'என் சகோதரன் அரிசி மூட்டைக்குள் ஒளிந்தான்': உலகக் கோப்பை கால்பந்தில் ஜொலிக்கும் வீரரின் பின்னணி

    • எழுதியவர், இயன் வில்லியம்ஸ்
    • பதவி, பிபிசி ஸ்போர்ட் ஆப்பிரிக்கா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஹூஸ்டன் மைதானத்தில் குராசோவாவுக்கு எதிரான உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி 7-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் அன்டோனியோ ரூடிகர் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கினார்.

அப்போது தனது பெரிய குடும்பம் அதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஆனால், கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடும் இந்த தற்காப்பு ஆட்டக்காரரின் பெற்றோர்கள், சியரா லியோனில் பத்து ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரிலிருந்து தப்பித்து ஐரோப்பாவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்காவிட்டால், அவருடைய வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும்.

"அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே அப்போது இருந்தது" என்று ரூடிகர், பிபிசி ஸ்போர்ட் ஆப்பிரிக்காவிடம் தெரிவித்தார் .

"நான் இதைப் பற்றி என் சகோதரருடன் பலமுறை பேசியிருக்கிறேன், அவர் அங்கு பார்த்த கதைகளையும், பாதுகாப்பு தேடி கோனோவிலிருந்து [அவரது குடும்பத்தினர் கோனோ பகுதியைச் சேர்ந்தவர்கள். அது சியரா லியோனின் கிழக்கில் அமைந்துள்ளது] தலைநகர் வரை அவர்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்தார்கள் என்பதையும் என்னிடம் கூறினார்"என்று நினைவு கூறுகிறார்.

கோனோவிற்கும் தலைநகர் ஃப்ரீடவுனுக்கும் இடையே உள்ள தூரம் தோராயமாக 210 மைல்கள் (340 கி.மீ) ஆகும்.

இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக இருந்தது.

மோதலின் போது கிளர்ச்சியாளர்களால் தனது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கடத்தப்பட்டு, போரில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான இளம் வீரர்களாக மாற்றப்படுவதைத் தடுப்பதற்காக ரூடிகரின் மாமா தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

"[அவர்] அவர்களை ஒரு அரிசி மூட்டைக்குள் மறைத்து வைத்தார், பின்னர் அவர்களைத் திரும்ப அழைத்து வந்து பயணத்தைத் தொடர்ந்தார்" என்று கூறும் ரூடிகர், "சில நேரங்களில் துப்பாக்கியால் சுடப்படாமல் இருக்க அல்லது கடத்தப்படாமல் இருக்க, அவர்கள் தங்களை இறந்தவர்கள் போல பாசாங்கு செய்து பதுங்கியிருக்க வேண்டியிருந்தது"எனக் குறிப்பிடுகிறார்.

ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான ரூடிகர், அவரது குடும்பத்தினர் ஜெர்மனியால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு பெர்லினில் பிறந்தார். அதே நேரத்தில் மற்ற உறவினர்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற பிற இடங்களில் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.

33 வயதான ரூடிகர், ஜெர்மனியின் அகதிகள் முகாம்களில் ஒன்றில் வளர்ந்ததை நினைவு கூர்கிறார்.

"எங்களுக்கு ஒரு அறை இருந்தது, பின்னர் எங்களுக்கு அடுத்ததாக மற்றொரு குடும்பத்திற்கு ஒரு அறை இருந்தது, எனவே நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம்" என்று ரூடிகர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அது என்னை மிகவும் பாதித்தது, ஏனெனில் வாழ்க்கையில் எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை. நீங்கள் அவற்றுக்காக உழைக்க வேண்டும், சில சமயங்களில் உங்கள் இலக்கை அடைய நீங்கள் நிறைய தியாகம் செய்ய வேண்டும்"என்கிறார்.

புலம்பெயர் வீரர்களும் ரசிகர்களும் ஏற்கனவே தங்கள் முத்திரையைப் பதித்துள்ள ஒரு தொடரில், அகதிகளுக்கு ஆதரவாக "குரல் எழுப்ப இதுவே சரியான நேரம்" என்று இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் வென்ற ரூடிகர் கூறுகிறார்.

இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் ஒரே நபர் அவர் மட்டுமல்ல.

இந்த உலகக்கோப்பை தொடரை இணைந்து நடத்தும் கனடா அணியின் கேப்டன் அல்போன்சோ டேவிஸ், தனது ஆரம்பக் காலங்களை கானாவின் அகதி முகாமில் கழித்தார்.

அவரது பெற்றோர் லைபீரியாவிலிருந்து தப்பிச் சென்றனர்.

அந்த நாடும் சியாரா லியோனும் 1990களிலும் 2000களின் தொடக்கத்திலும் உள்நாட்டுப் போரால் பேரழிவைச் சந்தித்திருந்தன.

"கனடா எனக்கு மிகவும் முக்கியமானது" என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமையிடம் பேயர்ன் மியூனிச் அணியின் ஃபல்-பேக் ஆட்டக்காரரான அல்போன்சோ டேவிஸ் கூறினார்.

இந்த முகமையானது, "போர் மற்றும் துன்புறுத்தல்களால் இடம்பெயர்ந்த இளைஞர்களுக்குப் பாதுகாப்பும், வாய்ப்பும், வரவேற்பும் கிடைக்கும்போது அவர்களால் என்னவெல்லாம் சாதிக்க முடியும்" என்பதைக் காட்டுவதற்காக, அகதி வீரர்களைக் கொண்டு ஒரு எடுத்துக்காட்டான "மாற்றத்தை ஏற்படுத்தும் அணியை" உருவாக்கியுள்ளது.

தான் குடியேறிய நாட்டைப் பற்றிய நினைவுகளில், "முதன்முறையாகப் பள்ளிக்குச் சென்றது, நான் விரும்பும் விளையாட்டை விளையாட முடிந்தது மற்றும் நண்பர்களை உருவாக்க முடிந்தது" ஆகியவற்றைப் பட்டியலிட்ட டேவிஸ், "அவர்கள் எங்களை முழுமையான அன்புடன் வரவேற்றனர்"என்கிறார்.

"நான் யாராக இருக்க வேண்டும், வாழ்க்கையில் என்னவாக மாற வேண்டும் என்று விரும்புகிறேனோ, அதற்கான வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கினர்"என்றும் டேவிஸ் குறிப்பிட்டார்.

அகதிகள் குறித்த உலகளாவிய கண்ணோட்டம் மாறி வருகிறதா?

ஐநா அகதிகள் முகமையில் (UNHCR) தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ள மற்ற வீரர்களில் பின்வருபவர்களும் அடங்குவர்:

  • ரூடிகரின் ரியல் மாட்ரிட் அணி வீரரான எடுவார்டோ காமவிங்கா. இவருடைய பெற்றோர் அங்கோலாவிலிருந்து பிரான்சுக்கு குடிபெயர்ந்தவர்கள்.
  • நைஜீரிய வீரர் விக்டர் மோசஸ். 2002 இல் நைஜீரியாவில் ஏற்பட்ட மதக் கலவரங்களில் தனது பெற்றோர் கொல்லப்பட்டதை அடுத்து பிரிட்டனில் இவர் குடியேறினார்.
  • போஸ்னியாவின் முன்னாள் கோல்கீப்பர் அஸ்மிர் பெகோவிச். ரூடிகரைப் போலவே, இவரும் தனது நான்கு வயதில் பால்கன் பகுதியில் ஏற்பட்ட போரிலிருந்து தப்பிய பிறகு ஜெர்மனியால் வரவேற்கப்பட்டார்.
  • முன்னணி ஆட்டக்காரர் அலி அல்-ஹமாடி. இவருடைய தந்தை சதாம் உசேன் ஆட்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இராக்கிலிருந்து தப்பிச் சென்றனர்.

வாட்ஃபோர்ட் அணியின் நெஸ்டோரி இரான்குண்டா, நார்விச் அணியின் முகமது டூரே மற்றும் ஸ்பெயினின் இரண்டாம் நிலைத் தொடரில் காஸ்டெல்லோன் அணிக்காக விளையாடும் அவெர் மாபில் ஆகிய மூன்று முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். .

துருக்கிக்கு எதிரான 2-0 என்ற வெற்றியின் போது இரான்குண்டா அடித்த கோல், 20 வயதான அவரை ஆஸ்திரேலிய அணி வரலாற்றிலேயே உலகக் கோப்பையில் கோல் அடித்த இளம் வீரராக மாற்றியது.

இரான்குண்டா, டூரே மற்றும் மாபில் ஆகியோர் ஆப்பிரிக்க அகதிகள் முகாம்களில் பிறந்தவர்கள் அல்லது அங்கு வளர்ந்தவர்கள், ஆனால் இப்போது கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை அவர்கள் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கம், அணியின் இந்த பன்முகக் கலாசாரக் கட்டமைப்பு குறித்து மிகவும் பெருமிதம் கொள்கிறது.

இதனால் குடியேற்றத்தின் நன்மைகளைச் சுட்டிக்காட்டுவதற்காக, ஒவ்வொரு வீரரும் தங்களின் பிறந்த இடம் அல்லது குடும்ப பாரம்பரியத்தைப் பட்டியலிடும் ஒரு வீடியோவை அது உருவாக்கியுள்ளது.

"போர், வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக இடம்பெயரும் போது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்" என்று ஐநா-வின் அகதிகளுக்கான உயர் ஆணையர் பர்ஹாம் சாலிஹ் கூறுகிறார்.

உலகம் முழுவதும் 48.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

"சிலர் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்துள்ளனர், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்"என்றும் பர்ஹாம் சாலிஹ் குறிப்பிட்டுள்ளார்.

அகதிப் பின்னணியைக் கொண்ட வீரர்கள் உலகக் கோப்பையில் உற்சாகப்படுத்தப்பட்டாலும், ஐநா-வின் இயக்கத்தில் ஈடுபட்டுள்ள சில வீரர்களுக்கு, மாறிவரும் உலகளாவிய கண்ணோட்டங்கள் குறித்து கவலைகள் உள்ளன.

மோதல்களில் இருந்து தப்பி வருபவர்களின் அவலநிலை மீதான அனுதாபம் குறைந்துள்ளதாக நம்பும் ரூடிகர்,"இப்போது உருவாகும் கருத்துகள், அகதிகளையே அதிகமாக குற்றம் சாட்டும் வகையில் நகர்கிறது"என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர்,"நிச்சயமாக, உங்களிடம் எப்போதும் நன்மையும் தீமையும் இருக்கும். இதுதான் வாழ்க்கை, நாம் அனைவரும் குறைபாடற்றவர்கள் அல்ல. ஆனால் ஒரு நபர் தவறு செய்தால், அனைவரும் கெட்டவர்களா?"

"நீங்கள் எல்லோர் மீதும் பழி சுமத்த முடியாது, அது நியாயமற்றது. ஏனென்றால், இங்கு வருபவர்கள் உண்மையிலேயே தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள், அவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள், கற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்".

"அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள், பள்ளிக்குச் செல்கிறார்கள், வாழ்க்கையில் எதையாவது சாதிக்கிறார்கள்"என்று அவர் கூறுகிறார்.

அகதிகளை ஏற்பதை குறைத்த அமெரிக்கா

ஜனவரி 2025 இல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடனேயே, அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டத்தை (USRAP) நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு அமெரிக்க அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்று டிரம்ப் கூறினார்.

1980 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, அமெரிக்க அகதிகள் சேர்க்கை திட்டம் (USRAP ) 504,000 ஆப்பிரிக்கர்கள் உட்பட தோராயமாக 3.7 மில்லியன் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட வழிவகுத்துள்ளது.

கடந்த அக்டோபரில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, நடப்பு நிதியாண்டில் அகதிகள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை 7,500 ஆக கட்டுப்படுத்துவதாக அறிவித்தது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளையின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. காரணம், ஆஃப்ரிகானர்களுக்கு எதிராக "இனப்படுகொலை" நடைபெறுகிறது என்ற கூற்றை டிரம்ப் முன்வைத்தார். ஆனால் அந்த கூற்று பரவலாக மறுக்கப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான ஏழு மாதங்களில் 6,069 அகதிகள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறுகின்றன.

அவர்களில் மூவரைத் தவிர மற்ற அனைவரும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள்.

இதற்கு மாறாக, அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில்,மொத்தம் 1,00,034 அகதிகள் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

அதில், 32 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 34,017 பேர் இடம்பெற்றிருந்தனர்.

காங்கோ ஜனநாயகக் குடியரசுவில் இருந்து அதிகபட்சமாக 19,923 பேர் வந்திருந்தனர்.

அதேபோல் சோமாலியாவில் இருந்து 4,801 பேர், எரித்ரியாவில் இருந்து 2,411 பேர், மற்றும் சூடானில் இருந்து 2,184 பேரும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்றனர்.

அகதிகளை ஏற்கும் எண்ணிக்கையை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைக்கும் இந்த முடிவு, "மனிதாபிமான அக்கறைகளால் நியாயப்படுத்தப்படுகிறது அல்லது தேசிய நலன் சார்ந்தது" என்று டிரம்ப் நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் இது விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டவர்களால் எதிர்க்கப்பட்டது.

"வருந்தத்தக்க வகையில், இப்போது, ஆப்பிரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என்று அகதிகளைக் குடியேற்றுவதற்காக இதற்கு முன்பு வெளியுறவுத்துறையுடன் இணைந்து பணியாற்றிய குளோபல் ரெஃப்யூஜி என்ற லாப நோக்கற்ற அமைப்பின் தலைவரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் ஓ'மாரா விக்னராஜா பிபிசி ஸ்போர்ட் ஆப்பிரிக்காவிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், " ஒரு வாய்ப்பு வழங்கப்படும் போது அவர்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை, இந்த உலகக் கோப்பையில் அமெரிக்கா கொண்டாடுவதை நாம் காணப் போகிறோம் , அது நிச்சயமாக அவர்கள் கொண்டாட வேண்டிய ஒன்றுதான்"என்றும்,

"அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கடந்த ஒரு வருடமாக குறைவான மக்களுக்கே அந்த வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்துள்ளனர். இது ஒரு தெளிவான மற்றும் ஆழமான கவலையளிக்கும் முரண்பாடாகும்"என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் கனடாவில், கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்றுக்கொள்ளப்படும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் கொள்கை வகுப்பாளர்கள் தங்களுக்கென மேலும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை நோக்கி நகர்ந்தபோதிலும் இது நிகழ்ந்துள்ளது.

10 ஆண்டு காலப்பகுதியில், அந்த நாட்டின் அகதிகள் பாதுகாப்புப் பிரிவின் (RPD) தரவுகள், 2016 இல் 9,972 அகதிகள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை 2025 இல் 50,067 ஆக உயர்ந்ததாகவும் வெளிப்படுத்துகின்றன.

கனடாவின் மிகச் சமீபத்திய புள்ளிவிவரங்களில் முப்பத்தெட்டு ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெற்றிருந்தன, இதில் அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக நைஜீரியா உள்ளது.

அமெரிக்கா தனது முதல் உலகக் கோப்பையை 1994 இல் நடத்தியது. அந்த ஆண்டில் 100,000 க்கும் அதிகமான அகதிகள் அந்நாட்டில் குடியேற்றப்பட்டனர்.

"உலகை நடத்துவதும், உலகை வரவேற்பதும் வெவ்வேறு கருத்துகள் அல்ல என்பதை நாம் அப்போது அறிந்திருந்தோம்" என்று கூறிய ஓ'மாரா விக்னராஜா, "ஆனால் நாம் அதை மறந்துவிட்டது போல் தெரிகிறது"என்றார்.

ரூடிகர் மற்றும் டேவிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள், தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் வாழ்வளித்த நாடுகளுக்காக விளையாடும் போது, மக்களின் இந்த நினைவுகளைத் தூண்டுவார்கள் என்று நம்புகிறார்கள்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு