சிஜேபி ஓர் அரசியல் கட்சியாக மாறுமா? அடுத்தக்கட்டம் பற்றிய அலசல்

இந்தியா, சிஜேபி, மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கைகளை ஆதரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன (கோப்புப் படம்).
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

கடந்த சில வாரங்களில், இந்தியா ஒரு போராட்ட இயக்கத்தைக் கண்டது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் இறங்கினர். அந்த வீதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

படிப்படியாக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் இணைந்தனர். இதன் முகமாக காக்ரோஜ் ஜனதா கட்சி (சிஜேபி) மாறியது.

சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கும் இந்த சிஜேபி இயக்கத்தில் இணைந்தார். அவர்களின் கோரிக்கைகள் தெளிவாக இருந்தன. தேர்வு வினாத்தாள் கசிவுகள் தடுக்கப்பட வேண்டும், வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், தேர்வு முறை மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் அதற்கான பொறுப்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் ஆகியன அவர்களது கோரிக்கைகள்.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று அரசு உறுதியளித்தது. வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக நாடாளுமன்றமும் புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இது மிகவும் கடுமையான சட்டமாக இருக்கும் என்று அரசு கூறுகிறது.

இந்த அனைத்தையும் பார்க்கும் போது, இளைஞர்களின் இந்த இயக்கம் வெற்றி பெற்றுவிட்டது என முதலில் தோன்றுகிறது. அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது; இதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வர வேண்டும் என்று தோன்றலாம்.

ஆனால், உண்மையில் அப்படித்தானா?

ஏனெனில், தண்டனையை அதிகரிப்பது மட்டுமே வினாத்தாள் கசிவைத் தடுக்குமா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2024ஆம் ஆண்டிலேயே ஒரு சட்டம் இருந்தும், அதன் பிறகும் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதால், 2026ஆம் ஆண்டில் அதைவிட கடுமையான சட்டம் கொண்டுவருவதால் மட்டும் பிரச்னை முடிந்துவிடுமா? சட்டம் மட்டுமே குற்றத்தைத் தடுக்க முடியுமா?

சிஜேபி கூறுவது என்னவென்றால், இந்த இயக்கம் சட்டத்தை இன்னும் கடுமையாக்குவதற்காக மட்டும் நடத்தப்படவில்லை; மாறாக, முழு அமைப்பையும் மாற்றுவதற்காக நடத்தப்பட்டது.

அதே நேரத்தில், வினாத்தாள்கள் மீண்டும் மீண்டும் கசிந்தால், அதற்கான அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

புதிய சட்டங்களை இயற்றுவது மட்டுமே அரசின் பொறுப்புணர்வை குறைத்துவிடுமா?

இந்த விவகாரம் இத்துடன் முடிவடையவில்லை. சிஜேபி இயக்கம் முடிவுக்கு வந்த விதம் குறித்தும் பலர் கேள்வி எழுப்பினர்.

சில மாணவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும், போராட்டம் மிக விரைவாக கைவிடப்பட்டுவிட்டதா என்றும், அரசின் வாக்குறுதிகளை பெரிதும் நம்பிவிட்டோமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

சீர்திருத்தங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும் வரை காத்திருந்திருக்க வேண்டுமா?

இந்த விவகாரங்கள் குறித்து, பிபிசி ஹிந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான 'தி லென்ஸ்' நிகழ்ச்சியில் கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் துறை இயக்குநர் முகேஷ் சர்மா விவாதித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, தி மோஜோ ஸ்டோரி ஆசிரியர் பர்கா தத் மற்றும் தி டிரிப்யூன் இணை ஆசிரியர் அதிதி டாண்டன் உள்ளிட்டோர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

"பிரச்னைக்கான காரணங்களைப் பற்றி அரசு பேசவில்லை"

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது சிஜேபியால் எழுப்பப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா (வலது) மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது சிஜேபியால் எழுப்பப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா (வலது) மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்.

வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட மசோதாவை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று என்று அரசு கூறுகிறது.

இதுகுறித்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில்,

"முதலில், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், வினாத்தாள் கசிவு பிரச்னையையும் அரசு மற்றும் ஒட்டுமொத்த அமைப்பும் தற்போது ஏற்றுக்கொள்கின்றன. இவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றன," என்றார்.

"ஆனால், எங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்றால், வினாத்தாள் கசிவு ஏற்பட்ட பிறகு அதன் விளைவுகளைப் பற்றித்தான் நீங்கள் (அரசு) பேசுகிறீர்கள். தண்டனை, அபராதம் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் குறித்து பேசப்படுகிறது. ஆனால், வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்து அரசின் மசோதாவில் சிறப்பான விவாதம் எதுவும் இல்லை."

அசுதோஷ் ரங்கா கூறுகையில், தேர்வுகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு குறித்தோ, மாணவர்களின் உரிமைகள் குறித்தோ அரசு பேசவில்லை என்றார்.

"தணிக்கை, டிஜிட்டல் பாதுகாப்பு, பயிற்சி, தேர்வு அட்டவணை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை குறித்தும் இதில் பேசப்படவில்லை," என்றார்.

அதே நேரத்தில், சிஜேபி செய்தித் தொடர்பாளர், பாடத்திட்டம் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை அல்லது பயிற்சி மையங்களின் பங்கு குறித்தும் அரசு பேசவில்லை என்று கூறினார்.

தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) போன்ற அமைப்புகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் அரசு பேசவில்லை என்றும், வினாத்தாள் கசிவைத் தடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வினாத்தாள் கசிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதாவது, காயம் ஏற்பட்ட பிறகு மருந்து தடவுவதைவிட, காயமே ஏற்படாமல் தடுப்பதில் கவனம் செலுத்துவது சிறந்தது என்பதைப் போல, அரசு பிரச்னைகளின் அடிப்படை காரணங்கள் மற்றும் கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து பேச வேண்டும் என்பதே சிஜேபி-யின் நிலைப்பாடு.

இந்த கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு சிஜேபி-யின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

அசுதோஷ் ரங்கா கூறுகையில், "தற்போது எங்களின் முன்னுரிமை, ஜூலை 25ஆம் தேதி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட எங்களது பழைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும்."

"அதாவது, டெல்லி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் (FIR) திரும்பப் பெறப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இந்த விவகாரங்களில் அரசு இதுவரை எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வழங்கவில்லை."

அரசு விரைவில் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வழங்கவில்லை என்றால், போராட்டம் நடத்தும் மாணவர்களை அரசு துன்புறுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், அதற்காக மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் அவர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு

இதற்கிடையில், மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் இல்லாதது குறித்தும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், "டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. எனவே, நேரடிப் பொறுப்பு உள்துறை அமைச்சருக்கே உள்ளது. குழந்தைகள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. குழந்தைகள் தாக்கப்பட்ட விதம், சித்திரவதை செய்யப்பட்ட விதம், தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்ட விதம், அவர்களின் தலைகள் தாக்கப்பட்ட விதம் — இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக உள்ளது. எனவே, உள்துறை அமைச்சர் இதற்கு பதில் அளிக்க வேண்டும்," என்றார்.

அசுதோஷ் ரங்கா மேலும் கூறுகையில், "இவை அனைத்தும் உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் நடந்திருந்தால், அவரிடமும் விளக்கம் கேட்கப்படும். தேவைப்பட்டால், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரப்படும்."

"காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். இதற்காக ஒரு தளமும் (portal) தொடங்கப்பட்டுள்ளது. வரம்பை மீறி செயல்பட்ட அனைத்து காவல்துறையினரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதற்காக நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களை நாங்கள் நியமித்துள்ளோம்," என்றார்.

மாணவர்களுக்கு எதிரான வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

பட மூலாதாரம், Chauhan/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, மாணவர்களுக்கு எதிரான வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

தி டிரிப்யூன் இணை ஆசிரியர் அதிதி டாண்டன் கூறுகையில், "இது ஒரு வலிமையான அரசு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அரசிடம் அதிக நெகிழ்வுத்தன்மை இல்லை. ஆனால், அரசிடம் சொந்த உளவுத்துறை அமைப்புகள் உள்ளன. அவர்கள் தங்களுக்கான தகவல்களையும் கருத்துகளையும் பெற்றிருப்பார்கள்."

"என்னைப் பொறுத்தவரை, ஜந்தர் மந்தரில் இருந்து சோனம் வாங்சுக்கை அழைத்துச் சென்றது ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதன்பிறகு, லெட்ஸ் மூவ்' (Let's Move) நாடாளுமன்ற இயக்கம் நடந்த நாளில் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தனர். இது ஒரு பெரிய இயக்கமாக மாறப்போகிறது என்பதை அரசு ஆரம்பத்தில் உணரவில்லை என்பது தெளிவாகிறது. அதை உணர்ந்த பிறகு, அதிலிருந்து வெளியேறுவதற்கான உத்திகளை அரசு வகுக்கத் தொடங்கியது; பின்னர் சிஜேபி-யுடன் பேச்சுவார்த்தையையும் தொடங்கியது," என்றார்.

மோகன் பகவத் கூறிய கருத்தை நாம் மறந்துவிட்டோம் என்று அதிதி டாண்டன் குறிப்பிட்டார்.

முதன்முறையாக பாஜகவின் வழிகாட்டுதல் குழுவைச் சேர்ந்த ஒருவர் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பினார் என்றும் அவர் கூறினார்.

மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டார்.

முரளி மனோகர் ஜோஷி தனது பதிவில், "நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பல நாட்களாக புதுடெல்லியின் தெருக்களில் போராட்டம் நடத்தி வருவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது," என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள் தேர்வு முறையைப் பற்றிக் கொண்டுள்ள கவலைகள் நியாயமானவை என்றும், அவற்றை உணர்வுபூர்வமாக அணுகி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதிதி டாண்டன் கூறுகையில், "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஹைதராபாத்தில் ஆற்றிய உரையில், ஜென்-ஸி தலைமுறை என்பது அன்புடன் பேச வேண்டிய தலைமுறை என்று கூறினார். அவர்களிடம் உங்கள் கருத்துகளைத் திணிக்க முடியாது; அவர்களை உங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்ற முடியாது."

"அவர்கள் தங்களது பெற்றோர்களை மட்டுமல்ல, அமைப்பையும் கேள்வி கேட்கிறார்கள். எதிர்க்கட்சிகளையும் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். அதனால், அவர்களுடன் தொடர்புகொள்ளும் முறையை மாற்ற வேண்டும். பழைய அணுகுமுறைகளால் அவர்களிடம் பேச முடியாது," என்றார்.

சிஜேபி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவசரப்பட்டதா?

'தி லென்ஸ்' நிகழ்ச்சியில் முகேஷ் சர்மாவுடன் மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்.
படக்குறிப்பு, 'தி லென்ஸ்' நிகழ்ச்சியில் முகேஷ் சர்மாவுடன் மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்.

மூத்த பத்திரிகையாளரும் 'தி மோஜோ ஸ்டோரி'-யின் ஆசிரியருமான பர்கா தத் கூறுகையில்,"காங்கிரஸ் அல்லது ராகுல் காந்தி முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த இயக்கத்தின் ஆதரவு சூழல் சிஜேபி-க்கு சாதகமாகவே இருந்ததாக நான் நினைக்கிறேன். இருப்பினும், அரசியலில் எதுவும் நிரந்தரமானது அல்ல," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்த இயக்கத்தின் காரணமாக மோதி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மோதி அரசு அழுத்தத்துக்கு அடிபணிந்து முடிவுகளை எடுக்காது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இப்போது பிரதமரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அரசுக்கு எதிரான இந்த சவால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும்," என்றார்.

ஆனால், சில மாணவர்களும் ஆய்வாளர்களும், அரசின் வாக்குறுதிகளை மட்டும் நம்பி சிஜேபி போராட்டத்தை விரைவாக முடித்துவிட்டதாகவும், அதன் முடிவுகளைப் பார்க்கக் காத்திருக்கவில்லை என்றும் கருதுகின்றனர்.

அசுதோஷ் ரங்கா கூறுகையில், "தர்மேந்திர பிரதானின் ராஜினாமா என்பது கண்கூடாகத் தெரியும் ஒரு முடிவு. கடந்த 12 ஆண்டுகளில், இதுபோன்ற ஒரு அமைச்சர் பதவி விலகியதை இந்த நாடு பார்த்ததில்லை. இரண்டு மாதங்களே நடைபெற்ற ஒரு இயக்கம் சாதித்ததைப் பார்க்கும்போது, இது மிகப்பெரிய சாதனை என்று நான் கருதுகிறேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இரண்டாவதாக, அரசின் மூத்த அமைச்சர்கள் அனைவரின் முன்னிலையிலும் வந்து, 'போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளோம்' என்று கூறியிருக்கிறார்கள். இப்போது அரசு தனது சொந்த வாக்குறுதியை மதிக்கவில்லை என்றால், அது எவ்வளவு பெரிய விஷயமாக மாறும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அதன் பிறகு, மத்திய அரசின் எந்த ஒரு வாக்குறுதிக்கும் மதிப்பு இருக்காது; இந்த அரசை நம்ப முடியாத நிலை ஏற்படும்," என்றார்.

ஆனால், சிஜேபி போராட்டத்தை முடித்தது அவசரமான முடிவு என்ற கருத்துடன் பர்கா தத் உடன்படவில்லை.

அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்றே அவர் கருதுகிறார்.

பர்கா தத் கூறுகையில், "தர்மேந்திர பிரதானின் ராஜினாமா அறிவிக்கப்பட்ட பிறகு, சிஜேபி போராட்டத்தைத் தொடர்வதற்கான வலுவான காரணம் எதுவும் இல்லாமல் போயிருக்கலாம். அதன் பிறகு, 'முக்கியமான கோரிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது; ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார்கள்' என்று மக்கள் கூறத் தொடங்கியிருப்பார்கள்," என்றார்.

பிரதமர் மோதியும் பாஜகவும் இளைஞர்களிடமிருந்து விலகிவிட்டனரா?

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த பிறகு, அவர் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அவருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பல தலைவர்களும் அவரைப் பாராட்டிப் பேசினர்.

அப்படியானால், அவரது ராஜினாமா என்பது சிஜேபி-க்கு கிடைத்த ஒரு அடையாள வெற்றி மட்டும்தானா? அரசு அமைப்பு முன்பு போலவே தொடர்ந்து செயல்படுமா?

அசுதோஷ் கூறுகையில், "ஜந்தர் மந்தரில் இருந்த சிஜேபி மட்டுமல்ல, நாடு முழுவதும் வீதிகளில் இறங்கிய இளைஞர்களின் ஒரே கோரிக்கையும் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாதான். எனவே, இதை ஒரு அடையாள வெற்றி என்று கூறி இளைஞர்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது," என்றார்.

சிஜேபி செய்தித் தொடர்பாளர் மற்றும் ஜென் ஸி குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துகளுக்கு, சிஜேபி பாஜகவிடம் எத்தகைய அணுகுமுறையை எதிர்பார்க்கிறது?

அசுதோஷ் ரங்கா கூறுகையில், "ஆணவம் யாருக்கும் நன்மை செய்ததில்லை. மிகச் சிறந்தவர்களைக்கூட ஆணவம் வீழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பாஜக கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று பெருந்தன்மை. இந்த நாட்டின் மக்களுக்கு முன் சற்று பணிந்து, அவர்களுடைய குரலைக் கேட்க வேண்டும்."

"இந்த விவகாரத்தில் பாஜகவுக்குள் இருந்து எந்தக் குரலும் எழவில்லை என்று நான் நினைக்கிறேன். கங்கனா ரணாவத்தின் கருத்தால் பாஜகவும் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், பலர் இது பாஜகவின் உத்தி என்று கூறுகின்றனர். அனுமதி இல்லாமல் கங்கனா ரணாவத் இப்படிப் பேச முடியாது," என்றார்.

பர்கா தத் கூறுகையில், "சிஜேபி செய்தித் தொடர்பாளரிடம் நான் கேட்டேன். கங்கனா ரணாவத் உங்களை 'சாக்கடை' (gutter) என்று அழைக்கிறாரே என்று. அதற்கு அவர், 'நாங்கள் சாக்கடையைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் எங்களை நாங்களே கரப்பான் பூச்சி என்று அழைத்துக் கொண்டோம்...' என்று கூறினார். அவமதிக்க முயன்றாலும், அந்தக் கருத்து மீண்டும் கங்கனா ரணாவத்தையே நோக்கித் திரும்பியது," என்றார்.

இதுபோன்ற கருத்துகள் பாஜகவுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை என்று பர்கா தத் கருதுகிறார்.

கடந்த சில நாட்களில், ஜந்தர் மந்தரில் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒருபுறம், மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் வீதிகளில் இறங்கினர். மறுபுறம், ஃபதேபூரில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி ஜென் ஆல்ஃபா தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

"நான் அரசில் இருந்திருந்தால், எனது முன்னுரிமை பொருளாதார வளர்ச்சியாக இருக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பொருளாதார வளர்ச்சியும்தான் ஒரே முன்னுரிமையாக இருக்கும்," என்று கூறப்பட்டது.

இளைஞர்களின் இந்த இயக்கத்தில் காணப்பட்டவற்றை வைத்து பார்க்கும்போது, பிரதமர் மோதி அவர்களிடமிருந்து சற்று விலகிவிட்டார் என்று தோன்றுகிறதா?

பர்கா தத் கூறுகையில், "பிரதமர் மோதியின் மூன்று செல்ஃபி வீடியோக்கள் வெளியாகியுள்ள விதத்தைப் பார்க்கும்போது, அவர் இளைஞர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. இந்த முயற்சி தொடர்ந்து நடைபெறலாம்."

"இந்த இடைவெளி தற்போது தேர்வுகள் தொடர்பான பிரச்னை மட்டுமே அல்ல. காவல்துறை நடத்திய கடுமையான நடவடிக்கைகள் குறித்து மிகுந்த கோபம் உள்ளது," என்றார்.

அதிதி டாண்டன் கூறுகையில், "ஆரம்பத்தில் அரசின் தரப்பில் ஒரு தவறு நடந்தது என்று நான் நம்புகிறேன். அது ஏன் நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் போல் தோன்றியதால், அரசு உடனடியாக பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தது."

"அரசின் தரப்பில் ஒரு கட்டாய சூழலும், தொலைநோக்கு பார்வையும் இருந்தது. சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பிறகு, இதற்கு அதிக வேகம் கிடைத்தது. இளைஞர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது; இது நாடு முழுவதும் ஆதரவைப் பெறத் தொடங்கியது," என்றார்.

சிஜேபி அடுத்து என்ன செய்யப் போகிறது?

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்குவது மோதி அரசுக்கு ஒரு பெரும் சவாலாக அமையக்கூடும் (கோப்புப் படம்).

பட மூலாதாரம், @narendramodi X/ANI Video Grab

படக்குறிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்குவது மோதி அரசுக்கு ஒரு பெரும் சவாலாக அமையக்கூடும் (கோப்புப் படம்).

பலரது மனதிலும் இருக்கும் கேள்வி இதுதான்: சிஜேபி அடுத்து என்ன செய்யப் போகிறது? அது ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து யோசிக்கிறதா?

அசுதோஷ் கூறுகையில், "தற்போது நாங்கள் எங்களை சற்று ஒழுங்குபடுத்திக் கொள்ளப் போகிறோம். நாட்டின் பல நகரங்களில் இருந்து மக்கள் எங்களை அங்கு வருமாறும், அங்குள்ள மாணவர்களைச் சந்தித்து அவர்களது பிரச்னைகளை முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டு வருகின்றனர். தற்போது எங்களது கவனம் அதில்தான் உள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கான நம்பகமான ஒரு குரலாக இருக்க விரும்புகிறோம். அதன் மூலம் அவர்களது பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இதுதான் தற்போது எங்களது முன்னுரிமை," என்றார்.

அதே நேரத்தில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு அவர் கூறுகையில், "எதையும் ஒருபோதும் நிராகரித்து விடாதீர்கள் என்பதுதான் பொது வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக்கொண்டது. மற்றவை காலம் செல்லச் செல்ல தெரியவரும்," என்றார்.

ஆனால், சிஜேபிக்குக் கூட இந்தக் கேள்விக்கான பதில் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று பர்கா தத் கருதுகிறார்.

சிஜேபி ஒரு அழுத்தம் தரும் குழுவாக செயல்படுவதைத் தாண்டி வேறு எதையும் செய்ய முடியுமா என்பது தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

"இது மிகவும் செல்வாக்கு மிக்க, மிகவும் வலிமையான ஒரு அழுத்தம் தரும் குழு. எனவே, அதற்கான பெருமையும் பாராட்டும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்," என்றார்.

பர்கா தத் மேலும் கூறுகையில், "இந்த இயக்கத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால், அரசியல் கட்சியாக மாறுவது இந்த இயக்கத்தின் மீதான மரியாதையைக் குறைத்துவிடும்," என்றார்.

அசுதோஷ் ரங்கா கூறுகையில், "சோனம் வாங்சுக் ஒரு முழு தலைமுறையையே விழிப்படையச் செய்துள்ளார். போராடுவதற்கான தைரியத்தை அவர்களுக்கு அளித்துள்ளார்; அவர்களது குரலை வெளிப்படுத்த உதவியுள்ளார். சோனம் ஜிக்கு நான் என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தச் சட்டம் அர்த்தமற்றது அல்லது முக்கியத்துவம் இல்லாதது என்று நான் கூறமாட்டேன். ஆனால், நான் ஜந்தர் மந்தருக்குச் சென்று அங்கு சந்தித்த மக்களைப் பார்த்தபோது, இந்தப் போராட்டம் வினாத்தாள் கசிவு மற்றும் நீட் பிரச்னையில் தொடங்கியிருந்தாலும், அது அதையும் தாண்டிச் சென்றுவிட்டதாக உணர்ந்தேன்."

"இது பொருளாதார எதிர்காலம் குறித்த ஒரு வெளிப்பாடாக இருந்தது. மக்களிடையே கவலையும் அச்ச உணர்வும் இருந்தது."

மாணவர்களின் போராட்டத்தை வெறும் நீட் பிரச்னையின் அடிப்படையில் மட்டும் பார்ப்பது தவறாகவோ அல்லது மிகவும் குறுகிய பார்வையாகவோ இருக்கும் என்றும் அவர் கூறினார்.

"நாட்டில் 18 முதல் 29 வயதுக்குள் 32 கோடி இளைஞர்கள் உள்ளனர். அதுதான் உங்களுக்கான வாய்ப்பு; அதே நேரத்தில் அதுதான் உங்களுக்கான சவாலும் ஆகும்."

"இந்த நிலைமை பாஜக அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு அரசையும் விழித்துக்கொள்ளச் சொல்கிறது. கல்வி பெற்றும் எதிர்காலத்தில் எந்த வாய்ப்பும் தெரியாத இளைஞர்கள் உள்ளனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள் அவர்களுக்கு மிக முக்கியமான பிரச்னைகளாக உள்ளன," என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு