சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதால் நினைவாற்றல், தூக்கம் மேம்படுமா?

பட மூலாதாரம், Mark Stetson
- எழுதியவர், அலி ஹிர்ஷ்லாக்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மனிதர்கள் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் ஒரு நாளின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கும் "புத்தகத்தின் இரு முனைகள்" போலப் பார்க்கிறார்கள். இந்த "கோல்டன் ஹவர்" நேரம் நமது நினைவாற்றல், தூக்கம் மற்றும் மனநிலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
எனது திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை, எனது பெற்றோர்கள், எனது வருங்கால கணவர் மற்றும் நான் மாசசூசெட்ஸில் உள்ள கேப் காட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தளத்திலிருந்து மிகவும் அழகான, மறக்க முடியாத சூரிய அஸ்தமனத்தைக் கண்டோம்.
கேப் காட் பகுதி, "கோல்டன் ஹவர்" எனப்படும் பொன் அந்தி மாலைப்பொழுதில் தோன்றும் ரம்யமான வெளிச்சத்திற்கு மிகவும் பிரபலமானது.
அன்று, மேற்கிலிருந்து ஒரு புயலும் நெருங்கி வந்து கொண்டிருந்தது, அதனால் வானில் விரிந்த வண்ணங்கள் ஒருவித மாயாஜாலத் தோற்றத்தை அளித்தன. ஆண்கள் அந்த காட்சியை புகைப்படங்களாக பதிவு செய்துக் கொண்டிருந்தபோது, நானும் எனது அம்மாவும் அந்த செப்டம்பர் மாதத்தின் குளிர்ந்த காற்றில் நடுங்கிக்கொண்டே அழகை ரசித்துக் கொண்டிருந்தோம்.
நாங்கள் மீண்டும் வீட்டிற்குள் சென்றபோது, நான் என் அம்மாவைக் கட்டிப்பிடித்தேன். எங்கள் திருமணத்திற்கு முந்தைய கவலைகள் அனைத்தும் அந்த அஸ்தம சூரியனுடன் சேர்ந்து மறைந்துவிட்டது போலத் தோன்றியது.
ஒரு நீண்ட நாளின் முடிவில் ஏற்படும் நிம்மதி உதவியது என்றாலும், சூரிய அஸ்தமனத்தைப் பார்த்ததும் ஒரு முக்கிய பங்கை ஆற்றியிருக்கலாம். உண்மையில், சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் ஆகியவை நம் மூளை மற்றும் மனநலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான சான்றுகள் பெருகி வருகின்றன. இவை பதற்றம் மற்றும் மனச்சோர்வைக் குறைப்பதோடு, நினைவாற்றல், படைப்பாற்றல், தூக்கம் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவுகின்றன.
சூரிய அஸ்தமனம் ஏற்படுத்தும் பிரமிப்பு உணர்வு
சூரிய அஸ்தமனத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, அது மனிதர்களுக்குள் உருவாக்கும் "வியப்பு" உணர்வு ஆகும். இந்த உணர்வு நமது உடல்நலம் மற்றும் மனநலத்தின் பல அம்சங்களில் ஆச்சரியமூட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத, பிரம்மாண்டமான மற்றும் ஆழமான ஒன்றை நாம் காணும்போது ஏற்படும் உணர்வே 'வியப்பு' ஆகும். அது ஒரு கலைப்படைப்பாக இருக்கலாம், ஒரு குழந்தை பிறப்பதைப் பார்ப்பது போன்ற ஒரு மனித சாதனையாக இருக்கலாம் அல்லது இயற்கையின் அதிசயமாக இருக்கலாம். இதை அனுபவிப்பது நம் கண்ணோட்டத்தை மாற்றுகிறது. பெரும்பாலும் கண்ணீர் அல்லது உடல் சிலிர்ப்பு போன்ற உடல்ரீதியான எதிர்வினைகளை இது தூண்டுகிறது.
''வியப்பு உணர்வின் மிகவும் பொதுவான அம்சங்களில் ஒன்று, நாம் மிகவும் சிறியவர்களாக உணர்வதே. நமது தனிப்பட்ட பிரச்னைகள், கவலைகள் மற்றும் வாழ்க்கை, இந்தப் பிரபஞ்சத்தின் பெரிய படத்தில் அவ்வளவு முக்கியமானவை அல்ல என்ற உணர்வு ஏற்படுகிறது. இது மனநலத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், நம்மை மிகவும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் உண்மையில் அவ்வளவு முக்கியமானவை அல்ல என்பதை நாம் உணரத் தொடங்குகிறோம்," என்று அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் பேராசிரியரும், நீண்ட காலமாக வியப்பு உணர்வு குறித்து ஆய்வு செய்து வருபவருமான மிஷெல் ஷியோட்டா கூறுகிறார்.
நமது கவனம் முழுவதும் நம்மைச் சுற்றியே இருப்பது, அதிகமாக சிந்தித்தல் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் எதிர்மறையான சிந்தனைச் சுழற்சிகளில் சிக்கிக்கொள்ளும் நேரங்களில், வியப்பூட்டும் அனுபவங்கள் நமது கவனத்தை ஈர்த்து, அந்தச் சுழற்சியை உடைத்து, தற்போதைய தருணத்திற்குத் திரும்ப உதவுகின்றன.
இந்தப் பார்வை மாற்றம், தன்னார்வப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற சமூகநலச் செயல்பாடுகளையும், வாழ்க்கையில் அதிக நோக்க உணர்வையும் உருவாக்குகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Mark Stetson
வியப்பு உணர்வு ஆன்மிக அனுபவங்கள், உயர்ந்த மனிதப் பண்புகள், அற்புதமான இசை அல்லது கலை வடிவமைப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களால் ஏற்படலாம். இருப்பினும், பெரும்பாலான மக்களுக்கு இயற்கையே இந்த உணர்வை அதிகமாகத் தூண்டுகிறது என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
"அமெரிக்காவில் உள்ள மக்களிடம், அவர்கள் எப்போது வியப்பு உணர்வை மிக அதிகமாக உணர்ந்தார்கள் என்று கேட்டபோது, அவர்களின் பொதுவான பதில் இயற்கை நிகழ்வுகளாகத்தான் இருந்தன. பொதுவாக ஏதோ ஒரு வகையான பரந்துவிரிந்த இயற்கை காட்சி தான் அது" என்று ஷியோட்டா கூறுகிறார்.
2023ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, சூரிய அஸ்தமனங்களும் சூரிய உதயங்களும் இந்த வகையான வியப்பு உணர்வை உருவாக்கும் சிறந்த இயற்கை நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. அந்த ஆய்வில், பல்வேறு இயற்கைச் சூழல்களின் படங்களைக் காட்டி, 2,500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் எதிர்வினைகள் ஆய்வு செய்யப்பட்டன.
''சூரிய அஸ்தமனங்கள் மிகவும் அழகானவை. அழகு பொதுவாக மனிதர்களிடம் வியப்பு உணர்வை ஏற்படுத்துகிறது'' என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் ஆராய்ச்சியாளர் ஜெனிபர் ஸ்டெல்லர் கூறுகிறார். இவர் நேர்மறை உணர்வுகள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
"சூரிய அஸ்தமனத்தின் அழகு நம்மை முழுமையாக அதில் மூழ்கடிக்கும் தன்மை கொண்டது. அது மிகப் பெரிய அளவில் விரிந்து காணப்படுவதுடன், வானம் வழக்கமாகத் தோன்றும் தோற்றத்துடன் ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும்," என அவர் விளக்குகிறார்.
வியப்பு உணர்வை மேலும் வலுப்படுத்துவது
மனநிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனதை ஈர்க்கும் ஒரு சூரிய அஸ்தமனம் நமது மூளையின் செயல்திறனையும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, தகவல்களை நினைவில் வைத்திருக்கும் திறனை அது மேம்படுத்தலாம். தொழில்நுட்பச் சாதனங்களால் கவனம் சிதறும் இன்றைய காலகட்டத்தில் இது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
வியப்பு உணர்வு தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மிஷெல் ஷியோட்டா பங்கேற்பாளர்களை மூன்று படங்களைப் பார்க்கச் செய்தார். அவற்றில் ஒன்று வியப்பூட்டும் அறிவியல் தொடர்பான படம்.
பின்னர் அவர்களுக்கு ஒரு கதை சொல்லப்பட்டது. அதில் உள்ள விவரங்களை உடனடியாக நினைவுகூருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த அறிவியல் படத்தைப் பார்த்தவர்கள், மற்றவர்களைவிட மிகத் துல்லியமாகக் கதையின் விவரங்களை நினைவுகூர்ந்தனர்.
இத்தகைய விளைவை ஏற்படுத்த மூளையில் என்ன நடக்கிறது என்பது இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று ஸ்டெல்லர் கூறுகிறார். வியப்பைத் தூண்டும் விஷயம் மக்களின் கவனத்தை ஈர்த்ததால், அவர்கள் தங்கள் முன்னால் என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
தொடர்ச்சியாக வியப்பு உணர்வை அனுபவிப்பது குறிப்பிடத்தக்க மனநல நன்மைகளை அளிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் எதிர்கொண்ட தீவிரமான மற்றும் நீண்டகால மன அழுத்தத்தைக் குறைக்க, அவ்வப்போது வியப்பு உணர்வை அனுபவிப்பது உதவியதாக ஆய்வு கண்டறிந்தது.

மற்றொரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் முதியவர்கள் குழு ஒன்றை, வாராந்திர குறுகிய நடப்பயிற்சியின் போது, இலையுதிர் கால இலைகளின் பொலிவு முதல் ஒரு குழந்தையின் முகத்தில் இருக்கும் ஆச்சரியமான பார்வை வரை, வியப்பான தருணங்களை அனுபவிக்க முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
எட்டு வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் நடைப்பயிற்சியின் போது என்ன உணர்ந்தார்கள் மற்றும் பார்த்தார்கள் என்பது குறித்த கணக்கெடுப்புக்கான அவர்களின் பதில்கள், வியப்பைத் தேடச் சொல்லாத மற்றுமொரு குழுவை விட, மிகவும் வெளிப்படையான கவனம் கொண்டதாகவும் மற்றும் விளக்கமாகவும் இருந்தன.
இரு குழுவினரையும் செல்ஃபி எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. வியப்பு உணர்வை அனுபவித்த குழுவினரின் புன்னகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. மேலும் வாரங்கள் செல்லச் செல்ல அவர்கள் தங்களின் புகைப்படங்களில் தங்களை சிறியதாகக் காட்டி, தங்களைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
இயற்கை நடைப்பயிற்சியின் போது சூரிய அஸ்தமனத்தையும் காண்பது, வியப்பு உணர்வின் பலனை மேலும் அதிகரிக்கக்கூடும்.
"இயற்கைக்கு தனிப்பட்ட உடல்நல நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக வியப்பை அதிகம் தூண்டும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான சூரிய அஸ்தமனத்திற்கும் தனி நன்மைகள் உள்ளன. எனவே, இயற்கையுடன் தொடர்பில்லாத நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, சூரிய அஸ்தமனங்கள் அதிக நன்மை அளிக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்," என ஜெனிஃபர் ஸ்டெல்லர் கூறுகிறார்.

தினசரி அளவு
சூரிய அஸ்தமனங்கள் நம்பகமான முறையில் வியப்பைத் தூண்டுபவை என்பதால், வியப்பு வழங்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளின் தினசரி அளவை அவை நமக்குத் தரவல்லவை.
வியப்பை அடிக்கடி அனுபவிப்பது பெருமளவிலான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 200 பேரிடம் நடத்திய ஆய்வில், மகிழ்ச்சி மற்றும் வியப்பு போன்ற நேர்மறை உணர்வுகளை அடிக்கடி அனுபவிப்பதாகக் கூறியவர்களுக்கு, உடலில் ஏற்படும் அழற்சியின் குறிகாட்டிகளான சைட்டோகைன்களின் அளவு தொடர்ந்து மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார் ஸ்டெல்லர்.
"நீண்டகால அடிப்படையில் சைட்டோகைன்களின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் அபாயம் அதிகம்" என்று ஸ்டெல்லர் குறிப்பிடுகிறார்.
வியப்பூட்டும் உணர்வு சைட்டோகைன்கள் மீது ஏன் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
"மக்கள் உணரும் பிணைப்பு உணர்வின் காரணமாக இது நிகழலாம். ஏனெனில் சமூக ஆதரவும் பிணைப்பும் அழற்சியைத் தூண்டும் சைட்டோகைன்களைக் குறைக்க உதவும்," என்று ஸ்டெல்லர் கூறுகிறார்.
வியப்பு உணர்வு ஒருவரை அதிக கருணைமிக்கவராகவும் மாற்றக்கூடும். மிகப் பிரம்மாண்டமான ஒன்றின் முன்னால் நாம் சிறியவர்களாக உணரும்போது, அது பிறருக்கு உதவும் மனப்பான்மையைத் தூண்டுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
ஒரு ஆய்வில், பல்கலைக்கழக மாணவர்களின் நடத்தையை ஆய்வாளர்கள் கவனித்தனர். சில மாணவர்கள் பிரம்மாண்டமான யூகலிப்டஸ் மரங்களைப் பார்க்கச் செய்யப்பட்டனர்; மற்றவர்கள் ஒரு கட்டடத்தைப் பார்க்கச் செய்யப்பட்டனர்.
பின்னர், ஆய்வாளர் ஒருவர் வேண்டுமென்றே கையில் இருந்த பல பேனாக்களைக் கீழே சிதறவிட்டார். அப்போது மரங்களைப் பார்த்து வியப்பு உணர்வு ஏற்பட்டதாகக் கூறிய மாணவர்கள், கட்டடத்தைப் பார்த்த மாணவர்களைவிட அதிகமான பேனாக்களை எடுத்துக் கொடுக்க உதவினர்.
அதேபோல், ஒரு சூரிய அஸ்தமனத்தின் அழகால் நீங்கள் வியப்பில் ஆழ்ந்தால், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமோ, அவர்களிடம் அதிக கருணை காட்ட வேண்டும் என்ற உணர்வோ உங்களிடம் உருவாகலாம்.
எனது திருமணத்திற்கு முந்தைய இரவில் இதை நான் உணர்ந்தேன். நாங்கள் சூரிய அஸ்தமனத்தை ரசித்த பிறகு, முந்தைய நாளை விட நான் பல வேலைகளைத் தானாக முன்வந்து செய்யத் தொடங்கினேன். அது, நான் மணமேடைக்குச் செல்லும்போது அதிக அமைதியாக இருக்க எனக்கு உதவியது.

பட மூலாதாரம், Getty Images
சிறந்த இரவுத் தூக்கம்
அன்று மாலை நான் மிகவும் அமைதியாக உணர்ந்ததற்கு, சூரியனின் தினசரி சுழற்சி நமது உடலின் சர்க்காடியன் ரிதத்தை ஒழுங்குபடுத்தும் விதமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இயற்கையான சூரிய ஒளியின் மாற்றங்களை அனுபவிப்பது, நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் நிகழும் நமது இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சியான சர்க்காடியன் ரிதத்தை ஒழுங்குபடுத்த உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் மூலம் தூக்கத்தின் தரமும் மேம்படுகிறது.
சர்க்காடியன் ரிதம் இயற்கைச் சூழலுடன் ஒத்திசைவாக இருக்கும்போது, மூளையில் உள்ள பீனியல் சுரப்பி உடலை ஓய்வுக்குத் தயார்படுத்த தேவையான அளவு மெலட்டோனின் என்ற ஹார்மோனை எப்போது, எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்கிறது.
மாலை நேரத்தின் பரவலான மென்மையான ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. அது உடலுக்கு ஓய்வுக்குத் தயாராகத் தொடங்க வேண்டும் என்ற இயற்கையான சமிக்ஞையை வழங்குகிறது.
பகல் நேரத்தின் நீல நிற ஒளி நம்மை சுறுசுறுப்பாக வைத்திருப்பதைப் போலவே, சூரிய அஸ்தமனத்தின் மென்மையான சிவப்பு மற்றும் தங்க நிற ஒளி பாராசிம்பத்தடிக் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதனால் மனஅழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு குறைந்து, நிம்மதியான தூக்கத்திற்கு உடல் தயாராகிறது.
இதற்கு மாறாக, இரவு நேரத்தில் செயற்கை விளக்குகளின் ஒளி இந்த இயற்கைச் சமிக்ஞைகளைப் பாதிக்கிறது. இதனால் தூக்கத்தின் தரம் குறைவதுடன், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
"சர்க்காடியன் ரிதம் பாதிக்கப்படுவது, மனச்சோர்வு மற்றும் கவலைகளின் அபாயத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையது" என்று நியூயார்க்கில் உள்ள ஐகான் மருத்துவப் பள்ளியின் ஒளி மற்றும் சுகாதார ஆராய்ச்சி பேராசிரியரான மரியானா ஃபிகேரோ கூறுகிறார்.

பட மூலாதாரம், Mark Stetson
நமது சர்க்காடியன் ரிதம் , உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோனின் சுழற்சியையும் கட்டுப்படுத்துகிறது.
சீரான முறையில் இயங்கும் ஓர் உடலில், நாம் தூங்கி எழுந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு கார்டிசோல் அளவு அதிகரித்து, அன்றைய நாளுக்கான ஆற்றலை நமக்கு வழங்குகிறது, பின்னர் அந்த நாள் முடிந்து இரவு நெருங்கும்போது அது மெதுவாகக் குறைகிறது.
ஆனால், சூரியன் மறைந்த பிறகும் செயற்கை ஒளி, குறிப்பாகத் திரைகளில் இருந்து வெளிவரும் நீல நிற ஒளியை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளும்போது, கார்டிசோலை உற்பத்தி செய்யும் அமைப்பை ஏமாற்றி, நமக்குத் தேவைப்படாத நேரத்தில் அதை அதிகமாக உற்பத்தி செய்ய வைக்கிறது.
கார்டிசோல் அளவு தொடர்ந்து அதிக அளவு இருப்பது மனச்சோர்வு, கவலை, அறிவாற்றல் குறைபாடு மற்றும் இருதய பாதிப்பு உள்ளிட்ட பல ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இருப்பினும், நம்மைச் சுற்றியுள்ள ஒளி மற்றும் இருளின் சமநிலையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இதைச் சரிசெய்ய முடியும் என்று ஃபிகேரோ கூறுகிறார்.
இதனால்தான் விஞ்ஞானிகள், நாம் "சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டையுமே பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். அவை ஒரு புத்தகத்தின் இரு முனைகளைப் போல செயல்படுகின்றன" என்ற கருதுகோளை முன்வைக்கின்றனர் என்பதில் வியப்பில்லை என்கிறார் அவர்.
ஒருவரின் வாழ்க்கை முறை காரணமாக சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் நேரில் காண முடியாவிட்டாலும், அதற்கான மாற்று வழியையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். 2024ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் மென்மையான நிறங்களைப் பிரதிபலிக்கும் எல்இடி விளக்கு, மனிதர்களின் சர்க்காடியன் ரிதத்தை ஒழுங்குபடுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது.
எனது திருமணத்திற்கு முந்தைய நாள் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்த பிறகு எனக்கு அவ்வளவு நன்றாகத் தூக்கம் வரவில்லை, ஆனால் அடுத்த நாள் நடக்கவிருந்த பெரிய நிகழ்வை நினைக்கும் போது அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்த இலையுதிர் காலத்தில் எனது கணவருக்கும் எனக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இப்போது எங்களால் முடிந்த போதெல்லாம் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறோம்.
நாங்கள் பார்த்தவற்றில் மிகச் சிறந்தவை இன்னும் கேப் காட் பகுதியில் தான் உள்ளன, எங்களது திருமண நாளன்று நாங்கள் அங்கே இருப்போம், அங்குள்ள ஒரு வீட்டின் தளத்திலிருந்து அதை மீண்டும் மகிழ்ச்சியுடன் ரசிப்போம் என்று நம்புகிறேன்.
சூரிய அஸ்தமனம் குறித்த இந்த அறிவியல் ஆய்வுகளின்படி பார்த்தால், அவை நான் நினைத்ததை விட நமது உடலுக்கும் மனதிற்கும் மிக அதிக நன்மைகளைச் செய்து கொண்டிருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


























