பசிபிக் பெருடங்கடலை துடுப்பு படகில் தனியே கடந்த இளைஞரின் திகிலூட்டும் 15 மாத சாகச பயணம்

    • எழுதியவர், மொபீன் அசார்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலை வேளையில், 24 வயதான டாம் ராபின்சன் பசிபிக் பெருங்கடலின் நடுவே தனியாக இருந்தார். அவரது படகு தலைகீழாகக் கவிழ்ந்திருந்தது, உயிர் பிழைக்க அவர் படகின் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டிருந்தார். அவரது உடலில் ஆடை ஏதுமின்றி, கடும் குளிரால் அவர் நடுங்கிக் கொண்டிருந்தார்.

அந்தத் தருணத்தில், தன்னை யாராவது காப்பாற்ற வருவார்களா அல்லது தன்னால் உயிர் பிழைக்க முடியுமா என்பது டாமுக்கு தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த இளைஞர், பெரு நாட்டில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார். அவர் தானே வடிவமைத்து, சொந்தக் கைகளால் கட்டிய மரப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

டாமின் கனவு அவருக்கு 14 வயதாக இருந்தபோதே தொடங்கியது. பசிபிக் பெருங்கடலை படகு மூலம் கடக்கும் மிக இளம் வயது நபராக வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. பல ஆண்டு கால திட்டமிடலுக்குப் பிறகு, அவர் இறுதியாக அந்தக் கனவை நனவாக்கப் புறப்பட்டார்.

இந்தக் கடினமான பயணத்தின்போது, அவர் உலகின் மிகப்பெரிய பெருங்கடல்களில் ஒன்றைக் கடந்தது மட்டுமின்றி, தன்னைப் பற்றியும், வாழ்வில் தனக்கு எதெல்லாம் முக்கியமானவை என்பது பற்றியும், பயம் மற்றும் எதிர்காலத்தில் நிச்சயமற்ற சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் கற்றுக்கொண்டார்.

பிபிசியிடம் பேசிய ராபின்சன், "எல்லாம் முடிந்துவிட்டது, இந்தப் பயணம் என் உயிரைப் பறித்துவிடும் என்று நான் நினைத்த ஒரு தருணம் இருந்தது" என்றார்.

அந்த எண்ணம் மிகுந்த மன வேதனையையும் அச்சத்தையும் தருவதாகக் கூறினார் அவர். ஆனால் விரைவில், அந்தச் சூழலை அவர் அணுகும் விதத்தை மாற்றிக்கொண்டார். தனக்கு முன்பாக இருந்த மிகப்பெரிய சவாலைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு படியாக அடையக்கூடிய சிறிய இலக்குகளில் அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தனது பயணத்தின்போது, டாம் முழுமையான அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணங்களையும் அனுபவித்தார். பசிபிக் தீவுகளில் வசிக்கும் மக்களிடம் இருந்து அவருக்கு அன்பும் ஆதரவும் கிடைத்தன. அங்குள்ள சமூகங்கள் அவரை "மனதார வரவேற்று" உபசரித்தன.

தனது பயணத்தை நிறைவு செய்த பிறகு, பிபிசி உலக சேவையின் 'அவுட்லுக்' ரேடியோ நிகழ்ச்சியில் உரையாடியபோது, இந்தப் பயண அனுபவத்தின் மூலம் தான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களை டாம் ராபின்சன் பகிர்ந்துகொண்டார். இந்த நேர்காணலை பத்திரிகையாளர் மொபீன் அசார் நடத்தினார்.

கேள்வி: பசிபிக் பெருங்கடலைக் கடக்க வேண்டுமென்ற உங்கள் கனவு எப்படித் தொடங்கியது?

பதில்: நான் பிரிஸ்பேன் ஆற்றின் கரையில் வளர்ந்தேன், அதனால் அந்த ஆறு என் குழந்தைப் பருவத்தின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது. அந்த ஆறு நகரின் ஊடாக ஓடியது. என் ஆரம்பக்கால வாழ்க்கை அதனுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது.

தினமும் பள்ளி முடிந்த பிறகு, நான் ஆற்றில் படகு ஓட்டியும் மீன் பிடித்தும் நேரத்தைச் செலவிடுவேன். ஆற்றங்கரையில் சுதந்திரமான, சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த 'ஹக்கிள்பெர்ரி ஃபின்' என்ற புகழ்பெற்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் சாகசங்களைப் போன்ற ஒரு குழந்தைப் பருவத்தை நான் கொண்டிருந்தேன். அந்த அனுபவங்களில்தான் படகுகள் மற்றும் கடல் மீதான என் காதல் தொடங்கியது.

ஒவ்வோர் இரவும், மாலுமிகள், ஆய்வாளர்கள், பெரும் சாகசங்களை மேற்கொண்டவர்கள் பற்றிய புத்தகங்களைப் படிப்பேன். ஒரு நாள் அதிகாலையில் எழுந்து கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டே, 'டாம், பசிபிக் பெருங்கடலைக் கடந்து படகு ஓட்டும் மிக இளம் வயது நபர் நீதான், அதற்காக நீயே ஒரு படகை உருவாக்கப் போகிறாய்' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

எனக்கு 14 வயதாக இருந்த அந்த நாளில் இருந்து, இந்தப் பயணம் மற்றும் சாகசம் பற்றி ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்தேன்.

கேள்வி: பசிபிக் பெருங்கடலைக் கடக்க நீங்களே படகை உருவாக்கவும் விரும்பினீர்கள். அது ஏன் அவ்வளவு முக்கியமானதாக இருந்தது?

பதில்: மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நான் விரும்பினேன் எனக் கருதுகிறேன். பசிபிக் பெருக்கடலைத் தேர்வு செய்ததற்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால், அது உலகின் மிகப்பெரிய பெருங்கடல் என்பது ஒரு முக்கியக் காரணம். தென் பசிபிக் பகுதியைக் கடப்பது என்பது, ஒரு நபர் மேற்கொள்ளக்கூடிய மிக நீண்ட, கடினமான கடல்வழிப் படகுப் பயணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதனால், படகை நானே உருவாக்குவது என்பது அந்த முழுப் பயணத்தின் மிக முக்கியமான பகுதியாக மாறியது. அந்தப் படகு, பசிபிக் பயணத்திற்கான ஒரு கருவி மட்டுமல்ல, அது எனது வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறியது. என்னுடைய சொந்த வரைபடங்களே அதன் வடிவமைப்பை உருவாக்கின, என் சொந்தக் கைகளே அந்தப் படகை உருவாக்கின.

இறுதியில், அந்த முழு பயணமும் என்னை முழுதாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழியாக அமைந்தது. படகை உருவாக்கியது அந்தத் தனிப்பட்ட வெளிப்பாட்டின் முக்கியப் பகுதியாக அமைந்தது.

கேள்வி: அதோடு உங்கள் படகுக்கு நீங்கள் 'மைவார்' என்று பெயர் சூட்டினீர்கள். பழங்குடியின மொழியில் இதற்கு 'பிரிஸ்பேன் ஆறு' என்றுதானே பொருள்...

பதில்: ஆம். அந்தப் படகின் வடிவமைப்பு 18ஆம் நூற்றாண்டின் திமிங்கிலம் வேட்டையாடும் கப்பல்களால் ஈர்க்கப்பட்டது. இவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்களை வேட்டையாடுவதற்காக பசிபிக் பெருங்கடலில் பயணித்த பழைய கப்பல்கள்.

ஓர் இரவில் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கப்பல்களின் வடிவமைப்புகளைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அந்தத் திட்ட வரைபடங்களை ஆராய்ந்தபோது, இந்தப் பயணத்திற்கு எனக்குத் தேவைப்படும் கப்பல் இதுதான் என்று நினைத்தேன். கடந்த 250 ஆண்டுகளில் கடலும் அதன் அலைகளும் மாறவில்லை என்றும் கடல் அப்படியே இருந்ததால், படகின் வடிவமைப்பிலும் பெரிய மாற்றம் தேவைப்படாது என்று கருதினேன்.

கேள்வி: இந்த சாகச பயணத்திற்கு மனதளவில் உங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?

பதில்: அப்படிப்பட்ட ஒரு விஷயத்திற்கு ஒருவர் தன்னை எப்படித் தயார்படுத்திக் கொள்ள முடியுமென்று எனக்குத் தெரியவில்லை.

பிரிஸ்பேனில் இருந்து கிளம்பும்போது, வீட்டை நினைத்து ஏங்காமல் இருப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இயல்பாகவே, என் நண்பர்களும் குடும்பத்தினரும் எப்போதும் என் வாழ்வின் அங்கமாகத் தொடர்ந்து இருந்தார்கள். ஆனால், பயணத்தின் நடுவில் என்னுடனும் என்னைச் சுற்றியுள்ள உலகத்துடனும் முழுமையான அமைதியுடன் இருக்க, வேறொருவருக்காக வேறோர் இடத்தில் இருக்க வேண்டுமென ஏங்காமல் இருக்க, நான் உறவுமுறைகளைத் தற்காலிகமாகத் துண்டித்துக் கொள்ள முயன்றேன்.

கேள்வி: அந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு காதலி இருந்தார் அல்லவா?

பதில்: ஆம், அந்தப் பயணத்தின் பெரிய சோகமே அதுதான் என்று தோன்றுகிறது. பிற எல்லாவற்றையும்விட அந்தப் பயணத்திற்கே நான் முன்னுரிமை அளிக்க வேண்டியிருந்தது.

"அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கோ அல்லது இந்தப் பயணம் எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறதோ அதுவரைக்கும், என் வாழ்வில் மிக முக்கியமான விஷயமாக இந்தத் துடுப்புப் படகுப் பயணமே இருக்கப் போகிறது" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதனால் நான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

கேள்வி: ஆக, நீங்கள் உங்கள் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டீர்களா?

பதில்: ஆம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் அது மிகவும் கடினமான ஓர் உரையாடலாக இருந்தது. ஆனால் அந்த முறிவு ஏற்படவிருந்தது எங்கள் இருவருக்குமே தெரிந்திருந்தது. "வழியிலுள்ள தீவுகளுக்கு உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களைப் பார்க்க வருவார்களா?" என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள்.

அதற்கு நான், "நிச்சயமாக இல்லை, லிமாவுக்கு செல்லும் விமானத்தில் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் இருந்து நான் கிளம்பும்போது இந்தப் பயணம் தொடங்குகிறது, நான் மீண்டும் பிரிஸ்பேனுக்கு திரும்பும்போது அது முடிவடைகிறது" என்று கூறினேன்.

என் கடந்த கால வாழ்க்கை உடனான அல்லது பழைய உலகுடனான எந்தவொரு தொடர்பும், இந்தப் பயணம் குறித்த என் உணர்வைப் பாதித்து இருக்கும். நான் இதில் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன்.

அந்த அனுபவம் முழுமையானதாகவும், உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டுமென விரும்பினேன். அதை அடைவதற்கு அதுவே சிறந்த வழியாக இருந்தது.

கேள்வி: நீங்கள் புறப்பட்ட நாள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...

பதில்: அது 2022ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி. அதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அதுவொரு விசித்திரமான, கனவு போன்ற நாளாக இருந்தது. உள்ளூர் சந்தைக்குச் சென்று காலை உணவுக்காக ரொட்டியையும் பன்றித் தோல் சிற்றுண்டியையும் வாங்கிக் கொண்டு, அங்கிருந்த பெண்களிடம் விடைபெற்றேன். பின்னர் நான் யாட் கிளப்புக்கு சென்றேன், அங்கு பலர் வந்து சேரத் தொடங்கினர்.

டாம் இரண்டு மாதங்களாக லிமாவில் தங்கி நண்பர்களைச் சம்பாதித்து இருந்ததால், அங்கிருந்து கிளம்பவிருந்த அந்த இளம் ஆஸ்திரேலியருக்கு விடைகொடுக்க அந்தச் சமூகமே திரண்டு வந்திருந்தது.

எங்கும் தொலைக்காட்சி கேமராக்கள் இருந்தன. தொலைவில் பார்த்தபோது, கடற்படை இசைக்குழு ஒன்று வருவது தெரிந்தது.

நான் கிளம்பிய பிறகு, நடக்கவிருந்த வேறொரு நிகழ்ச்சிக்காக அவர்கள் வருவதாக நினைத்தேன். ஆனால் யாட் கிளப் மேலாளர் என்னைப் பார்த்து கண் சிமிட்டினார், உடனே அந்த இசைக்குழு பாரம்பரிய பெருவியன் கடற்படைப் பாடல்களை இசைக்கத் தொடங்கியது.

இசைக் கலைஞர்கள் ஒரு படகில் ஏறி இசைக்கத் தொடங்கினர். பிறகு நானும் என் படகில் ஏறி, அதைக் கட்டி வைத்திருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, அமர்ந்து, துடுப்புகளைப் பிடித்துக் கொண்டு, என் முதல் துடுப்புவீச்சை தொடங்கினேன்.

அது பல மில்லியன் துடுப்பு வீச்சுகளில் முதலாவது என்பதை உணர்ந்தேன். எப்பேற்பட்ட உணர்வு அது!

என்னைச் சுற்றிப் படகுகள் இருந்தன, இசைக்குழு இசைத்துக் கொண்டிருந்தது. நான் முழு கவனத்துடன் தீவிரமாகத் துடுப்பை இழுத்தேன். பயணத்திற்கான உணவு, தண்ணீர் அனைத்தும் ஏற்றப்பட்டு இருந்ததால், படகு மிகவும் கனத்தது.

சிறிது சிறிதாக படகுகள் துறைமுகம் நோக்கித் திரும்பத் தொடங்கின, என்னுடன் வர ஒரு படகு மட்டுமே எஞ்சியிருந்தது. அது எனக்குப் பெரிதும் உதவிய என் நல்ல நண்பர் கொன்சாலோ ரிவாகோவுடையது.

இறுதியில் அவரும் திரும்பிச் சென்றுவிட, பெருங்கடலில் கடல் சிங்கங்களும் நானும் மட்டுமே எஞ்சியிருந்தோம். அப்போதுதான் அந்த சாகசப் பயணம் தொடங்கிவிட்டதை உண்மையாகவே உணர்ந்தேன்.

பயணத்தின் முதல் 75 நாட்களும் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்தவையாக இருந்தன.

பசிபிக் பெருங்கடலின் நடுவே சொந்தப் படகில் இருப்பது, இரவு உணவுக்காக மீன் பிடிப்பது, கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வது என அது நீங்கள் கனவு காணக்கூடிய வாழ்க்கையாக இருந்தது.

கேள்வி: பயணத்தின் 75வது நாளில் என்ன நடந்தது?

பிரெஞ்சு பாலினீசியாவின் ஒரு பகுதியாக விளங்கும் மார்க்கேசஸ் தீவுக் கூட்டத்தில் இடைநிறுத்த திட்டமிட்டு பெருவில் இருந்து புறப்பட்டேன். தென் அமெரிக்காவில் இருந்து சுமார் 3,000 முதல் 4,000 மைல்கள் (சுமார் 6,800கி.மீ) தொலைவில், அதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள முதல் தீவுக் கூட்டம் இது.

சுமார் 100 நாட்களில் அந்தத் தீவுக் கூட்டத்தைச் சென்றடையும் நோக்கத்துடன் நான் பயணித்துக் கொண்டிருந்தேன், அனைத்தும் மிகச் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தன.

திடீரென, தென்கிழக்கு திசையில் இருந்து ஒரு கடுமையான காற்று வீசத் தொடங்கியது. பல நாட்களாக அந்தக் காற்று மிகுந்த வேகத்துடன் வீசியது. நான் எவ்வளவோ முயன்றும், செல்ல வேண்டியிருந்த தீவுக் கூட்டத்தில் இருந்து விலகி மென்மேலும் வடக்கு நோக்கி அடித்துச் செல்லப்பட்டேன்.

பசிபிக் பெருங்கடலின் பெரிய கடல்சார் வரைபடத்தை நான் எடுத்தேன். மக்கள் வசிக்கக்கூடிய தீவு ஏதேனும் அருகில் இருக்கிறதா எனத் தேடி, வரைபடத்தை மீண்டும் மீண்டும் உற்று கவனித்தேன்.

மக்கள் வசிக்கும் ஒரு தீவைக் கண்டுபிடிப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், எந்தத் தீவாக இருந்தாலும், சூறாவளி வீசும் காலமான அடுத்த நான்கு மாதங்களுக்கு நான் அங்கேயே தங்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஒருவழியாக, வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளியைப் போலத் தெரிந்த 'பென்ரின்' அல்லது 'தொங்கரேவா' என்றழைக்கப்படும் தீவைக் கண்டுபிடித்தேன்.

அந்தத் தருணத்தில் திடீரென என் பயணத்தின் நோக்கமே மாறிப் போனது. அந்தச் சிறிய புள்ளி என் இலக்காக மாறியது. அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்கள், அந்த இடம் எப்படிப்பட்டது என எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து துடுப்பு போட்டேன்.

உயிர் பிழைப்பதற்கும், அந்தத் தீவைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், ஒரு நாளைக்கு ஏறக்குறைய 14 மணிநேரம் இடைவிடாது தீவிரமாகத் துடுப்பு போட்டுக் கொண்டேயிருந்தேன்.

கேள்வி: இறுதியாக, சுமார் 5,000 கடல் மைல்கள் படகோட்டிச் சென்ற பிறகு, 160வது நாளில் நிலத்தையும், மக்கள் நிறைந்த ஒரு கப்பல் உங்களை நோக்கி வருவதையும் காண முடிந்தது அல்லவா...

பதில்: வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் பரவசத்தையும் நான் உணர்ந்தேன். என்னைப் பார்த்ததில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

கடல் நீரேரியின் வழியாக 'ஓமோகா' என்ற சிறிய கிராமத்திற்கு நான் இழுத்துச் செல்லப்பட்டேன். அதுவே அந்தத் தீவின் மிகப்பெரிய கிராமம். அங்கு 140 மக்கள் வசிக்கின்றனர். வீடுகள் செங்கல் மற்றும் தகரத்தால் ஆனவை.

"டாம், நீங்கள் தரையில் இறங்கலாம்" என்று அவர்கள் என்னிடம் கூறினர். என் கால்களைப் பார்த்தபோது, 150 நாட்களுக்கும் மேலாக நான் எடுத்து வைக்கவிருக்கும் முதல் அடி அதுதான் என்பதை உணர்ந்தேன்.

அந்தப் படகு மிகவும் சிறியதாக இருந்ததால் உள்ளே நடக்க முடியவில்லை, எனவே அதிலிருந்து இறங்க நான் ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொண்டேன். என் கால்கள் கடினமான பவளப்பாறைத் தரையில் பதிந்தன.

எனக்குக் கீழே இருந்த பூமியின் கதகதப்பை உணர்ந்தேன், அது ஓர் அற்புதமான உணர்வாக இருந்தது. நான் எழுந்து நிற்க முயன்றேன், ஆனால் கடுமையான தலைச் சுற்றல் ஏற்பட்டது, போதையில் தள்ளாடும் மாலுமியைப் போல நடந்தேன்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரிய, வலிமையான மனிதர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, நான் நிமிர்ந்து நிற்பதற்கு உதவினார்கள். கிராமத்து முதியவர் ஒருவர் என்னிடம் வந்து, "டாம், எங்கள் பென்ரின் தீவுக்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இங்கு வந்த முதல் சர்வதேச படகு உங்களுடையதுதான்" என்று கூறினார்.

மேலும் அந்த முதியவர், "நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீங்கள் இங்கு 'டாம் ராபின்சன்' என்ற பெயரில் வந்தீர்கள், ஆனால் இப்போது உங்களுக்கு ஒரு புதிய பெயர் உள்ளது. இனி நீங்கள் 'மஹுதா ஹோய் ஹோ அசாங்கா' என்று அழைக்கப்படுவீர்கள். எங்கள் மொழியில் இதற்கு 'தொலைதூரத்தில் இருந்து படகோட்டி வந்த வீரன்' என்று பொருள். எனவே, மஹுதா, பென்ரின் தீவுக்கு உங்களை வரவேற்கிறோம்" என்றார்.

நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். கடலில் இவ்வளவு நீண்ட காலத்தைக் கழித்த பிறகு, இறுதியாக அந்தச் சிறிய சொர்க்கத்தை அடைந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் என்னை மனதார வரவேற்றனர். அவர்கள் உடனடியாக என்னைத் தங்கள் வீடுகளிலும் வாழ்க்கையிலும் ஒருவராக ஏற்றுக் கொண்டனர்.

அங்கிருந்து நான் கிளம்பும்போது, மனதிற்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள், அன்பானவர்கள் மற்றும் சுயநலமற்றவர்கள். உண்மையைச் சொல்லப்போனால், அங்கு எனக்கு வாழ்நாள் முழுவதும் நிலைத்து இருக்கக்கூடிய நண்பர்களும் குடும்பத்தினரும் கிடைத்துள்ளனர்.

கேள்வி: நீங்கள் பல சவால்களை எதிர்கொண்டீர்கள், ஆனால் கடலில் 260 நாட்களுக்கும் மேலாகப் பயணித்திருந்த போதும், இருப்பதிலேயே மிகவும் கடினமான சவாலை அதற்குப் பிறகுதான் எதிர்கொண்டீர்களா?

பதில்: ஆம், நான் சுமார் 7,000 கடல் மைல்கள் பயணித்து இருந்தேன், இன்னும் 50 நாட்களில் கரையை அடைந்து, எனது சிறுவயதுக் கனவை நனவாக்கிவிடலாம் என்று நம்பியிருந்தேன்.

அன்று நாள் முழுவதும் மிகவும் சிரமமின்றிப் படகைச் செலுத்தினேன். வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டு, படகின் உள்ளே இருக்கும் அறைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

கடலில் பயணிக்கும் இத்தகைய படகுகளைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவை தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் நிலையற்றதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு பெரிய அலை அவற்றைக் கவிழ்த்தால், அவை தானாகவே மீண்டும் சரியான நிலைக்குத் திரும்பிவிடும்.

அவற்றின் மூடி மூடப்பட்டு இருக்கையில் உள்ளே அதிகளவு காற்று அடைபட்டிருப்பதே, அவை தலைகீழாக இருக்கும்போது நிலையற்றதாக இருப்பதற்குக் காரணம். ஆனால், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும், சில நேரங்களில் தூங்க முயலும்போது மூச்சுத் திணறல் ஏற்படும் சூழலும் உருவாகும்.

அதனால், இந்த முறை நான் அந்த மூடியைத் திறந்து வைத்திருந்தேன், அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. படுக்கையில் படுத்துக்கொண்டு இரவு உணவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு பயங்கரமான மோதல் சத்தம் கேட்டது. நான் சுதாரிப்பதற்குள், ஒரு ராட்சத அலை படகை உலுக்கி, அதைத் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது.

நொடிப்பொழுதில் அறைக்குள் தண்ணீர் புகுந்தது. நான் மூச்சைப் பிடித்துக் கொண்டேன். சிந்திப்பதற்குக்கூட நேரம் இருக்கவில்லை. அது பேரதிர்ச்சியாக இருந்தது. அதற்குள் சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியிருந்தது.

பாதி திறந்திருந்த அந்த மூடியின் வழியாக நீந்தி வெளியேறி, தலைகீழாகக் கவிழ்ந்த படகின் பக்கவாட்டுப் பகுதியைப் பற்றிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி ஏதும் இருக்கவில்லை.

திடீரென, மிக மோசமான ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதை நான் உணர்ந்தேன். படகை மீண்டும் சரியான நிலைக்குக் கொண்டு வருவதற்கு முயன்றேன். ஒரு பக்கத்தில் கயிற்றைக் கட்டி அதை நிமிர்த்தி இழுக்க முயன்றேன். ஆனால் அது மிகவும் கனமாக இருந்ததால் நகரவே இல்லை.

அவசர கால சிக்னல் கருவி படகின் உள்ளே இருப்பது நினைவுக்கு வந்தது. படகின் அடிப்பகுதி வழியாக நீந்தி அறைக்குள் சென்று, அந்த அவசரக்கால சிக்னல் கருவியை எடுத்து, அதைப் பத்திரப்படுத்தி, மீண்டும் அதே வழியாக வெளியே நீந்தி வர வேண்டியிருந்தது.

அதை ஒரு கயிற்றால் என் மணிக்கட்டில் கட்டிக் கொண்டேன். இரவில் படகைச் சரிசெய்யவோ அல்லது நிலைமையைச் சீராக்கவோ முயல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தலைகீழாகக் கவிழ்ந்திருந்த படகின் அடிப்பகுதி மீது ஏறி, என்னையும் அதனுடன் சேர்த்து கட்டிக்கொண்டேன்.

அப்போது இருள் சூழ்ந்திருந்தது, கடல் கொந்தளிப்பாக மாறியதுடன் அலைகளின் அளவும் பெரிதாகிக் கொண்டிருந்தது. தலையில் அடிபட்டு உணர்வை இழந்து, என் பயணம் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற ஆபத்தான சூழலில் இருந்தேன். முற்றிலும் நிர்வாணமாக, குளிரில் நடுங்கியபடி, தலைகீழாகக் கவிழ்ந்திருந்த படகின் அடிப்பகுதியில் அமர்ந்திருந்தேன்.

அனைத்தும் முடிந்து விட்டதென்றும், இந்தப் பயணம் என் உயிரைப் பறித்துவிடும் எனவும் நான் ஒரு கணம் நினைத்தேன். அது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கும் சிந்தனை. ஆனால் நான் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு, அது வெறும் ஒரு தற்காலிகத் தடைதான் என்பதை உணர்ந்துகொண்டேன்.

கேள்வி: அந்தத் தருணத்தில் நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்?

அந்த 14 மணிநேரத்தில் என் மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஆரம்பத்தில், எல்லாமே இருண்டதாகவும் நம்பிக்கையற்றதாகவும் தோன்றியது. அந்தப் பயணம் மட்டுமல்ல, என் வாழ்வே முடிவுக்கு வந்துவிட்டதாக நான் நினைத்தேன்.

அந்த எண்ணம் மிகுந்த வேதனையை அளித்தது. ஆனால் விரைவில் என் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு, அதில் ஏதேனும் நேர்மறையான அம்சம் இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினேன்.

அந்தப் பயணம் முழுவதுமே சவால்களைக் கடந்து செல்வதைப் பற்றியதாகவே இருந்தது. எனவே, அதுவரை கடந்து வந்திருந்த தடைகளை என்னால் கடக்க முடிந்தபோது, இந்த இரவையும் கடந்து என்னால் உயிர் பிழைக்க முடியுமென எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

நான் சிறு சிறு இலக்குகளை நிர்ணயிக்கத் தொடங்கினேன். அதில் மிக முக்கியமான இலக்கு, அந்த இரவைக் கடந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதுதான்.

எப்படியும் நிலவு உதிக்கும் என்பது எனக்குத் தெரியும், அது நான் பார்த்ததிலேயே மிக அழகான நிலவு உதயமாய் இருக்குமெனத் தீர்மானித்தேன். அத்துடன், அந்தச் சூழலில் இருந்து வெளியேறுவதற்கான வழியைத் திட்டமிடத் தொடங்கினேன்.

மறுநாள் சூரியன் உதிக்கும். படகில் ஏதேனும் உணவு கிடைக்கலாம், பிறகு படகைச் சரியான நிலைக்குக் கொண்டு வருவதற்கு அதன் சில பகுதிகளை நீரால் நிரப்பி சரிசெய்துவிட்டு, பயணத்தைத் தொடரலாம் என்று நினைத்தேன்.

என்னிடம் 'எமர்ஜென்சி லொகேட்டர் பீக்கன்' எனப்படும் அவசரக்கால இருப்பிடம் காட்டும் கருவி இருந்தது. அது 'பீப்' ஒலியையும் ஒளிச் சமிக்ஞைகளையும் வெளியிடும். ஆனால் யாராவது என்னைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களா அல்லது உதவி ஏதேனும் வருகிறதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

கேள்வி: மீட்பு நடவடிக்கை எப்படி நடந்தது?

பதில்: அலைகள் படகின் மீது பலமாக மோதி, என்னை இழுத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளின.

இரவு முழுவதும் நான் கிழக்குத் திசையை உற்றுநோக்கிக் கொண்டிருந்தபோது, அந்த அடர்ந்த இருள் மெல்லிய அடர் ஊதா நிறமாக மாறியது. பிறகு படிப்படியாகத் தெளிவாகத் தொடங்கியது. அப்போது, அனைத்தும் சரியாகிவிடும் என்ற வலுவான நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது.

என் வாழ்வின் மிகக் கடினமான இரவையும், மிகக் கடுமையான அனுபவத்தையும் நான் கடந்துவிட்டிருந்தேன். இனி எல்லாம் சிறப்பாக அமையுமெனக் கருதினேன்.

எனக்குள் பெரும் பரவசம் ஏற்பட்டது. அடிவானத்தில் சூரியன் உதித்த சிறிது நேரத்திலேயே, அங்கு ஒரு பெரிய கருப்புப் புள்ளியைப் பார்த்தேன். அதுவொரு கப்பல் என்பதை உணர்ந்தேன். அந்தப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அப்போதுதான் முதல் முறையாக நான் அறிந்துகொண்டேன்.

கேள்வி: ஆரம்பத்தில் அதுவொரு சரக்குக் கப்பல் என்று நீங்கள் நினைத்தீர்கள் அல்லவா?

பதில்: ஆம், அது ஒருவேளை சீனாவுக்கு செல்லும் சரக்குக் கப்பலாக இருக்கலாம் என்றும் அது சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் நினைத்தேன். ஆனால், அந்தக் கப்பல் நெருங்கி வந்தபோது, அது 'பி&ஓ' நிறுவனத்தின் சொகுசுப் பயணிகள் கப்பல் என்பது தெரிய வந்தது.

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்போதுதான் நான் எவ்வளவு நிர்வாணமாக இருந்தேன் என்பதைப் பற்றி உணரத் தொடங்கினேன். கப்பல் நெருங்கி வந்தபோது, அதன் தளங்களில் நூற்றுக்கணக்கானோர் பெரிய கேமரா லென்ஸ்கள் மற்றும் பைனாகுலர்களுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

பெரிய அலைகள் கப்பலின் பக்கவாட்டில் மோதி உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருந்த நிலையில், என்னுடைய சிறிய படகு அந்தக் கப்பலின் பக்கவாட்டுப் பகுதிக்கு வந்து சேரும் வகையில் கேப்டன் கப்பலைச் செலுத்தியது மிகச் சிறப்பாக இருந்தது. அது உண்மையிலேயே ஒரு பயங்கரமான சூழல்.

அவர்கள் கப்பலின் பக்கவாட்டில் கயிற்றால் ஆன ஏணி ஒன்றைக் கீழே இறக்கினார்கள். என் படகை விட்டுவிட்டு அந்த ஏணியில் குதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியேதும் இருக்கவில்லை.

முழு பலத்தையும் திரட்டி நான் அந்தக் கயிற்று ஏணியில் ஏறினேன். கப்பலுக்குள் ஏறியதும், ஒரு நடைபாதையில் குழுமியிருந்த பணியாளர்கள் மற்றும் பிறரைக் கண்டேன். அவர்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சூழலே விசித்திரமான, நம்ப முடியாத ஒரு கனவு போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

கேள்வி: பயணத்தை முழுமையாக முடிக்க முடியாவிட்டாலும், பசிபிக் பெருங்கடலைத் துடுப்புப் படகில் கடந்த மிக இளம் வயது நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் பெறும் அளவுக்கு நீங்கள் பெருங்கடலைக் கடந்திருந்தீர்கள். உங்கள் கனவை நனவாக்கினீர்கள். அதிலிருந்து மீண்டும் திரும்பியது எப்படி இருந்தது?

பதில்: நான் திரும்பிய பிறகான 12 மாதங்கள் என் வாழ்வின் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது.

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் எப்போதும் செய்ய விரும்பிய ஒரு மிக முக்கியமான விஷயத்தை செய்து முடித்திருந்த நிலையில், எனக்குள் ஒரு பெரிய வெறுமை ஏற்பட்டது.

திரும்பி வந்த பிறகு எதிர்கொள்ளும் சிரமங்களால், அந்தப் பயணம் உண்மையில் பயனுள்ளதா என்று சில நேரங்களில் தோன்றலாம். ஆனால், படகு ஓட்டியபோது ஒவ்வொரு நாளாகக் கடந்து சென்றதைப் போலவே, இதையும் ஏற்றுக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

கேள்வி: இந்தப் பயணத்தில் இருந்து திரும்பி வந்த பிறகு, உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை மீண்டும் கண்டறிந்து விட்டீர்களா?

பதில்: ஆம், நான் மீண்டும் வேலைக்குத் திரும்பிவிட்டேன். மீண்டும் படகுகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு ஒரு சிறிய தொழில் உள்ளது. ஆனால், ஏதோவொன்று எப்போதும் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது. "எப்போது என்னால் மீண்டும் கடலுக்குச் செல்ல முடியும்?" என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

கேள்வி: இந்தப் பயணத்தைத் தொடங்கிய 'டாம்', இன்று எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் 'டாம்' ஆகியோருக்கு இடையே எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: வாழ்க்கை மற்றும் நான் எடுத்த முடிவுகள் குறித்துச் சிந்திக்கவும், ஆழ்ந்து யோசிக்கவும், என்னையே கேள்வி கேட்டுக் கொள்ளவும் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது.

தீவுகளை அடைந்து, அங்குள்ள மக்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதையும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் மன அமைதியுடனும் வாழ்வதையும் பார்த்தபோது, எனது அன்றாட முடிவுகள் மற்றும் வாழ்க்கை முறை குறித்துக் கேள்வி எழுப்பத் தொடங்கினேன்.

என்னைப் பற்றி நானே இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளத் தேவையான மிகச் சிறந்த அனுபவமாக அது அமைந்தது.

நான் மிகுந்த பரவசத்தை உணர்ந்த தருணங்கள் இருந்தன. சில நேரங்களில் அதை 'பேரின்பம்' என்று அழைப்பார்கள். பயணத்தின் 120வது நாளில், எனக்குள் ஓர் ஒளி பிரகாசித்து வெளியே பரவுவதைப் போன்ற உணர்வைப் பெற்றேன். அந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நான் முன்னெப்போதையும்விட மிகுந்த மன அமைதியுடன் இருந்தேன். அது உண்மையாகவே ஓர் அற்புதமான அனுபவம்.

அத்தகைய உணர்வை நான் ஒருபோதும் மீண்டும் பெறாமல்கூட போகலாம். ஆனால் அந்த உணர்வு எனக்குள் இருந்ததும், அது சாத்தியம் என்பதை அறிந்துகொண்டதும் இந்தப் பயணத்தின் ஓர் அழகான விஷயம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு