தென்காசி அருகே இளைஞர் பலி: தமிழ்நாட்டில் பாம்புக்கடி மரணங்களை தடுப்பதில் உள்ள சவால்கள்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததே அவரது மரணத்திற்கு காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பாம்பு கடித்த பிறகு மிகவும் தாமதமாக வந்ததே இளைஞருக்கு சிகிச்சைக்கான பலன் கிடைக்காமல் போனதற்குக் காரணம் என்று இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கூறுவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவைகள் துறையின் இயக்குநர் மருத்துவர் டி.கே.சித்ரா, "இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திடமும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களது குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையிலான தகவல் வெளியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.

இந்தச் சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அவசர கால நடவடிக்கைகள், நஞ்சுமுறி மருந்துகளின் இருப்பு, பாம்புக்கடி சிகிச்சைக்கான தயார்நிலை ஆகியவை எந்த அளவுக்குத் திறம்பட இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் பாம்புக்கடி பாதிப்பு எவ்வளவு தீவிரமானதாக உள்ளது, அதை எதிர்கொள்ள மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்புகள் போதுமான அளவுக்குத் தயாராக உள்ளனவா என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடி மூலம் உடலில் நஞ்சு ஏறுவதை, ஒரு 'கவனிக்கப்படாத வெப்பமண்டல நோய்' என்று வகைப்படுத்தியுள்ளது. அதன் கூற்றுப்படி, இது கிராமப்புற மற்றும் விவசாய சமூகங்களை அதிகளவில் பாதிக்கிறது.

தமிழ்நாட்டில் பாம்புக்கடி விபத்துகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் நிலை

கனடாவில் உள்ள உலகளாவிய சுகாதார ஆய்வு மையம், யூனிட்டி ஹெல்த் டொரான்டோ, டல்லா லானா பொது சுகாதாரப் பள்ளி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் அமைந்துள்ள மெட்ராஸ் முதலைப் பண்ணை மற்றும் ஊர்வன ஆய்வு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 ஆய்வாளர்கள் இணைந்து இந்தியாவில் பாம்புக்கடி மரணங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு கடந்த 2020ஆம் ஆண்டு இலைஃப் என்ற ஆய்விதழில் வெளியானது.

பாம்புக்கடி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஆய்வறிக்கை, 2001 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 8,08,000 பேர் பாம்புக்கடியால் இறந்துள்ளதாகக் கூறுகிறது. இது ஆண்டுக்கு சராசரியாக 58,000 இறப்புகளுக்குச் சமம்.

அந்த ஆய்வின்படி, மருத்துவமனை புள்ளிவிவரங்கள் காட்டுவதைவிட பாம்புக்கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்குக் காரணம், "பாம்புக்கடிக்கு ஆளாகும் அனைவரும் மருத்துவ வசதிகளை அணுகுவது இல்லை அல்லது அவர்களது இறப்புக்கான காரணம் முறையாகப் பதிவு செய்யப்படாமலே போய்விடுகின்றன" என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய பாம்புக்கடி திட்டம் (Indian Snakebite Project), ஆண்டுதோறும் இந்தியாவில் 46,000 பேர் பாம்புக்கடியால் இறப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்புக்கு வித்திடாத பாம்புக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளது.

இதன் பாதிப்பு, கிராமப்புற மக்கள் மீது, குறிப்பாக நீண்ட நேரம் திறந்தவெளியில், வயல்வெளிகளில் பணியாற்றும் விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடி சமூகத்தினர், தினக்கூலித் தொழிலாளர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவற்றுடன் கூடுதலாக, கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் உலவக்கூடிய கட்டுவரியன் பாம்பின் கடிக்கு சிலர் தூங்கும்போது ஆளாவதும் முக்கியப் பிரச்னையாக இருப்பதாகக் கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்.

இந்தப் பிரச்னைக்கு தமிழ்நாடு விதிவிலக்கல்ல என்பதற்குச் சான்றாக விளங்குகிறது தென்காசியில் நிகழ்ந்த இளைஞர் ஆகாஷின் மரணம். மாநிலத்தின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பாம்புக்கடி சம்பவங்கள் இங்கு பதிவாகின்றன.

தமிழ்நாடு பொது சுகாதாரப் பதிவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் 15,120 பாம்புக்கடி சம்பவங்களும் 17 இறப்புகளும் பதிவாயின. அதேபோல, 2023ஆம் ஆண்டில் 19,795 பாம்புக்கடி சம்பவங்கள், 43 இறப்புகள் மற்றும் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே 7,300க்கும் மேற்பட்ட பாம்புக்கடி சம்பவங்களும் பதிவாயின.

இதைத் தொடர்ந்து, அந்த ஆண்டில், பாம்புக்கடி பாதிப்பை, 'கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோய்' (notifiable disease) என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அப்போது, இந்தப் பிரச்னையின் முழு பாதிப்புகளும் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இருப்பது ஒரு முக்கிய சவாலாக இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்த தமிழ்நாடு அரசின் அவதானிப்புகள், பாதிக்கப்பட்ட பலர் பாரம்பரிய மருத்துவத்தை நாடுவது, மருத்துவமனைகளில் இதற்கெனத் தனித்துவமாக முறையான பதிவு நடைமுறைகள் இல்லாதது அல்லது சிகிச்சைக்காக சுகாதார அமைப்புகளையே அணுகாமல் இருப்பது போன்ற சிக்கல்கள் இருப்பதாகக் கூறின.

இதற்குத் தீர்வாக, பாம்புக்கடி பாதிப்பைக் கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோய் என்று மாநில அரசு வகைப்படுத்திய பிறகு, "தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை மற்றும் தனியார் மருத்துவமனைகள் என அனைத்து சுகாதார மையங்களிலும் சிகிச்சைக்கு வரும் அனைத்து பாம்புக்கடி நோயாளிகளின் விவரங்களும் அரசின் நேரடி தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்கள் மட்டுமின்றி, சிகிச்சைப் பலனின்றி ஏற்படும் மரணங்களும் பதிவு செய்யப்படுகின்றன" என்று விவரித்தார் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவைகள் துறையின் இயக்குநர் மருத்துவர் டி.கே.சித்ரா.

அவரது கூற்றுப்படி, "அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கத் தேவைப்படும் நஞ்சுமுறி மருந்து தேவையான அளவுக்கு இருப்பதை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. கூடுதலாக, அனைத்து சுகாதார மையங்களிலும் இருக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பாம்புக்கடி நோயாளிகளுக்கு எத்தகைய சிகிச்சைகளை அளிக்க வேண்டுமென சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன."

அதோடு தேசிய சுகாதார திட்டத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் பாம்பு மற்றும் தேள் உள்பட நஞ்சுள்ள விலங்குகளின் கடிக்கு ஆளான 1.03 லட்சம் நோயாளிகளுக்கு 2023-24ஆம் ஆண்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பாம்புக்கடி சம்பவங்களின் விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும், சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற நடவடிக்கை, "முறையான தகவல் பதிவுகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, போதுமான அளவில் நஞ்சுமுறி மருந்துகளை விநியோகிப்பதை மேம்படுத்தவும், பொது சுகாதாரத் திட்டமிடலை இன்னும் திறம்பட மேற்கொள்ளவும் உதவுவதாக" மருத்துவர் டி.கே.சித்ரா விளக்கினார்.

பாம்புக்கடி விபத்துகளை சமாளிப்பதில் இருக்கும் சவால்கள்

மறுபுறம், இந்தச் சம்பவங்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடாது என்று பாம்புக்கடி குறித்து ஆய்வு செய்து வரும் முனைவர் மனோஜ் குறிப்பிட்டார்.

அடிப்படையில், "பாம்பு கடித்த பிறகு வரக்கூடிய முதல் சில மணிநேரம்தான் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நேரத்திற்குள் உரிய சிகிச்சையை வழங்குவதில்தான் சவால் அடங்கியுள்ளது" என்றார் அவர்.

அவரது விளக்கத்தின்படி, பொதுவாக மருத்துவமனையை நாடி வரும் அனைவருமே தங்களைப் பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்தே வருவதில்லை. "பலரும் அதன் பக்கவிளைவுகளாக உடலில் தெரியும் பிற அறிகுறிகளால் அவதிக்கு உள்ளாகி, வேறு ஏதோ அசௌகரியம் எனக் கருதி சிகிச்சை பெற மருத்துவர்களை நாடக்கூடும். இன்னும் சிலர் கடித்த பாம்பு நஞ்சுள்ளதா, நஞ்சற்றதா என்று தெளிவாகத் தெரியாத நிலையில் வரலாம்."

தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக நாகம், கட்டு வரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு நச்சுப் பாம்புகளே மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல நேரங்களில், "பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் அதன் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக" கூறிய முனைவர் மனோஜ், "நாகம், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் போன்றவை கடித்தால், அவை கடித்த இடத்தில் காயம், வீக்கம், ரத்தம் வடிதல் போன்ற ஏதேனும் அடையாளம் தென்படும். ஆனால், கட்டு வரியன் கடிக்கும் இடத்தில் எந்தவிதத் தடயமும் இருக்காது. எளிதாகக் கூறுவதெனில், உடல்நிலையில் பாதிப்பின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும் வரை, பாம்பு கடித்துவிட்டதாக எவ்விதத்திலும் உறுதியாகக் கூறவே முடியாது" என்றார்.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். அதில், ஆறு வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் சிரமப்பட்டதாகவும் கண்களைத் திறக்க முடியாத, சுவாசிக்க முடியாத நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் தென்பட்ட அறிகுறிகளான, "இமைகளின் நரம்பு பாதிக்கப்பட்டு கண்களைத் திறக்க முடியாத நிலை, நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் தவித்தது, கடுமையான வயிற்று வலி" ஆகிய பாதிப்புகள் கட்டு வரியன் பாம்பு கடித்ததன் அறிகுறிகளாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அவருக்கு ஒரு வாரம் சிகிச்சையளித்து காப்பாற்றியதாக அப்போது பிபிசி தமிழிடம் பேசிய சிறுமிக்கு சிகிச்சையளித்த குழந்தைகள் நல மருத்துவர் அரவிந்த் விளக்கினார்.

இதுவொரு முக்கியமான உண்மையை எடுத்துக் காட்டுவதாகக் கூறிய முனைவர் மனோஜ், "வெற்றிகரமான சிகிச்சை என்பது வெறுமனே நஞ்சுமுறி மருந்து கிடைப்பதை மட்டுமே சார்ந்து இருக்கவில்லை. கட்டு வரியன் போன்ற பாம்புகள் கடித்தால், நோயாளி கட்டாயமாக அவசர சிகிச்சைப் பிரிவில், இன்குபேஷன் போன்ற சுவாசத்திற்கு உதவும் கருவிகளுடன் இணைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்."

அதோடு, "நச்சுப்பாம்புதான் கடித்துள்ளது என்பதைக் கண்டறிந்து, சிகிச்சையளிக்கத் தேவையான பயிற்சிகள் மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கிராமப்புறங்களில் இருக்கும் சிறிய அளவிலான அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவோ இன்குபேஷன், டயாலிசிஸ் போன்ற தீவிர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வசதியோ இருக்காது" என்றார் மனோஜ்.

ஆகவே, பாம்புக்கடிக்கு ஆளாவோர் இந்த வசதிகள் இருக்கக்கூடிய மருத்துவமனையை நாடுவது நேரத்தைக் கடத்தாமல், விரைவாக உரிய சிகிச்சையைப் பெற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நஞ்சுமுறி மருந்துகளை வழங்குவதில் உள்ள சவால்கள்

நஞ்சுமுறி மருந்துகளைப் பொறுத்தவரை, அதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, மோனோவேலன்ட் மற்றும் பாலிவேலன்ட்.

மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்து என்பது ஒரு குறிப்பிட்ட பாம்பின் நஞ்சை முறிக்கப் பயன்படும் மருந்து.

பாலிவேலன்ட் மருந்து என்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகளின் நஞ்சுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய நஞ்சுமுறி மருந்து.

ஒவ்வொரு பாம்புக்கும் தனித்தனியாக மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்தைத் தயாரிப்பது மிகவும் சவாலான, சிக்கல்மிக்க பணி என்பதால், இந்தியாவில் பாலிவேலன்ட் நஞ்சுமுறி மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதாவது, "நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு நச்சுப் பாம்புகளில் எது கடித்தாலும் அதற்கு ஒரே நஞ்சுமுறி மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும்" என்கிறார் மனோஜ்.

தமிழ்நாடு தனது "பொது சுகாதார உள்கட்டமைப்பின் மூலம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த நஞ்சுமுறி மருந்துக்கான வலுவான விநியோகச் சங்கிலியைப் பராமரித்து வருவதாக" மருத்துவர் டி.கே.சித்ரா குறிப்பிட்டார்.

இருப்பினும், ஒருவர் பாம்பு கடித்துவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு உடனடியாக இந்த சிகிச்சை வழங்கப்படாது. மனோஜின் கூற்றுப்படி, 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனை (20min WBCT) மேற்கொள்ளப்படும்.

"சராசரியாக மனிதர்களுக்கு இருக்கும் ரத்தம் உறையும் தன்மை சரியாகச் செயல்படுகிறதா என்பது இந்தப் பரிசோதனையில் அவதானிக்கப்படும். நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் போன்ற நச்சுப்பாம்புகளில் ஏதேனும் கடித்திருந்தால், அதன் நஞ்சின் காரணமாக ரத்தம் 20 நிமிடங்களுக்கு உறையாது. அதன் மூலம், கடித்தது நச்சுப் பாம்பா, நஞ்சற்ற பாம்பா என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். இதன் மூலம் நச்சுப் பாம்புதான் கடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே நஞ்சுமுறி மருந்து வழங்கப்படும்."

ஆனால், கட்டு வரியன் கடித்திருந்தால் அது இவ்வளவு எளிமையாகத் தெரிந்துவிடாது. "இந்த சிகிச்சைகளில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களே கூட கட்டுவரியன் கடியைக் கண்டறிய சிரமப்படுவார்கள். அந்த நஞ்சின் விளைவாக உடலில் ஏற்படும் சுவாசப் பிரச்னை போன்ற பிற அறிகுறிகளை வைத்துதான் சிகிச்சைகளைத் தொடங்க முடியும். இதனால் அனைத்து மருத்துவ வசதிகளும் இருக்கக்கூடிய சுகாதார மையத்திற்குச் செல்வதே தற்போதைய நிலையில் உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும்" என்று விளக்கினார் மனோஜ்.

இவற்றுடன், நஞ்சுள்ளதோ, நஞ்சற்றதோ, ஒரு பாம்பு கடித்துவிட்டாலே, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் என்றும் உரிய பரிசோதனைகளின் மூலம் ஆபத்தில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் முனைவர் மனோஜ் வலியுறுத்தினார்.

இவை ஒருபுறமிருக்க, "மக்களின் கவனக்குறைவும் கடித்த பாம்பு இனங்களை அடையாளம் காண்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், பாதிப்புகளைத் தடுப்பதில் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக" அவர் குறிப்பிட்டார்.

அதாவது, நோயாளிகள் பாம்பு கடித்துவிட்டதை உணராமலோ அல்லது கடிபட்டபோதும் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு வருவது, முறையான சிகிச்சையை வழங்குவதைச் சிக்கலாக்குகிறது.

"இந்தியாவில் இன்னமும் பாம்புக்கடியைக் கண்டறியும் கருவி (Snakebite detection Kit) புழக்கத்தில் இல்லை. அத்தகைய வழிமுறைகள் எளிதில் நச்சுப் பாம்பு கடித்திருந்தால் அதை வேகமாக உறுதி செய்து, உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும்" என்று பரிந்துரைக்கிறார் மனோஜ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு