வி2 ராக்கெட்: ஹிட்லரின் மிக ஆபத்தான ஆயுதத்தை நேசநாட்டு உளவாளிகள் துணிச்சலாக லண்டனுக்கு கடத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத்தை 1977ஆம் ஆண்டில் பிபிசி நினைவுகூர்ந்தது. அப்போது நேசநாட்டு உளவாளிகள், ஹிட்லரின் "அதிசய ஆயுதத்தின்" பாகங்களை ஜெர்மன் அதிகாரி ஒருவரின் குடியிருப்பில் மறைத்து வைத்து, ரகசியமாகக் கடத்திச் சென்றனர்.
போலந்தில் உள்ள ஜெஷோவ் பகுதிக்கு வடமேற்கே அமைந்த பிளிஸ்னா என்ற கிராமத்தை, 1944 ஆகஸ்ட் 6ஆம் தேதி, சோவியத் யூனியனின் செம்படை அடைந்து, அதை நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்தது.
விவசாய நிலங்கள் மற்றும் அடர்ந்த பைன் மரக் காடுகளால் சூழப்பட்ட அந்தத் தொலைதூர கிராமப்புறப் பகுதி, ராணுவ ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லாதது போலத் தோன்றியிருக்கலாம். இருப்பினும், காட்டின் தரைப்பகுதியில் இருந்த பெரிய பள்ளங்கள், உலோகப் பாகங்கள், போலி பண்ணை வீடுகள் போன்றவை அதன் ரகசிய நோக்கத்தைச் சுட்டிக்காட்டின.
சில நாட்களுக்கு முன்பு நாஜிக்கள் பின்வாங்குவதற்கு முன்பு, பிளிஸ்னா பகுதி ஒரு புதிய ஆயுதத்தின் சோதனை ஏவுதளமாக இருந்தது. அந்த ஆயுதத்தைக் கொண்டு மேற்கத்திய நேச நாடுகளுக்கு எதிரான போர் செல்லும் போக்கையே மாற்றிவிடலாம் என்று அடால்ஃப் ஹிட்லர் நம்பினார்.
ஜெர்மானியர்களால் 'வெர்கெல்டுங்ஸ்வாஃப் 2' (Vergeltungswaffe 2 - பழிவாங்கும் ஆயுதம் 2) அல்லது வி2 (V2) ராக்கெட் என்று அழைக்கப்பட்ட அது, உலகின் முதல் நவீன பாலிஸ்டிக் ஆயுதமாகும். பொறியாளர் வெர்னர் வான் பிரான் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், தோராயமாக 280 கி.மீ தூரம் செல்லும் திறன் மற்றும் ஒரு டன் எடையுள்ள வெடிபொருளையும் கொண்டிருந்தது.
இந்த ராக்கெட்டின் ஒலிவேகத்தைவிடக் கூடுதலான வேகமும், அதிக உயரத்தில் பறக்கும் திறனும் அதை ஓர் "அதிசய ஆயுதமாக" மாற்றின. மேலும் தான் குறிவைத்த நகரங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி வெடித்துச் சிதறும் திறன் கொண்டதாகவும் அது இருந்தது. ஆனால் 1944ஆம் ஆண்டு கோடைக் காலத்தில், இரண்டாம் உலகப்போரின் மிகத் துணிச்சலான ரகசிய நடவடிக்கைகளில் ஒன்றாக, வி2 (V2) ராக்கெட்டின் பாகங்கள் போலந்தில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன.
நாஜிக்கள் 1936ஆம் ஆண்டில் வி2 (V2) ராக்கெட்டை உருவாக்கத் தொடங்கினர்.
இருப்பினும், 1943ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இந்த ராக்கெட் இருப்பதைப் பற்றி பிரிட்டிஷ் உளவுத்துறை அறிந்திருக்கவில்லை என்று நிபுணர்கள் 1977ஆம் ஆண்டின் பிபிசி ஆவணப்படமான 'தி சீக்ரெட் வார்' (The Secret War)இல் தெரிவித்தனர்.
"ஜெர்மானியர்கள் நீண்டதூரம் செல்லும் ராக்கெட்டுகளை உருவாக்கக் கூடும் என்று 1939ஆம் ஆண்டுக்கு முன்பே சிறிதளவு தகவல் கிடைத்தது" என்று அறிவியல் வான் உளவுத்துறையின் தலைமை அதிகாரியான முனைவர் ஆர்.வி. ஜோன்ஸ் கூறினார்.
"பின்னர் 1942ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாங்கள் எதுவும் கேள்விப்படவில்லை. அப்போது, டென்மார்க் நாட்டு வேதியியல் பொறியாளரான ஒரு புதிய முகவர், பெர்லினில் இரண்டு பொறியாளர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டதாக எங்களிடம் கூறினார். பால்டிக் கடற்கரையில் ஒரு புதிய ஆயுதம் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்."

பட மூலாதாரம், Chris Ware/Keystone/Hulton Archive/Getty Images
ஒட்டுக் கேட்கும் கருவிகளால் நிகழ்ந்த திருப்புமுனை
கடந்த 1943ஆம் ஆண்டில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது தனித்தனியாக பிடிபட்ட இரண்டு ஜெர்மன் ஜெனரல்கள் விசாரணைக்காக பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டனர். அறையில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதை அறியாத அவர்கள், தனியாகப் பேச அனுமதிக்கப்பட்டனர்.
இன்னும் சில மாதங்களில் ஆயுதங்கள் தயாராகிவிடும் என்று ஓராண்டுக்கு முன்பே சொல்லப்பட்ட நிலையில், இன்னும் ஏன் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படவில்லை, ஏதோ தவறாக நடந்திருக்க வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.
ஜோன்ஸின் கூற்றுப்படி, அவர்களில் ஒருவர், "நாம் லண்டனுக்கு அருகில் எங்கோ இருக்கிறோம், ஆனால் எந்த வெடிச் சத்தமும் கேட்கவில்லை, எனவே எதுவும் நடந்திருக்க முடியாது" என்று கூறினார்.
கடந்த 1977ஆம் ஆண்டில் ஜோன்ஸ், "உளவுத்துறை ஆய்வாளர் சார்லஸ் ஃபிராங்க்… எனக்கு எதிரே அமர்ந்திருந்தார், திடீரென்று விசாரணை அறிக்கையைப் படித்துக் கொண்டிருந்த அவர் நிமிர்ந்து பார்த்து, 'இதோ பாருங்கள், நாம் அந்த ராக்கெட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வது நல்லது' என்று கூறினார்" என நினைவு கூர்ந்தார்.
பால்டிக் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு தீவில் அமைந்திருந்த பீனெமுண்டே பகுதியில் நாஜிக்களின் ரகசிய வி2 (V2) ஆராய்ச்சி மையம் இருப்பதை பிரிட்டிஷார் கண்டறிந்து, ஆகஸ்ட் 1943ஆம் ஆண்டில் அதன் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். அந்த வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, நாஜிக்கள் வி2 (V2) ராக்கெட்டுக்கான தங்கள் சோதனை, பயிற்சி மற்றும் ஏவுதளத்தை ஜெர்மனியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றினர்.
போலந்தில் வார்சாவுக்கு தெற்கே சுமார் 240 கி.மீ தொலைவில், அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்ட, கிழக்குப் பகுதி ஒன்றை அவர்கள் தேர்வு செய்தனர். அடுத்தடுத்த மாதங்களில் ஹிட்லர் மற்றும் ஹோலோகாஸ்ட் படுகொலைகளுக்குக் காரணமான அவரின் முதன்மை அதிகாரி ஹென்ரிச் ஹிம்லர் ஆகிய இருவருமே அங்கு வந்து பார்வையிடும் அளவுக்கு பிளிஸ்னா மூலோபாய ரீதியாக மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.
இருப்பினும், வி2 (V2) சோதனை ஆயுதங்களில் ஒரு குறைபாடு இருந்தது. அதனால் அவற்றைப் போரில் பயன்படுத்துவதற்கு கிட்டத்தட்ட ஓராண்டு தாமதமானது.
பெரும்பாலான ராக்கெட்டுகள் கிழக்கு போலந்திலுள்ள பக் நதிக்கு அருகே 320 கி.மீ தொலைவில் அமைந்த இலக்கை அடைவதற்கு சற்று முன்பாகவே, நடுவானில் நொறுங்கி விழுந்தன. அவ்வாறு விழுந்த ராக்கெட் துண்டுகளைச் சேகரித்து, விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு அனுப்புவதற்காக ஜெர்மன் படைகளின் சிறப்புப் பிரிவு ஒன்று அங்கு முகாமிட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
காய்கறிகளுக்கு அடியில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டன
கடந்த 1977ஆம் ஆண்டில் 'தி சீக்ரெட் வார்' தொடரின் தொகுப்பாளர் வில்லியம் வுல்லார்ட், "வானத்தில் இருந்து ஜெர்மன் ரகசிய ஆயுதங்கள் தங்கள் மீது விழுவது குறித்து உள்ளூர் பொதுமக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பதே இந்தப் புதிய இடத்தின் முக்கிய குறைபாடு" என்று நினைவுகூர்ந்தார்.
ஜெர்மானியர்கள் வருவதற்கு முன்பே அந்தச் சிதைந்த பொருட்களைச் சேகரிக்க முயலுமாறு போலந்து எதிர்ப்பு இயக்கம் அவர்களைக் கேட்டுக் கொண்டது."
கடந்த 1944ஆம் ஆண்டு மே மாதத்தில், ஒரு வி2 (V2) ராக்கெட் வெடிக்காமல், பெரிதாக சேதமடையாத நிலையில் பக் நதியின் சதுப்பு நிலக் கரையில் விழுந்தது.
உள்ளூர் கிராம மக்கள் அதை நாணல் புற்களால் மூடிவிட்டு, போலந்து எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரான லெப்டினன்ட் ததேவுஸ் ஜேகோப்ஸ்கியை அழைத்தனர். 33 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர், "ராக்கெட் வெடிக்காமல் இங்குதான் விழுந்தது. ஜெர்மானியர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாமல், சில நாட்களுக்குப் பிறகு தேடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். பின்னர் நாங்கள் ராக்கெட்டை கரைக்கு இழுத்து வந்தோம், அதை அகற்றுவதற்காக வார்சாவில் இருந்து நிபுணர்கள் குழு வந்தது" என்று கூறினார்.
அந்த பாகங்கள் சாக்குகளில் ஏற்றப்பட்டு, காய்கறிகளுக்கு அடியில் மறைக்கப்பட்டு, காடுகளில் ஆயுதம் ஏந்திய போராளிகளின் கண்காணிப்புடன், அரிதாகப் பயன்படுத்தப்படும் கிராமப்புற சாலைகள் வழியாக வார்சாவுக்கு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டன. போலந்து தலைநகரில் தொடர் பாதுகாப்பு சோதனைகள் இருந்தபோதிலும், ராக்கெட் துண்டுகள் வெற்றிகரமாக நகரத்துக்குள் கடத்தப்பட்டன.
மேலும் அதன் மின்னணு பாகங்களை ஆய்வு செய்யும் பணியில் இயற்பியலாளர் பேராசிரியர் ஜானுஸ் க்ரோஷ்கோவ்ஸ்கி உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது ஆய்வகத்தை கெஸ்டபோ சோதனையிடக்கூடும் என்ற அச்சத்தால், அவரது பணிக்கு ஒரு தனிப்பட்ட குடியிருப்பு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று எதிர்ப்பு இயக்கம் முடிவெடுத்தது. அது எதுவும் அறியாத ஒரு ஜெர்மன் அதிகாரியின் குடியிருப்பு. மின்னணு பாகங்கள் இரவில் அந்த அதிகாரியின் சொந்த சூட்கேஸ்களில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டன.
"நான் வருவதற்கு முன்பு, இந்த சூட்கேஸ் அதிகாரிகளின் அறையில் இருந்து [நான்] ஆராய்ச்சி செய்வதற்காக தயார் செய்யப்பட்ட சிறப்பு அறைக்குக் கொண்டு வரப்பட்டது" என்று க்ரோஷ்கோவ்ஸ்கி பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Photo 12/Universal Images Group via Getty Images
அந்தச் சிறிய அறையில் அவர் ஒரே நேரத்தில் பல மணிநேரம் பணியாற்றினார். அந்த அதிகாரி எதிர்பாராத விதமாக மீண்டும் திரும்புவாரோ என்ற ஆபத்து எப்போதும் இருந்தது.
இருப்பினும், க்ரோஷ்கோவ்ஸ்கி நினைவு கூர்ந்தது போல, "நான் அங்கிருந்த காலத்தில் அது ஒருபோதும் நடக்கவில்லை." எதிர்ப்பு இயக்கத்தின் முகவர்கள் அந்த ஜெர்மன் அதிகாரியைக் கண்காணித்து வந்தனர்.
"அந்த நேரத்தில் அவர் விமான நிலையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக, பணியாளர் தொலைபேசியில் அழைத்து இரவு உணவுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். ஆனால் அவர் முன்னதாகவே வரத் தயாராக இருப்பதாகக் கூறினால், நான் [மறைந்து] விடுவேன்" என்று இயற்பியலாளர் கூறினார்.
வார்சாவில் நடந்த இந்த தந்திரமான நடவடிக்கையைத் தொடர்ந்து, அந்த பாகங்களை வெளியேற்றுவதற்காக 'வைல்ட்ஹார்ன் III' (அல்லது 'ஆபரேஷன் மோஸ்ட் III') என்ற குறியீட்டுப் பெயரில் மிக ரகசியமான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜூலை 25ஆம் தேதி இரவில், 18 மணிநேரப் பயண நேரத்துக்கு ஏற்றவாறு கூடுதலான எரிபொருள் தொட்டிகள் பொருத்தப்பட்ட ஆர்ஏஎப்ஃ டகோட்டா (RAF Dakota) போக்குவரத்து விமானம், ஜெர்மன் ராணுவப் பிரிவுகளால் சூழப்பட்ட பகுதியில், போலந்து கிராமமான வால்-ருடா (Wał-Ruda) அருகேயுள்ள பயன்பாட்டில் இல்லாத விமான தளத்தில் தரையிறங்கியது.
அதில் முக்கிய வி2 (V2) துண்டுகள், தொழில்நுட்ப வரைபடங்கள் மற்றும் அறிவியல் அறிக்கைகள் அடங்கிய 19 சூட்கேஸ்கள் ஏற்றப்பட வேண்டியிருந்தது. பிபிசி வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட குறியாக்கம் செய்யப்பட்ட செய்திகள் வழியாக இந்த நடவடிக்கையைப் பற்றி அறிந்த போராளிகள், நள்ளிரவுக்குப் பிறகு டகோட்டா தரையிறங்கியதும் அருகிலுள்ள காடுகளில் இருந்து வெளிவந்தனர்.
இருப்பினும், பொருட்கள் ஏற்றப்பட்ட பிறகு, விமானத்தின் சக்கரங்கள் சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டதால் அதனால் மேலே எழும்ப முடியவில்லை. இரண்டு முறை அனைத்துப் பொருட்களும் கீழே இறக்கப்பட்டு, சக்கரங்களுக்கு இடையே இழுவிசையை அதிகரிப்பதற்காக வைக்கோல் மற்றும் பலகைகளை வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சில போராளிகள் வெறும் கைகளால் சக்கரங்களில் இருந்த சேற்றைத் தோண்டி எடுத்தனர். ஒரு கட்டத்தில், இந்த நடவடிக்கையின் தளபதிகள் பயணிகளை வெளியேற்றிவிட்டு விமானத்தை எரிக்க வேண்டியிருக்கும் என்று நம்பினர். விமானக் குழுவினர் தரையிறங்கும் கருவிகள் மீது பெட்ரோலையும் தெளித்தனர். இறுதியில் விமானம் வெற்றிகரமாக மேலே எழும்பியது.

பட மூலாதாரம், ullstein bild/ullstein bild via Getty Images
வி2 (V2)-வை வெல்வதற்கான ஒரே வழி
துணிச்சலான அந்தக் கூட்டணி நாடுகளின் வான்வழிப் போக்குவரத்து, ஜெர்மன் ராணுவத்தின் கண்முன்னே, நாஜி ஆக்கிரமிப்பு ஐரோப்பாவில் இருந்து நாஜி ஜெர்மனியின் மிக பயங்கரமான ஆயுதங்களில் ஒன்றை ரகசியமாகக் கடத்த வழிவகுத்தது.
வி2 (V2) ராக்கெட் 1944 ஜூலை மாதம் 28ஆம் தேதி அன்று லண்டனுக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தது. மேலும் பிரிட்டிஷ் உளவுத்துறை ஹிட்லரின் "அதிசய ஆயுதத்தை" பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது.
"முழு ராக்கெட்டையும் நகர்த்துவது தேவையற்றது, சாத்தியமற்றது. வி2 (V2) ராக்கெட்டுகள் சுமார் 12.5 டன் எடையும் 14 மீட்டர் (46 அடி) நீளமும் கொண்டவை. ஆனால் போலந்து நாட்டவர்கள் அதை நுணுக்கமாகப் பிரித்து, அனைத்து அத்தியாவசிய பாகங்களும் பிரிட்டனுக்கு திரும்பும் விமானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்தனர்" என்று வரலாற்று ஆசிரியரும் 'ஸ்டீலிங் ஹிட்லர்ஸ் ராக்கெட்' (Stealing Hitler's Rocket) நூலின் ஆசிரியருமான கை வால்டர்ஸ் பிபிசியிடம் கூறுகிறார்.
"இந்தப் பாகங்கள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் முதல்முறையாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் பகுதி அளவுகூட சேதமடையாத பாகங்களைக் கைப்பற்ற முடிந்தது."
இந்த ரகசிய நடவடிக்கை, ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் லண்டனை முதன்முதலாகத் தாக்கவிருந்த ஒரு பயங்கரவாத ஆயுதத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கியது.
"பிரிட்டிஷாருக்கு தெரியாதது என்னவென்றால், அந்த ராக்கெட்டில் ஒரு வழிகாட்டுதல் அமைப்பு இருந்ததா என்பதுதான். அதற்கு வழிகாட்டுதல் அமைப்பு இருந்தால், அதை தூரத்தில் இருந்தே முடக்குவதற்கான பணிகளைச் செய்ய முடியும், அதன் மூலம் ராக்கெட்டுகள் தங்கள் பாதையில் இருந்து விலகிச் செல்லும்படி செய்ய இயலும்."
ஆனால், "திருடப்பட்ட அந்த ராக்கெட்டில் வழிகாட்டுதல் அமைப்பு எதுவுமில்லை என்பதை பிரிட்டிஷாருக்கு கற்பித்தது. இது, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் மாற்று தடுப்பு நடவடிக்கைகளை உருவாக்க முயல்வதில் வீணாகும் ஏராளமான நேரத்தைச் சேமித்தது. எனவே வி2 (V2) ராக்கெட்டை தோற்கடிப்பதற்கான ஒரே உண்மையான வழி போரில் வெற்றி பெறுவது மட்டுமே" என்று கை வால்டர்ஸ் பிபிசியிடம் விவரித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































