You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'போராடடா ஒரு வாளேந்தடா, போற்றிப் பாடடி பெண்ணே': சினிமா பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதாக மாறிய கதை
கோவிலுக்குள் எங்களையும் நுழைய அனுமதிக்க வேண்டும் என ஒரு கிராமத்தின் பட்டியல் சமூக மக்கள் அந்த கிராமத்தின் தலைவரிடம் கோரிக்கை வைக்க, அவர் அதற்கு செவிமடுக்காமல் அவர்களை கோவில் வாசலில் தடுத்து நிறுத்தி, அங்கிருந்தவாறே 'கடவுளை வணங்கிக் கொள்ளுங்கள்' என்கிறார்.
அப்போது அங்கு வரும் கதாநாயகன், 'ஆதியில் சாதி பாகுபாடு கிடையாது, இது பாதியில் வந்தவர்கள் செய்த கொடுமை' என தனது மக்கள் கோவிலுக்குள் செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறார்.
'பட்டியல் சமூக மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது' என ஊர் தலைவர் மறுக்க, முஷ்டியை உயர்த்தி, கண்கள் சிவக்க, பெரும் கோபத்தோடு கதாநாயகன் பாடும் பாடல் தான், 'போராடடா ஒரு வாளேந்தடா, வேங்கைகளோ இனி தூங்காதடா'.
1985இல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'அலை ஓசை' திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், அது விமர்சன ரீதியிலும் அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால் அதில் இடம்பெற்ற 'போராடடா ஒரு வாளேந்தடா' பாடல் கிட்டத்தட்ட பட்டியல் சமூக மக்களுக்கான ஒரு பாடலாக மாறிவிட்டது, பட்டியல் சமூக மக்களின் மகிழ்ச்சி, வெற்றி அல்லது கொண்டாட்டத்தின் அடையாளமாகவும், 'தமிழ்நாட்டின் தலித் அரசியலின்' முகமாகவும் அப்பாடல் மாறிவிட்டது என எழுத்தாளர்கள், விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
'போராடடா ஒரு வாளேந்தடா'
2021ஆம் ஆண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தின் முதல் சில நிமிடங்களில், ஒரு போட்டியில் நாயகன் (தனுஷ்) பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக 'போராடடா' பாடலின் இசை வாசிக்கப்படும்.
அதேபோல, 2018இல் வெளியான மாரி செல்வராஜின் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில், பட்டியல் சமூக நாயகன் (கதிர்) இடைநிலைச் சமூக நபர்களின் தாக்குதலில் இருந்து போராடி, தப்பித்து தனது கிராமத்திற்குள் நுழையும்போது, அங்கு இந்தப் பாடல் ஒலிக்கும்.
ஓரிடத்தில் நாயகனின் வெற்றியின் குறியீடாகவும், மற்றொரு இடத்தில் நாயகனின் போராட்டத்தின் குறியீடாகவும் இந்தப் பாடல் ஒலிக்கிறது.
"80களில், தமிழ் சினிமாவில் கிராமங்கள் அதிகமாக காட்சிப்படுத்தப்பட்டன. படித்த கதாநாயகர்கள் கிராமத்தின் பிற்போக்குத்தனங்களை எதிர்த்து சண்டையிட்டு ஜெயிப்பது போல கதைகள் அதிகம் வந்தன. குறிப்பாக இடதுசாரி சிந்தனை வெளிப்பட்டது." என்கிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
இவர் நிஜம் நிழல் சமூகம், தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம், எண்பதுகளின் தமிழ் சினிமா, ஆணவக் கொலைகளின் காலம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
"அது அப்போதைய 'சினிமா ஃபார்முலாவாக' இருந்தது. மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் பாடல்களை கதாநாயகன் பாடுவது பொதுவான ஒன்றாக இருந்தது. குறிப்பாக கதாநாயகன் ஏழையாக இருப்பான். இத்தகைய திரைப்படங்களில் மேம்போக்காகவே இடதுசாரி சிந்தனை பேசப்பட்டது. 'போராடடா' பாடலும், 'அலை ஓசை' திரைப்படமும் இந்த வரையறைக்குள் தான் வரும்" என்கிறார் அவர்.
'அலை ஓசை' திரைப்படத்தின் கதைக்களத்தை நாம் பார்க்க வேண்டும். இடைநிலைச் சமூகத்தைச் சேர்ந்த மூவரின் கட்டுப்பாட்டில் ஒரு கிராமம் இருக்கிறது, நகரத்தில் படித்துவிட்டு கிராமத்திற்கு வரும் பட்டியல் சமூக இளைஞன் முத்து, இந்த மூவரின் பிற்போக்குத்தனங்களை எதிர்க்கிறான். மக்களை ஒன்று திரட்டி போராடுகிறான்.
ஒருகட்டத்தில் போராடும் மக்கள் உயிரோடு வீடுகளில் கொளுத்தப்பட, முத்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கிறான். இறுதியில் அந்த மூவரையும் பழிதீர்த்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைகிறான்.
கிட்டத்தட்ட இதேபோன்ற காட்சிகளை வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' (2019) திரைப்படத்திலும் காணலாம். இரண்டுமே 1968ஆம் ஆண்டில் 40க்கும் மேற்பட்ட பட்டியல் பிரிவினர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கீழ்வெண்மணி சம்பவத்தை நினைவுபடுத்தின. ஆனால், 'அசுரன்' போல 'அலை ஓசை' திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இருப்பினும், 40 வருடங்களைக் கடந்தும் 'போராடடா' பாடல் இன்றுவரை பேசப்படுகிறது. மிகச் சமீபத்திய உதாரணம், நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தில் அந்தப் பாடல் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்த, அப்பாடல் இடம்பெறும் காட்சி 'கருப்பு' திரைப்படத்தில் இருந்து நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.
"ஒரு திரைப்படப் பாடல் என்பதைத் தாண்டி, அதை ஒரு சமூகத்திற்கான அடையாளமாக மாற்றியது அதன் வரிகளும், 90களில் தமிழ்நாட்டில் நிலவிய சாதிய அரசியலும்" என்கிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
'நந்தன் இனமே பெறும் அரியாசனமே', 'இன்னும் இங்கு பள்ளுப் பறையென சொல்லும் மடமைகள் உள்ளதடா' போன்ற வரிகளைக் குறிப்பிடும் ஸ்டாலின், "அலை ஓசை திரைப்படம் 80களில் வெளியாகியிருந்தாலும், 90களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாதிய மோதல்கள் அதிகரித்தபோது, ஒடுக்கப்பட்டவர்களுக்கான பாடலாக இது மாறியது" என்கிறார்.
"பல தலித் இயக்கங்கள் 'போராடடா' பாடலை பயன்படுத்துகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்வேகம் அளிக்க அது பயன்படுகிறது என அவர்கள் நம்புகிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் புனிதப் பாண்டியன்.
'போற்றிப் பாடடி பெண்ணே'
அதேசமயம், ஒரு பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதாக மாறும்போது, அதை மற்றொரு சமூகம் ஏற்காது அல்லது அந்தப் பகுதிகளில் அது ஒலிக்காது எனக் குறிப்பிடுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
"இங்கு தான் 90களில் வெளியான 'தேவர் மகன்' திரைப்படத்தின் 'போற்றிப் பாடடி பொண்ணே' பாடல், 'போராடடா' பாடலுக்கு எதிர் வரிசையில் வைக்கப்படக் கூடிய பாடலாக மாறியது. ஒரு இடைநிலைச் சாதியினரின் நிகழ்வுகளில் 'போற்றிப் பாடடி பெண்ணே' இன்றுவரை ஒலிக்கிறது" என்கிறார் ஸ்டாலின்.
இதேபோல வேறு சில பாடல்களையும் குறிப்பிடலாம். திரைப்படப் பாடல்கள் என்பதைத் தாண்டி, ஒரு சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே இவை மாறியுள்ளன. தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த இடைநிலைச் சமூக இளைஞர் சைலேஷ் இந்தப் பாடல்கள் அன்றாட வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை விவரிக்கிறார்.
"'போராடடா' Vs 'போற்றிப் பாடடி பெண்ணே' என்பதை நான் பள்ளி நாட்களில் இருந்து பார்த்துவருகிறேன். இப்போது அது ரீல்ஸ் வடிவில் வந்துநிற்கிறது. தாங்கள் இந்தச் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை சொல்லாமல் சொல்வதற்கு இதைப் பயன்படுத்துகிறார்கள்." என்கிறார் அவர்.
"ஒரு கிராமத்தில் பல சமூக மக்கள் வசிக்கும்போது, ஒரு பாடலை மட்டும் மீண்டும், மீண்டும் சத்தமாக ஒலிப்பரப்புவது நிகழும். இதனால் பிற சமூக மக்கள் அதிருப்தி அடைவார்கள், அது சில சமயங்களில் மோதலாக மாறியுள்ளது. எல்லா இடங்களிலும் இது நடக்கிறது என சொல்ல முடியாது. ஆனால் தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு சமூகத்திற்கானது என முத்திரை குத்தப்பட்ட பாடல் மற்றொரு சமூக மக்களின் பகுதியில் ஒலிக்காது, இதுதான் யதார்த்தம்." என்கிறார்.
அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 'போராடடா' பாடல் மூலம் கிடைத்த ஒரு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
"எங்கள் ஊரிலிருந்து சென்னைக்கு பயணிக்கும் போது என் அருகில் அமர்ந்த ஒரு பயணி மிக நன்றாக பேசிக்கொண்டே வந்தார். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கேட்டவர், அதில் இருந்த ஒரு ரீல்ஸ் காணொளியை பார்த்துவிட்டு, பேச்சைக் குறைத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து, இந்த இருக்கை சரியில்லை எனக் கூறி வேறு இருக்கைக்கு மாறிவிட்டார். உண்மையில் இருக்கை பிரச்னையாக இருந்திருக்கலாம் தான், ஆனால் அந்த ரீல்ஸ் காணொளியில் ஒலித்தது 'போராடடா' பாடல் என்பதால் என்னால் அதைக் கடந்து வர இயலவில்லை".
'தேவர் மகன்' மற்றும் 'அலை ஓசை'
'தேவர் மகன்' திரைப்படத்தின் சக்திவேலுவுக்கும் (கமல்ஹாசன்), 'அலை ஓசை' திரைப்படத்தின் முத்துவுக்கும் (விஜயகாந்த்) ஒரு ஒற்றுமை உள்ளது. இருவருமே படித்த இளைஞர்கள், தங்களது கிராமத்திற்கு வருகிறார்கள். இருவருமே மாற்றத்தை விரும்புகிறார்கள்.
"ஊரின் ஏழைகள் பண்ணையாரால் கொளுத்தப்பட்ட பின் முத்து ஆயுதப் போராளியாக மாறுகிறான். சக்திவேலுவோ பங்காளி தந்த அவமானத்தால் தந்தை இறந்துபோன பின் ஊர் பெரிய மனிதன் ஆகிறான். 'அலை ஓசை' புற முரண்பாடுகளோடு மோதி சமத்துவம் கோருவதோடு முடிகிறது. 'தேவர் மகன்' அக முரண்பாடுகளோடு மோதி படிக்க அறிவுறுத்துவதோடு முடிகிறது. ஆனால், பாடல் வரிகள் தான் இதைக் குறிப்பிட்ட சமூகங்களுக்கானதாக மாற்றுகிறது" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
"ஒரு பாடல் 'சமத்துவத்திற்காக போராடு' என ஒரு சமூகத்தை அழைக்கிறது, மற்றொரு பாடல் ஒரு சமூகத்தின் 'பெருமிதத்தைப்' பேசுகிறது. இருவேறு சாதிகள் தங்கள் முரண்பாட்டை இரண்டு பாடல்கள் வழியாக வெளிப்படுத்திக் கொண்டன அல்லது நிகழ்த்திக்கொண்டன" என்கிறார் அவர்.
இப்போதும் நீங்கள் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்தால், ஏதேனும் நிகழ்வுகளில் இளையராஜா இசையமைத்த இந்த இரு பாடல்களைக் கேட்கலாம். இரண்டும் கேட்பதற்கு சிறந்த பாடல்கள் என்பதைத் தாண்டி அதை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசியல், அந்த பாடல்கள் இசை, ரசனை என்பவற்றைக் கடந்து களத்தில் வேறு அர்த்தத்தில் ஒலிப்பதை நமக்கு உணர்த்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு