கூவம் ஆறு சாக்கடையாக மாறத் தொடங்கியது எப்போது? 60 ஆண்டுகால திட்டங்கள் கைகொடுக்காதது ஏன்?

தமிழ்நாடு பட்ஜெட்: கூவம் ஆறு குழந்தைகள் குளித்து மகிழும் அளவுக்கு தவெக அரசால் சுத்தப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், TN DIPR

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

முன்னொரு காலத்தில் தூய்மையாக இருந்த, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கூவம் ஆறு, திடீரென ஒரு நாள் மாசடைந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது.

பாசனம், வீட்டு உபயோகம் ஆகியவற்றுக்குத் தேவையான தண்ணீரை கூவம் ஆறு வழங்கிக் கொண்டிருந்தது. அதேநேரம், நகரப் பகுதிகளில் படகுப் போக்குவரத்திலும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.

வரலாற்றுப் பதிவுகளின்படி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கூவத்தில் கப்பல் போக்குவரத்து பெருமளவில் நடந்துள்ளன. இருப்பினும் 1928இல் வெளியிடப்பட்ட ஒரு கவிதை அப்போதே அதில் தெரிந்த அழுக்கு மற்றும் துர்நாற்றம் குறித்துக் குறைகூறுகிறது.

வி.ஹெச். ஷிப்லி, 1928ஆம் ஆண்டில் எழுதிய அந்தக் கவிதை, "குப்பை மற்றும் கழிவுநீரால் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஒரு நதியை நையாண்டித்தனமான புலம்பலாகச் சித்தரித்தது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சென்னையின் நகர்ப்புற நிர்வாக அலட்சியத்தின் ஒரு வெளிப்படையான அடையாளமாக மாறியிருந்ததை" உணர்த்துகிறது.

அந்தக் கவிதையில், "மெட்ராஸின் பல்வேறு பகுதிகளை ஊடுருவிப் பாயும் கூவம், செல்லும் வழியெங்கும் குப்பைகளைச் சுமந்து கொண்டு, தாங்க முடியாத துர்நாற்றத்தைச் சேர்த்துக் கொண்டு, இறுதியில் கடலை அடையும்போது ஒரு 'கழிவுநீர்க் கூளமாக மாறிவிடுவதை" ஷிப்லி விவரித்துள்ளார். குறிப்பாக, "பச்சை நிறத்தில், அருவருப்பாக" கூவம் காணப்படுவதாகக் குறிப்பிடுவதன் மூலம் 1928-ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் நகரத்தின் ஆரோக்கியமற்ற, புறக்கணிக்கப்பட்ட நிலைக்கான குறியீடாக, மாசடைந்த கூவம் நதியை அவர் தனது கவிதை வாயிலாக முன்வைத்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 1997ஆம் ஆண்டு நடந்த சர்வதேச உயிரி-அறிவியல் பயிலரங்கில் ஆய்வாளர்கள், பமீலா சகாயதாஸ் மற்றும் ஜெயபால் அசாரியா சமர்ப்பித்த ஆய்வு முடிவுகள், கூவத்தில் 1949ஆம் ஆண்டில் 49 வகையான நீர்வாழ் உயிரின வகைகளும், 1957-59 காலகட்டத்தில் 30 வகை மீன் இனங்களும், 1975-79 காலகட்டத்தில் 21 வகை மீன்களே காணப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

மேலும், அதன் கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை அமைப்புகள் சென்னை மாநகரின் தொடர் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்கத் தவறியதையும் பிரதிபலிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நாடு பட்ஜெட்: கூவம் ஆறு குழந்தைகள் குளித்து மகிழும் அளவுக்கு தவெக அரசால் சுத்தப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது

இந்த நதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசவரம் அருகே தொடங்கி, மேற்கு மற்றும் மத்திய சென்னை வழியாகப் பாய்ந்து, நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஆற்றின் இயற்கைப் பண்புகளும் இந்த நெருக்கடிக்கு மையமாக உள்ளன. கூவம் நதி பருவகாலமானது, ஆழமற்றது மற்றும் மெதுவாகப் பாயக்கூடியது.

சுற்றுச்சூழல் ஆய்வாளர் மார்ட்டின் பஞ்ச் தலைமையிலான ஓர் ஆய்வு, "மக்கள்தொகை வளர்ச்சி, கட்டுப்பாடற்ற வளர்ச்சி, நிறுவன மோதல்கள், சமதள நிலப்பரப்பு, ஓதங்களின் தாக்கம், ஆற்று முகத்துவாரம் அடைபடுதல் மற்றும் பருவமழை வெள்ளப்பெருக்கு ஆகியவற்றை ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்னைகளாக" அடையாளம் கண்டது.

கூவம் கழிவுக் கூளமாக மாறியது எப்படி?

கூவம் நதியில் தொடர்ந்து கலக்கப்பட்டுக் கொண்டிருந்த திட மற்றும் திரவ கழிவுகளால் அதன் மாசுபாடு ஆண்டுதோறும் தீவிரமாகிக் கொண்டே வந்தது.

நீரியல் ஆய்வாளர் எஸ். ஜனகராஜன் நதியின் இந்த நிலையை, "கொள்கைத் தோல்வி" என்று விவரிக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு, ஒருங்கிணைந்த கூவம் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், அதன் வழித்தடத்தில் சுமார் 118 இடங்களில் கழிவுகள் ஆற்றுக்குள் திறந்துவிடப்படுவதை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டறிந்தது.

"ஆற்றில் கழிவுநீர் திறந்துவிடப்படும் இடங்களை அடைக்காமல், ஆற்றைச் சுத்தப்படுவதில் மட்டுமே அரசுகள் கவனத்தைச் செலுத்துவது பணத்தை வீணடிக்கும் செயல்" என்று குறிப்பிடுகிறார் ஜனகராஜன்.

தமிழ்நாடு பட்ஜெட்: கூவம் ஆறு குழந்தைகள் குளித்து மகிழும் அளவுக்கு தவெக அரசால் சுத்தப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவரது கூற்றுப்படி, நாள்தோறும் தொடர்ந்து நதியில் கழிவுகள் கலப்பதை, வெறுமனே தூர்வாருவது, வேலி அமைப்பது மற்றும் அழகுபடுத்துவதால் மட்டுமே தடுத்து, கூவத்தை மீட்டெடுத்துவிட முடியாது.

அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய மூத்த மீனவரான பாளையம், "திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கூவம் என்ற ஊருக்கு அருகே இதன் பிறப்பிடம் இருப்பதால் கூவம் ஆறு என்று அழைக்கப்படத் தொடங்கியது. இந்த நதி, அளவிட முடியாத எண்ணிக்கையில் இறால் கிடைக்கும் சொர்க்கமாக உள்நாட்டு மீனவர்களுக்கு இருந்து வந்தது. இறால் மட்டுமின்றி மடவு, சாலா, குள்ளக்கெண்டை, முரண் கெண்டை போன்ற மீன்களும் முகத்துவாரப் பகுதியில் மீனவர்களுக்கு அதிகமாகக் கிடைத்து வந்தது. அவ்வளவு ஆரோக்கியமான, எங்களைப் போன்ற மீனவ மக்களின் வாழ்வாதாரத்தின் அஸ்திவாரமாக இருந்த ஆறுதான் இன்று மாநகரின் சாக்கடையாக மாறி நிற்கிறது," என்று விளக்கினார்.

அவரைப் பொறுத்தவரை, 'கூவம், அடையாறு ஆகிய சென்னையின் ஊடாகப் பாயும் நதிகளை மீட்டெடுக்கிறோம்' என்ற பெயரில் பல கோடிகள் செலவழிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கான பயன்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.

60 ஆண்டுகளில் நடந்த கூவம் மீட்டெடுப்பு திட்டங்கள்

சுதந்திர இந்தியாவில், கூவத்தை மீட்டெடுப்பதற்கென மேற்கொள்ளப்பட்ட முதல் பெரியளவிலான திட்டங்களுள் ஒன்று, 1967ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரையால் தொடங்கி வைக்கப்பட்டது.

அவர் தலைமையிலான திமுக அரசின் கூவம் மேம்பாட்டுத் திட்டம் 1967ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1970களின் தொடக்கம் வரை செயல்படுத்தப்பட்டது. இதில், நதியில் திறந்துவிடப்படும் கழிவுநீரை திசைமாற்றுவது, கரைகளைப் பலப்படுத்துவது, முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் குவிந்துவிடாதபடி பராமரிக்கும் மணல் அகற்றும் உறிஞ்சும் இயந்திரம், நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகளை அமைத்தல் ஆகியவை திட்டமிடப்பட்டிருந்தன.

தமிழ்நாடு பட்ஜெட்: கூவம் ஆறு குழந்தைகள் குளித்து மகிழும் அளவுக்கு தவெக அரசால் சுத்தப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், TN DIPR

இதற்காக 1.9 கோடி ரூபாய் முதல் 2.29 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக பழைய மதிப்பீடுகள் கூறுவதாக, மெட்ராஸ் மியூசிங்கில் வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி கூவம் ஆற்றில் பொழுதுபோக்கு படகு சேவையைத் தொடங்கி வைத்தார். ஆனால் வரலாற்றாசிரியர் வி. ஸ்ரீராம் மெட்ராஸ் மியூசிங்கில் எழுதியுள்ள கட்டுரைப்படி, ஆற்றின் நிலைமை முன்னேறி வருவதற்கான ஒரு சான்றாக அந்தப் படகுத் துறையும் அதன் செயல்பாடுகளும் அப்போது விளங்கியபோதிலும், அந்தச் சேவை ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை.

"மணல் உறிஞ்சும் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள், ஆற்றின் முகத்துவாரத்தில் தொடர்ந்து குவிந்து வந்த மணல் ஆகிய பிரச்னைகளால் அந்தச் சேவை கைவிடப்பட்டது." என அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில், ஆற்றுப் பகுதியை நிரந்தரமாகச் சீரமைக்கும் பணிகளைவிட, அதுகுறித்த ஆய்வுகளே அதிகம் மேற்கொள்ளப்பட்டன. அதிமுக ஆட்சியின்போது, 1991ஆம் ஆண்டில் 'செவன் டிரென்ட்' நிறுவனம் பணியில் அமர்த்தப்பட்டது. அதேபோல 1994ஆம் ஆண்டில், மோட் மெக்டொனால்ட் நிறுவனம் 34.8 கோடி ரூபாய் மதிப்பிலான சீரமைப்புப் பணிகளைப் பரிந்துரைத்தது. ஆனால், அந்த முழு திட்டமும் செயல்படுத்தப்பட்டதாகவோ, அல்லது அதற்கான நிதி முழுமையாகச் செலவிடப்பட்டதாகவோ குறிப்பிடக்கூடிய பொது ஆவணங்கள் எதையும் பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

பிறகு, 1998ஆம் ஆண்டில் திமுக அரசு, நதி மேம்பாட்டுக்காக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2000-01 காலகட்டத்தில் 'சென்னை நகர நதி பாதுகாப்புத் திட்டத்தை' தொடங்கியது.

தமிழ்நாடு பட்ஜெட்: கூவம் ஆறு குழந்தைகள் குளித்து மகிழும் அளவுக்கு தவெக அரசால் சுத்தப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images

பிறகு, அதிமுக அரசு 2014-ஆம் ஆண்டில் கொண்டு வந்த முதன்மைத் திட்டத்தின் மதிப்பீடு 3,833 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. ஆனால், 2014-15 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாய் நிதியும் பயன்படுத்தப்படாமலே திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக, இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

அதைத் தொடர்ந்து, ஜனவரி 2015இல் 604.77 கோடி ரூபாய் மதிப்பிலான 60 குறுகிய கால திட்டங்களைக் கொண்ட ஒரு சிறிய தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது. பின்னர் இதற்கான நிர்வாக ஒப்புதல் 735.08 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதை வைத்து, பருத்திப்பட்டு அணைக்கட்டில் தொடங்கி ஆற்றின் முகத்துவாரம் வரை சுமார் 32கி.மீ நீளத்திற்கு, கழிவுநீர் இடைமறிப்பு, திசைதிருப்பல், சுத்திகரிப்பு நிலையங்கள், கால்வாய்களை மேம்படுத்துதல், ஆற்றிலுள்ள கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தாமதங்கள், பொருத்தமற்ற இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது, துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் நிலவிய பலவீனம் ஆகியவற்றின் விளைவாக, கழிவுநீர் திசைதிருப்பல் திட்டங்கள், ஒப்புதல் அளிக்கப்பட்டும்கூட பல ஆண்டுகளுக்கு முழுமையாக அமல்படுத்தப்படாமல் இருந்ததாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவிக்கிறது.

அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஏற்கெனவே நிலுவையில் இருந்த திட்டத்திலேயே கவனம் செலுத்தியது. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய அமைச்சர் கே.என்.நேரு, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்தின் சில அம்சங்கள் தவிர, பெரும்பாலான பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், 604.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாகவும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்தத் தொகையானது அதிமுக, திமுக என இரு கட்சிகளுடைய ஆட்சிக் காலங்களிலும் நதி மீட்டுருவாக்கத்துக்காக செய்யப்பட்ட ஒட்டுமொத்த செலவினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பட்ஜெட்: கூவம் ஆறு குழந்தைகள் குளித்து மகிழும் அளவுக்கு தவெக அரசால் சுத்தப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

'கூவம் நதியில் குழந்தைகள் குளித்து விளையாடலாம்'

தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசு, ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அப்போது பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, கூவம் மற்றும் அடையாற்றைத் தூய்மையான நகர்ப்புற அடையாளங்களாக மாற்றுவது குறித்தும் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

அப்போது, "இதற்கு முன் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்த அரசுகள், அடையாறு மற்றும் கூவம் நதியைச் சுத்தப்படுத்த, அழகுபடுத்த எனப் பல நூறு கோடி மக்களின் வரிப் பணத்தை வாரியிறைத்துள்ளனர். இருந்தும் ஆறுகளின் தன்மையோ தரமோ மேம்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

மேலும் "இந்த ஆறுகளை சென்னையின் அடையாளங்களாக மாற்றுவதற்கு உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். கூவம், அடையாற்றில் படகு சவாரி செய்யும், குழந்தைகள் ஆனந்தமாகக் குளித்து மகிழும் அளவுக்கு நதிகளின் தரம் மேம்படுத்தப்படும்," என்றும் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

ஆனால், "நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாயும், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கூ 2,117 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை எதிலும் கூவம், அடையாறு நதிகளை மீட்டுருவாக்குவதற்கான பிரத்யேக நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவான விவரங்களை வழங்கவில்லை" என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், நிதிநிலை அறிக்கையில், நதிகள் மீட்டுருவாக்கம் குறித்த விரிவான திட்டங்கள், அதற்குத் தேவையான நிதி, முழுமையான காலக்கெடு ஆகியவற்றைக் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார் சென்னையை சேர்ந்த மூத்த மீனவர் பாளையம்.

அதேநேரம், "தவெக அரசு தனக்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் கணக்கியல், பொறியியல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே இரண்டு நதிகளுக்கும் புத்துயிர் அளிக்க முடியும்" எனவும் அவர் தெரிவித்தார்.

கூவம், அடையாறு என இரு நதிகளின் தரத்தையும் மேம்படுத்துவது குறித்து முன்னர் பேசிய நீரியல் ஆய்வாளர் ஜனகராஜன், "அவற்றின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், பாதுகாப்பான சூழலியல் தரம் நீடித்திருப்பதை உறுதி செய்யவும், முதலில் செய்ய வேண்டியது, அந்த ஆறுகளில் கழிவுநீர் திறந்துவிடப்படுவது, திடக்கழிவுகள் கொட்டப்படுவது போன்றவற்றை முழுமையாகத் தடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இல்லையெனில், நிபுணர்களின் கூற்றுப்படி, வழக்கம் போல நதியைச் சீரமைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டேயிருக்க, மறுபுறம் ஆற்றுக்குள் புதிதாக மேலதிக கழிவுகள் சேர்ந்து கொண்டேயிருக்கும். அதனால் எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு