42 ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளிகளை சிக்க வைத்த 'ரகசிய நடவடிக்கை'

பட மூலாதாரம், Family photo
- எழுதியவர், கய் லின்
- பதவி, லண்டன் இன்வெஸ்டிகேஷன்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
1984-ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, குடிமைப் பணியாளரான ஆண்டனி லிட்லர், ஈஸ்ட் ஃபின்ச்லி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி, தனது வீட்டை நோக்கி இருண்ட சந்து ஒன்றில் நடந்து சென்றார்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, 45 வயதான அவர் தரையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
தனியாக வாழ்ந்த, ரியல் ஏல் (real ale) பீர் வகையை விரும்பிய ஆண்டனி, தனது நண்பர்களால் "மென்மையான மனம் கொண்ட ராட்சதர்" (gentle giant) என்று வர்ணிக்கப்பட்டார். அவரது தலையில் இரண்டு முறை தாக்கப்பட்டது. அவரிடமிருந்து எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் இல்லை. தடயவியல் ஆதாரங்களும் இல்லை. கொலைக்கான தெளிவான நோக்கமும் கண்டறியப்படவில்லை.
42 ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலை வழக்கில் யாரும் தண்டிக்கப்படாமல் இருந்தது.
ஆனால், கடந்த ஜூலை 10-ஆம் தேதி அந்த நிலை மாறியது. மைக்கேல் ஸ்டீவர்ட் (57) மற்றும் ஆண்டனி ஸ்டீவர்ட் (60) ஆகியோருக்கு, ஆண்டனி லிட்லரைக் கொலை செய்த குற்றத்துக்காக லண்டனிலுள்ள ஓல்ட் பேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அவர்களில் மைக்கேலுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், ஆண்டனிக்கு 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்கொலை சம்பவம் நடந்தபோது, அந்த சகோதரர்களுக்கு முறையே 15 மற்றும் 18 வயது.
ஆண்டனி லிட்லர் தன்பாலின ஈர்ப்பாளரா என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனினும், பணம் பறிப்பதற்காக தன்பாலின ஈர்ப்பாளர்களை ஸ்டீவர்ட் சகோதரர்கள் குறிவைத்ததாக நீதிபதி கட்ஸ் குறிப்பிட்டார். "1984-ஆம் ஆண்டு என்பது வேறுபட்ட காலம். பல வகைகளில் அது இன்றைய சூழலிலிருந்து மாறுபட்டதாக இருந்தது," என்று அவர் கூறினார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தண்டனை அறிவிப்பின் போது, மூத்த நீதிபதி குற்றவாளிகளிடம், "ஒரு பாதிக்கப்பட்ட நபரைக் குறிவைத்து நீங்கள் குழுவாகக் காத்திருந்தீர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நேர்மையான, நல்ல மனிதரான அவரைக் குறிவைத்து, அவரது உயிரைப் பறித்தீர்கள்," என்று தெரிவித்தார்.
வழக்கை நிரூபிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகள், டிஎன்ஏ, கைரேகைகள் அல்லது பழைய சான்றுகளை புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மீண்டும் ஆய்வு செய்வதன் மூலம் தீர்க்கப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த வழக்கு வேறுபட்டதாக இருந்தது. விசாரணை அதிகாரிகள் துணிச்சலான ரகசிய நடவடிக்கையை (undercover) மேற்கொண்டனர். மைக்கேல் ஸ்டீவர்ட்டின் வீடு மற்றும் காரில் ஒலிப்பதிவு சாதனங்கள் பொருத்தப்பட்டன. அவரது சகோதரரின் காரிலும் ரகசியமாகக் கேட்கும் சாதனங்கள் வைக்கப்பட்டன. மைக்கேல் ஸ்டீவர்ட்டின் வாழ்க்கைக்குள் ரகசிய அடையாளத்தில் செயல்பட்ட இரண்டு காவல் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
பல ஆண்டுகளாக அவர் மீண்டும் மீண்டும் செய்த ஒரு விஷயத்துக்காகவே அவர்கள் காத்திருந்தனர் — அதாவது, அவர் இந்த வழக்கைப் பற்றி பேசுவதற்காக.

பட மூலாதாரம், Metropolitan Police
அமைதியான இயல்பும் எளிமையான வாழ்க்கை முறையும் கொண்ட ஆண்டனி லிட்லர், 6 அடி 4 அங்குலம் உயரமுடையவர். அவர் குடிமைப் பணியாளராக பணியாற்றி வந்தார். வடக்கு லண்டனின் ஈஸ்ட் ஃபின்ச்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
தனது தாய்மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த அவர், தான் பிறந்து வளர்ந்த மெர்சிசைடின் செயின்ட் ஹெலன்ஸுக்கு அவரைப் பார்க்க அடிக்கடி பயணம் மேற்கொள்வார்.
ரியல் ஏல் (real ale) வகை பீர் மீது மிகுந்த விருப்பம் கொண்டவராக ஆண்டனி இருந்தார். அவர் உயிருடன் இருந்த கடைசி மாலை நேரத்தில், கார்ஷால்டனில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடைபெற்ற ரியல் ஏல் பீர் வகைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் (Society for the Preservation of Beers from the Wood) சந்திப்பில் பங்கேற்க லண்டன் முழுவதும் பயணம் செய்தார். அங்கு நண்பர்களுடன் ஐந்து அல்லது ஆறு பைன்ட் அளவு மதுபானத்தைப் பகிர்ந்து அருந்தினார்.
மதுபான விடுதி மூடும் நேரத்தில் நண்பர்களிடம் இருந்து விடைபெற்றார்.
அதன்பிறகு, லண்டன் முழுவதும் மீண்டும் பயணம் செய்து, ஈஸ்ட் ஃபின்ச்லி ரயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து வீட்டுக்குச் செல்லும் குறுக்கு வழியான ரயில் பாதையோர குறுகிய நடைபாதையில் நடந்து சென்றார்.
சில நிமிடங்களுக்குள், அவர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர் மீண்டும் சுயநினைவைப் பெறவே இல்லை.
"அவர் எனக்கு ஒரு அண்ணனைப் போன்றவர்," என்று ஆண்டனியின் உயிருடன் இருக்கும் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான பாட்ரிஷியா மெக்லூர் நினைவுகூர்கிறார்.
"நான் குழந்தையாக இருந்தபோது, என் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு செல்வார். குடும்பத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவர் இருப்பார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் தவறாமல் கலந்துகொள்வார்."
விர்ரலில் உள்ள பெபிங்டனைச் சேர்ந்த பாட்ரிஷியா, ஆண்டனி தன்னைத் தாக்கியவர்களை எதிர்த்துப் போராடியிருக்க மாட்டார் என்ற எண்ணமே தன்னை இன்னும் வாட்டுவதாகக் கூறுகிறார்.
"சிறுவயதில் ஒரு நாய்மீது கூட அவர் கல்லெறிந்ததில்லை.," என்று அவர் கூறுகிறார். "அவர் எப்போதும் கனிவான மனம் கொண்டவர். அப்படிப்பட்ட ஒருவர் இவ்வளவு கொடூரமான முறையில் உயிரிழந்தது மிகவும் வேதனையாகவும் அநீதியாகவும் இருக்கிறது."

ஐடிவியின் போலீஸ் 5 மற்றும் பிபிசி ஒன்னின் க்ரைம்வாட்ச் நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் தகவல் கோரி விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த வழக்கின் விசாரணை 1985-ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
1993-ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட இரண்டாவது விசாரணையும் எந்தத் துப்பையும் கண்டுபிடிக்கவில்லை. 2012 முதல் 2015-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாவது விசாரணையும் யார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் முடிவடைந்தது.

பட மூலாதாரம், Family photo
"ஒருபோதும் மறையாத சோகம்"
"ஆண்டனி இனி இல்லை என்பதையும், அவரைக் கொன்றவர்களை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன்," என்று பாட்ரிஷியா கூறுகிறார்.
"அது ஒருபோதும் மறையாத சோகமாக மனதில் இருந்தது. ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் அவர் இல்லாதது அந்த நினைவுகளை மீண்டும் அதிகரித்தது."
42 ஆண்டுகளாக, கொலையாளிகள் தாங்கள் தப்பித்துவிட்டதாகவே நினைத்திருப்பார்கள் என்று பாட்ரிஷியா கருதினார்.
"காவல்துறை இந்த விசாரணையை மேற்கொள்ளும் வரை அவர்கள் உண்மையிலேயே தப்பித்திருந்தார்கள." என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Ordnance Survey
மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் முதல் சில நாட்களிலேயே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த ஸ்டீவர்ட் குடும்பத்தின் வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு, 15 வயதான மைக்கேல் ஸ்டீவர்ட்டிடமும், ஒரு வாரம் கழித்து அவரது 18 வயது சகோதரர் ஆண்டனி ஸ்டீவர்ட்டிடமும் காவல்துறையினர் பேசினர்.
வீடுவீடாகச் சென்று சேகரிக்கப்பட்ட விசாரணைப் பதிவுகளில், கொலை நடந்த இரவு இருவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆண்டனி ஸ்டீவர்ட்டின் பதிவில், "இந்தச் சந்துப் பாதையைப் பயன்படுத்துவதில்லை" என்ற குறிப்பும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், அது உண்மையல்ல. பல ஆண்டுகளாக அந்தச் சகோதரர்கள் வன்முறையில் ஈடுபடும் பழக்கம் கொண்டிருந்ததோடு, காவல்துறையினருடனும் தொடர்ந்து பிரச்னைகளில் சிக்கியிருந்தனர் என்பதற்கான தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Family photo
2013-ஆம் ஆண்டு, அந்தச் சகோதரர்களுக்குள் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டது. மூன்று சகோதரர்களில் இளையவரான டேனியல், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்படவில்லை. ஆண்டனி லிட்லர் கொல்லப்பட்டபோது அவருக்கு 10 வயதே ஆகியிருந்தது.
அந்தக் குடும்பத் தகராறின்போது, மைக்கேல் தனது வீட்டுக்குத் தீ வைத்துவிடுவதாகவும், தன்னைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக டேனியல் காவல்துறையிடம் தெரிவித்தார்.
அதன்பிறகு, விசாரணை அதிகாரிகளிடம் அவர் இன்னும் முக்கியமான ஒரு தகவலைப் பகிர்ந்தார். அது, சிறுவயதிலிருந்தே குடும்பத்தினருக்குள் மட்டுமே தெரிந்திருந்த ஒரு ரகசியம்.
கொலை நடந்த சில நாட்களிலேயே, அந்தக் கொலை குறித்து மைக்கேல் பெருமையாகப் பேசியதாக டேனியல் கூறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சகோதரர் ஆண்டனி ஸ்டீவர்ட்டும் அதைப் பற்றிப் பேசியதாக அவர் தெரிவித்தார்.
டேனியல் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னுடைய சகோதரர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்று தாங்கள் நம்பிய ஆண்களைத் தாக்குவதற்காக அடிக்கடி வெளியே செல்வார்கள் என்றும், ஆண்டனி லிட்லர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கொள்ளையடிக்கும் முயற்சி தவறாக முடிந்தபோது நடந்தது என்றும் கூறினார்.
"அவரிடமிருந்து கொள்ளையடிக்கவே அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்," என்று டேனியல் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இந்த கொலை குறித்து தகவல் அளிக்க முன்வந்தவர் டேனியல் மட்டுமல்ல.
சட்டக் காரணங்களால் அடையாளம் வெளியிடப்படாத, அக்குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரும், ஒரு முறை காரில் சென்றுகொண்டிருந்த போது மைக்கேல் ரயில் நிலையத்தைச் சுட்டிக்காட்டி, "அவரைக் கொன்றது அங்குதான்" என்று பொருள்படும் வகையில் கூறியதாக சாட்சியமளித்தார்.

பட மூலாதாரம், Metropolitan Police
2019-ஆம் ஆண்டு மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் சிறப்பு குற்றப் பிரிவில் துப்பறியும் தலைமை ஆய்வாளர் நீல் ஜான் பொறுப்பேற்றபோது, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு வழக்குகளின் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அவற்றில் ஒன்றுதான் இந்தக் கொலை வழக்கு.
"இந்த வழக்கின் சில ஆவணங்களும் சான்றுப் பொருட்களும் இல்லை," என்று ஜான் கூறுகிறார். சிசிடிவி பதிவுகள் இல்லை. தடயவியல் ஆதாரங்களும் இல்லை. நாங்கள் விசாரிக்க விரும்பிய சாட்சிகள் அனைவரும் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துவிட்டனர்."
அதனால், எஞ்சியிருந்த ஆதாரங்களைக் கொண்டு அவரது குழு வழக்கை மீண்டும் கட்டமைத்தது.
1984-ஆம் ஆண்டின் ரயில் கால அட்டவணையைப் புரிந்துகொள்ள ஒரு அருங்காட்சியகக் காப்பாளர் உதவினார். ஈஸ்ட் ஃபின்ச்லி பகுதியின் சாலைகள் மாறியிருந்ததால், அக்காலத்திய அசல் வரைபடங்கள் (Ordnance Survey ) பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
காணாமல் போன சான்றுப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பொருள் களஞ்சியத்தில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பெரிய பெட்டிகளை ஒரு வாரம் முழுவதும் காவல்துறையின் தேடுதல் குழு சோதனையிட்டது.
ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.
மீண்டும் உயிர்பெற்ற விசாரணை
இருப்பினும், எஞ்சியிருந்த ஆவணங்கள், பழைய சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் சகோதரர்கள் கூறியதாகக் கூறப்படும் ஒப்புதல் தகவல்கள் ஆகியவை, விசாரணையை முன்னெடுத்துச் செல்ல துப்பறியும் அதிகாரிகளுக்கு வழிகாட்டின.
அந்த ஆவணங்களை ஆராய்ந்த பிறகு, ரகசிய நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதி கோருவதற்குப் போதுமான தகவல்கள் இந்த வழக்கில் இருப்பதாக ஜான் கருதினார். 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, 'ஆபரேஷன் ஸ்னோபிட்ச்' (Operation Snowpitch) தொடங்கப்பட்டது.
"இதுபோன்ற ஒரு வழக்கை நான் இதற்கு முன் கையாண்டதில்லை," என்று ஜான் கூறுகிறார். "இனிமேலும் இதுபோன்ற ஒரு வழக்கு எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை."

பட மூலாதாரம், Metropolitan Police
ஆபரேஷன் ஸ்னோபிட்ச் முழுவதும் பொறுமையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.
மைக்கேல் ஸ்டீவரட்டின் வீட்டிலும் காரிலும், ஆண்டனி ஸ்டீவர்ட்டின் காரிலும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் (listening devices) ரகசியமாக பொருத்தப்பட்டன.
ஆனால், இந்த நடவடிக்கையின் மிக முக்கியமான பகுதி இன்னும் தனிப்பட்ட ஒன்றாக இருந்தது: ஜேஜே (JJ) மற்றும் ஆனா (Anna) என்று அழைக்கப்பட்ட இரண்டு ரகசிய காவல்துறை அதிகாரிகள், மைக்கேல் ஸ்டீவர்ட்டின் வாழ்க்கைக்குள் நுழைய அனுப்பப்பட்டனர்.
மைக்கேலை முதலில் அணுகியது ஜேஜே தான்.
மைக்கேல் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பழுதடைந்திருந்த லிஃப்ட் குறித்து பேச்சைத் தொடங்கியதன் மூலம் ஜேஜே அவருடன் பழகத் தொடங்கினார். விரைவில் ஜேஜே, மைக்கேலுடன் நேரம் செலவிடத் தொடங்கினார். இருவரும் கேங்ஸ்டர் திரைப்படங்களைப் பார்த்தனர், வீடியோ கேம் விளையாடினர், மேலும் ஜேஜே, மைக்கேல் கூறும் கதைகளைக் கேட்டார்.
மூன்று மாதங்களுக்குள், ஜேஜே-க்கும் மைக்கேல் ஸ்டீவர்ட்டுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாக மாறியது. பின்னர் மைக்கேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது, காவல் நிலையத்திலிருந்து தன்னை அழைத்துச் செல்ல வரும்படி அவர் கேட்டது ஜேஜே-யிடமே.
வீட்டுக்குச் செல்லும் கார் பயணத்தில் மைக்கேல் பேசத் தொடங்கினார்.
"அது யார் என்று எனக்குத் தெரியும்," என்று, தன்னைப் பதிவு செய்து கொண்டிருப்பது தெரியாத அந்த நபரிடம் அவர் ரகசியமாகக் கூறினார்.
அது தனது சகோதரரும், அவரது மூன்று நண்பர்களும்தான் என்று மைக்கேல் கூறினார். அவர்கள் "தன்பாலின ஈர்ப்பாளர்களைத் தாக்கும் செயலில்" ஈடுபட்டிருந்ததாகவும், ஒரு ஆள் நடமாட்டமில்லாத சந்துக்குள் ஒருவரைச் சிக்க வைத்து, அவரது தலையில் பலமாகத் தாக்கியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆண்டனி லிட்லர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Metropolitan Police
அது ஒரு வழக்கமான முறையாக மாறியது. அந்த மாதங்களில் மீண்டும் மீண்டும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதன்படி, மைக்கேல் தனது சகோதரர் மீது குற்றம் சாட்டினார். ஆனால், இந்தக் கொலையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
ஆனால், பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் அவரை மீண்டும் மீண்டும் சிக்க வைத்தன.
மற்றொரு ரகசிய காவல்துறை அதிகாரியான அன்னாவும் தனியாக மைக்கேலுடன் பழகி அவரை அறிந்துகொண்டார். 2023-ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு கஃபேவில் ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட உரையாடலின்போது, அவரது உறவினர் (nephew) , ஒருவரைக் கொன்றதாக மைக்கேலிடம் அன்னா கூறினார்.
"என் உறவினர் யாரையும் கொல்லவில்லை," என்று மைக்கேல் பதிலளித்தார். "என் சகோதரன்தான் அப்படிச் செய்தது ."
அந்த நேரத்தில், விசாரணை ரகசிய நிலையிலிருந்து வெளியே வந்திருந்தது. மைக்கேல் கைது செய்யப்பட்டு, கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்குத் தெரியாமல், அவரைச் சுற்றி ரகசிய நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது.
பின்னர், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் காவல்துறை நடத்திய விசாரணையில், மைக்கேலை சம்பவ இடத்தில் இருந்ததாகக் காட்ட உதவிய முக்கியமான ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது.
அந்த இரவு தனது உடலில் ரத்தம் படிந்திருக்கவில்லை என்று மறுத்தபோது, மைக்கேல் திடீரென கூறினார்:
"நான் சந்தின் நுழைவுப்பகுதியில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தேன் என்றால்... என் மீது எப்படி முழுவதும் ரத்தம் படிந்திருக்கும்? சொல்லுங்கள்."
அவர் "கண்காணித்துக் கொண்டிருந்ததாக காவல்துறையோ, அவரது குடும்பத்தினரோ, அல்லது எந்த ஒரு சாட்சியோ ஒருபோதும் குற்றம் சாட்டியதே இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் பிரைஸ் கே.சி. நடுவர் குழுவிடம் (jury) தெரிவித்தார்.
அந்த விவரம் வேறு எங்கும் இல்லை; அது மைக்கேலின் அந்த இரவு குறித்த சொந்த நினைவில் மட்டுமே இருந்தது.
தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்று விளக்கம் அளித்தபோது, ஆண்டனி தாக்கப்பட்டுக் கீழே விழுந்திருந்த அந்த சந்தின் நுழைவுப் பகுதியில் தான் இருந்ததாக மைக்கேல் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டார்.
1984ஆம் ஆண்டு முதல் வழக்கு ஆவணங்களில் புதைந்திருந்த ஒரு மர்மத்துக்கும் அது விளக்கம் அளித்தது.
தாக்குதல் நடந்த இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அந்த சந்துக்கு அருகிலிருந்த தொலைபேசி பெட்டியில் இருந்து ஒரு இளைஞர் 999 அவசர எண்ணுக்கு அழைத்தார். கடுமையாக ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த ஒருவருக்கு ஆம்புலன்ஸ் அனுப்பும்படி கேட்ட அவர், தனது பெயரைக் கூறாமல் அழைப்பைத் துண்டித்தார்.
எந்த தடயமும் கிடைக்காததால், அந்த அழைப்பு தவறான எச்சரிக்கை என்று கருதப்பட்டது.
அவ்வளவு விரைவாக நடந்ததை அறிந்திருக்க முடிந்தது, அங்கு இருந்த ஒருவரால் மட்டுமே என்று பிரைஸ் கூறினார்.
அந்த அழைப்பைச் செய்தவர் 15 வயதான மைக்கேல் ஸ்டீவர்ட்தான் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நடுவர் குழுவிடம் தெரிவித்தனர் — அவர் அந்த கொலையை பார்த்துக் கொண்டிருந்தார்; முதலில் அங்கிருந்து ஓடியவர் அவர்தான்; தன்னுடைய குழுவினர் தாக்கிவிட்டுச் சென்ற, உயிரிழக்கும் நிலையில் இருந்த மனிதருக்காக உதவி கோரி அவசர அழைப்பு செய்தவர் அவர்தான்.
"நீங்கள் என் உறவினரின் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள்"
தனது உறவினரைக் கொன்றவர்கள் இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தபோது, பாட்ரிஷியாவின் மனதில் மிகுந்த உணர்ச்சியுடன் ஒரு எண்ணமே எழுந்தது.
"உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? நீங்கள் என் உறவினரின் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள் — ஆனால் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்."
"அவர்களுக்கு 42 ஆண்டுகள் சுதந்திரமான வாழ்க்கை கிடைத்தது. ஆனால் என் உறவினரோ, 42 ஆண்டுகள் வாழ்க்கையில் கிடைக்க வேண்டியவற்றை இழந்துவிட்டார். அவர் திருமணம் செய்து கொண்டு, தனக்கென ஒரு குடும்பத்தை அமைக்கும் வாய்ப்பைக்கூட இழந்திருக்கலாம்."
"இறுதியாக நீதி கிடைத்துவிட்டது என்ற ஒரு நிம்மதி இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
"இது நடந்த துயரத்தைப் போக்கப் போவதில்லை. அவரை மீண்டும் உயிருடன் கொண்டு வரப் போவதுமில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. அவர்களை இறுதியாகப் பிடித்துவிட்டார்கள்."
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































