காணொளி: முதலமைச்சர் விஜய் துறையில் ஊழலா? தாம்பரம் மாநகராட்சியில் நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: முதலமைச்சர் விஜய் துறையில் ஊழலா? தாம்பரம் மாநகராட்சியில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் வரும் தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா மற்றும் சிட்லபாக்கம் ரவுண்டானாவில் சிலை அமைத்தல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட இரண்டு பணிகள்தான் சர்ச்சைக்கு காரணம். இந்த இரண்டு பணிகளின் மொத்த மதிப்பு ரூ.45.90 லட்சம். முக்கியமாக, இந்தப் பணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 24ஆம் தேதி திறக்கப்பட இருந்தது.

ஆனால், பெருங்களத்தூர் பணி ஜூலை 29ஆம் தேதியும், சிட்லபாக்கம் பணி ஆகஸ்ட் 10ஆம் தேதியும் முடிக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நடத்திய முதற்கட்ட விசாரணையில், பணிகள் முடிக்கப்பட்ட பிறகு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது செயல்முறை குறைபாடு எனக் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பணியாணை எதுவும் வழங்கப்படவில்லை என்றூம் மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து செலவு செய்யப்படவில்லை என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தவறிழைந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு