தேர்தல் ஆணைய செயல்பாடு பற்றிய புலனாய்வு அறிக்கையால் கொந்தளிப்பு
கடந்த சில மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்திய அரசியல் களத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து "10 மாதங்களில் 14 ஆட்சேபனைகளை" இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டது முதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல், அத்துடன் "அனுமதியற்ற, சட்டவிரோத" நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குதல் வரை பல்வேறு விவகாரங்கள் இந்த ஆட்சேபனைகளில் அடங்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) பிகாரில் ஜூன் 2025-ல் தொடங்கியது; 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவு வாக்காளர் பட்டியல்களிலிருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் இச்செயல்முறைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் மூலம் பதிலளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேள்விகளை எழுப்பி வருகின்றன.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்திற்குள் இந்த விவகாரங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டதாகவும், ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிக்கை கூறுகிறது.
தற்போது இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், எஸ்ஐஆர் நடைமுறையின் கீழ் பெயர்கள் நீக்கப்பட்டதோ அல்லது சேர்க்கப்பட்டதோ தங்கள் தோல்விக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ஆர்ஜேடி தலைவரும் பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்த அறிக்கையை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து, கடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் நிர்வாக இயந்திரத்தால் தோற்கடிக்கப்பட்டதாக மீண்டும் வலியுறுத்தினார்; "நாங்கள் தோற்கவில்லை, நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்" என்று கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவரான டெரிக் ஓ பிரையன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்த அறிக்கையில் கூறப்பட்டது என்ன? தேர்தல் ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



