15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டு வரை சிறை - ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விவரம்

காணொளிக் குறிப்பு, இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்- முழுத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டு வரை சிறை - ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விவரம்
பிரசுரிக்கப்பட்டது

2019-இல் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட 25 பேரில், 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்தத் தீர்ப்பில் வேறு என்ன முக்கிய அம்சங்கள் இருக்கின்றன?

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.

கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், அத்துடன் கொழும்பில் உள்ள மூன்று முக்கிய ஹோட்டல்கள் தாக்குதலுக்கு இலக்காகின.

இந்தத் தாக்குதல்களில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 270 பேர் உயிரிழந்தனர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாக 25 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர்களுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த யாசின் பாவா அப்துல் ரவூப் என்ற நபர், வழக்கு விசாரணைகளின் நடுவே 2023ம் ஆண்டு உயிரிழந்திருந்தார். வழக்கு தொடர்பாக 2,309 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் செப்டம்பர் 22-ம் தேதி, கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். மீதமுள்ள 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதில், 5 பேருக்கு – 200 ஆண்டுகள்

5 பேருக்கு – 220 ஆண்டுகள்

4 பேருக்கு – 240 ஆண்டுகள்

ஒருவருக்கு – 260 ஆண்டுகள் எனத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு