சௌதி தலைநகரில் 'வெடிப்புச் சத்தம்', விமான நிலையம் அருகே கரும்புகை - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, சௌதியின் ரியாத் நகரில் கேட்ட 'வெடிப்புச் சத்தம்' - சமீபத்திய பதற்றத்திற்கு என்ன காரணம்?
சௌதி தலைநகரில் 'வெடிப்புச் சத்தம்', விமான நிலையம் அருகே கரும்புகை - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் சனிக்கிழமை காலை, பலருக்கும் வெடிப்புச் சத்தங்களுடனேயே விடிந்தது.. விமான நிலையம் அருகே கரும்புகை எழுந்தது.. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

சௌதி அரேபியாவில் என்ன நடந்தது?பதற்றத்திற்கு என்ன காரணம்?

சௌதியில் என்ன நடந்தது?

சனிக்கிழமை அதிகாலை ரியாத் நகரில் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விமானங்களைக் கண்காணிக்கும் இணையதளமான ஃபிளைட்ரேடார்24 ( FlightRadar24), விமானங்கள் தாமதமானதையும் ரத்து செய்யப்பட்டதையும் தெரிவித்தது.

ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர், அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எரிந்து சேதமடைந்த எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயற்சிப்பதைக் கண்டதாக தெரிவித்தார்.

சௌதி சிவில் பாதுகாப்புத்துறை, ரியாத் மற்றும் பிற பகுதிகளில் சாத்தியமான ஆபத்து குறித்து இரவு நேரத்தில் மக்களின் தொலைபேசிகளுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. பின்னர், சனிக்கிழமை காலை நிலைமை பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்தது.

சமீபத்தில் ஹூத்திகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மோகா துறைமுக நகரத்தையும், ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு வளைகுடா நாடு ஏற்றுமதி செய்யும் முக்கிய கடல் வழிக்கான நுழைவாயிலான பெரிம் தீவையும் கைப்பற்றியுள்ளனர்.

வடமேற்கு ஏமனில் ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சௌதி அரேபியா விதித்துள்ள முற்றுகைக்கு பதிலடியாகவே இந்தக் கடற்படை முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக ஹூத்திகள் தெரிவித்தனர்.

ஹூத்தி ஆயுதக் குழு

அண்டை நாடான ஏமனில், இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழுவினர், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் செங்கடல் கடற்கரையோரத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை அன்று ரியாத் நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை தங்களது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக சௌதி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வேறு எந்தத் தாக்குதலும் அல்லது உயிரிழப்பும் ஏற்பட்டதாக அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கு முன்னதாக, சௌதி தலைநகரின் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள எரிபொருள் தொட்டிகளில் இருந்து கரும்புகை எழுவது காணப்பட்டது. இதனால் சனிக்கிழமை விமானப் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.

ஜூலை மாதத்தில் இரான் ஆதரவு ஹூத்திகள் சௌதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரித்த பின்னர், தலைநகரில் முதன்முறையாக வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், விமானங்கள் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட எதிர்பாராத பயணத் தடைகளுக்கு தயாராக இருக்கவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியது.

"இரான் ஆதரவு ஹூத்திகள், பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையங்கள் உள்ளிட்ட சௌதி அரேபிய இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த ராணுவ மோதல் வேகமாக தீவிரமடையக்கூடும்" என்றும் தெரிவித்திருந்தது.

ஹூத்தி தரப்பு சொல்வது என்ன?

பிஷ், தாயிஃப், ஃபரசான் மற்றும் யன்பு ஆகிய நகரங்களில் பொதுமக்களை குறிவைத்த விரோத முயற்சிகளையும்" வான் பாதுகாப்புப் படைகள் தடுத்ததாக சௌதி தலைமையிலான கூட்டணியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹூத்தி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா அல்-சரீஆ, ரியாதில் உள்ள முக்கியமான இலக்குகள் மற்றும் கடற்கரையோர நகரமான யன்புவில் உள்ள அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான அராம்கோவின் நிலையங்களை குறிவைத்து. அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறினார்.

ஏமன் தலைநகர் சனாவை குறிவைத்து சௌதி அரேபியா மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். சனா தற்போது ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

முன்னதாக, கடந்த ஒரு வாரத்தில் ஏமன் முழுவதும் சௌதி அரேபியா 300 தாக்குதல்களை நடத்தியதாக சரீஆ குற்றம்சாட்டியிருந்தார்.

சௌதியின் ஆதரவு பெற்ற, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுக்கும் ஹூத்திகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

சமீப மாதங்களில் ஹூத்திகள் சௌதி அரேபியாவுக்குள் உள்ள இலக்குகள் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, ஏமன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளின் ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை ஹூத்திகளுக்கும் சௌதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும் இடையிலான மோதலில் 48 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஏஎஃப்பி தகவலின்படி, ஹூதிகள் தரப்பில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், அரசுப் படைகள் தரப்பில் 17 பேர் உயிரிழந்ததாகவும் இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று, ஐ.நா.-வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IOM), சமீபத்திய மோதல்களின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 104,796-ஐ கடந்துவிட்டதாக தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு