இந்தியா: இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் - பிபிசி புலனாய்வு

இந்தியா, இன்ஸ்டாகிராம், பிபிசி புலனாய்வு
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை குறித்த விவரணைகள் உள்ளன

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருவதாக 'பிபிசி ஐ' புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

"பாலியல் வன்கொடுமை வீடியோ" மற்றும் "குழந்தைகள் வீடியோ" போன்ற சொற்களைப் பயன்படுத்தும் இந்த விளம்பரங்கள், டெலிகிராம் மெசேஜிங் செயலியில் உள்ள சேனல்களுக்குப் பயனர்களை அழைத்துச் செல்கின்றன. அங்கு 99 ரூபாய் (சுமார் $1) போன்ற குறைந்த விலையில் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை பெற முடியும்.

பயனர்களால் உருவாக்கப்படும் சாதாரணமான பதிவுகளைப் போலல்லாமல், இன்ஸ்டாகிராமில் உள்ள விளம்பரங்கள் அதன் தணிக்கை தொழில்நுட்பத்தால் முதலில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தளத்தில் வெளியிடப்படுகின்றன.

இந்த விளம்பரங்களில் ஒன்றைப் பற்றி இன்ஸ்டாகிராமிடம் பிபிசி புகார் அளித்தது. அதற்கு 24 மணி நேரத்திற்குப் பிறகு "இந்த விளம்பரம் தங்களின் விதிமுறைகளை மீறவில்லை" என்று இன்ஸ்டாகிராம் பதிலளித்துள்ளது.

பின்னர், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் பிபிசி விளக்கம் கேட்டபோது, அது ஏற்கனவே பல விளம்பரங்களை முடக்கிவிட்டதாகவும், அவற்றை வெளியிட்ட கணக்குகளை இடைநீக்கம் செய்துவிட்டதாகவும் பிற உள்ளடக்கங்களுக்கான இணைய முகவரிகளை (URLs) தடுத்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026-ஆம் ஆண்டில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான 2,74,000-க்கும் மேற்பட்ட குழுக்களையும் சேனல்களையும் அகற்றியுள்ளதாக டெலிகிராம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பயனர்கள் தேடவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராம் தளம் பாலியல் குறிப்புகள் கொண்ட உள்ளடக்கங்களை முன்னிறுத்துவதை நாங்கள் கவனித்த பிறகு, பிபிசி வேறொரு பெயரில் ஒரு கணக்கை இன்ஸ்டாகிராமில் உருவாக்கியது.

இதில், கவர்ச்சியான ஆடைகளை அணிந்து, தங்கள் பதிவுகளில் பாலியல் ரீதியான மறைமுகக் குறிப்புகளைப் பயன்படுத்தும் பெண்கள் இந்தியாவில் உணவு, வானிலை மற்றும் அன்றாட வாழ்க்கை குறித்து பதிவிட்டிருந்தனர்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மாற்றுப் பெயர்க் கணக்கு, தளத்தில் உள்ள பாலியல் ரீதியான உள்ளடக்கத்தை ஆராய்வதற்காக, இந்தப் பெண்களையும் மற்றும் அவர்களைப் போன்ற மற்ற 10 பேரையும் பின்தொடரத் தொடங்கியது.

ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில், இன்ஸ்டாகிராம் அந்தப் பக்கத்தில் (feed) விளம்பரங்களைக் காட்டத் தொடங்கியது. வீடியோ அழைப்புகளை வழங்கும் பெண்களைக் காட்டும் விளம்பரங்களையும், ஜோடிகள் நிர்வாணமாக உடலுறவு கொள்வது போன்ற தெளிவான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

சில நாட்களுக்குப் பிறகு, பாலியல் குறிப்புகள் இடம்பெறும் சூழ்நிலைகளில் பெரியவர்களுடன் குழந்தைகள் இருக்கும் விளம்பரங்களையும், டெலிகிராம் சேனல்களுக்கான இணைப்புகளையும் அது காட்டத் தொடங்கியது.

இந்தியா, இன்ஸ்டாகிராம், பிபிசி புலனாய்வு
படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகுர், "குற்றச் செயல் ஒன்றில் பங்கேற்பதன் மூலம் இன்ஸ்டாகிராம் பணம் சம்பாதிப்பது" குறித்துத் தான் கவலை கொண்டிருப்பதாகக் கூறினார்.

மொத்தத்தில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் சுமார் 30 தனித்துவமான விளம்பரங்கள் தோன்றின; இவற்றில் சில விளம்பரங்கள் பல கணக்குகளால் பகிரப்பட்டிருந்தன.

அந்தப் போலி கணக்கிற்கு பெரியவர்களுக்கான ஆபாசப் படங்கள் அடங்கிய சுமார் 20 விளம்பரங்களும் காட்டப்பட்டன.

இந்தியாவில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைப் பொருட்கள் மற்றும் பெரியவர்களுக்கான ஆபாசப் படங்கள் ஆகிய இரண்டையும் விநியோகிப்பது குற்றவியல் குற்றங்களாகும். அதே நேரத்தில், விளம்பரங்களில் பெரியவர்களின் நிர்வாணம், பிறப்புறுப்புகள் அல்லது குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டும் அல்லது ஆபத்தில் ஆழ்த்தும் உள்ளடக்கங்கள் இருக்கக்கூடாது என்று மெட்டா நிறுவனத்தின் கொள்கை கூறுகிறது.

பிபிசி இந்த விளம்பரங்கள் மற்றும் டெலிகிராம் சேனல்கள் அனைத்தையும் இந்திய அதிகாரிகளிடம் புகாராக அளித்துள்ளது. ஒரு விளம்பரத்தில், சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் சிறுமியும் பாலியல் செயலில் ஈடுபடுவது போன்ற காட்சி காட்டப்பட்டது.

மற்றொரு விளம்பரத்தில், ஒருவர் ஒரு சிறுமியின் தோளில் கையைப் போட்டிருப்பது போன்ற காட்சி இருந்தது. அதில், அவனுக்கு வயது 52 என்றும், அந்தச் சிறுமிக்கு வயது 12 என்றும் எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன், "மேலும் பார்க்க கிளிக் செய்யவும்" என்று குறிப்பிட்டு, ஒரு டெலிகிராம் சேனலுக்கான இணைப்பும் அதில் இடம்பெற்றிருந்தது.

ஒரு சின்னஞ்சிறு பெண் கண்ணீருடன் இருக்கும் விளம்பரம் ஒன்றை இன்ஸ்டாகிராமிற்கு பிபிசி புகாராக அனுப்பியது. அந்தச் சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதைக் குறிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

ஆனால் பிபிசியின் புகாருக்கு 24 மணி நேரத்திற்குப் பிறகு பதிலளித்த இன்ஸ்டாகிராம், "இந்த விளம்பரதாரரின் விளம்பரம் எங்களது சமூகத் தரநிலைகளுக்கு எதிராகச் செல்லவில்லை என எங்களது மறுஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது" எனக் கூறி, அந்த விளம்பரத்தை நீக்க மறுத்துவிட்டது.

"எந்த அமைப்பும் முழுமையானது அல்ல. எங்கள் மறுஆய்வு செயல்முறை அனைத்து கொள்கை மீறல்களையும் கண்டறியாமல் போகலாம்" என்று மெட்டா பின்னர் பிபிசியிடம் கூறியது.

"விளம்பரங்கள் நேரலையில் வந்தவுடன், அவற்றை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை நாங்கள் தொடர்ந்து இயக்குகிறோம், எங்கள் விதிகளை மீறுவதாக நினைக்கும் எந்தவொரு விளம்பரத்தையும் யார் வேண்டுமானாலும் எங்களிடம் புகாரளிக்கலாம்" என்று மெட்டா கூறியது.

குழந்தைகள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து வெளிப்படையாக தெரியவரும்போது, சட்டத்திற்கு இணங்க, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு (NCMEC) அது புகாரளிப்பதாகவும் அது கூறியது. என்சிஎம்இசி என்பது குழந்தைகளின் இணையவழி பாலியல் சுரண்டலுக்கான மையப்படுத்தப்பட்ட உலகளாவிய புகாரளிப்பு அமைப்பாகும்.

குழந்தை பாலியல் துஷ்பிரயோக வீடியோக்களை விற்பனை செய்த இரண்டு சேனல்களை டெலிகிராமிடம் நாங்கள் புகாரளித்தோம்.

அவற்றில் ஒன்று பின்னர் அகற்றப்பட்டு, "இந்தக் குழு டெலிகிராமின் சேவை விதிமுறைகளை மீறியதால் காட்டப்பட முடியாது" என்ற செய்தியுடன் மாற்றப்பட்டது, ஆனால் மற்றொன்று விற்பனைக்கான புதிய வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டது.

குற்றவியல் உள்ளடக்கத்தைப் பகிர்வதைத் தடுக்க இந்தத் தளம் போதுமான அளவு செயல்படவில்லை என்று விமர்சகர்கள் இதற்கு முன்னரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

துபையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெலிகிராம் நிறுவனம், என்சிஎம்இசி அல்லது இன்டர்நெட் வாட்ச் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக இல்லை. இந்த இரு அமைப்புகளும் இத்தகைய தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்களை கண்டறிந்து, புகாரளித்து, நீக்குவதற்காகப் பெரும்பாலான இணையத் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

தங்களின் செயலியிலிருந்து குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளடக்கங்களை முழுமையாக ஒழிப்பதற்காக, தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் மனிதவள தணிக்கை ஆகிய இரண்டையுமே பயன்படுத்துவதாக டெலிகிராம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, "தங்கள் செயலியிலிருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கான உள்ளடக்கங்கள் பொதுவெளியில் பரவுவதை தங்களால் கிட்டத்தட்ட முழுமையாக ஒழிக்க முடிந்துள்ளதாக" டெலிகிராம் கூறுகிறது.

இந்தியா, இன்ஸ்டாகிராம், பிபிசி புலனாய்வு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மெட்டா நிறுவனத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக விளம்பரங்கள் உள்ளன. 2025 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஈட்டப்பட்ட 200 பில்லியன் டாலர் ($200 பில்லியன்) வருவாயில், கிட்டத்தட்ட 98% விளம்பரங்கள் மூலமே கிடைத்துள்ளதாக ஜனவரி மாதத்தில் அந்த நிறுவனம் தெரிவித்தது. இன்ஸ்டாகிராமின் வருவாயில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக விளம்பரங்கள் மூலமே கிடைப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

சாதாரணப் பதிவுகள் எந்தவொரு பரிசோதனையும் இன்றி தானாகவே பதிவேற்றப்படும் வேளையில், தங்களின் தளங்களில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு விளம்பரமும் மறுஆய்வு செய்யப்படுவதாக மெட்டா நிறுவனம் கூறுகிறது.

அதன் ஆய்வு முறை முக்கியமாக தானியங்கி தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளது; இது படங்கள், காணொளிகள், உரை மற்றும் ஒலி ஆகியவற்றை சோதிப்பதோடு, அந்த விளம்பரம் யாரை இலக்காகக் கொண்டுள்ளது மற்றும் அதிலுள்ள இணைப்புகள் பயனர்களை எங்கு அழைத்துச் செல்கின்றன என்பதையும் சரிபார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது, விளம்பரங்களை நிராகரிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ செய்கிறது; ஏதேனும் சந்தேகம் எழும்போது மட்டும் அந்த விவகாரங்களை மனிதர்களின் மறுஆய்வுக்கு அனுப்பி வைக்கிறது.

மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், தாங்கள் வெளிநிறுவன மனித தணிக்கையாளர்களை சார்ந்திருப்பதை குறைத்து வருவதாகவும், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தது. "தொழில்நுட்ப வல்லுநர்கள் எங்களது ஏஐ அமைப்புகளை வடிவமைத்து, பயிற்றுவித்து, கண்காணித்து, மதிப்பீடு செய்வார்கள்" என்றும் அது குறிப்பிட்டது.

நாங்கள் பார்த்த விளம்பரங்கள் குறித்த விவரங்களை இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் லோகுரிடம் பிபிசி விவரித்தது. இன்ஸ்டாகிராம் "குற்றச் செயல் ஒன்றில் பங்கேற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறது" என்பது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

"இந்திய உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்டு, ஏதேனும் ஒரு சமூக ஊடகத் தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்துவதற்கு இது போதுமான அளவு தீவிரமான ஒரு பிரச்னையாகும்" என்று அவர் கூறுகிறார்.

பயனர்களால் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்களுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்பேற்பதிலிருந்து இந்தியச் சட்டம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்த போதிலும், "அந்தத் தளம் தன் பொறுப்பிலிருந்து எந்த வகையிலும், எந்த வகையிலும் தப்பித்துவிட முடியாது" என்று நீதிபதி லோகுர் மேலும் கூறினார்.

இந்தியா, இன்ஸ்டாகிராம், பிபிசி புலனாய்வு
படக்குறிப்பு, ஃபேஸ்புக்கின் துணைத் தலைவராகப் பணியாற்றிய பிரையன் போலண்ட், பயனர்களைத் தளத்திலேயே தக்கவைத்துக் கொள்ளும் வகையில், "மிகவும் தீவிரமான மற்றும் அதிக ஈர்ப்பூட்டக்கூடிய" விஷயங்களைக் காட்டும் வகையில் இன்ஸ்டாகிராமின் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டதாகக் கூறினார்.

2021-இல் பெயர் மாற்றப்படுவதற்கு முன்பு 'ஃபேஸ்புக்' என்று அறியப்பட்ட மெட்டா நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஒருவர், பிபிசியின் இந்த கண்டுபிடிப்புகளால் "அதிர்ச்சியடைந்தேன். அதேநேரத்தில், இது ஆச்சர்யம் அளிக்கவில்லை" என்று கூறினார்.

2009 முதல் 2020 வரை இந்த நிறுவனத்தில் பணியாற்றி, அதன் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் வணிகத்தை உருவாக்க உதவிய பிரையன் போலண்ட், "எந்த இடத்திலும் பயனர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை" என நம்பியதாலேயே நிறுவனத்தை விட்டு தான் வெளியேறியதாகக் கூறினார்.

பயனர்களைத் தளத்திலேயே தக்கவைத்துக் கொள்ளும் வகையில், "மிகவும் தீவிரமான அல்லது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய" விஷயங்களைக் காட்டும் வகையிலேயே இன்ஸ்டாகிராமின் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

"இது 'மக்களை குழந்தைப் பாலியல் குற்றவாளிகளாக மாற்றுவோம்' எனக் கூறும் அல்காரிதம் அல்ல. ஆனால், அவர்கள் பயனர்களை பொறுப்புடன் வழிநடத்தவோ கட்டுப்படுத்தவோ இல்லை; மாறாக வருவாய் மற்றும் 'கிளிக்' ஆகிய இலக்குகளை மட்டுமே வைத்துள்ளது. எனவே, இந்த அமைப்புகளைப் பாதுகாப்பதில் உண்மையான மற்றும் தீவிரமான அக்கறை காட்டாவிட்டால், இத்தகைய விளைவுகள் ஏற்படும்."

2009 மற்றும் 2010-க்கு இடையில் பயனர்களை ஏமாற்றும் விளம்பரங்களை நீக்கும் திட்டத்திற்குத் தான் தலைமை தாங்கியதாக போலண்ட் கூறினார். அதன் அர்த்தம், "பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சிறந்த அனுபவத்திற்காக, அந்த நேரத்தில் நிறுவனத்தின் வருவாயில் ஒரு பெரும் பகுதியை நீக்குவதற்குத் தனக்கு அனுமதி வழங்கப்பட்டது" என்பதாகும்.

"வருவாய் மற்றும் பயனர் அனுபவம் ஆகியவற்றுக்கு இடையிலான சமரசம் என்பது காலப்போக்கில் விவாதத்தின் முக்கியப் பகுதியாக மாறியதுதான் வருத்தத்திற்குரிய மற்றும் துயரமான விஷயம் என்று நான் கருதுகிறேன்."

2025-இல் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கிவிட்டதாகக் கூறும் அவர், "மக்கள் பெருமளவில் 'நான் வெளியேறுகிறேன், எனக்கு இது போதும், இதை விட்டுவிடலாம்' என்று கூறத் தொடங்கினால், அந்நிறுவனம் நிச்சயம் கவனம் செலுத்தும்" என்றும் கூறினார்.

பிபிசிக்கு அனுப்பிய அறிக்கையில் மெட்டா நிறுவனம் "குழந்தைகளைச் சுரண்டுவது ஒரு கொடூரமான குற்றமாகும்; எங்கள் செயலிகளில் அதை எதிர்த்துப் போராட தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்." என்று கூறியிருந்தது.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை, அத்தகைய உள்ளடக்கங்களில் தவறான ஆர்வம் கொண்ட பயனர்களுக்கு மெட்டா நிறுவனம் தெரிந்தே மற்றும் திட்டமிட்டே இலக்கு வைக்கிறது என்று கூறுவது "முற்றிலும் தவறானது" என்று அது கூறியது.

பாதுகாப்பை விட வருவாய்க்கு முன்னுரிமை அளிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்த அந்த நிறுவனம், 2025 ஆம் ஆண்டில் "சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்பட்டதற்கான போதுமான சமிக்ஞைகளை" காட்டிய நாற்பது லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளைத் தாங்களாகவே முடக்கியுள்ளதாகக் கூறியது.

"உறுதியான குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பிக்க முயற்சிக்கும் வேளையில், எங்கள் நிபுணர் குழுக்கள் பாதுகாப்புகளை மேம்படுத்தவும், குற்றவாளிகளை வேரறுக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும், விதிமீறும் இணையதளங்களுக்கான இணைப்புகளைத் தடுக்கவும், பிற நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவர்களுடன் உளவுத் தகவல்களைப் பகிரவும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன" என்று மெட்டா மேலும் கூறியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் நடந்த ஒரு வழக்கில், குழந்தைகளுக்கான தனது தளங்களின் பாதுகாப்பு குறித்து பயனர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மெட்டாவிற்கு எதிராக போலண்ட் சாட்சியமளித்தார்.

இந்த வழக்கில் மெட்டா, நியூ மெக்சிகோ மாகாணத்திற்கு 375 மில்லியன் டாலர் (279 மில்லியன் பவுண்டுகள்) அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, ​​அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், தீர்ப்புடன் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

இந்தியா, இன்ஸ்டாகிராம், பிபிசி புலனாய்வு
படக்குறிப்பு, தெலங்கானாவின் சைபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஷிகா கோயல், மற்ற தளங்களை விட மெட்டாவின் தளங்களிலிருந்தே தங்களுக்கு அதிக எச்சரிக்கைகள் வருவதாகக் கூறுகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக நிறுவனங்கள், தங்கள் தளங்களில் உள்ள குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்களை காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் (NCMEC) 'சைபர் டிப்லைன்' (Cyber ​​Tipline) அமைப்பிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

அந்தத் தகவல் அமைப்பு (tipline), சம்பவம் நடந்ததாகக் கருதப்படும் நாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க முகமைக்கு அந்த அறிக்கையை அனுப்புகிறது.

2025-ஆம் ஆண்டில், இந்தியா 19 லட்சம்அறிக்கைகளைப் பெற்றது; இது 20 லட்சம் அறிக்கைகளைப் பெற்ற அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடமாகும்.

தெலுங்கானா மாநிலத்தின் சைபர் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநரும், இந்தியாவின் முன்னணி சைபர் காவல் அதிகாரிகளில் ஒருவருமான ஷிகா கோயல், மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய தளங்களிலிருந்தே அதிகளவிலான தகவல்கள் (tiplines) பெறப்படுவதாகக் கூறினார்.

"ஆனால், அதற்காக அவைதான் மிகப்பெரியவை என்று அர்த்தமல்ல," என்று அவர் கூறினார்.

"குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்கான சிறந்த அல்காரிதம் (algorithm) அவர்களிடம் இருந்தால், இயல்பாகவே அதிக எச்சரிக்கைகள் உருவாக்கப்படும்."

ஆன்லைன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கான உதவி மையத்தை நடத்தி வரும் மும்பையைச் சேர்ந்த 'ராதி ஃபவுண்டேஷன்' (Rati Foundation) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பெரும்பாலான புகார்கள் மெட்டா தளங்களிலிருந்தே வருவதாகத் தெரிவித்துள்ளது.

தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை நீக்குவதற்கு உதவ அந்நிறுவனம் சமூக ஊடகத் தளங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இருப்பினும், அதன் இணை நிறுவனரும் இயக்குநருமான சித்தார்த் பிள்ளை கூறுகையில், "குற்றவாளிகள் இன்ஸ்டாகிராமிலிருந்து டெலிகிராமிற்கு எளிதாக மாறிச் செல்வதன் மூலம் எங்கள் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முயற்சிகளிலிருந்து தப்பிக்கின்றனர்; நாங்கள் நீக்க உதவிய உள்ளடக்கங்களை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் பெரும்பாலும் மனிதக் கடத்தலில் ஈடுபடும் குற்றக் கும்பல்களால் உருவாக்கப்படுகின்றன என்றும், சில சமயங்களில் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இதற்குப் பொறுப்பாவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்காகச் செயல்படும் 250-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கூட்டமைப்பான 'குழந்தைகளுக்கான நியாயமான உரிமைகள்' (Just Rights for Children) என்ற அமைப்பின் நிறுவனர் புவன் ரிபு, இக்குற்றங்கள் குறித்து போதிய அளவு புகாரளிக்கப்படுவதில்லை என்றும், இதைக் கையாள்வதற்கான தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ளக் காவல்துறை இன்னும் முயற்சித்து வருகிறது என்றும் கூறினார்.

இதை வெற்றிகரமாகச் செய்வதற்கு, சர்வதேச ஒத்துழைப்பும் எல்லைகளைத் தாண்டிய உளவுத் தகவல் பகிர்வும் மிக அவசியம் என்று அவர் கூறினார்.

"திட்டமிட்ட குற்றங்களின் வேர்களைக் கண்டறிய, தேவை மற்றும் விநியோகம் சார்ந்த முழுச் சங்கிலித்தொடரையும் கண்காணிக்க வேண்டியது அவசியம்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு