷ் பொகாட்டின் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான், இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட் குறித்துப் பிரஜ் பூஷன் சரண் சிங்கிடம் கேட்டபோது, "யாரையும் பெயர் சொல்லி குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. மல்யுத்த வீரர்களுடன் பிரியங்காவும் ஜந்தர் மந்தருக்கு வந்திருந்தார். உணவு மற்றும் பானங்களுக்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி கட்சிதான் செய்து வந்தது. இடதுசாரிகளோ அல்லது வலதுசாரிகளோ யாராவது விடுபட்டார்களா? என்னைத் தூக்கிலிட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன. இப்போது அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்."
நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறுகையில்,"அதிகாரம் அனைத்தும் அவர்கள் வசமே உள்ளது என்பதையும், எல்லாமே அவர்கள் கையில் இருப்பதையும் இன்றைய தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. அவர்கள் சாட்சிகளைத் தங்கள் பக்கம் வளைத்துவிட்டனர். விரிவான நீதிமன்ற உத்தரவு என்னவென்று நாங்கள் இப்போது அறிய முயன்று வருகிறோம். அவர் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பது எங்களுக்குப் புரியவில்லை." என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
எஃப்.ஐ.ஆரில், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லை தொடர்பான பல சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.
மே மாதம் 2024ஆம் ஆண்டில், நீதிமன்றம் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் வினோத் தோமர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
தகவல்களின் படி, பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354 (பெண்ணின் கற்புக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்) மற்றும் 354A (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
6 மல்யுத்த வீராங்கனைகளில் ஐந்து பேர் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஒருவரின் புகாரின் அடிப்படையில், நீதிமன்றம் பிரிஜ் பூஷன் சிங்கைக் விடுவித்தது.
வினோத் தோமர் மீது 'குற்றவியல் மிரட்டல்' பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இருப்பினும், பிரிஜ் பூஷன் சரண் சிங் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு ஆகஸ்ட் மாதம் 2023ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. புலனாய்வு அமைப்பு இந்த வழக்கில் அவரைக் கைது செய்யவில்லை. நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனுவும் எதிர்க்கப்படவில்லை.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

பட மூலாதாரம், @BAJRANGPUNIA
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுகள் முதன்முதலில் 2023 ஜனவரியில் வெளிவந்தன. அப்போது வினேஷ் பொகாட், சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள கன்னோட் பிளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, வினேஷ் பொகாட் உள்ளிட்ட பல மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையின்போது, இந்த விவகாரம் தொடர்பாக முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































