கேப்வெர்டே: அறிமுக அணியாக வந்து பெரிய அணிகளை பதறச் செய்த குட்டி நாடு

கேப் வெர்டே அணி, உலக கோப்பை கால்பந்து தொடர்

பட மூலாதாரம், Charlotte Wilson/Getty Images

படக்குறிப்பு, கேப் வெர்டே அணியின் குழு புகைப்படம்
    • எழுதியவர், சார்லட் கோட்ஸ்
    • பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
    • எழுதியவர், எலிசபெத் கான்வே
    • பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர், மியாமியில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கேப் வெர்டே இந்த உலக கோப்பையில் பங்கேற்ற மிகச் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர்.

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எர்லிங் ஹாலான்ட் மற்றும் ஹேரி கேன் ஆகிய நட்சத்திர வீரர்களின் பெயர்களை மறந்துவிடுங்கள். இந்தத் தொடரில் முதல்முறையாக விளையாடிய கேப் வெர்டே அணி தான் ரசிகர்களின் முழு கவனத்தையும் பெற்று வருகிறது.

ஸ்பெயினுக்கு எதிராக முதல் உலக கோப்பை புள்ளியைப் பெற்றபோது கோல்கீப்பர் வொசினியா சாகசம் புரிந்திருந்தார். உருகுவே அணிக்கு எதிராக உலக கோப்பையில் முதல் கோலை அடித்தபோதும் ஆட்டம் பரவசமூட்டும் நிலையில் இருந்தது.

அதேபோல அர்ஜென்டினா அணிக்கு கேப் வெர்டே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தபோது சிட்னி லோபஸ் கப்ரலின் அதிசய கோல் முக்கியப் பங்கு வகித்தது. இந்த உலக கோப்பைத் தொடரில் கேப் வெர்டேவின் பயணம் கிட்டத்தட்ட அனைத்தையும் பார்த்துவிட்டது.

மயாமியில் நடைபெற்ற இந்த நாக்அவுட் போட்டியில் எக்ஸ்ட்ரா டைம் முடிவுக்கு வந்து விசில் அடிக்கப்பட்டபோது ப்ளூ ஷார்க்ஸ் வீரர்கள் மைதானத்திலேயே சரிந்து அமர்ந்தனர். நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவிடம் 3 - 2 என்கிற கணக்கில் தோல்வியடைந்த பிறகு கேப் வெர்டே அணியினர் மனமுடைந்து போயினர். ஆனால் பலரின் மனதையும் வென்ற திருப்தியுடன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்.

"கேப் வெர்டே தோற்றிருக்கலாம், ஆனால் அவர்கள் வென்றுவிட்டார்கள்," என ஸ்காட்லாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் மெக்ஃபேடன் பிபிசி ரேடியோ 5 நேரலையில் கூறினார்.

"அவர்கள் தைரியம், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தாங்கள் யார், தங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் காண்பித்துள்ளனர். இந்தத் தொடரின் கதை நாயகனாக கேப் வெர்டே திகழ்கிறது. ஒரு கால்பந்து அணியில் நீங்கள் பார்க்க விரும்புவது இதைத்தான்," என்று அவர் தெரிவித்தார்.

கேப் வெர்டே அணி, உலக கோப்பை கால்பந்து தொடர்

பட மூலாதாரம், Ezra Shaw - FIFA/FIFA via Getty Images

படக்குறிப்பு, ஒரு கட்டத்தில் கேப் வெர்டே அணி மீண்டும் பின்னுக்குச் சென்றாலும் கப்ரால் அடித்த அசாத்தியமான கோலால் மீண்டும் சமன் செய்தனர்.

இந்தத் தொடரில் நுழைந்தபோது சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 67வது இடத்தில் கேப் வெர்டே இருந்தது. உலக கோப்பையின் குரூப் சுற்றில் மூன்று போட்டிகளையும் அந்த அணி டிரா செய்தது. ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினை தங்களது தொடக்க ஆட்டத்தில் 0 - 0 என்கிற கணக்கில் அவர்கள் கட்டுப்படுத்தினர். இந்த ஆட்டம் தான் உலக கோப்பை இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக இருந்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸியின் கோலால் பின்னுக்குச் சென்ற அவர்கள் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்து கூடுதல் நேரம் வரை எடுத்துச் சென்றனர்.

ஒரு கட்டத்தில் மீண்டும் பின்தங்கினாலும் கப்ரால் அடித்த அசாத்தியமான கோலால் மீண்டும் சமன் செய்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் அடித்த பந்து டைனி போர்க்ஸ் மீது பட்டு சுய கோலாக மாறவே அர்ஜென்டினா நூலிழையில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் கேரி நெவில் ஐடிவியில் பேசுகையில், "அதிகம் எதிர்பார்க்கப்படாத ஓர் அணியிடமிருந்து இதுவரை நான் பார்த்த சிறப்பான ஆட்டம் இது தான்." என்றார்.

மேலும் அவர், "அவர்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதால் கண்ணீரில் இருக்கிறார்கள். அவர்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவர்களின் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருக்க விரும்புகின்றனர். அவர்களுக்கு இங்கேயே எப்போதும் இருக்க வேண்டும். இவர்களில் சில வீரர்களுக்கு இந்தத் தருணம் திரும்பவும் அமையாது. இது மாயாஜாலமானதாக இருந்தாலும் ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்தது." என்றார்.

கேப் வெர்டே அணி, உலக கோப்பை கால்பந்து தொடர்

பட மூலாதாரம், Michael Reaves/Getty Images

'வரைபடத்தில் கேப் வெர்டே எங்கே என இனி யாரும் கேட்க மாட்டார்கள்'

கேப் வெர்டே அணி தோல்வியடைந்திருந்தாலும் அர்ஜென்டினா அணியை கூடுதல் நேரம் அழைத்துச் சென்றதை நினைத்து அந்த அணியின் மேலாளர் புபிஸ்டா பெருமிதத்துடன் உணர்ச்சிவயப்பட்டார்.

"நாங்கள் சிறிய நாடாக இருந்தாலும் உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக எங்களால் விளையாட முடியும் என்பதைக் காண்பித்துள்ளோம். அது பெருமை கொள்வதற்கான ஒரு காரணம்," என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் நாட்டிற்காக வரலாறு படைத்துள்ளோம். எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக அவர்கள் பெருமை கொள்ளலாம். உலக சாம்பியன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்ட விதத்தில் விளையாடி இரண்டு முறை டிரா செய்வது மிகவும் தனித்துவமான ஒன்று." என்று தெரிவித்தார்.

கேப் வெர்டே அணி, உலக கோப்பை கால்பந்து தொடர்

பட மூலாதாரம், ROBERTO SCHMIDT / AFP via Getty Images

ஹேம்ராக் ரோவர்ஸ் கிளப்பின் வீரரும் கேப் வெர்டே அணிக்காக இந்த உலக கோப்பை தொடரில் நான்கு போட்டிகளிலும் விளையாடியவருமான பிகோ லோபஸ் பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசுகையில், "இந்த உலக கோப்பையில் நடந்த சிறப்பான விஷயம் என்னவென்றால் வரைபடத்தில் கேப் வெர்டே எங்கு இருக்கிறது என இனி யாரும் கேட்க மாட்டார்கள். அதுவே எங்களுக்கு வரலாறு தான். நாங்கள் எங்களை ஒரு முக்கிய இடத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளோம்." எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "நாங்கள் ஒரு சிறிய நாடு தான். ஆனால் பெரிய மனதுடன் நீங்கள் நம்பினால் உங்களால் சாதிக்க முடியும் என்பதைச் சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளோம்." என்றார்

உலகக்கோப்பை 48 அணிகள் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக விவாதப் பொருளாக இருந்தது. ஆனால் தான் மீண்டும் "சந்தேகம் கொண்டவராக இருக்க மாட்டேன்" என்கிறார் நெவில்.

கேப் வெர்டே அணி, உலக கோப்பை கால்பந்து தொடர்

பட மூலாதாரம், Megan Briggs/Getty Images

இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரரான இயன் ரைட் ஐடிவியில் பேசுகையில், மேலும் பல கேப் வெர்டே தருணங்களை உருவாக்க உதவுமாறு ஃபிஃபாவைக் கேட்டுக்கொண்டார்.

"உலகம் முழுவதும் அது தான் நடக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அதனால் தான் ஃபிஃபா தனக்கு கிடைக்கின்ற நிதி அனைவரையும் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்," என்றார் ரைட்.

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் மக்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அவர்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் மிகப்பெரிய அரங்கிற்குள் நுழைந்து உலக சாம்பியனுடனும் உலகின் தலைசிறந்த வீரர் ஒருவருடனும் போட்டியிட முடியும் என்பதையே இது உணர்த்துகிறது. அவர்களுக்கு இது நிச்சயம் ஓர் இமாலய முயற்சி." என்றும் தெரிவித்தார்.

வொசினியா எங்கே இருந்தார்?

கேப் வெர்டே அணி, உலக கோப்பை கால்பந்து தொடர்

பட மூலாதாரம், Torbjorn Tande/DeFodi Images/DeFodi via Getty Images

படக்குறிப்பு, மயாமியில் நடந்த போட்டியில் 8 கோல் வாய்ப்புகளைத் தடுத்தார் வொசினியா

தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடிய பிறகு வொசினியா கண்ணீருடனும் கேப் வெர்டே அணியின் கொடியை ஏந்தியவாறும் இருந்த புகைப்படம் உலகம் முழுவதும் பரவி விரைவாக அவரை ஒரு மக்கள் நாயகனாக மாற்றியது.

ஆனால் அவரது பிரபலத்திற்கான காரணம் அந்த புகைப்படமோ அல்லது அவரின் உணர்ச்சிகளோ மட்டுமல்ல. அவர் விளையாடும் விதம்தான் அவரை ஒரு சூப்பர்ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது.

40 வயதான வொசினியா, போர்ச்சுகலின் இரண்டாம் டிவிஷன் அணியான சாவேஸ் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு அவருக்கு எந்த கிளப்புடனும் ஒப்பந்தம் இல்லை.

ஆனால் அவர் நீண்ட காலம் கிளப் இல்லாமல் இருக்க மாட்டார் என நெவில் கூறுகிறார்.

"இந்தத் தொடருக்குப் பிறகு அவருக்கு ஒரு சிறந்த கிளப் கிடைக்கும்," என்று ஐடிவியில் பேசுகிறபோது நெவில் கூறினார்.

இவரின் ஆட்டம் பற்றி பேசிய ரைட், "என்ன ஒரு உலகக்கோப்பை. அவர் செய்கின்ற அனைத்தும் அமைதியானதாகவும் நிதானமானதாகவும் இருக்கிறது. அவர் எங்கு இருந்தார்? அவரை நாம் முன்னரே சந்தித்திருக்க வேண்டும். அர்ஜென்டினாவுக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தைப் பிறகு அவரிடம் 'நட்சத்திர ஆற்றல்' இருக்கிறது." என்று தெரிவித்தார்.

மயாமியில் நடந்த போட்டியில் 8 கோல் வாய்ப்புகளைத் தடுத்த நிலையில், இந்த ஆண்டு உலகக்கோப்பையில் 18 கோல் வாய்ப்புகளைத் தடுத்து வொசினியா மூன்றாவது இடத்தில் உள்ளார். குராசாவோவின் எலாய் ரூம் (20) மற்றும் பராகுவேவின் ஆர்லேண்டோ கில் (19) புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு